______________________________ _______________________
2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது.
என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது.
என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போனது.
2008ஆம் ஆண்டிலிருந்து ஒரே வீட்டில் மேல்மாடியில் நானும் பிள்ளைகளும் , கீழ்மாடியில் அவனும் பிரிந்து வாழத் தொடங்கினோம்.
காலம் காயங்களை ஆற்றும் சிலவேளை மனங்களும் மாறக்கூடும் என்று தான் நம்பினேன்.
வாழ்வு மீதான ஒரே பிடிமானம் மகன் பார்த்திபனும் வவுனீத்தாவும் தான். மகன் 12வயதையும் மகள் 10 வயதையும் அடைந்திருந்தார்கள். வீட்டுக்குள் நடக்கும் நிலமையைப் புரிந்து கொள்ளும் வயசில்லை. அம்மா விவாகரத்து எடுங்கோ என அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள்.
பிள்ளைகளை மனரீதியாக பாதிகக்கூடாதென்பதில் கவனமாக நான் இருப்பதை தனக்குச் சாதகமாக்கிக் கொணடான். பிள்ளைகள் முன் தன் கோரக்குரலையும் உயர்த்திக் கதைப்பதும் என்பற்றி பிள்ளைகளுக்கே மோசமாகச் சொல்லுவான்.
இயன்றவரை அவன் வீட்டில் நிற்கும் நேரங்களில் அவனைச் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டேன். பிள்ளைகள் வீட்டில் நிற்கும் நேரங்களில் மட்டுமே வீட்டுக்கு வருவேன்.
வேலை தவிர்ந்த நேரங்களில் அவன் வீட்டில் நின்றால் கார் போகும் திசையில் போயலையத் தொடங்கினேன். யாருடனும் எதையும் பேசும் நிலையில் மனசில்லை.
பிள்ளைகளுக்காக என்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தேன். செத்துவிடு என மனம் உந்தும். பிள்ளைகள் இருவரும் கண்ணுக்குள் வந்து கண்ணீராய் எனைக் கரைப்பார்கள்.
பிள்ளைகளையும் அழித்து போய்விடுவோமோ என எண்ணிய தருணங்களும் வந்து போயிருக்கின்றன.
எப்போதும் மதுபோதையில் வரும் அவன் தரும் தொல்லைகளையும் சகித்து இன்னொரு பத்துவருடத்தை கடத்துவதென்ற என் எண்ணத்தில் உறுதியானேன்.
தாயகத்துடனான தொடர்புகள் தாயகக்கடமைகள் நிறைந்த காலம் அது. என் நமபிக்கைக்கு உரிய போராளி ஒருவருக்கு நிலமையைச் சொன்னேன். என்னோடு கூடப்பிறக்காதவன் எனக்கு மிகுந்த ஆறுதலாயிருந்தான்.
எந்த நேரமும் என் அழைப்பை ஏற்று என்னோடு பேசக்கூடியவன். அவன் மட்டுமே என்னை நம்பிய முதல் ஆள்.
2009 முள்ளிவாய்க்கால் முடிவில் எங்கள் விடுதலைப் போராட்டம் தோற்றது. என்போன்ற பலரது வாழ்வும அவர்கள் இல்லாது தெருவில் எறியப்பட்டது. ஏதாவது சிக்கலெனில் கேட்க அவர்களும் இல்லாத போது அவன் தொல்லைகள் அதிகமாகியது.
2009 யுத்த முடிவின் பிறகு என்னால் இயங்க முடியாதிருந்தது. எனக்காக இருந்த அனைவரையும் போர் தின்று நான் தனித்துப் போயிருந்தேன்.
யாழ் இணையம் ஊடான நேசக்கரம் பணிகளில் சிறிதாக இயங்கிக் கொண்டிருந்த பணிகளும் இடைநிற்கும் நிலை வந்தது.
இறந்து போனார்கள் என நினைத்த பலர் உயிரோடு இருப்பது உறுதியானது. தொலைபேசி வழியாக முகாம்கள் சிறைகளில் இருந்து தொடர்பில் வந்தார்கள்.
நேசக்கரத்தை பதிவு செய்து தாயகத்தில் வாழும் மக்களுக்கான பணிகளைச் செய்ய காலம் அழைத்தது.
நேசக்கரம்
தொண்டு நிறுவனத்தை உலகத் தரத்தில் உயர்த்த வேண்டும் எமது பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதே 24மணிநேர கனவாகியது.
பிள்ளைகள் சிறுவர்கள் ஆயினும் அவர்களுக்குத் தெரிவித்த போது எனக்கு பெரும் ஆதரவாக நின்றார்கள். சந்திப்புகளுக்கு செல்லும் போதெல்லாம் கூட வருவார்கள். நேசக்கரமும் எனது பிள்ளைகளுமே என உலகாகியது.
