எங்காவது ஒரு முகாமில் நீ அடைந்திருப்பாய்
ஆராவது கொண்டு வரும் மொபைலில்
தொடர்பு கொள்வாய்
இருக்கிறேன்……,
என்ற செய்தி வரும்
சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு
காலாவதியாகிறது தோழா…..
நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில்
உன் அக்கா பேசினாள்…….
‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..?
எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்….
எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….?
அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும்
அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும்
நான் புரிந்து கொள்வது…..
இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
நம்பத் தொடங்குகிறார்கள்……
அதிகம் கவலையுறுகின்றார்கள் என்பதைத்தான்…..
என்னிடம் எந்தவிதமான நம்பிக்கை கொடுக்கும்
வார்த்தைகளோ அறிதல்களோ இல்லையென்பதை
எப்படிப் புரிவிக்க அவர்களுக்கு…..?
ஏதோ முற்பிறப்பின் தொடர்போல
உன்பற்றிய விசாரணைகள்
என் வீடுவரை வியாபித்துக் கிடக்கிறது…..
சத்தமில்லாமல் எங்காவது சரணடைந்தாயோ இல்லை
சாவைக்கட்டிய குப்பியில் உன் சரித்திரத்தை முடித்தாயோ….?
இல்லது புலத்திலிருந்து மீண்டும் போராடுவோம்
என்ற கதைவிடுவோர் யாரையாவது நம்பினாயோ….?
இல்லை கடைசிநாள் களமுனையில் புதையுண்ட
ஆயிரமாயிரம் தோழர்களோடு நீயும்
நசியுண்டு போனாயோ…..?
எந்த முடிவையெடுக்கத் தோழனே…..?
இருக்கிறாயா….? இல்லையா…..?
விறாந்தையில் தொங்கும் உனது நிழற்படத்தை
சாமியறைக்கு மாற்றிச் சோகம் கொள்ளவா…..?
ஏதாவதொரு சமிஞ்ஞை எட்டுமா தோழனே….?
மூன்றுமாதம் முடிந்தும்
இன்னும் நீ மறைவாயா இருக்கிறாய்….?
தினம் கொல்லும் உனது நினைவுகள்
தீர்வொன்றை எடுப்பதற்காயினும்
ஓர் முடிவு எங்காவது நீயிருந்தால் எழுதியனுப்பு…..!
எங்கிருக்கிறாய்……? அல்லது எப்படியிருக்கிறாய்…..?
19.08.09
8 comments:
அழுவதை தவிர வேறு வார்த்தைகள் எம்மிடம் இல்லை தேழனே
//என்னிடம் எந்தவிதமான நம்பிக்கை கொடுக்கும்
வார்த்தைகளோ அறிதல்களோ இல்லையென்பதை //...
என்னிடமும் ...
//கலை - இராகலை
அழுவதை தவிர வேறு வார்த்தைகள் எம்மிடம் இல்லை தேழனே//
ஓம் கலை இப்படி எத்தனையாயிரம் பேரையிழந்து துடிக்கின்றன உறவுகள்.
என்ன சாபமோ எங்கள் மீது வந்து தொலைந்ததென்று புரியவில்லை.
Blogger Ravee (இரவீ ) said...
//என்னிடம் எந்தவிதமான நம்பிக்கை கொடுக்கும்
வார்த்தைகளோ அறிதல்களோ இல்லையென்பதை //...
என்னிடமும் ...
எங்கள் விதியின் கதி இதுவாயிருக்க எதுவுமே இல்லாது தனித்துப் போனோம் இரவீ.
ஐயோ சாந்தி.சேர்ந்து கட்டி அழக்கூட யாருமில்லை.ஏன் எங்கட கதி இப்பிடியாப்போச்சு.நீங்கள்தான்...
உங்களுக்காகத்தான் எண்டு சொல்லிட்டு எல்லாருமே கையை விட்டிட்டுப் போய்ட்டினம்.
கேப்பாரில்லாமக் கிடக்கிறம் புழுக்கிடங்குக்குள்ள.
என்ன சொல்லறதுன்னு தெரியல தோழி .....
நல்ல எழுதுறிங்க ... தொடர்ந்து உங்க பிளாக் பக்கம் வருகிறேன்
பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றிகள் டம்பீ மேவி.
ஹேமா said...
ஐயோ சாந்தி.சேர்ந்து கட்டி அழக்கூட யாருமில்லை.ஏன் எங்கட கதி இப்பிடியாப்போச்சு.நீங்கள்தான்...
உங்களுக்காகத்தான் எண்டு சொல்லிட்டு எல்லாருமே கையை விட்டிட்டுப் போய்ட்டினம்.
கேப்பாரில்லாமக் கிடக்கிறம் புழுக்கிடங்குக்குள்ள.//
___________________________________
ஹேமா எங்கள் விதி இப்படியாய் ஆனதை எண்ணி எங்களால் அழுவதைத்தவிர வேறெதையும் சொல்ல முடியவில்லை.
Post a Comment