Sunday, August 14, 2011

கே.பி , கருணான்ரை ஆளை கலியாணம் கட்டாதை…!

அவன் ஒரு நாத்திகன். கடவுளை நம்பாதவன். இயல்பிலேயே சம்பிரதாயம் , சாத்திரம் , சாதி , வேற்றுமை எல்லாவற்றிற்கும் எதிரானவன். வீட்டில் வணங்கும் சாமிகளின் உருவங்களை இவன் கண்ணிலிருந்து மறைத்து வைத்தது ஒருகாலம். 9பிள்ளைகளிலும் அம்மா அப்பாவிற்கும் அண்ணன் அக்காக்களுக்கும் வில்லங்கம் பிடித்த இளைய பிள்ளையவன்.

இயல்பிலேயே அவன் வாசிப்புப்பழக்கம் மொழிகளைக் கற்றுக்கொள்தல் அவனுக்குக் கொடையாயிருந்தது. பைபிள் , பகவத்கீதை , குரான் அடங்கலாக இராமாயணம் முதல் உலகப்புரட்சியாளர்கள் வரை படித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் மாற்றுக்கருத்து இருந்து கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லாரும் சொல்வார்கள் “அவன் ஒரு கலகக்காரன்“ என்று.

1984ம் ஆண்டு தனது 20வது வயதில் கல்வியை இடைநிறுத்திவிட்டு ஈழவிடுதலைக்கனவோடு ஊரிலிருந்து காணாமற்போனவன். தனது சுயவிருப்போடு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டான். இந்தியாவில் பயிற்சி முடித்துத் திரும்பி வந்தவன் அவன் பிறந்த மாவட்டத்திற்கே பணிக்காய் அனுப்பப்பட்டவன்.

25வருட போராட்ட வாழ்வு. அரசியல்துறை , புலனாய்வுத்துறை , பொருண்மியம் , வெளியகப்பணி , வெளிநாட்டுக்கல்வி , வெளிநாட்டு ஆயுதப்பயிற்சியென ஐரோப்பா ஆசியா ஆபிரிக்காவெல்லாம் அலைந்து தாய்நாட்டுக்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்தவன்.
அவனோடு வெளிநாடு வந்த பலர் வந்த இடங்களில் நின்றுவிட்ட பின்னரும்….., நாடு நாடுதந்த கல்வி , உயர்வு அதையெல்லாம் இன்னொரு நாட்டில் முதலீடு செய்ய விரும்பாமல் தாயகத்திற்கே திரும்பிய உன்னதபோராளி.

கடைசி யுத்தமுனையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு காடுகளால் சென்ற அணியோடு கிழக்கிற்குச் சென்றவன். கிழக்கில் கனவோடு இவர்கள் கள நிலமைகளை எதிர்பார்த்திருக்க 2009 மே 18 நினைத்தவையெல்லாம் தவிடுபொடியாகி அவனும் அவனோடு பலரும் தனித்துப் போனார்கள்.

அவன் நம்பிய தலைமை அவன் நேசித்த தோழமைகள் அவன் தோழோடு தோழ் நின்ற பலரை யுத்தம் விழுங்கியிருந்தது. இனி வாழ்வா சாவா என்ற நிலமையில் பிரமை பிடித்தாற்போலக் கழிந்த நாட்கள் அவை. அடுத்த கட்டம் என்ன செய்வதென்று அறியாத நிலமை…..தன்கூட இருந்தவர்களை நண்பர்களின் உதவிகளை நாடி மத்தியகிழக்கு நாடுகள் அயல்நாடென அனுப்பிவிட்டான்.

அன்று தன்னால் செய்ய முடிந்தவற்றையெல்லாம் செய்து மிஞ்சியவர்களுக்கான பாதையொன்றை அமைத்துவிட்டு தனது கடைசி முடிவைத் தேடிக்கொண்டிருந்த நேரம்….அவனது சில நண்பர்கள் நாட்டைவிட்டு வெளியில் வருமாறு அழைத்தார்கள்.
எல்லாம் முடிஞ்சுது…..இனி நானென்னத்தைச் சாதிக்கப்போறன்…..இங்கினை ஏதாவது முடிவைப்பாப்பம்……எனச் சலித்தவனைச் சில நண்பர்களின் தொடர் முயற்சி நாட்டைவிட்டு வெளியேறும் முடிவை அவனுக்குள் விதைத்தது.

கடைசிச்சரணடைவு பல்லாயிரம் பேரைச் சிறைகள் தாங்கிக்கொள்ள கொழும்பிற்குள் நுளைந்தான். அவசர அவசரமாக ஏற்பாடுகள் முடிந்து கட்டுநாயக்காவில் காலடி வைத்த நேரம் சாவின் முடிவு எழுதப்பட்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். கடும் சோதனைகள் , விசாரணைகள் தாண்டியும் ஏனோ தானோ இனி என்ன நடந்தாலென்ன என்ற வெறுப்போடு தான் விமானம் ஏறினான்.

போயிறங்கிய நாடும் ஐரோப்பாவுமில்லை , அமெரிக்காவுமில்லை ஆசியநாடொன்றுதான். செத்துப்போய்விட்டதாக நம்பிய பலர் அங்கே அவன் சந்தித்தான். எல்லோரும் ஏதோ இருக்கிறார்களே ஒளிய ஒருவரும் உண்மையான நிம்மதியுடனில்லையென்பதை உணர்ந்தான்.

வந்த ஆரம்பம் பழைய நண்பர்கள் பலர் அவனைத்தேடித் தேடி தொலைபேசியில் அழைத்தார்கள். என்னமாதிரி மச்சான்….? என்ன நடந்தது…? என்ன மச்சான் ஏமாத்திப் போட்டியள்….? ஒண்டையும் விடமாட்டியள் நிலமையை மாத்தீடுவியளெண்டு நினைச்சம்….ஏன்….? கடைசி நிலவரத்தை அறியும் ஆவல் பல அழைப்புகளில் இருந்தது. சில உண்மைகளை அவனும் சொல்லித்தான் விட்டான்.

அண்ணையென்னமாதிரி…? இருக்கிறாரோ…? பலர் கேட்டார்கள். அவனது பதில் எல்லோரையும் போல வருவார் அல்லது வரலாம் , அல்லது அவருக்கு மரணமில்லையென்று இல்லாமல் 25வருடம் தனது அனுபவங்களையெல்லாம் திரட்டிச் சொன்ன பதிலோடு பலர் அவனைத் தொடர்பிலிருந்து அறுத்துவிட்டார்கள். பொய் சொல்ல மனம் வரவில்லை ஆகையால் பல உண்மைகளை அவன் தனது பழைய நண்பர்களுக்கு மறைக்காமல் சொன்னான். அவனது அரிச்சந்திர நேர்மை அவனைப் பல நண்பர்கள் கேணைப்பயலெண்டும் சொன்னார்கள்.

இவனுக்கென்ன தெரியும் லூசுப்பயல்…..உண்மை சொல்றாராம்……சமாதான காலத்தில் அவர்கள் அழைத்த போது கூட போக மறுத்து 2தசாப்தங்களைக் கழித்தவர்களே அவன் சொன்ன யாவும் பொய்யென்றார்கள். பலநேரங்களில் அதையெல்லாம் நினைத்து அழுததும் உண்டு சிலநேரம் தனது நண்பர்களை நினைத்துச் சிரித்ததுமுண்டு.

மெல்ல மெல்ல நண்பர்களின் தொடர்புகள் விடுபட்டு ஒருவரும் அவனை இப்போது நினைப்பதேயில்லையென்ற அளவுக்கு விட்டுவிட்டார்கள். வறுமை அவனையும் அன்னியத் தெருவில் கோவில்களிலும் யாராவது ஏதாவது கொடுத்தால் தான் அன்றாட உணவென்ற நிலமைக்கு நிலமை அடித்துக் கொண்டு போய் ஒதுக்கியிருக்கிறது.

இளமை சுருங்கி 47வயதில் தனித்துப் போயிருக்கிறான். அவனுக்கென்று குடும்பம் இல்லை குழந்தைகள் இல்லை நோய் வந்து சுருண்டாலும் தானே தனக்காக உடல் நொந்து வலித்தாலும் எல்லாமும் தானாக விரக்தியின் விளிம்பில் வாழ்கிற ஒரு 25வருட அனுபவம் மிக்க சொத்து அவன்.

இன்னும் அறுபடாத தொடர்போடு ஒரு தோழி அவனோடு தொடர்பில் இருக்கிறாள். அவனுக்கான இப்போதைய சின்ன ஆறுதலாக அவள் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து அவனது சுகநலன்களை விசாரிப்பாள். அள்ளிக் கொடுத்து அவனை மாளிகையில் வாழ வைக்க வசதியற்ற அவளால் சில தடவைகள் சிறிய சிறிய உதவிகளை மட்டுமே செய்ய முடிந்தது.

ஏன் கலியாணம் கட்டாமல் இருந்தீங்கள்…..?

கட்டியிருந்தா இப்ப என்ரை பிள்ளையளும் உங்களிட்டை கையேந்தியிருக்கும்….நீங்கள் மாவீரர் குடும்ப லிஸ்டிலை என்னை வைச்சு விளக்குக் கொழுத்தியிருப்பியள்…..அது நடக்கேல்லயெண்டது கவலைபோல….

அப்ப நீங்க ஒருதரையும் காதலிக்கேல்லயா….? கனபேரைக்காதலிச்சிருக்கிறேன்…..கனபேரா…? அப்ப ஒருத்தியும் சரிவரேல்லயா….? சொல்லி முடிக்க விடுபிள்ளை…..முதல் நான் காதலிச்சது எனக்குப்படிப்பிச்ச ரீச்சரை…..பிறகு காற்சட்டை போட்ட காலத்தில நடிகை சிறீதேவியை…..சிறீதேவி போனிகபூரை கட்டாமலிருந்திருந்தா முயற்சி செய்து பாத்திருப்பன்…..

அவன் தனது அந்த நாள் ஞாபகங்களையெல்லாம் சுவையோடு சொல்லிச் சிரிப்பான்.
அப்படித்தான் கதை வாக்கில் ஒருநாள் அவன் தோழி கேட்டாள்…,

இங்கினை ஒரு சிறீதேவியைப் பாப்பமோ….? பாருங்க இனியென்னேயிறது…..பகிடி பகிடியாகக் கதைச்சது உண்மையாக அவனுக்கொரு சிறீதேவியை அவன் வாழும் ஏழைநாட்டில் சந்தித்தான்.

தமிழ் முகத்தைப் பார்த்த சிறீதேவி அவனோடு பேசினாள். சுவிற்சலாந்திலிருந்து அங்கே வந்திருப்பதாகவும் யாரோ சாத்திரக்காரனை அங்கே சந்தித்து பரிகாரம் செய்ய வந்ததாகவும் சொன்னாள். 47வயதில் காதலென்ன கவிதையென்ன என்றிருந்தவனின் தலைக்குப் பின்னால் பிரகாஸ்ராஜ்ஜிற்கு லைற் எரிஞ்சமாதிரி லைற் எரிஞ்சுது…..சிறீதேவியும் தனிக்கட்டை காதலிச்ச மச்சான் கைவிட்டதாலை சிறீதேவி பிரமச்சாரியம் காப்பதாகவும் சொன்னாள்.

அவனைப்பற்றி அறிஞ்சதும் சிறீதேவிக்கு அவன்மீது காதலாம். பொருத்தம் பாக்க வேணுமெண்டு அவனது பிறந்த திகதி நட்சத்திரம் கேட்டாள் சிறீதேவி. 3ம் 4ம் 5ம் 6ம் வீடுகளில் ராகு , கேது , வியாழன் , புதன் என கனக்க சிறீதேவி சொன்னாள்.

அவன் இருக்கிறதுக்கு முன்னால் வீட்டில் தெலுங்கன் , பின்னால் வீட்டில் கன்னடன் ,அயல் வீட்டில் இலங்கையன் தான் இருந்தார்கள். ஆனால் சிறீதேவி கன வீடுகள் அவன் சாதகத்தில் இருப்பதாகச் சொன்னாள். அவனைவிட ஒருவன் தனக்கு கிடைக்கமாட்டானென்று 5சாத்திரிகள் சொன்னதாகச் சொன்னாள். ஆனாலும் அவனுக்கு சில தோசங்கள் நீங்கள் பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்றாள்.

வந்த சனியன் நிண்ட சனியனையும் சேத்துக்கட்டினது இதுதானோ…..? காலைப்பாம்பு சுற்றினமாதிரியிருந்தது சிறீதேவியின் கடவுள்களும் சாத்திரமும். தப்ப வழிவிடாமல் சிறீதேவி அவனைச் சுற்றிக் கொண்டது. சிறீதேவிக்குத் தான் ஒரு நாத்திகன் கடவுளை நம்பாதவன் சாத்திரங்களை நம்பாதவன் என்றெல்லாம் தனது அருமை பெருமைகளைச் சொன்னான். சிறீதேவி விடுவதாயில்லை.

வாழ அந்த நரகத்திலிருந்து தப்ப வேறு வழியில்லை…..நம்பிய நண்பர்களும் அவனைத் தெருவில் விட்டுவிட்டார்கள்….அன்றாடச் சீவியத்துக்கு அல்லாட்டமான நேரம் கொள்கையும் இலட்சியமும் என்னத்தைக் கொண்டு வந்து தரும்…..? கடைசியில் சிறீதேவியிடம் சரணடைந்தான்.

தனது தலைக்குப் பின்னால் எரிந்த சிறீதேவி லைற்றைப் பற்றித் தோழிக்குச் சொன்னான். அவளுக்கு அவனது மாற்றத்தில் நம்பிக்கையில்லை….உண்மையாவா…? ஓம்…..! இப்பிடியே போனா ஒருநாளைக்கு என்ரை பிணமும் அனாதையாய் போயிடும்….! எங்கினையும் போயிடலாமெண்டுதான் அவாவுக்கு ஓமெண்டு சொன்னனான்…..அதுவும் ஒரு அப்பாவியா இருக்குது…..84ம் ஆண்டு சுவிஸ் வந்தவவாம்…..நாடு பிரச்சனை சாவு அதுகளைப்பற்றி ஒண்டும் ஆளுக்கு விளக்கமில்லை…கடவுள் சாத்திரம்…அதோடை இருக்கிறா…..அதான்….

தனக்குள்ளிருந்த தனது வாழ்வு மீதான கனவுகள் கற்பனைகள் எதிர்பார்ப்புகள்…..தனக்கு வர வேண்டிய துணை பற்றிய ஒருகாலத்து எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் தனது இயலாமைக்குள் புதைத்துக் கொண்டு சிறீதேவிக்குச் சம்மதம் தெரிவித்தான். சிறீதேவி சுவிஸ் போய் அவனை சுவிஸ் எடுப்பதாகச் சொல்லிவிட்டுப் போனாள். காதல் கலியாணம் உன்னோடு தான் என்ற சிறீதேவி அவனுக்காக ஒரு சதத்தையும் கொடுக்கவுமில்லை உதவவுமில்லை. நாளுக்கு 10முறை காதலோடு கதைபேச சுவிசிலிருந்து தொடர்பு கொள்வாள்.

பசியோடு அவனிருக்க சிறீதேவி தான் செய்த உணவுகள் பற்றி வணங்கும் சாமிகளுக்காக செலவளிக்கும் பணம் பற்றியெல்லாம் சொல்லுவாள். சிறீதேவி தொலைபேச அவன் கண்ணீரோடு தனது வறுமை பற்றி நினைத்து வருந்துவான்.

அன்றைக்கொரு வெள்ளிக்கிழமை. இரவு 2.45மணி. சிறீதேவி தொலைபேச அழைத்தாள். என்னைக் குறைநினைக்கப்படாது…..ஆர் கே.பி , ஆர் கருணா…? அவன் கே.பி. யார் , கருணா யாரென்றெல்லாம் விளங்கப்படுத்தினான்.