நேசக்கரம் அங்கத்தவர்கள் தேவைப்பட்ட போது தானும் வருவதாக சொன்னான். மற்றவர்களுக்கு உதவுவதில் இணைந்தால் அவன் மனமும் மாறுமென்ற என் நினைவு கனவாகவே போனது.
நேசக்கரத்தை முடக்குவதிலேயே தொடர்ந்து தொல்லைகள் தரத்தொடங்கினான். நேசக்கரத்தை அழிப்பதில் அவனுக்கு ஆதரவாக பிரான்சில் இருந்த அவன் நண்பன் சாத்திரி என்பவன் அவனைத் தூண்டிக் கொண்டிருந்தான்.
வெளியரங்குகளிற்கு
போகும் போது இனிமேல் எனக்கு பிரச்சனைகள் தரமாட்டேனென்று வருவான் ஆனால்
பழையகுருடி கதவைத்திற நிலமையே மீண்டும் நிகழும்.
மேடைகளுக்கு
செல்லும் போது கடைசி நேரத்தில் ஏதாவது சொல்லி அமைதியைக் குலைத்துவிட்டு
எதுவும் அறியாதவன் போல முன்னிருக்கையில் வந்து இருப்பான்.
ஒருநாள் அவனது இயல்புகள் மாறும் என்ற சின்ன நம்பிக்கை இருந்து கொண்டேயிருந்தது.
எனது
முயற்சிகளுக்கு அவனே பேராதரவு தருவதாக மேடைகளில் பொய் சொல்லத்
தொடங்கினேன். எல்லா இடங்களிலும் அவனை முன்னிலைப்படுத்தியே எனது பணிகளைச்
செய்தேன்.
எனது கவிதைப்புத்தகங்கள் வெளியிட்ட ஒவ்வொரு மேடையிலும் அவனையே நூலை வெளியிட்டு வைக்க அழைப்பேன். அவனுக்கு நன்றி சொல்லி அவனைத்தான் பெருமைப்படுத்தினேன்.
ஏனெனில் அவனை நான் அந்தளவு நேசித்தேன். ஆனால் அவனோ என்னைப் பழிவாங்கிக் கொண்டேயிருந்தான்.
2011இல் ப...னி என்று ஒருத்தி என் வீட்டுக்கு வந்தாள். அவனது பள்ளிக்கால நண்பியென்று அறிமுகமானாள். நட்பு என்றால் என்ன நட்புக்கான எல்லை எதுவரை என்பதை நான் புரிந்து வைத்திருந்தமைக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசம்.
ஆரம்பத்தில் சங்டமாக இருந்தாலும் நான் பிரிந்து வாழ்வதால் அவர்களது உறவு பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவும் தோன்றவில்லை.
000 000 000
உயிர் தப்பிய பல போராளிகள் வெளிநாடு வர உதவினேன். பல குடும்பங்கள் மாணவர்களுக்கு உளவள ஆற்றுகைகளும் செய்து கொண்டிருந்தேன். பலர் தங்களுக்கு வீசா கிடைத்ததும் என்னை முதலில் சந்திப்போம் எனச் சொன்னார்கள்.அப்படி பலர் வீட்டுக்கு வந்தார்கள்.
வீட்டுக்கு வருவோர் யாவருக்கும் அவன் உலகிலேயே சிறந்த ஒரு துணையென்பது போலவே அவர்களுக்கெல்லாம் அவனை அறிமுகம் செய்தேன். என்னைப் பார்க்க வந்து போன அனைவரும் சொன்னது இதுதான் :-
அக்காவுக்கு நல்ல துணை கிடைச்சிருக்கு.
உள்ளே தீயும் வெளியே புன்னகையுமே எனது வாழ்வு என்பதை யாரும் காணாமல் மறைத்துக் கொண்டேன்.
உள்ளே தீயும் வெளியே புன்னகையுமே எனது வாழ்வு என்பதை யாரும் காணாமல் மறைத்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்து போகும் போராளித் தோழமைகள் ஒவ்வொருவரும் அவனைப் போல ஒருவன் எனக்கு வாழ்வில் இல்லையென்றே மற்றையவர்களுக்குச் சொல்வார்கள்.
ஆனால் அவர்கள் வந்து போன பிறகு அவர்கள் ஒவ்வொருவரோடும் என்னைத் தொடர்புபடுத்தி படுகேவலமாகக் கதைசொல்வான்.
என்னிடம் வந்து போன அனைத்து நண்பர்களையும் படுக்கையில் தொடர்புபடுத்தி தன் சார்ந்தவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அனைவருமே என்னை அக்கா , அம்மா , தங்கைச்சி , மருமகள் இப்படித்தான் உறவோடு அழைப்பார்கள். பழகினார்கள். ஆனால் அவன் மட்டும் என்னையொரு விபரச்சாரி போலவே கதைபரப்பிக் கொண்டிருந்தான்.
அதற்குத் துணையாக அவனது பள்ளிக்காலத் தோழியென்று வந்தவளும் ஆதரவு கொடுத்தாள். பள்ளித்தோழியென்பவள் அவனது அறையில் தான் வரும் போதெல்லாம் தங்குவாள். ஒரே கட்டிலில் பள்ளித்தோழி படுத்து எழும்பும் வரையில் தான் அவர்களது நட்பு இருந்தது.
அவளே எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனைகள் தோன்ற காரணமானாள். எனக்கு ஆதரவு தருவது போல அவள் நடித்ததையும் நான் நம்பியது ஒருகாலம்.
அவனது ஒன்றுவிட்ட தங்கைகளில்
ஒருத்தியான றோ..னியுடன் பிரச்சனைகளைப் பேசினேன். அவளும் அவனது அரியண்டத்தை பார்த்த பிறகு என்னை பிரிந்து போ இவன் திருந்தான் எனச் சொன்னாள்.
இன்று அவளும் அவனது கள்ளத்தனங்களுக்கு சாட்சியாய் நிற்பது வேறுகதை.
இனி சமாளித்தல் இயலாதென 2012 விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடிவெடுத்தேன்.
அவன்
செத்துப்போவேன் என்றான். என்னால் தான் சாகப்போவதாக மிரட்டத் தொடங்கினான்.
உறவினர்கள் சிலர் தலையிட்டு இனி முடிதென்று கைவிட்டார்கள்.
2013ஏப்றல் கனடாவில் இருந்து அவனது அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அவர்களது வருகை எங்களுக்குள் இருந்த பிரச்சனைக்கு தீர்வாகும் எனவே நம்பினேன்.
இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துப்போன கதையாய் அவன் அம்மாவும் அப்பாவும் தங்கள் மகன் மட்டுமே சொல்வது சரி என்னில் தான் தவறென்றார்கள்.
எனக்காக என்பக்கம் எனது பிள்ளைகள் தவிர யாருமில்லை.
தன்மகனுக்கு விவாகரத்துக் கொடுத்து அவனை வேறு வாழ்வை வாழ அனுமதியென்றாள் அவனது அம்மா.
மாமியார் தொல்லையென்பதை அவர்கள் வந்து நின்ற ஒருமாதத்தில் உணர்ந்து கொண்டேன். இருந்த கடைசி நம்பிக்கையும் போய்விட்டது.
கோபம் அழுகை என்ன செய்வதென்றே தெரியாத இயலாமை. என் பிரச்சனைகளை புரிந்து கொண்ட போராளி அண்ணன் ஒருவன் ஐரோப்பிய நாடொன்றில் இருந்தான். அவனிடம் மட்டுமே எல்லாவற்றையும் சொல்லியழுதேன்.
பேசாமல் விட்டிட்டு பிள்ளைகளோடு சந்தோசமா இருங்கோ எதுக்கு உந்தச் சனியனோடை வாழ ஆசைப்படுறீங்கள் ?
அவனோடு ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தவளும் வந்தாள். அவளும் அவர்களது பக்கமே நின்றாள்.
எனது நகரில் வாழ்ந்த இத்தாலிய நண்பியைத் தேடிப்போனேன். அவள் ஏற்கனவே எனது பிரச்சனைகளை அறிந்தவள்.
எனக்கும்
பிள்ளைகளுக்கும் 10வருடங்களுக்கு மேலாக ஆதரவாக இருந்தவள். அவளும் அவளது
கணவனும் தாங்கள் பேசிப்பார்ப்பதாக சொல்லி அவனிடம் கதைத்தார்கள்.
இறுதியில் இத்தாலிய நண்பியின் கணவனோடு எனக்குக் கள்ளத் தொடர்பென்று கதைசொன்னான்.
எனக்கு கள்ளத்தொடர்பென்று அவன் சொன்ன அனைத்து ஆண்களோடும் நான் போவதென்றால் வருடங்களே போதாது.
எனது முகநூல் நண்பர்களையெல்லாம் தேடித்தேடி தொடர்பு கொண்டான். என்பற்றிய அவதூறுகளே சொல்லிக் கொண்டிருந்தான்.
000 000 000
என் பொறுமை என்னைவிட்டு விலகியது. விவாகரத்துக்குத் துணிந்தேன். பிள்ளைகளை ஒருநாள் பாடசாலையால் அழைத்துக் கொண்டு உணவகம் ஒன்றிற்குப் போனேன்.
அவனது பெற்றோர்களும் விவாகரத்து கொடுக்கச் சொல்வதைச் சொன்னேன்.
எங்களுக்கு வேண்டாம் உவரை விடுங்கோ. விவாகரத்து எடுங்கோ... என பிள்ளைகளும் சொன்னார்கள்.
அப்ப நாங்கள் எங்கை இனி இருக்கிறது ? மகள் கேட்டாள்.
வீடு
எங்களுக்கும் பங்கிருக்கு நாங்கள் வீட்டில இருக்கலாம் மகன் சொன்னான்.
யேர்மனியப் பெண்களுக்கான ஆற்றுகை மையமொன்றின் சமூகப்பணிகளில் நானும் இயங்கிக் கொண்டிருந்தேன்.
எத்தனையோ
பெண்களுக்கு உதவிய நான் எனக்கு உதவி கோரினேன். என் பிரச்சனைகளைக் கேட்டு
அந்த நிறவனத்தின் தலைமையதிகாரியும் பணியாளர்களும் அடைந்த அதிர்ச்சியை இன்று
நினைத்தாலும் கலவரமாக இருக்கிறது.
தலைமையதிகாரியும் துணையதிகாரியும் 2வாரங்கள் என்னோடு பேசினார்கள்.
விவாகரத்து
என முடிவெடுத்தால் ஒரே முடிவாக இருக்க வேண்டும் இடையில் மாற்றம் வந்தால்
சட்டச்சிக்கல்கள் வருமென்றார்கள். அதனால் நிதானமாக யோசிக்குமாறு ஆலோசனை
தந்தார்கள்.
இனிமேல் அவனோ அல்லது அவனது பள்ளிக்காலக் காதலியோ இடையூறு செய்தால் காவல்துறையை அல்லது அந்நிறுவனத்தின் அவசர உதவியை அழைக்குமாறு கூறி வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.
நாளுக்கு நாள் அவன் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவனது பள்ளிக்காலக் காதலி வருவாள்.
அவனும் ஒன்றுவிட்ட ஒருவார இறுதிநாட்களில் காதலியிடம் போய் வருவான். சிலவற்றை நானும் புரிந்து கொள்ளாதமாதிரி நடந்து கொண்டேன்.
இருவரும் நீச்சல் போவார்கள் சமைப்பார்கள் எல்லாம் செய்வார்கள் ஆனால் என் அமைதியும் பிள்ளைகளின் அமைதியும் தொலைந்து போனது.
மகன் பாடசாலையில் பலதடவை மயங்கி வீழ்வதாக பாடசாலையில் இருந்து அழைப்பார்கள்.
மகளும்
திடீரென அழுது படிக்க முடியாமல் அந்தரிப்பாள். மாறிமாறி பாடசாலையில்
இருந்து அழைப்பார்கள். பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைக்கூட அவன்
புரிந்து கொள்ளாது கொடியவனானான்.
வெளியில் போகும் நேரம் கைபேசி அழைத்தாலோ வீட்டில் நிற்கும் போது வீட்டு தொலைபேசி அழைத்தாலோ நெஞ்சு பதறும் பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்றோ என்று தான் அங்கலாய்க்கும் மனம்.
இரவில் திடீரென பிள்ளைகள் பயந்து எழுவார்கள் அழுவார்கள். 2013 ஏப்றல் தொடங்கி 2016 வரையும் அம்புலன்ஸ் தயாராக இருப்பது போல நானும் அந்தரிப்போடு இருக்கத் தொடங்கினேன். நிம்மதியாக கண்ணுறங்கியதில்லை.
பிள்ளைகளின் வகுப்பாசிரியர்கள் அழைத்தார்கள். விசாரித்தார்கள். உண்மையைச் சொன்னால் பிள்ளைகளை அரசு எடுத்துவிடும் என்ற பயத்தில் சமாளித்துக் கொண்டேன்.
2வருடங்கள் காத்திருந்தும் மாற்றங்கள் எதுவும் இல்லாமையால் சட்டத்தரணியோடு பிள்ளைகளின் நிலமைகளைப் பேசினேன். உனது கையில் தான் அவர்களது நிலை தங்கியுள்ளது.
உன்னை ஒருநாளைக்கு கொலைசெய்திட்டு மனநோயெண்டு தப்பப்போறான். உன் முடிவில் தான் உன வாழ்வு என சட்டத்தரணி எனது இறுதி முடிவுக்காக காத்திருந்தார்.
2007 தொடக்கம் பிரிந்து வாழ்வதால் விவாகரத்துக்கான காலம் இனி இழுபடாது விரைவில் விவாகரத்து வருமென்றார் சட்டத்தரணி.
2015 விவாகரத்துக்கான நோட்டீஸ் அவனுக்கு எனது சட்டத்தரணி அனுப்பியிருந்தார். என் உறவுகள் நண்பர்கள் யாவரையும் தேடித் தேடி தொலைபேசினான்.
நான் வேறு ஆண்களுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதால் தான் தன்னை விலக நிற்பதாக பொய்சொல்லத் தொடங்கினான்.
என் எதிரிகளுக்கு என்பற்றி , என்னோடு நட்பாயிருந்த போராளிகள் சிலரை தொடர்படுத்திச் சொன்னான்.
சமாதானம் பேச வருவதாக முன்வந்த யாவரோடும் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.
அவனது காதலி எனது பாதிப்பங்கான வீட்டை அவன் பெயருக்கு எழுதிக்கொடு என்றாள். சமூக உதவிக்கு விண்ணப்பித்தால் பணம் கிடைக்கும் அதனை அவனுக்குக் கொடு என்றாள்.
2007 இல் இருந்து எனக்கும் பிள்ளைகளுக்குமான உணவுச்செலவுகள் பிள்ளைகளின் தேவைகளை நானே 3வேலை செய்து சமாளித்துக் கொண்டிருந்தேன்.
அவன் பிள்ளைகளுக்கு உணவுக்கென வாங்கி வரும் சில பொருட்கள் தவிர அனைத்தும் எனது கடின உழைப்பின் ஊதியமே செலவாகிக் கொண்டிருந்தது.
2017 மகள் பல்கலைக்கழகம் போகும் வரை வீட்டில் இருக்கிறோம். மகள் வெளியேற நானும் வீட்டை எழுதித்தந்துவிட்டுப் போகிறேன் எனக் கேட்டுக் கொண்டேன்.
அவனது காதலி எங்களுக்குள் தூதுவராய் இருந்தாள்.
ஏதாவது காரணம் சாட்டாக எடுத்து பிரச்சினை தருவான். பிறகு எனது நிம்மதியை பிள்ளைகளின் நிம்தியைப் பறித்துவிடுவான்.
குடித்துவிட்டு கதவுகளை உடைப்பது பாத்திரங்களை உடைப்பது என அவனது தொல்லைகள் எல்லைமீறிக் கொண்டிருந்தது.
பிள்ளையள்
பள்ளிக்கூடத்தில ஏதும் கேட்டா ஒண்டும் சொல்லப்படாது. என அடிக்கடி சொல்லிக்
கொள்வேன். 2015 - 2016 ஆண்டு பிள்ளைகளின் கல்வி இறுதியாண்டுத்
தேர்வுக்காலம்.
மகள் மனச்சோர்வுற்றுப் போனாள். 2016 இறுதியாண்டுத் தேர்வில் தேற்றினால் தான் 2017 பல்கலைக்கழக நுளைவுத் தேர்வு எழுத முடியும். அவள் நானில்லாமல் தனியே இருக்கமாட்டாள். எப்போதுமே என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தாள்.
பிள்ளைகள் பரீட்சையில் தேறி வருவார்களோ எனும் அந்தரம் என் அமைதி நிம்மதி யாவையும் பறித்தது.
மகள்
2013 தொடக்கம் 2015 மாசிமாதம் வரை அவள் என்னோடு தான் நித்திரை கொள்வாள்.
நித்திரையின்றி தவித்தாள். பயங்கரக் கனவுகள் வருவதாக அழுவாள்.
மகன் தனக்குள்ளே யாவையும் புதைத்தான். தங்கைச்சியையும் என்னையும் கவனம் பார்த்தான்.
எல்லாம் உங்கடை பிழை...அடிக்கடி அவன் சொல்வான்.
விவாகரத்துத்தான் இறுதி முடிவாக வேண்டும் என பிள்ளைகளும் விரும்பினார்கள்.
2015 நத்தார் வாரம் அவனது காதலியை அவளது வீட்டிற்கு போய் கூட்டி வந்தான். அவள் வந்ததிலிருந்து ஒரே பிரச்சனை. அழுகையும் அவலமும் தான்.
24.12.2015 அன்று இரவு மகளை அவளது சினேகிதியிடம் கொண்டு போய்விட்டேன். வருடாவருடம் அவர்களோடு அவள் நத்தாரை கொண்டாடுவாள்.
2016 தை நடக்கவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுக்கு மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்தான்.
000. 000. 000
இரவு 7மணிபோல் மகனுக்கு சமைத்துக் கொண்டிருந்தேன்.
அவனது
காதலி குசினிக்குள் வந்திருந்தாள். அவனும் வந்தான். நான் இருக்கும்
இடத்திற்கு அவனை போகக்கூடாதென்ற சட்டத்தரணியின் முடிவையும் மீறி வந்தான்.
கதவை அடித்தான் கண்ணாடியை உடைத்தான். சமையல் பாத்திரங்களை எறிந்து கத்தினான்.
எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நானும் தடுமாறிப்போனேன். மேலே படித்துக் கொண்டிருந்த மகனுக்கு சத்தம் கேட்டுவிடக்கூடாதென்ற என் கவனத்தை அறிந்தவன் பிள்ளையைக் கூப்பிட்டு சத்தம் போட்டான். எனக்கும் அடித்தான். அவனது காதலி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வருடம் தோறும் நத்தார் , எனது பிறந்தநாள் பிள்ளைகளின் பிறந்தநாள்களில் நாங்கள் அழுதபடியே அந்த நாட்கள் பிறக்கும். இம்முறையும் எங்கள் கண்ணீரோடு நத்தார் பிறந்தது.
மகனோடு நானும் போய் கதவைப்பூட்டினேன். அவனும் அவனது காதலியும் அவர்களது வீட்டுக்குள் போனார்கள்.
அவன்
சத்தமிட்டு என்னைத்திட்டிக் கொண்டிருந்தான். தனது வீட்டுக் கணணாடியை
கையால் குத்தி உடைத்தான். கையில்காயம். நான் தனக்கு அடித்ததாக
காவல்துறைக்கு சொல்லப்போவதாக கத்தினான்.
மரண ஓலம் என் வீட்டில் அன்று.
மகன் காவல்துறையை அழைத்து அவனை வெளியேற்றுமாறு சொன்னான்.
மகள் நத்தார் முடித்து வரும்போது வீட்டில் நடந்த எதையும் அவள் அறியாமல் பார்க்க வேண்டும்.
நாளைக்கு பாப்பம் குஞ்சு.
என மகனை சமாளித்தேன்.
மகளை அழைத்துவரப் போனேன். அதுவரை நடந்த பிரகண்டங்களை அவள் அறியாமல் அவள் முன் சிரித்து சமாளித்து மகளை வீட்டுக்கு கூட்டி வந்தேன்.
வாசலுக்குள் வந்த போது உடைந்திருந்த கண்ணாடித்துண்டுகளை கண்டாள். தடயங்களை மறைக்க மறந்து போனது உறைத்தது.
இதென்ன கண்ணாடியள் ?
அதம்மா அவையளின்ரை பியர் போத்தலென்ற போது கதவுக்கண்ணாடி உடைந்ததைக் கவனித்தவள்.
பயந்து போனாள். அழுதாள்.
என்னம்மா நடந்தது ?
இனி மறைக்க ஏலாது.
நத்தார் கொண்டாடி கிடைத்த பரிசுகளோடு வீடு வந்தவள் அழுதாள். அவள் மகிழ்ச்சி தொலைந்தது. பிள்ளைகள் இருவரும் அழுதார்கள்.
காவல்துறையை அழைத்து அவனை வெளியேற்றுமாறு கூறினார்கள்.
மகன் தன்னால் அமைதியாக படிக்க முடியவில்லையென அழுதான்.
000 000 000
அவனது வீட்டுக்கு போனேன். பிள்ளையின் பரீட்சை முடியும்வரை நானும் பிள்ளைகளும் வீட்டில் இருக்கிறோம். அதுவரை குழப்ப வேண்டாமென அழுதேன்.
என் மன்றாட்டு கெஞ்சல் எதையும் அவர்கள் கேட்கவில்லை.
உன்ரை பிள்ளைக்கு படிப்போடி முக்கியம் ? எங்க படிப்பிச்சுக்காட்டு பாப்பம் ?
பரீட்சையில் தேற்றாது போனால் ஒருவருடம் கழித்தே பிள்ளை பரீட்சை எழுத முடியும்.
அவனை வெளியேற்றாது போனால் தான் வீட்டைவிட்டுப் போய்விடுவேன் என அழுதான் மகன்.
18வயது
வந்த பிள்ளையின் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. அவன் தனது நண்பன் ஒருவனை
அழைத்து வீட்டிலிருந்து வெளியேறினான். தனது தொலைபேசியையும் நிறுத்திக்
கொண்டு போனான்.
பிள்ளை வெளியேறியதோடு அவர்கள் இருவரையும் வெளியேறுமாறு எச்சரித்தேன்.
நாளை மதியத்துக்கிடையில் அவனும் அவளும் வீட்டை விட்டு வெளியேறாது போனால் காவல்துறையை அழைப்பேன் என்றேன்.
இது என்ரை வீடு நாங்க போகமாட்டம். செய்றதை செய். என்றான் அவன்.
இரவிரவாய் என் எதிரிகள் சிலருக்கு இருவரும் தொலைபேசி முகநூலில் அழைத்தார்கள்.
பிரான்சில் வாழும் அவன் நண்பன் சாத்திரி என்பவனைத் தொடர்பு கொண்டான். சாத்திரி என்பவன் ஏற்கனவே நேசக்கரம் பணிகளில் முரண்பட்டு என்பற்றி பொய்கள் எழுதியவன்.
தன்காதலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்பற்றி சாத்திரிக்குப் பொய்கள் சொன்னான்.
என்னால்
அவன் சாகப்போவதாகவும் நான் வேறொரு நபரோடு வாழ்வதாகவும் ஒரு போராளியின்
பெயரைம் கூறினான். தனது இறுதி மரண வாக்கு மூலம் தருவதாகவும் அதனை
ஒலிப்பதிவு செய்து உலகத்திற்கு அறிவிக்குமாறும் சாத்திரிக்கு கூறினான்.
சாத்திரி எனது முகநூல் உள்பெட்டியில் என்பற்றி எழுதப்போவதாக எழுதினான்.
காவல்துறையை அழைத்து நிலமையைச் சொன்னேன். சாத்திரி அனுப்பிய தகவலையும் படமெடுத்து மொழிபெயர்த்து காவல்துறையிடம் கொடுத்தேன்.
காவல்துறை அவனையும் அவளையும் வீட்டிலிருந்து வெளியேற்றினார்கள். வீட்டுக்கு எதிர்க்கதவு காவல்துறை என்பதால் பயப்பிடாமல் பிள்ளைகளையும் என்னையும் இருக்குமாறு கூறி வழக்கு பதிவு செய்தார்கள்.
ஒருமாதம் ஆயிரம் மீற்றர் சுற்றளவுக்குள் அவன் வரக்கூடாதெனவும் அறிவித்தார்கள்.
அவன் தனது காதலியின் வீட்டிற்கு போனான்.
அங்கிருந்து எனது நண்பர்கள் உறவினர்களை அழைத்து தன்னை வீட்டால் துரத்திவிட்டதாகவும் தற்கொலை செய்யப் போவதாகவும் சொன்னான்.
ஆளாளுக்கு தொலைபேசியெடுத்தார்கள். மானம் மரியாதை கௌரவம் என பல கதைகள்.
அவன் செத்துப் போனால் கூட நல்லமென்றது மனம். அந்தளவு வெறுத்துப் போனது. எல்லா தூதுவர்களின் அழைப்பையும் நிறுத்திக் கொண்டேன்.
மகன் படிக்க முடியாது அந்தரித்தான்.வீட்டு நிலமையை அறிந்த அவனது தோழ தோழிகள் அவனை தம்மோடு வருமாறு அழைத்தார்கள்.
மருத்துவப் பெற்றோர்களான அவனது தோழியொருத்தியின் பெற்றோர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள்.
பரீட்சை முடியும் வரை மகனைத் தங்கள் வீட்டில் இருந்து படிக்க தங்கிடம் உணவு யாவும் கொடுப்போம் பிள்ளையை அனுப்பினால் போதுமென்றார்கள்.
பிள்ளையின் பிரிவு சாவுக்குச்சமானமான துயரம். அவனது நல்வாழ்வுக்காக அவனை வெளியில் அனுப்பினேன். தின்றது பாதி தின்னாதது பாதியாக பிள்ளையின் பிரிவுத்துயர்.
மகள் நிலமை மேலும் மோசமாகியது. அவள் மருத்துவம் பெற வேண்டி வந்தது. எல்லாம் இழந்து தனித்துப் போனேன். பழிசொல்லி பாவம் சொல்லி என்னை ஊரெங்கும் விபச்சரியாக சித்தரித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு ஆதரவாக எனது சித்தி சித்தப்பன் , என் அம்மாவும் சகோதரிகளும் அவன் சொல்வது யாவும் உண்மையென்ற தோற்றத்தை உருவாக்கினார்கள்.
எல்லோரும் கைவிட்ட நிலையில் வரும் பழிகளையும் சுமைகளையும் தாங்கி என் கண்ணீரை துயரை தாங்கினான் என் தோழன்.
எப்போதோ நான் செய்த உதவிக்கும் அவனைக் காத்ததற்கும் அவன் என்னை தோழ்தந்து காத்தான்.
15வருடம் போராட்ட வாழ்வு போரின் முடிவில் சிறைகளில் இருந்து மீண்டவன். அவனுக்கான பொறுப்புகள் குடும்பம் யாவும் இருந்தது.
அப்போது நானிருந்த மனநிலையில் என்னை அழித்தோ அல்லது என்வாழ்வை சிதைத்தவனையும் சிதைத்தவளையும் கொன்று போட வேண்டுமென்ற கோபம்.
என்கோபத்தை ஆற்றுப்படுத்தி எனக்கும் பிள்ளைகளுக்கும் ஆதரவாக அவனே வந்தான்.
எனக்கு ஆதரவு தேவைப்பட்ட போது என்னைத் தாங்கிய தோழன் மீது சுமத்தப்பட்ட பழிகளையெல்லாம் அமைதியாகத் தாங்கினான்.
000 000 000
000 000 000
விவாகரத்து தீர்வுக்கான தவணைகள் 2016ம் ஆண்டு சித்திரை,ஆனி,ஆடி மாதமென மாறிக்கொண்டிருந்தது.
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவன் வீட்டை வங்கிக்கு கொடுக்கப்போவதாக தனது சட்டத்தரணி மூலம் கடிதம் எழுதுவித்தான்.
அல்லது அவன் செலுத்த வேண்டிய கடன்களை நான் செலுத்தினால் வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதாக கேட்டிருந்தான்.
பிள்ளைகள் வெளியேறும் வரை எனக்கு வீடு தேவைப்பட்டது. எனது சட்டத்தரணியின் ஆலோசனைப்படி வீட்டை எனது பெயருக்கு மாற்றினேன்.
மகன் பல்கலைக்கழகம் தெரிவாகினான். பெரும் போராட்டத்தின் நடுவே அவன் சித்தியடைந்தான். கையில் எதுவும் இல்லை.
எனக்காக
உதவ இருந்த நண்பர்களை நாடி உதவிகளைப் பெற்று பிள்ளைகளுக்காக இருந்த
நகைகளையெல்லாம் விற்று மகனை பல்கலைக்கழகப் படிப்புக்கு அனுப்பினேன்.
பிள்ளையின் பல்கலைக்கழக நுளைவுக்கு 4ஆயிரம் யூரோக்கள் கடனெடுத்துக் கொடுத்தேன்.
பிறகு மாதாந்தம் கிடைக்கும் கல்விக்கடனோடு எனது பங்காக 250யூரோ அவனுக்கு அனுப்ப வேண்டும்.
இடையில் பிள்ளைக்கான இதர தேவைகள் யாவுக்குமாக தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
பிள்ளை என்ன படிக்கிறான் ? எந்த பல்கலைக்கழகம் எதுவுமே தெரியாது. பிள்ளைகளே இப்படியொருவனை எங்கள் வாழ்வில் சந்தித்ததாக நினைக்கக்கூடாதென்ற வைராக்கியத்தில் அவனது உதவியைத் தேடவில்லை.
ஆனால் பிள்ளையின் கல்விக்கு தான் 15ஆயிரம் யூரோக்களை கொடுத்திருப்பதாக தனது ஊரவர்களை நம்ப வைத்திருக்கிறான்.
15சதம் கூட தராதவனையே எல்லோரும் நம்புகிறார்கள்.
17.08.2016 அன்று விவாகரத்து வந்தது.
என்னைப்பீடித்த பீடை தொலைந்தது. பிள்ளைகளும் நானும் மீண்டோம்.
பழிசொல்லும் உலகினர் கதைகளில் சிக்காமல் எங்கள் இலக்குகளில் உறுதியாக இருந்தோம்.
பிள்ளைகள் அவர்கள் கனவை அடைந்தார்கள். முதற்பெயருக்கு மட்டுமே உபயோகமான ஒருவனை அவர்கள் தங்கள் ஞாபகங்களிலிருந்து மறந்தார்கள்.
000. 000. 000.
அவன் பழையகாதலியையும் கைவிட்டான்.
காலத்திற்கு காலம் பெண்கள் உறவுகளை நாடும் அவன் முகநூலில் ஒரு பெண்ணை பிடித்தான். காதலித்தான். அவளோடு வாழத் தொடங்கியிருக்கிருக்கிறான் .
என்பற்றிய பழிசொல்தலை அவன் கைவிடவேயில்லை.
2017 மகளும் பல்கலைக்கழகம் தேர்வாகி 01.10.2017 பல்கலைக்கழகம் போகப்போகிறாள். அவளது கல்விக்காக பத்தாயிரம் யூரோ கடனெடுத்துள்ளேன்.
என்னால்
எனது குழந்தைகளுக்காக எத்தனை ஆயிரங்களையும் கொடுக்க முடியும்.எடுக்கும்
கடனையும் செலுத்த உழைக்க முடியும். ஒளித்து ஓடமாட்டேன். என் குழந்தைகள் என்
வரம்.அவர்களுக்காக வாழ்தல் தான் என்னை வாழ்விக்கும் ஊக்கி.
000. 000. 000
அவன் எனது வீட்டு முகவரியைக் கொடுத்து பல வங்கிகளில் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறான்.
உண்மை தெரியாத நான் கடிதங்கள் விலாசம் மாறி வருகிறதென நினைத்து அவற்றையெல்லாம் அவனது முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.
கிடைத்து கடனட்டைகளில் பெருந்தொகை பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி பிரித்தானியாவில் புதிய மனைவியுடன் ஒளித்திருக்கிறான்.
இங்கே இருந்த வீட்டுக்கு வாடகை கட்டாமல் , வங்கிகளுக்கு பணம் செலுத்தாமல், வேலையிடத்தில் சொல்லாமல் வேலைக்கு போகாமல் ஒளித்தவனைத் தேடி வீட்டுக்கு விசாரணை வந்த போது தேடிய போதுதான் புதிய மனைவியுடன் வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தோடு வாழ்கிறான் என்ற உண்மை தெரிய வந்தது.
இருந்த போதும் தொல்லை இப்போது தொலைந்த போதும் தொல்லை தந்து விசாரணைகளுக்கு பதில் சொல்ல வைத்து ஒளித்திருப்பவனை முதுகெலும்பற்ற ஆணென்று சொல்வதைவிட வேறென்ன சொல்ல ?
இன்னும் இவனை நல்லவனென நம்புகிவர்களுக்கும் அவன் என் மீது சுமத்திய பழிகளுக்கெல்லாம் காலம் தன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்"
17.08.2017
நேசக்கரம் சாந்தி
No comments:
Post a Comment