Saturday, April 22, 2017

தமிழினி. ஒருமுனை உரையாடல்.(சாந்தி நேசக்கரம்)

தமிழினி.ஒருமுனை உரையாடல்.

 முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது. உன்னோடு பேச விரும்பினாலும் மறுமுனையில் நீயில்லை.
தமிழினி !


ஒரு பெரும் கனவாகவே இருந்தவள் நீ. இரண்டாயிரமாம் ஆண்டு  தொடக்கத்தில் இலக்கியம் மூலம் அறிமுகமானாய். சமாதான காலத்தில் ஒரு இரவு இன்ப அதிர்ச்சி தந்து சந்தித்த போது என் கனவில் இருந்த தமிழினியாய் இல்லாமல் சாதாரணமானவளாய் கைகோர்த்தாய்.

தோழில் கைபோட்டுக் கதைபேசி அக்காவானாய். எனது எழுத்துக்களின் வாசகியாய் உன்னை அறிமுகம் செய்து நெருங்கிய தோழி நீ. அக்காவாய் அம்மாவாய் அன்பு தந்த ஆழுமை நீ.

உன்பற்றிய நான் வைத்திருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நீ; நெருங்கிய உறவாகினாய். இலக்கியம் அரசியல் என அனைத்தும் பேசிக்கொள்ளும் தருணங்களைத் தந்தது காலம்.

உனது பொறுப்புகள் கடமைகள் நடுவிலும் அவ்வப்போது ஏதோவொரு வழியில் தொடர்போடிருந்தாய். பலருக்கு உன்னைப் பிடிக்கும் சிலருக்கு உன்னை கசக்கும். பிடிக்காத சிலர் முன் உன்பற்றி உனக்காக வாதாடுவேன். உன்னைப் பிடிக்கும் பலர் முன்னால் மௌனமாகக் கடந்து செல்வேன்.

ஆயிரம் புத்தகங்களை வாசித்தறியும் அறிதல்களை உனக்குள் கொண்ட ஆற்றல் நீ. உன்னிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம்.

செஞ்சோலை வளாக விமானக்குண்டு வீச்சில் ஏற்பட்ட இழப்பில் நீ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட போது நீ உனக்குள் உருகினாய்.
000            000             000

உனது தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கான தலைமைத்தவ கற்கைநெறி வழங்கப்பட்ட போது , இலங்கையரச விமானப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

அந்த இழப்பின் முழுப்பொறுப்பும் உன்மீது சுமத்தப்பட்டது.
செஞ்சோலைப் படுகொலை பின்னர் உனது பதவி நீக்கம் பிறகும் நீ சோர்ந்து போகவில்லை.

வெற்றியை கொண்டாட கோடிகோடியாய் முன்வரும் யாரும் தோல்வியை அநாதையாகவே விட்டுவிடுவார்கள். நீயும் அப்படித்தான். அநாதைக் குழந்தையாய் தோற்றுப் போனாய். ஆனாலும் போராளியாகவே உன்னை உனது ஆற்றலை அடையாளப்படுத்தினாய்.

செய்யென்ற கட்டளைகளை கேள்வி கேட்காமல் செய்து கொண்டிருந்தாய். காலம் தந்த பணியில் புதிய போராளிகளை இணைக்கும் பணியில் உனக்கு பெரும் பங்கு இருந்தது. காலம் தந்த பணியில் விருப்பம் இல்லாது போனாலும் நிறைவேற்ற வேண்டிய விதி உனக்கு விதிக்கப்பட்டது.

புதிய போராளிகளை இணைக்கும் பணியில் நீயும் ஒரு ஆளாய் நின்றதற்காய் முதல் முதலாய் உன்னில் கோபம் வந்தது. நேரில் உன்னை சந்தித்தாலும் பேசவே கூடாதென்ற ஓர்மம் வந்தது. எனினும் உன் மீதான அன்பும் உன்னோடான நெருக்கமும் உன்னிலிருந்து பிரியாது உன்னை நேசிக்க வைத்தது.

அன்பு மட்டுமே உலகில் எல்லாக் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வலிமை மிக்கது. அந்த அன்பு தான் உனக்கும் எனக்குமான எல்லா வகையான முரண்களையும் தகர்த்து தோழமையை வளர்த்தது.

காலம் 2011 தை...,

2009 மேமாத முடிவுகளின் பின்னர் காணாமற்போன பலர் போல நீயும் காணாமல் போயிருந்தாய். திரும்பிவராதோர் பட்டியலில்; நீயும்....!

திடீரென ஒருநாள் விளக்கமறியல் சிறைச்சாலையில் நீயிருப்பதாய் தோழன் சதீஸ் (சிறையில் மரணமடைந்துவிட்டான்) அறியத்தந்தான். உன்னை அவன் மிகவும் கோபித்து திட்டியதாகவும் கூறினான்.

கொழும்பில் கைதாகும் போது குப்பிடியத்து தப்பியவன் சதீஸ். நீ குப்பிடியக்காமல் அல்லது உன்னை அழிக்காமல் எப்படி சரணடையலாம் என கோபித்தான்.

எந்த நேரமும் தன்னுயிரை இழக்கும் கனவோடு கொழும்பு வெளிமாவட்டங்களில் அலைந்தவன். அவன் கோபத்தில் அவனுக்கு நியாயமிருந்தது.

நீ ஏன் குப்படியித்து தப்பினாய் ? கேட்டதும் யோசிக்காமல் சொன்னான்.
அது ஆமி என்னை காப்பாற்றினான்....அல்லது நான் செத்திருப்பேன்....சாகத்தான் குப்பிடியச்சனான்.....என்றான் சதீஸ்.

சதீஸ் தன் வாதத்தில் பிடிவாதமாய் இருந்தான். நீயும் உன்போன்றவர்களின் சரணடைதலை அவன் ஏற்றுக் கொள்ளவேயில்லை. உங்களை நம்பி தங்கள் வாழ்வை சிறைகளில் கழிக்கும் போதெல்லாம் நீங்கள் களத்தில் இருக்கும் நம்பிக்கையே தன் சிறைவாழ்வைக் கூட பெரிதாக அலட்டவில்லையென்றான்.

அவன் சொன்ன கதைகளின் கனம் அவனது துயரின் வெளிப்பாடு உன் மீதான கோபமாக வெளியேறியது.

2011 தொடக்கத்தில் உன்னுடன் பேசுவதற்கான தொலைபேசியிலக்கம் தேடி சிறையில் இருக்கும் வேறொரு நண்பன் மூலம் பெற்றுக் கொண்டேன்.