நான் இண்டைக்கொரு நெல்லியடிச் சாத்திரியிட்டைப் போனனான்….. என்ரை அண்ணியும் நானும் தான் அங்கை நிண்டனாங்கள்…..அவர் என்ரை கடந்த காலம் உங்களைச் சந்திச்சதெல்லாம் அண்ணீட்டைக் கேட்டிட்டு பூதக்கண்ணாடியாலையெல்லாம் பாத்திட்டு நல்லாத் தான் சொன்னவர்…திடீரெண்டு சோபாவில இருந்த மனிசன் எழும்பி ஆட வெளிக்கிட்டுட்டார்…… அவருக்கு வளமையா கலை வாறதில்லை…..இண்டைக்கு என்ரை குறிப்பைப் பாத்தவுடனும் கலைவந்திட்டுது…அப்பதான் சொன்னார் நீங்கள் துரோகியாம் கருணா கே.பியின்ரை ஆளாம் உங்களைக் கலியாணம் கட்ட வேண்டாமாம்…உங்களைக் கட்டினா நான் கெதியில விதவையாகீடுவனாம்…..அண்ணாவும் அண்ணியும் சொல்லீட்டினம் கருணான்ரை கே.பீன்ரை ஆளெண்டா சரிவராதாம்……

சிறீதேவி அவனது தலைக்குப் பின்னால் பிரகாசித்த லைற்றை ஒரேயடியாய் அடிச்சு நூத்துப்போட்டு தொலைபேசியை அடித்து வைத்துவிட்டாள்.

அவனுக்கு ஒரே குழப்பம். நெல்லிடியச்சாத்திரிக்கு என்னெண்டு உருவந்தது….? எப்பிடி அவனை கே.பி,கருணா துரோகக்குழு என்று சாத்திரம் சொல்ல முடிஞ்சது…? அதுவும் அவன் ஓடியொழிச்சு வந்து இருக்கிற அன்னியநாட்டில ஒரு அரசியலும் செய்யவுமில்லை அறிக்கைகள் எழுதவுமில்லை….அன்றாடச் சோற்றுக்கு சிங்கியடிக்கிற நிலமையில் இருந்தவனைத் தேடி வந்த சிறீதேவியை தட்டிப்பறிச்சுக் கொண்டு போன நெல்லியடிச் சாத்திரிக்குத் தன்மேல் என்ன கோபம் என்பது விளங்கவேயில்லை….!!! நினைக்கச் சிரிப்பும் வந்தது.

தோழிக்கு மிஸ்கோல் விட்டான். நித்திரை வரவேயில்லை. கையிலிருந்த சில்லறையும் காலியாகிவிட்டிருந்தது. இடம் கொடுத்தவர்களுக்கு 2மாத வாடகையும் கொடுக்கவில்லை. சிறீதேவி மூலம் தனக்கொரு வாழ்வு வருமென்று நம்பியது போய்……கண்முன்னால் ஒரு வனாந்தரம் அவனைச் சூழ்ந்து கொண்டது.

என்ன பிள்ளை மறந்திட்டீயளா ? எங்கை ஒரே வேலை….அதானண்ணை…...சிறீதேவி என்னவாம்….எப்ப சுவிஸ் வாறியள்….? தோழி கேள்விகளை அடுக்கினாள்….
லைற் நூந்து போச்சுது பிள்ளை…. சிறீதேவி சந்திச்ச நெல்லியடிச் சாத்திரக்காரனைப்பற்றிச் சொன்னான். அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை…..

இதென்ன கறுமாந்திரம் பிடிச்சது…! சாத்திரிமாரும் இப்ப கே.பின்ரை ஆள் கருணான்ரை ஆளெல்லாம் சாத்திரத்திலயும் சொல்லத் துவங்கீட்டினமோண்ணை….???

