Thursday, January 20, 2011

துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…?

புனிதம் என்ற சொல்லுக்கு
அர்த்தம் தந்தவன் நீ.
அடர்வனப் புதர்களோடும்
ஆயுதங்களோடும்
ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ.

பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ
பெயரின்றிப் புகழின்றிக்
கடமையை மட்டும் கவனித்த
களமாண்ட கடவுள் நீ.

ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச்
சிருஸ்டித்த சிற்பி நீ.
ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும்
ஒரு கனவின் கணங்கள் போல
காய்ந்து போனது களவாசம்.
நீ இன்னும் கனவுகளுக்காகக்
கரைந்து கொண்டிருக்கிறாய்.

உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ
மூழ்கடிக்கப்படுகிறாய்.
உனது மனிதம் மிக்க இதயத்தை
அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப்
புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின்
இதயம் உனக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் உன்னை விட்டொதுங்க முடியாது
உன்னையே சுற்ற வைக்கிறது.
சண்டைக்கோழியாய் நின்றுன்னைக் காக்க
தாய்க்கோழியாய் தவமியற்றச் செய்கிறது.
தர்மமுரைக்கச் சொல்கிறது.
இதையும் தர்க்கித்து உடைத்தெறியத்
தரகர்கள் பலவாய்…..!

உனக்கு ஒரு முகமும்
எனக்கு மறு முகமும் மாற்றி
உன்னை முகமிழக்கச் செய்கின்ற
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…….?

புன்னகைத்து உன்னைப் பகைக்காமல்
முதுகில் குற்றும் முகங்களே
உன்னைச் சுற்றி நிற்கின்ற
உண்மைகளைச் சொல்ல எழுகிற சொற்களைக் கூட
விழுங்கிக் கொள்கிறேன்….
என்னையும் எதிரியாக்கி உன்னை
அன்னியப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில்
எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வெள்ளையென்று இன்னும் நம்பும் உன்
கள்ளமற்ற குணத்தை என்ன செய்ய….?
நீ நம்புகிற எதுவும் எவரும்
உன்னை நம்பவில்லையென்கிற உண்மையை
எப்படியுனக்குப் புரிவிக்க….?

எங்கோ உதிர்கின்ற தளிர்களுக்காய்
இன்னும் இர(ய)ங்குகின்ற ஈரநிலமே
இயங்குவிசையே
பூச்சில்லை உன்னை மறைக்க
புகழ் இல்லையுன்னைப் புதுப்பிக்க
இகழ்வோரே உன்னைச் சுற்றியோர்
இதையாவது புரிந்து கொள்.

20.01.2011 (காலை 10.10) இலட்சியங்களுக்காக 26 வருடம் வனங்களில் வாசம் செய்த ஒரு மூத்த முதுநிலைப் போராளிக்காக இது)

2 comments:

Anonymous said...

இப்படி போனவர்கள் பலர். அந்த எல்லோருக்காகவும் படைத்துள்ளீர்கள் கவிதை.பாராட்டுகிறேன்.

தீபிகா(Theepika) said...

நம்பிக்கை துரோகங்களாலும்
நிறைந்தது தான் நமது வரலாறு.
கள்ளமில்லாத
வெள்ளை இலட்சிய இதயங்கள்
தங்களைப் போலவே
எல்லோரது
எண்ணங்களையும் நம்பியதால்
குரூமாக தோற்கடிக்கப்பட்டது
அவர்களது வீரம்.

அதை
சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
புரியவைக்க முடியாமல்
தோற்றுப்போன வரிகளில்
ஏக்கமே மிஞ்சியிருக்கிறது.