Monday, September 14, 2009

அந்தா பிள்ளையள் அம்மா பிறந்த வீடு.

கால்களுக்கடியில்
மிதிபட்டுக் கொண்டிருந்த
சருகுகளை விலக்கிக் கொள்கிறேன்.

பதின்னான்காண்டுத் தவம் கலைத்த
மிதப்பில் சருகுகளுக்கடியிலிருந்து
என் சிறுவயது ஞாபகங்கள்
மெல்ல மெல்லப் பொலிவு பெறுகிறது.

'
சடான்ரை மோளெல்ல'
பழுத்துக் கிழப்பவருவத்தையண்டிய
நாகேசு ஆச்சியின் கேள்வியில்
இன்னும் ஞாபகம் மறவாது
நினைவுகளில் நினைபடும்
ஒருத்தியென்பதில்
உள்ளுக்குள் புழுகம்
சொல்லுக்குள் அடங்காச் செருக்கு.

மழையரித்த செம்பாட்டுப்
புழுதிக்குள்ளிருந்து
பெயராத மண்வாசமாய்
என் சின்னக் கிராமத்துச் சீரெல்லாம்
எழுந்துவர
ஆமியும் அவர்களின் வாகனங்களும்
எவரங்கே ?
கேள்விக்குப் பதிலிறுக்க முடியாப் பாவிகளாய்
வரிசைகட்டிப் பின் நின்ற
பெற்றவரும் மற்றவரும்
'
போவோம் வா பிள்ளை' நச்சரிக்க....

'
அந்தா அதுதான் பிள்ளையள்
அம்மா பிறந்த வீடு'
அடையாளம் சொல்லி என்
அழகிய கிராமத்தின்
அழிவுகள் நடுவே நிற்கிறேன்.

கைகளிலிருந்த ஒளிப்படக் கருவிக்குள்
ஒற்றைச் சுவர் மட்டுமே மிஞ்சிய - என்
பிறந்த வீட்டையும் நடுவீட்டுக்குள்ளால்
நாப்பதடி உயர வளர்ந்த பதின்னான்காண்டுப்
பாரமேறிய மரங்களையும்
பதிவாக்குகிறான் என் பிள்ளை.

எட்டடி தூரத்தில்
எட்டாதளவு உயரத்தில் எழுப்பப்பட்ட
தகர வேலிகளும்
காணியெங்கும் வேர்பரப்பி
ஆழுயர்ந்த கடுநாவற்பற்றைகளும்
கால் அசைந்தால் வெடிக்கக்
காத்திருக்கும் கண்ணிகள் நடுவே
நெஞ்சுக்குள் துயர் முட்டிக் கனக்கிறது.

யூலை 2004
(
நான் பிறந்த ஊருக்குப் போனபோது எழுதிய பதிவு)

4 comments:

வனம் said...

வணக்கம்

நல்லா இருக்கு,
வேற எண்ண சொல்ல
இராஜராஜன்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஏனோ மனது வலிக்கிறது சகோதரி

சாந்தி நேசக்கரம் said...

வலிகள் தான் எங்கள் வாழ்க்கையின் சாபங்கள் கிறுக்கன். பகிர்வுக்கு நன்றிகள்.

சாந்தி

ஹேமா said...

கண்ணீரோடு போகிறேன் சாந்தி.