சுவிஸ் சிறீதேவி கட் ஆராவது ஒரு சிறீதேவியைப் பாருங்கோ பிள்ளை….இப்பிடியே இருக்கேலாது….. தலையிடிக்குது….போற போக்கு தெருவில பிச்சையெடுக்கிற நிலமையா இருக்கு…..சினேதன்மாரும் எல்லாரும் கைவிட்டிட்டாங்கள்….உண்மையாத்தான் சொல்றன் என்னாலை சமாளிக்கேலாதாம்…..அங்கையெ அப்ப செத்திருக்கலாம்…..வா வாவெண்டு கூப்பிட்டவங்களும் உண்மையைச் சொன்னதுக்காக கைவிட்டிட்டாங்கள்…..

என்ரை கடைசிக்கனவொண்டிருக்குப் பிள்ளை….நான் சாக முதல் 25வருச அனுபவமெல்லாத்தையும் ஒரு புத்தகமா எழுத வேணும்….இஞ்சித் தேத்தண்ணி ஒராள் இடைக்கிடை போட்டுத்தர குடிச்சுக்குடிச்சு நான் எழுத வேணும்……

எனக்கு விளங்குது இஞ்சித் தேத்தண்ணிக்கேன் இன்னொராள் தேத்தண்ணிக் கடையில போயிருந்து எழுதெண்டு நினைக்கிறீங்கள் பிள்ளை….சீரியசாகச் சொல்லீட்டு இடையில ஒரு வடிவேல் பகிடியும் விடடான். உள்ளுக்குள் ஊசிமுனை கொண்டு குற்றிய வலியையும் தனது வறுமையையும் நினைக்கப் பயமாயிருந்தது…..

சிலவேளை நான் செத்துக்கித்துப்போனாலும் நான் சொல்றதுகளை ஒரு குறிப்பெழுதி வையுங்கோ பிள்ளை…..விவேக்கின் ஸ்ரைலில் அதையும் சொல்லி வைத்தான்…….

விரைவில் தெருவிற்கு வரவிருக்கும் தனது வாழ்வுக்கு சிறீதேவி கைகொடுப்பாளென்ற நம்பிக்கையும் போய் 47வயதை ஞாபகப்படுத்தியது நரைமுடிகள்…….தனது அனுபவங்களை தனது போராட்ட காலங்களையெல்லாம் ஒரு நூலாக எழுதும் கனவோடு ஆற்றங்கரைகளிலும் அடைக்கலம் புகுந்த ஆள்நெரிசல் கூடிய இடங்களிலும் இருந்து தனக்குள்ளான 25வருட வாழ்வை மீளமீள ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கிடைத்த எத்தனையோ வசதிகள் கோடிக்கணக்கில் இயக்கம் கொடுத்த பணம் யாவையும் நாட்டுக்கானதாகவே வழங்கி இன்று ஒற்றையாய் தனியனாய் எல்லாம் இழந்து போன நிலமையை எண்ணிப்பார்க்க அழுகையோடு கூடிய வெறுப்புத்தான் வந்தது.

தொடர்பில் வந்த தோழி சொன்னாள்….அவன் வாழும் நாட்டில் வந்திருந்த அவன்போன்ற ஒரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி இறந்ததாக….தூக்கில் தொங்கியவன் தனது மரணத்திற்கு தானே பொறுப்பென்று எழுதி வைத்தானாம்…..சாகும் போதும் தனது சாவு மற்றவரை அலைக்கக்கூடாதென்று தனது மரணசாசனத்தை எழுதியிருக்கிறான் போல…..

தனக்கும் ஒரு தூக்குக்கயிறு அல்லது ஏதாவதொரு மாற்று தன்னையும் நெருங்குவதை உள் மனம் உணர்த்துவதாக உணர்ந்தான்…..வீரர்களாய் களத்தில் வீழுவோம் விடுதலையின் வேர்களாய் முளைவிடுவோம் என்று தோழர்களை வழியனுப்பிய துணிச்சல் தற்போது அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் போவதாக உணர்ந்தான். தனது இப்போதைய மாற்றங்களைத் தோழிக்குச் சொல்லத் தொடங்கினான்…..

10.07.2011

No comments: