Saturday, December 31, 2011

எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா?

(இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.)

பன்னிரண்டு மணி
பட்டாடை கட்டி வானம்
விழித்துக் கொள்கிறது.

கருவானக் கதவுடைத்து
கனவு கலைந்து வான வெளி
கண்விழித்துக் கொள்கிறது.

வண்ண வண்ண ஒளிக்கலவை...
அழகின் இருப்பிடமெல்லாம்
அகன்ற வானில்
அள்ளிக் கொட்டியிருக்க
வீதிகளில் புகைமூடி
வர்ண ஒளிக்கீற்று
வடிவுதான்....

பனித்துளி சொட்டப்
பகலைத் தெளித்தது போல் பொழுது
பட்டாசுகளால் பல்வர்ணம்....
புத்தாண்டுப் பிறப்பு
பகற் சேமிப்பெல்லாவற்றையும்
பட்டாசாய் வெடித்து மகிழ்கிறது
பக்கத்து வீடுகள்.....

எனக்கு ?

புத்தாண்டு இன்று
என் மண்ணில்
பிணங்களின் மேலால் விடிகிறது.
முப்பதாண்டுச் சோகம்
முடியாமல் விடியாமல்
என் மக்களுக்குத்
துப்பாக்கிச் சத்தமும்
எறிகணைக் கூவலுமே
இருள் அகற்றிப் - போர்
முகம் காட்டுகிறது.

என் போராளித் தோழர்களின்
துப்பாக்கி முனைகள்
தூங்காமல்.....
என் தோழர்களின்
விழிகளைப் போல் தவமியற்றுகின்றன.
தமிழர் விதி மாற்றிவிடும்
கனவுடனே காவலரண்
கம்பி வேலிகளுக்கால்
தடையறுத்துச் சமர்க்களத்தில்
சத்தமின்றிப் போகின்றனர்.

எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?
பொன்னள்ளிச் சொரிந்து
வானப் பண்ணள்ளி
வெற்றிப் பரணி பாட
எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?

01.01.09

No comments: