Wednesday, August 31, 2011

என் மகளே செங்கொடி....!


*செங்கொடி*
நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து
மானிட விடுதலையை
வென்றிருக்க வேண்டிய வித்து நீ.
ஏனடி பெண்ணே…?
எரிந்தாய் நெருப்பில்….?

அவசரப்பட்டு விட்டாய் மகளே..…!
அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ
அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற
வலியல்லவா உனது தீ….!
நீ வாழ்ந்திருக்க வேண்டியவள்
வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ.
ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….?

உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள்
இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..!
மாற்றங்கள் நிகழ உன்போன்ற
மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….!

அரசியல் புலிகளும் நரிகளும்
உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி
வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்னை மறந்திடுவர்……
நாளை அல்லது இன்னொரு நாளில்
குருத்தொன்றை மூட்டத்
தீப்பெட்டியும் பெற்றோலும் விநியோகம் செய்யும்
முகவர்களின் நண்பர்களாவார்கள்…..

மொழிக்கு மொழி முத்துக்குமாரனையும்
செங்கொடியையும் சொற்களால் உயர்த்திச்
சுயநலச்சாக்கடை வியாபாரம் செய்வார்கள்.
சிந்திக்கத் தெரிந்த உம்போன்ற செடிகளைத்
தீயெரிக்கத் தீயெரிக்க உணர்ச்சித் தீயெடுத்து
உங்கள் சிதைகளுக்கு வீரத் தீமூட்டுவார்கள்…
அத்தோடு அவர்கள் கதை முடிந்துவிடும்....

முத்துக்குமாரன் முடிந்தான் தமிழகத்தில் என்ன
பாலும் தேனுமா பாய்கிறது…?
செங்கொடி நீ முடிந்தாய் என்ன தமிழகத்தை
செல்வச்செளிப்பாயா மாற்றப்போகிறார்கள்…?
இல்லையடி மகளே உங்கள் உயிர்களை
விதைத்து அரசியல் வியாபாரிகள் பைகள் தான் நிரம்புகிறது.

போதும் பிள்ளைகளே…!
உங்கள் பெறுதற்கரிய உயிர்களை
வெறும் தீக்கிரையாக்கி
வீணடிக்காதீர் விழுதுகளே…..!
உயிர்களை ஆயிரமாயிரமாய் இழந்த வலியின்னும்
ஆறாமல் துடிக்கிற எங்களால் உங்கள்
இழப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீங்கள் வாழ வேண்டும்
இவ்வுலகம் வாழ உங்கள் விலையற்ற உயிர்களை
வீணாயெரிக்காமல் வரலாறு படைக்க வேண்டும்.
அதுவே எங்களுக்குக் கிடைக்கின்ற பெருவெற்றி.

போய்வா மகளேயென்று வீரவணக்கம் சொல்லியுன்னைப்
பொய்யுரைத்து வணங்கமாட்டேன்.
மீள வராத உனக்காய்
கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன்.
ஒற்றைக் கவிதையால் அஞ்சலித்து
இனியொரு தீக்குளிப்பை எதிர்க்கிறேன்…..
என் மகளே செங்கொடி
எனது கண்ணீர் வணக்கங்களோடு விடைபெறுகிறேன்……


31.08.2011 (ஓகஸ்ட் 28.2011 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றோரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி தன்னைத் தீமூட்டியெரித்த 27வயதான செங்கொடி என்ற இளம் பெண்ணின் நினைவாய் எழுதிய வரிகள் இவை)

2 comments:

வனம் said...

வணக்கம் அக்கா,

நேற்றுதான் செங்கொடியின் சவ அடக்கத்துக்கு சென்று வந்தேன்.

அதற்குள் உங்களிடம் இருந்து பதிவு.

உங்களுக்கு கருத்து சொல்லி ரோம்பவும் நாள் ஆயிற்று

முடிந்தால் மின்னஞ்சலுக்கு வாருங்கள்

பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கின்றது

இராஜராஜன்

வனம் said...

அக்கா நேற்றுதான் செங்கொடியின் சவ அடக்கத்துக்கு சென்று வந்தேன்

இன்று உங்கள் இடுகை......

மனசு கனத்து கிடக்குது அக்கா

முடிந்தால் மின்னஞ்சலுக்கு வரவும்

பகிர நிறைய இருக்கின்றது.

இராஜராஜன்