அழைத்த நேரம் சாமம் தாண்டியிருந்தது. குரல் கேட்டதும் முதலில் அழுதாய். உன் கண்ணீரும் கலக்கமும் தீராமலே தொடர்ந்தது. நிமிடங்கள் கழிந்தது.

நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல. நானும் என்ரை கையால மண்போட்டு எத்தனை பேரை வழியனுப்பினான் ?
நானெப்பிடியம்மா காட்டிக் குடுப்பேன் சொல்லு ?

நீ கேட்ட கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. உன் கண்ணீர் நீ சொன்ன கதைகள் உன் மீதிருந்த கோபத்தையும் கழுவிச் சென்றது.

சுகம் கேட்டு சுகம் சொல்லும் இடத்தில் நீயில்லை எனினும் கேட்டேன்.

எப்பிடியக்கா இருக்கிறீங்கள் ? வழக்கு என்ன மாதிரி ?
நீதிமன்றுக்கு போறன் வாறன். எந்த மாற்றமும் இல்லை.

நீங்களெப்பிடி இருக்கிறியள் ? பிள்ளையள் வளந்திருப்பினம் ? உன் விசாரிப்பில் பழைய தமிழினியின் கருணையும் அன்பும் கலந்தேயிருந்தது.

அன்றிலிருந்து உன்னோடு தினமும் இரவு தொலைபேசிக்கொள்வது கடமையானது. தினசரி வெளிச்செய்திகளை உனக்கு சொல்லுவேன். சிலவேளைகளில் கவிதைகள் கூட உனக்கு வாசிக்க வேண்டி வந்தது.

சிலவேளைகளில் உறங்க முடியாமல் இரவுகளில் அழுதபடி அழைப்பாய். உன்னோடு விடிய விடியவும் பல நாட்கள் பேச வேண்டியிருந்தது. மன அழுத்தத்தின் உச்சம் உன்னை ஆட்கொண்டிருந்தது. சரியான மருத்துவமோ மாற்றுச் சிகிச்சையோ எதுவும் இல்லாத காலம் அது. உன்னோடு கதைத்துக் கதைத்து உன் கண்ணீரை துடைக்கத் தொடங்கினேன்.

கதைகதையாய் நீ சொல்லும் ஒவ்வொரு கதையும் கண்ணீராலேயே நிரப்பப்பட்டு உன் துயரங்களையே என்னுள் நிரந்தரமாக்கிவிடும்.

சிறையில் வாழும் பெண்கள் அவர்களது தனிமை துயரம் கண்ணீர் யாவையும் நீயொருத்தியே மொழிபெயர்த்தவள். வரிசையில் நின்று உணவு பெறுதல் முதல் அடிபட்டு தண்ணீர் எடுப்பது காக்கா குளியல் வரையும் நீ சொல்லும் கதைகள் ஒவ்வொன்றும் சிறைக்கதவுகளின் பின்னால் புதைந்திருக்கும் கோரமான உலகின் அறிமுகத்தைத் தந்தது.

அடிக்கடி அம்மாவுக்காய் அழுவாய்....உன்னோடு வாழ்ந்து மடிந்தவர்களுக்காய் மனமுருகிக் கண்ணீர் விட்டழுவாய். உன்னை உயிரோடு தப்புவித்து பழிசுமக்க வைத்த காலத்தைச் சபிப்பாய். ஆறுதல் சொல்ல முடியாது மறுமுனையில் சேர்ந்து அழும் போது மீண்டும் ஆறுதல் தரும் அம்மாவாகிச் சிரிப்பாய்.

அந்தக் கொடிய நாட்களில் உன்னோடு துணையாய் வந்தது இரண்டு. ஒன்று பைபிள் மற்றது நானென்று உன் நன்றியை அடிக்கடி தெரிவிப்பாய்.

 இராணுவச் சீருடைதரித்து உலவிய தமிழினிக்கும் சேலையுடுத்தவும் பொட்டுவைக்கவும் பூவைத்து உலவவும் வாழ்வை ரசிக்கவும் வாழவும்  ஆசைப்பட்ட காலம் அது.

என்னமாதிரியக்கா ஒளிவட்டம் ஏதும் தெரியேல்லயோ ? போடியப்பா காய்க்காலம் போயிட்டுது இனியென்ன பழங்கள் தானே.

எங்களையெல்லாம் கலியாணம் கட்ட இனி எவனடி வரப்போறான்.

அக்காவின் பிடரியின் பின்னால் மொழி திரைப்படத்தில் பிரகாஸ்ராஜ்ஜிற்கு தெரிந்தது போல ஒரு ஒளிவட்டம் தோன்றும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

உனக்குள் ஒரு ராஜகுமாரன் இருந்தான். உனக்குள்ளும் மௌனமாய் ஒரு காதல் கோட்டை இருந்தது. உனக்குள்ளே நீ வளர்த்த காதல்செடியில் கோடி மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

அவரைத் தொடர்பு கொண்டு உன்பற்றிச் சொன்ன போது உன் ராஜகுமாரன் இருந்த நிலமை உன்னைப் பற்றி யோசிக்கும் நிலமையில் இல்லையென்பதை வருத்தத்தோடு அறியத்தந்தார். தனது தொடர்பு இல்லையென்று சொல்லச் சொன்னார்.

நீ அவரோடு பேச ஆசைப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அவர் உன்னுடன் பேச விரும்பவில்லை என்ற உண்மையை இறுதிவரை உனக்கு மறைக்க நான் சொன்ன பொய்களெல்லாம் ஒருநாள் பொய்யாகிப் போனது.

ஏன் பேச விருப்பமில்லையாமோ ?
 சீ அப்பிடியில்லை அவருக்கும் கனக்க பிரச்சனையள் தானே...கதைப்பார் கொஞ்சம் பொறுங்கோ.

சரி விடு ஆனால் எல்லாருக்கும் சொல்லிவிடு நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல...யாருக்கும் துரோகம் செய்யேல்ல.

அதற்குப் பிறகு உனது காதல் கோட்டை உன் கண்ணீரால் உடைந்து கரைந்தது.

உனக்குப் பயிற்சி தந்தவர்கள் உனக்கு பெயரிட்டவர்கள் உன்னோடு வாழ்ந்த பெரிய அக்காக்களில் பலர் வெளிநாடுகளில் இருந்தார்கள்.

உன்னைப்பற்றிய அவர்கள் பலரது கருத்து :- நீ காட்டிக் கொடுக்கிறாய்.
உனக்கு உதவாமல் தப்புவதற்காக அவர்கள் சொன்ன பழியே நீ துரோகியாகக் காரணம்.

நீ நேசித்தவர்களே உன்னை துரோகியாக எண்ணி ஊகங்களால் உன்னை காயப்படுத்திய கதைகள் ஏராளம். சிலரை விசாரித்தாய் அவர்களுடன் பேச ஆசைப்பட்டாய். உனக்காக அவர்களையெல்லாம் தேடித் தொடர்பு கொண்டேன்.

தொடர்பில் இருந்த பலர் தங்களுக்கும் எனக்கும் தொடர்பாடல் உண்டு என்பதை உனக்கு சொல்ல வேண்டாமென வேண்டிக் கொண்டார்கள். கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி வெளிநாடு வந்தவர்கள் உன்னை வெறுத்தார்கள்.  யாரும் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை.

நீ பேச ஆசைப்பட்டவர்கள் யாரும் உன்னோடு பேசவோ தொடர்பை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. உன்னை வேண்டாமென்றவர்கள் தொடர்பை நானும் துண்டித்துக் கொண்டேன். ஏனெனில் உனது கண்ணீரையும் துயரையும் தினம் தினம் கேட்டுக் கொண்டிருப்பவள் நான்.

இயக்கம் கலைத்துவிட்டவர்களும் தப்பியோடி வந்தவர்களும் பலர் உன்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். நீ அரசோடு சேர்ந்துவிட்டதாகவும் உன்னோடு நானும் அரசபுலனாய்வாளர்களின் ஆளெனவும் கதைகள் பரவத் தொடங்கியது.

தாங்கள் மட்டுமே தேசத்தின் காவலர்கள் எனும் கனவில் பலர் மிதந்தார்கள்.

நீ  அதிகாரத்தில் இருந்த காலங்களில் செய்த தவறுகள் என நீண்ட பட்டியல் ஒன்றை சொல்லத் தொடங்கினார்கள். பெரிதாய் நினைத்த பலரின் உண்மை முகம் வெளிவந்தது.

தவறுகளே செய்யாத மகாத்மாக்களாய் தங்களை நிறுவிய பலரின் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேன்.

நீ விடுதலையாகக் கூடாது என்பது பலரது எண்ணம். ஆனால் உன்னை மீட்க வேண்டும். பழிசொல்லும் இவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காட்ட வேண்டும்.

உன்னை மீட்கும் வழிகளைத் தேடத் தொடங்கினேன். உன் அம்மா , தங்கை யோகா யாவரும் உனது விடுதலைக்கான கதவுகளைத் தட்டத் தொடங்கினோம்.

அம்மாவின் அலைவுகளின் பயனாக சட்டத்தரணி ஒழுங்கானார். உனது வழக்கு நடக்க ஆரம்பித்தது. புனர்வாழ்வு கிடைக்கும் என்பது ஊகமாகி அது உண்மையாகும் தருணம் நெருங்கியது.

அம்மாவோடை இடைக்கிடை கதை. பாவம் மனிசி. நானொரு தேனீர் கூட மனிசிக்கு வைச்சுக் குடுத்ததில்லை. வெளியில போனதும் மனிசிக்கு உழைச்சுக் குடுக்க வேணும். மனிசியை நல்லா வைச்சுப் பாக்க வேணும். இனியெண்டாலும் என்ரை குடும்பத்தை நான் தாங்க வேணும்.

எப்பிடியெண்டாலும் என்னை வெளிநாடு எடுத்துவிடு நான் வந்து உழைச்சு கடனைத் தருவன். உன்னை  தான் நம்பிறன்.
இதுதான் உனது பெரிய கனவாக இருந்தது.

உனது விடுதலையின் பின்னர் அம்மாவுக்காகவும் உன் குடும்பத்தின் உயர்வுக்காகவும் வாழ ஆசைப்பட்டாய்.

அடிக்கடி உன்னை வருத்தும் வயிற்றுவலியும் உடற்சோர்வும், தொடர்ந்து வதைக்கும் ஊடகங்களின் செய்திகளும் உன்னை உன் நிம்மதியை நித்திரையைப் பறித்துக் கொண்டிருந்தது.

நீ நீதிமன்று போய் சிறைச்சாலைக்கு வந்துவிடுவாய். அன்றைய நீதிபதியின் முடிவை எதிர்பார்த்திருக்கும் எனக்கும் உன் அம்மாவுக்கும் பலதடவைகள் ஏமாற்றம் தான் மிஞ்சும். வெலிக்கடை சிறைக்கம்பிகளின் பின்னால் நீ அன்றைய முடிவோடு வந்து களைத்திருப்பாய்.

உனது பெயரையும் உனது படத்தையும் ஊடகங்கள் வைத்து செய்யும் வியாபாரம் மட்டும் லட்சக்கணக்கான வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கும். அந்தச் செய்திகளை உனக்கு வாசித்துக் காட்டும் போது நீ அழுவாய்.

ஊடகங்களாலும் உண்மை புரியாதவர்களாலும் நீ மனவுளைச்சல்படும் தருணங்களை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது போனது.

இன்று நாளையென உனது விடுதலையின் நாட்கள் எண்ணப்பட்டு ஒருநாள் நீ புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட காலம் வந்தது. அந்தச்  செய்தியை நீயே அறியத்தந்தாய்.

வெளியில வந்ததும் என்னைக் கூப்பிடுற வழியைச் செய்ய வேணும். விதலையானதும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே உனது எண்ணம்.

000       000         000         

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு நீ அனுப்பப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. முகம் பார்க்கவே முடியாத நெருக்கம் மிகுந்த கம்பிகளை விட்டு  வெளியேறும் நாளை எதிர்பார்த்திருந்தாய்.

உயர்ந்த மதில்களுக்குப் பின்னால் தொலைந்த இருள் நிறைந்த வாழ்விலிருந்து விடுதலையாகி பொதுவெளியில் உனது புனர்வாழ்வு அமையவிருந்தது.

புனர்வாழ்வுக்குச் செல்லவிருந்த உனக்கான அடிப்படை தேவைகளை அனுப்புவதற்கு தேவைப்பட்டது பதினெட்டாயிரம் ரூபாய்கள்.

அந்தப்பதினெட்டாயிரம் ரூபாய்களைப் பெறுவதற்கு சிலரிடம் உதவி கேட்ட போது நம்பியவர்களே மறுத்தார்கள். இறுதியில் அந்தப்பணத்தை நானே தயார் செய்து அனுப்பிய போது :-

உனக்கு எப்பிடி நான் இதையெல்லாம் திருப்பிச் செய்வன் ? என அழுதாய்.

வெலிக்கடைச்சிறையில் இருந்து வவுனியா கொண்டு செல்லப்படுவதற்கு முதல்நாள் மதியம் தங்கை யோகா தொடர்பு கொண்டாள்.

அக்கா நாளைக்கு வவுனியா போகப்போறா உங்களை ஒருக்கா கதைக்கச் சொல்லட்டாம்.

அன்றைய இரவு தொடர்பு கொண்டேன்.
நாளைக்கு நான் வவுனியா போயிடுவன்.
அங்கையிருந்து கதைக்க கிடைக்குமோ தெரியேல்ல.
அப்பிடிக் கிடைக்காட்டில் வெளியில வந்த பிறகுதான் கதைக்கலாம்.
அம்மவோடையும் யோகாவோடையும் தொடர்போடை இரு.
ஏதுமெண்டா அவை சொல்லுவினம்.

அன்று நீண்டநேரம் கதைத்தோம். விடிய 4மணிக்கு உன்னிடமிருந்து விடைபெற்ற போது..,

எனக்கொரு ஒளிவட்டத்தைக் கண்டுபிடி. சொல்லிக்கொண்டு சிரிப்போடு விடைபெற்றாய்.

000       000         000
26.06.2012 வவுனியாவிற்கு புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டாய். ஊடகங்கள் உன்னைப்பற்றி செய்திகளால் அந்த வாரத்தை தமதாக்கிக் கொண்டது.
அருகில் நின்று உன்னைப் பார்த்தது போல செய்திகள் எழுதினார்கள். அந்தச் செய்திகள் கேட்டு நீ எவ்வாறு துடித்தாய் என்பதை அறிவேன்.
இரக்கமே இல்லாமல் நீ செய்திகளாலும் ஊடகர்களாலும் பிய்த்தெறியப்பட்டாய்.

000         000          000

13.07.2012பிரித்தானியா போயிருந்த போது தம்பி அனுராஜ்ஜிடம் உன்னைப்பற்றி கதைத்திருந்தேன். விரைவில் நீ விடுதலையடைவாய். உனது நிலைபற்றிச் சொன்னேன். நீ திருமணம் செய்ய விரும்புவதையும் தெரிவித்தேன்.

அல்லது  ஸ்பொன்சர் செய்யக்கூடியவர்கள் இருந்தால் பணம் கொடுத்து உன்னை வெளியில் எடுப்போம் எனவும் கேட்டிருந்தேன்.

அன்று முதல் அனுராஜ் என்னோடு சேர்ந்து உனக்கு திருமணம் செய்வது அல்லது பணம் கொடுத்து யாரையாவது பிடித்து ஸ்போன்சர் செய்ய ஏற்பாடு செய்வதில் ஆட்களைத் தேடினோம்.

அனுராஜ் !
ஒரு போராளி. முள்ளிவாய்க்கால்வரை அவனும் போராடியவன். தாயகவிடுதலைக்காய் அவனும் தன்னை முழுதாய் இழந்தவன். ஏற்கனவே உன்னோடு அறிமுகமானவன். எங்களை நீ நம்பினாய். நாங்கள் உன்னை மீட்போம் என்ற நம்பிக்கையோடு புனர்வாழ்வு போனாய்.

பணத்தைத் தயார் பண்ணி வைப்பது நீ விடுதலையானதும் உன்னை வெளிநாடு எடுப்பது என்ற எங்கள் முயற்சியில் பலரை நாடினோம். தேசியம் தாயகம் சுதந்திரம் என பேசிய பலர் தந்த பதில்களில் உனக்காக ஒருசதத்தைத்தானும் தயார் செய்ய முடியவில்லை.

அம்மா உனக்கு திருமணம் செய்து வைக்கவே விரும்பினா.
நானும் போயிட்டா அக்கா தனிச்சுப்போடுவளம்மா. அவளுக்கு ஒரு
கலியாணம் பேசு பிள்ளை.

 அம்மா இதைத்தான் முடிவாய் சொன்னா.

உனது வயது உனது கடந்தகாலம் பற்றி கேட்கும் யாரும் உன்னை மணமுடிக்க முன்வரவில்லை. திருமணம் பேசும் தரகர்கள் சிலரை அணுகியபோது அவர்களும்...,

இயக்கத்தில இருந்துnவையெண்டா தெரியும்தானே...
நீங்கள் வேறையாரும் இருந்தா சொல்லுங்கோ என ஒரு திருமணத்தரகர் உனது படங்களைத் திருப்பியனுப்பினார்.

உனக்கான திருமணம் என்பது அவ்வளவு இலகுவில் நடக்கும் என்பது நம்பிக்கையற்றுப் போனது. உன்னை ஏதாவது மாற்றுவழி மூலம் வெளிநாடு எடுக்கும் முயற்சி மட்டுமே சரியென்று தோன்றியது.

முகநூல் மூலம் அறிமுகான ஜெயன்தேவாவோடு முகநூலில் அடிக்கடி சட்பண்ணிக்கொள்வேன். எனது எழுத்துக்களின் வாசகர் ஜெயன்தேவா. நேசக்கரம் சமூகப்பணிகளில் தனது ஆதரவையும் வழங்கியவர்.

பிரித்தானியா போன போது அனுராஜ்யும் நானும் ஜேயன்தேவாவை நேரில் சந்தித்தோம். ஏற்கனவே அனுராஜ் ஜெயன்தேவா அவர்களுடன் அறிமுகமாகியிருந்தான்.

ஜெயன்தேவா நேசக்கரம் பணிகள் பற்றி கதைத்த போது ஒரு போராளிப் பெண்ணுக்கு உதவி தேவையென்பதைத் தெரிவித்தேன். தன்னால் முடிந்த உதவியை தானும் செய்வதாக தெரிவித்தார்.

உனது வயதையும் தெரிவித்து திருமணம் செய்ய யாராவது முன்வந்தால் அந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்தோம்.

ஜெயன்தேவா உதவ முன்வந்த போதும் அது தமிழினிக்குத் தான் உதவியென்றதை தெரிவிரிக்கவில்லை. எங்களோடு சேர்ந்து ஜெயன்தேவாவும் உனக்கான வழியொன்றை அமைக்க துணையாக நின்றார்.

04.08.2012 அன்று துளசி இல்லத்தில் நடைபெற்ற எனது கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு ஜெயன்தேவாவும் பேச்சாளராக வந்திருந்தார். அந்தச் சந்திப்பின் பின்னர் அடிக்கடி போராளிகள் உதவிகள் பற்றி ஜெயன்தேவா உரையாடுவது வழக்கம்.

நீ விடுதலையானதும் உன்னை ஸ்பொன்சர் செய்து வெளிநாடு எடுப்பது என்பதைத்தான் அப்போதைய முடிவாக எடுத்தோம்.

பிரித்தானியாவிலிருந்து யேர்மனி திரும்பிய பின்னர் அம்மாவுடன் பேசியபோது ஜெயன்தேவா பற்றி அம்மாவுக்குச் சொன்னேன்.

ஏன் பிள்ளை அவர் அக்காவை கலியாணம் கட்டுவரே ? இது அம்மா.
ஏன்னம்மா உங்களுக்கு விசரே அவருக்கும் அக்காவுக்கும் 13வயது கூட. அதெல்லாம் சரிவராது. இது நான்.

அவவை வெளிநாடு எடுக்கிறதுக்கான உதவிதான் அவர் செய்யலாம். தொடர்ந்த என்னை அம்மா மறித்தா.

பிள்ளை எனக்கும் அப்பாவுக்கும் 17வயது வித்தியாசம் நாங்களும் நல்லா வாழ்ந்தனாங்கள். வயதொண்டும் பிரச்சனையில்லை. மனம் ஒத்துப்போனால் சரி.

அம்மா உனக்கொரு திருமணம் செய்ய வேண்டுமென்றதில் பிடிவாதமாயிருந்தார். தாயின் ஆசையது. ஆனால் நடைமுறையில் இருந்த பிரச்சனைகள் அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வவுனியா புனர்வாழ்வு முகாமில் தொலைபேசும் வாய்ப்பு வந்தது. சனி , ஞாயிறுகளில் உன்னோடு தொலைபேசத் தொடங்கினேன். அந்தச் சில நிமிடங்களில் உன் குரலைக்கேட்டு நலவிசாரிப்போடு பேசவேண்டிய விடயங்களை அவசரமாக பேசி விடைபெறுவேன்.

உன்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அம்மாவுக்கு இருந்தது. அப்படியொரு சந்திப்புக்கு வந்த போது அம்மா ஜெயன்தேவா பற்றி உனக்குச் சொல்லியிருந்தா.

நீ அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லியனுப்பியிருந்தாய். வெளிநாடு வருவதற்காக பொய்யான திருமணம் ஒன்றைச் செய்வதில் உனக்கும் உடன்பாடு இல்லையென்பதையும் சொல்லியிருந்தாய்.

தங்கை யோகா தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள். அக்கா உங்களைக் கதைக்கட்டாம்.

ஒரு சனிக்கிழமை தொடர்பு கொண்டேன். 

ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஜெயன்தேவாவிற்கும் உனக்குமான வயது வித்தியாசம் , நீ கடந்து வந்த அரசியலிற்கு முரணான அரசியல் கொள்கைகளோடு உள்ள ஒருவருடன் உனக்கு ஒத்துவருமா ?

அப்படி அவரை நீ திருமணம் செய்தால் உன்னைத் துரோகியாக்கியவர்கள் எப்படி உன்னை தூற்றுவார்கள் ? இதுவே எனது நிம்மதியைத் தின்று கொண்டிருந்தது.

ஜெயன்தேவாவும் தனக்கும் உனக்குமான வயது வித்தியாசம் தனது கடந்தகால வாழ்வின் குறைகள் உன்னை பாதிக்கும் என்பதை தெரிவித்தார்.
தன்னைப்பற்றி வெளிப்படையாக தனது கடந்தகால வாழ்வு பற்றி எதையும் மறைக்காமல் தெரிவித்த மனிதரை நீ நேசிக்கத் தொடங்கினாய்.

ஓரு சனிக்கிழமை உன்னை தொலைபேசியில் அழைத்தேன். நீ ஜெயன்தேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை வெளிப்படையாய் சொன்னாய்.

உங்கள் இருவருக்குமான வயது வேறுபாடு இயல்புகளைப்பற்றிச் சொன்ன போதும் நீ எதற்கும் உடன்படவேயில்லை. இந்தத்திருமணத்தில் உடன்பட மறுத்த எனக்கு நீ சொன்ன காரணங்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லாது போனது.

வாழுறது கொஞ்சக்காலம் அதில வயசு வேறுபாடு அரசியல் பாத்து என்னத்தையம்மா சாதிச்சம் ? இருக்கிறமட்டும் நிம்மதியா வாழ்ந்திட்டு சாவம்.  இதுதான் நீ இறுதி முடிவாய் சொன்னது.

ஜெயன்தேவாவோடு பேச விரும்பினாய். அம்மாவோடு முதலில் பேசிய ஜெயன்தேவா அம்மாவுக்கு தன்னைப்பற்றி கூறினார். அம்மா அவரை உனக்கான வாழ்க்கைத்துணையாக அமைப்பதையே விரும்பினா.

நீயும் ஜெயன்தேவாவும் தொலைபேசத் தொடங்கினீர்கள். கடிதங்கள் எழுதினீர்கள். உனது மாற்றங்கள் பற்றி அம்மா சொல்வதை நானும் யோகாவும் ஆச்சரியமாய் கதைப்போம்.

உன்னைப்பார்க்க வந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் உனக்கான ஒளிவட்டம் பற்றி நீ சொல்லும் யாவையும் அம்மா அப்படியே வந்து சொல்லுவா.

விதி யாரையும் தன் கணக்கிலிருந்து விட்டுவைக்காது என்பதற்கு உனது வாழ்வு காலச்சான்றாகியது. எதிரெதிர் குணங்களோடான ஒருவரோடு சமரசம் செய்து வாழ்வதற்கு நீ தயாராகினாய். நீ ஜெயன்தேவாவைக் காதலித்தாய். உனது இயல்புகளோடும் தன்னை மாற்றி உன்னோடு வாழ ஜெயன்தேவாவும் தயாராகினார்.


000         000         000
நீ விடுதலையாகும் நாள் அறிவிக்கப்பட்டது. உனது விடுதலையை ஊடகங்கள் எப்படியெல்லாம் பலியெடுக்கும் என்பது அறிந்ததே. நாம் எதிர்பார்த்தது போல நீ விடுதலையாகும் நாள் விடிந்தது. அம்மாவிடம் நீ கையளிக்கப்பட்டாய்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல ஊடகங்கள் உன்னை மீண்டும் துரத்தத் தொடங்கியது. நீ உனது நிம்மதியை இழந்து போனாய். ஆளாளுக்குக் கதையெழுதினார்கள். பழி சொன்னார்கள்.

தமிழினியிடம் பேட்டியெடுக்க வேணும். உங்களோடை கதைக்கிறவாம் ? தீபச்செல்வன் தொடர்பெடுத்தான்.

நான் அவவோடை கதைக்கிறேல்ல.

நீயும் நானும் கோபம் என்பது போல அவனுக்கு நடிக்க வேண்டியிருந்தது.

உன்பற்றி தீபச்செல்வன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித பதிலையும் கொடுக்கும் நிலையிலும் அன்று நானில்லை. நீ எப்படி அந்தரிப்பாயோ என்பது தான் தொடர் கவலையைத் தந்துகொண்டிருந்தது.

நீ மகளீர் அரசியல்துறையின் பொறுப்பாளராயிருந்த காலத்தில் ஒருநாள்கூட உன்னோடு பேசி அறியாதவன். தனது தங்கையை இயக்கம் இறுதி யுத்தத்தின் போது போராளியாக்கியதற்காக நீயே காரணம் என்றான்.
தன் தங்கையைக் கொண்டு போனவர்களைக் கண்டித்து தனது வலைப்பூவில் கவிதை எழுதினான். தனக்கென்று வரும் போது தீபச்செல்வனின் தியாக முகம் கோரமாயிருந்தது.

உனது தொலைபேசியலக்கத்தை புனர்வாழ்வு முகாமில் இருந்து பெற்றுக் கொண்ட தீபச்செல்வன் அம்மாவை தொலைபேசியில் அழைத்தான்.
சக்தி தொலைக்காட்சியில் வேலைசெய்து கொண்டிருந்த தீபச்செல்வன் ரூபவாகினி தொலைக்காட்சியில் இருந்து பேசுவதாக அம்மாவின் தொலைபேசிக்க அழைத்தான்.

தமிழினியுடன் கதைக்க வேண்டுமென்றான் அப்படியொரு ஆள் இல்லையென்ற அம்மாவின் பதிலில் திருப்திப்படாதவன் சிவகாமியுடன் கதைக்கவென்றான் அப்படியும் ஒரு ஆளில்லையெனச் சொல்லி அம்மா தீபச்செல்வனை மட்டுமல்ல தொடர்பு கொண்ட எல்லோரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டா.

அம்மாவிடம் கையளிக்கப்பட்ட நீ உனது ஊருக்குப் போகவில்லை. உனக்காக உனது துணைவனால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நீ வாழத்தொடங்கினாய். நீ விரும்பிய உனது காதல் துணையோடு உனக்கு பதிவுத்திருமணம் நடைபெற்றது.

நீ பிரித்தானியா வந்து சேரும்வரை யாருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரியக்கூடாது என்பதில் யோகாவும், நானும் கவனமாயிருந்தோம்.
உன்னை வைத்து அரசியல் செய்யும் பலருக்கு நீ பேசுபொருளாயிருந்தாய். உனக்குள்ளும் ஒரு வாழ்வு பற்றிய கனவுகளும் ஆசைகளும் நிரம்பியிருந்ததை யாரும் அறியார். நீ விரும்பிய வாழ்வை நீ அமைத்துக் கொண்டாய்.


ஓளிவட்டத்தை கண்டவுடனும் எங்களை மறந்து போயிட்டியள் என்ன ?
திருமணம் முடிந்து சிலநாட்களில் கேட்ட போது...,
என்ரை வாழ்க்கையில உன்னை நான் எப்படி மறப்பேன் ?
குரல் உடைந்து சொன்னாய்.

ஜெயன்தேவா பற்றி நீ வைத்திருந்த மதிப்பும் நீ வாழ்ந்த வாழ்வையும் அடிக்கடி சொல்லி மகிழும் தருணங்களில் இப்படியொரு மனிதரை உனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றியென அடிக்கடி சொல்லிக் கொள்வாய்.

முகநூல் பல நல்லவர்களையும் நல்ல விடயங்களையும் தந்து கொண்டிருக்கிறது. உனது வாழ்வில் நீ மீண்டும் புதிதாய் பிறக்க உன் வாழ்க்கைத் துணையாய் அமைந்த ஜெயன்தேவாவையும் முகநூல் தான் பெற்றுத்தந்தது.

உன்னைப் பிரித்தானியா எடுப்பதற்கான முயற்சிகளில் இழுபறிகள் தொடங்கியது. அனுராஜ் சில உதவிகளை தானே முன்வந்து செய்தான். சட்ட ஆலோசனைகளை சட்டத்தரணி நண்பர் கீத்திடம் பெற்றுக் கொண்டு உனக்கான ஸ்பொன்சர் அலுவல்கள் தொடங்கியது.

பிரித்தானியா வந்ததும் உன்னை விமானநிலையத்தில் வரவேற்க நான் வர வேண்டுமென்றாய். நாங்கள் நிறையக் கதைக்க வேணும் என்றெல்லாம் கனக்கச் சொன்னாய்.

ஸ்கைப் ஊடாக தினமும் பேசிக்கொள்ளும் வசதி வந்தது. நிறையக் கதைகள் ஸ்கைப் மட்டுமே அறியும். சிரிப்பு , அழுகை , துயரம் எத்தனை கதைத்தோம்.
உன்னைச் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தேன்.

000              000                        000

உனக்குள்ளேயே குறுகிப்போன உன்னை வெளியில் கொண்டுவர விரும்பிய ஜெயன்தேவா உனக்கு கணவனாய் மட்டுமன்றி உனக்கு நல்ல தோழனாகினார். ஜெயன்தேவாவுக்கு இறுதிவரை மனைவியாக வாழ்ந்து இறந்து போகவே நீ ஆசைப்பட்டாய்.

சமூகம் விடுதலை என நீ வகுத்த பாதைகள் யாவும் நடைமுறைக்கு சரியாகாதவையென நீ உனக்குள்ளே முடிவெடுத்து பலமுறை என்னோடு முரண்பட்டுக் கொண்டாய்.


சீருடையில் பார்த்துப் பழகிய தமிழினி முற்றிலும் மாறிப்போனாள். சேலைகட்டி பஞ்சாபி போட்டு உச்சி நெற்றி கழுத்தில் கும்குமம் வைத்து வாழ்வதில் மகிழ்ச்சியிருப்பதாய் நம்பினாய்.

ஆனால் சிறந்த எழுத்தாற்றல் கொண்ட தமிழினியை உலகத்திற்கு தர ஜெயன்தேவா ஆசைப்பட்டார். எழுத்தும் மன அழுத்தத்தை மாற்றும் மருந்து என்பதை நானும் உனக்கு அடிக்கடி வலியுறுத்தினேன்.

ஜெயன்தேவா உன்னை முகநூலில் எழுத ஊக்குவித்தார். ஜெயன்தேவா , சிவகாமி என்ற பெயரை சுருக்கி ஜெசியாக கவிதைகள் எழுதினாய். றொமீலாவாகவும் நிறைய எழுதினாய். பின்னர் தமிழினியாக வெளிப்பட்டாய்.

உனது உலகம் விரிந்தது. முகநூலுக்கு வந்து அரட்டையடிக்காமல் சிறந்த எழுத்தாளர்களோடு அறிமுகமானாய். கல்வியியலாளர்களோடு உனது கருத்துக்களை எழுத்துக்களைப் பகிரத் தொடங்கினாய்.

உனக்கு உதவி கோரியபோது உன்பற்றி விமர்சித்தவர்கள் கூட உனது வாசகர்களாகினர்.

நீ நிறைய எழுதினாய்.  ஸ்கைப்பில் உனது எழுத்துக்களை வாசித்துக்காட்டுவாய். வீடியோவில் முகம்காட்டி மணிக்கணக்காய் பேசுவாய். உன்னைப் பிடித்திருந்த இருட்காலம் அகல்கிறதென்பதை நம்பத் தொடங்கினாய்.

பழைய தமிழினியைக் கண்டெடுத்த ஜெயன்தேவாவிற்கு எத்தனை கோடிதடவைகள் நன்றி சொன்னாய்..., இப்போதும் நீ உன் துணைவர் பற்றி சொன்ன கதைகள் நிறைய இருக்கிறது.

உண்மையான அன்பு இப்படித் தானிருக்குமோ ? பலதடவை நானும் யோசித்ததுண்டு. நீ காதல் , நேசிப்பு பற்றி வகுப்பெடுக்கும் அளவு மாறிப்போனாய்.

உலகில் ஒரு பெண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைத்தால் அவளால் உலகையே ஆழ முடியும் என்பதற்கு நீ அடையாளமாகினாய்.

அழுதழுதே சிறைக்கம்பிகளின் பின்னே காலம் போகப்போகிறதென நம்பிய நீ சிரிக்கத் தொடங்கினாய். வாழ ஆசைப்பட்டாய். வாழ்வை ரசிக்கத் தொடங்கிய உனக்கு வருடக்கணக்காய் அலைத்த வயிற்றுவலி அதிகரிக்தக் தொடங்கியது.

என்னாலை இருக்கேலாதாம் அசையேலாதாம்.., இப்படி நீ வலியில் துடித்து மருத்துவமனை சென்று வந்தாய். உனது நோய் கண்டுபிடிக்கப்படவில்லை.
கொழும்புக்குப் போய் ஒருக்கா ஸ்கான்பண்ணிப் பாருங்கோவன்..,
சொன்ன போது  சொன்னாய்.

போகப்பயமாயிருக்கடி..,
மற்ற வருத்தமோ தெரியேல்ல சொல்லியழுதாய்.

நீ சொன்ன மற்ற வருத்தம்  புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் உன்னை தைரியப்படுத்தினேன்.

அப்பிடியெல்லாம் இருக்காது. இப்பதானே மருத்துவம் நிறைய இருக்கும் எந்த வருத்தத்தையும் மாத்தலாம். மனசை குழப்பாமல் போங்கோ.
ஓரவாரம் கழித்து ஒரு செவ்வாய்கிழமை ஸ்கைப்பில் வந்தாய்.

நாளைக்கு மெடிக்கல் றிப்போட் வரும் என்ன வருதோ தெரியேல்ல.
பழைய மகிழ்ச்சி அன்றைக்கு இல்லை. சோர்வோடு கதைத்தாய். ஸ்கைப்பில் முகம் காட்டினாய். அழுதாய்.

ஓண்டுமிருக்காது உங்களுக்கு இப்போதைக்கு வீசா இல்லை தெரியுமோ ?
80வயது தாண்டினாத்தான் உங்களுக்கு வீசா கண்டியளோ ? சொன்னேன. நீ சொல்றபடி கான்சர் வருத்தமில்லாமல் நாளைக்கு றிப்போட் வந்தால் நல்லம் தான்.

மறுநாள் மதியம் உன்னை தொலைபேசியில் அழைத்தேன்.
என்னவாமக்கா றிப்போட் வந்திட்டுதோ ? கேட்ட எனக்குச் சொன்னாய்.
ஓமம்மா கான்சராம்.

பேரிடியென்பதா இல்லை இதை பொதுவானதென்று ஏற்றுக்கொள்ளவா ?
சரியம்மா நான் ஸ்கைப்வாறன் இதில காசெல்லோ ?

தோலைபேசியைத் துண்டித்தேன். ஸ்கைப்வந்தாய்.
அம்மாக்குத் தெரியுமோக்கா கான்சரெண்டு ?
ஓ அம்மா ஒரே அழுகையா இருக்கிறா.
கான்சரெண்டா என்னக்கா இப்ப தானே நல்ல மருத்துவம் இருக்கு செய்யலாம்.

யோசிக்கப்படாது தைரியமா இருங்கோ.

பாதிவருத்தம் எங்கடை தைரியத்தில தான் மாறும்.

புற்றுநோயாளிகளுடன் பணியாற்றிய எனக்கு அவர்களின் முடிவு என்ன என்பது தெரியும். ஆனால் என் அக்கா உனக்குப் புற்றுநோயும் மாறும் எனவே நானும் நம்பினேன்.

இந்தியா சென்று மருத்துவம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் சில நண்பர்களின் ஆதரவோடு உன்னை இந்தியா அனுப்ப முயற்சித்தோம்.
நீ பயணம் செய்யும் வலுவை இழந்து கொண்டிருந்தாய்.

இந்தியாவில் தொடர்பில் இருந்த மருத்துவர் உனது ஆயுட்காலம் குறுகிவிட்டதை தெரிவித்தார்.

வாழ்வேன் என ஆசைப்பட்ட உனக்கு உன் ஆயுள் முடியப்போகிறது என்று சொல்ல முடியவில்லை.

கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினாய். போக்குவரத்து பயணங்கள் என பணம் மட்டுமே உனது எஞ்சிய நாட்களையும் தீர்மானித்திருந்தது.

உங்கடை பேரைச்சொல்லி உதவி கேட்கட்டே அக்கா ? உன்னிடம் கேட்டேன்.
ஏற்கனவே உனக்கு செய்த சிறு உதவிகளை லட்சக்கணக்கில் செய்ததாய் கதை பரப்பிய பலரது பொய்களால் உடைந்து போயிருந்தாய்.

உனது பெயரை வெளிப்படுத்தி யாரிடமும் இறைஞ்ச வேண்டாமென்று நிபந்தனை விதித்தாய்.

கண்ணெதிரே நீ இறந்து கொண்டிருக்க எப்படி ஒதுங்க முடியும் ? ஆனால் நீ யாரிடமும் உதவி கேட்க வேண்டாமென்ற பிடிவாதத்தை கைவிடவேயில்லை.

சிலரிடம் உன் நிலமை பற்றிச் சொன்ன போது பாவம் நீயென்ற பதில்கள் தான் வந்தது. பணம் தர முன்வரவில்லை.

உனது மரணம் உன்னை நெருங்குவதை நீயும் உணரத்தொடங்கினாய்.

உனது நோயுடனான போராட்டத்தை அறிந்த நோர்வே நாட்டு ஊடகவியலாளர் நோர்வே பெண்கள் அமைப்பினரிடம் உனது நிலையைக் கூறினார். உன்னை கவனிக்காத அவர்கள் மீது கோபித்தார்.

ஒருநாள் தொலைபேசியெடுத்த நீ நோர்வே மகளீர் அமைப்பினர் உன்னை நோர்வேக்கு ஸ்பொன்சர் செய்ய சம்மதித்தாக சொன்னாய். ஆனால் அவர்கள் உன்னிடம் வைத்த நிபந்தனையை என்ன சொல்ல ?

நோர்வே அழைப்பார்களாம் அதற்கு பதிலாக நீ முதற்களவீராங்கனை மாலதி அவர்களின் நினைவுநாளில் மேடையேறி பரிசில் வழங்கி உரையாற்ற வேண்டுமாம்.

ஏற்கனவே இலங்கைச்சிறை , நாலாம் ஆறாம் மாடிகளுக்குச் சென்று வந்த நீ மாலதி நினைவுநாளில் மேடையேறுதல் சாத்தியமா என்பதை குறித்தவர்கள் யோசிக்கவில்லை.அந்தப்பேரம் பேசலை நீ மறுத்தாய்.

காலம் உன்னை தன் கணக்கிலிருந்து கிழித்தெடுக்கத் தொடங்கியிருந்தது. நீ எழுதிக்கொண்டிருந்த உனது போராட்டகால வாழ்வை நூலாக்கும் முயற்சியும் இடையில் இழுபடத்தொடங்கியது.

வெளிப்படையாய் நீ எழுதிய பலவிடயங்கள் உன்மீது சேறடிக்கும் உன்னை துரோகியாக்கும் என்பதை சொன்ன போது சொன்னாய்.

இது என்ரை அனுபவம். இதில பொய்யில்லை. எதையும் குறைக்கவோ மாற்றவோ நீ சம்மதிக்கவில்லை. எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தோடு இருந்தாய். உன் சுயசரிதை வெளியில் வரவேண்டும் என்பதை விரும்பினாய். உனக்கான ஆதரவைத் தருவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

உன் எழுத்தின் நேர்மையை நேர்மையோடு எதிர்கொள்ளும் மனநிலையற்ற சமூகத்தின் பிரதிநிதியான இனத்தில் தான் நீயும் நானும் பிறந்திருந்தோம்.

நீ பிடிவாதக்காரி. உனது கருத்துக்களில் யாருக்கும் விட்டுக் கொடுக்காதவள். அந்தநாள் சீருடைத் தமிழினியை நினைவுபடுத்தினாய்.

நீ வாழும் போதே உனது நூலை வெளியிட ஜெயன்தேவா விரும்பினார். உனது ஆசையும் அதுவே.

உன் கடைசிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த மனிசனை விட்டிட்டுப் போகப்போறன் அதுதான் இப்ப என்ரை கவலையா இருக்கு.

பாவம் தனிக்கப்போகுது.

உன் இறுதிக்காலங்களில் நீ உன் துணை ஜெயன்தேவா பற்றியே அதிகம் யோசித்தாய். கலங்கினாய். காலத்திடம் உயிர்பிச்சையேந்தினாய்.

இன்னொரு 5வருசம் அந்தாளோட வாழக்கிடைச்சா காணுமெனக்கு.

உன் இறுதிக்காலங்கள் மருத்துவமனையோடு கரையத் தொடங்கியது.

ஆனாலும் நீ வாழப்போகும் நாட்கள் உனக்கான மருத்துவம் செய்ய பணத்தின் தேவை அதிகமாயிருந்தது.

நம்பிக்கை வேரறுபட்டு உன்னைப் பிரியப்போகும் நாட்கள் ஒவ்வொன்றாய் குறைந்து கொண்டிருந்தது. ஜெயன்தேவா வெளிப்படையாக சிலரைநாடி உதவிகோரினார்.

அவரது முயற்சியில் தடைபோடாமல் விடு என உன்னிடம் வேண்டினேன்.

இந்த மனிசனுக்கு விளங்கேல்ல நான் சாகப்போறனெண்டது. சரி அந்தாளின்ரை ஆசையையும் ஏன் தடுப்பான்.
என்று நீ உதவிகோர அனுமதித்தாய்.

000         000         000

நீ நினைவிழக்கத் தொடங்கினாய். பேசக்கூடிய தைரியத்தையும் இழந்து கொண்டிருந்தாய். என் வீட்டில் மரணத்தின் துயர் பரவியது.

என் தோழனும் நானும் உன்னைப்பற்றியே நாட்கணக்காய் கதைத்துக் கொணடிருந்தோம்.

என் அலைபேசிக்கு உனது அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. உன்னோடு பேசும் தைரியம் வரவில்லை.

சாகப்போகிறேன் என நீ சொல்லும் செய்தியைக் கேட்டுக் கொண்டு என்னால் இயங்க முடியவில்லை.

என்னெண்டு எடுத்து கதையன் அம்மாச்சி.
என் தோழன் சொன்னான்.

தைரியம் மிக்க என்  தமிழினி அக்கா மரணவாசலில் நிற்கிறாய். அந்தக் கடைசிக் குரலை எப்படிக் கேட்பது. உன் கடைசிக்குரலைக் கேட்கும் துணிச்சல் எனக்கு இல்லை. உன்னோடு பேசாமல் தவிர்த்தேன்.

யாழ் இணையத்தில் உனக்காக நிதி சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள். கிடைத்த சிறு உதவிகளை அம்மாவின் வங்கிக்கு அனுப்பினேன்.

யாழிணையத்தில் உன் பற்றி வந்து கொண்டிருந்த செய்தியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலம் உனக்கு இறுதி அத்தியாத்தை எழுதத் தயாராகியது.  உன் உயிர் நாட்களிலிருந்து அழிபட்டு மணிக்கணக்காகி , நிமிடங்களில் வந்து நின்றது. எந்த நிமிடமும் உனது உயிர் பிரியும் தருணம்.

உனது ஞாபகங்கள் மட்டுமே அலைக்களித்த பொழுதுகள் அவை.
000          000         000

அம்மாச்சி அம்மாச்சி...,

நித்திரையில் கிடந்த என்னை வந்து எழுப்பினான் தோழன். அவன் தந்த தேனீரைக் குடித்து முடியச் சொன்னான்.

உங்கடை Viber இல் ஒரு செய்தி போட்டிருக்கிறேன் பாருங்கோ. சொன்னான்.

வளமையாக அவன் பார்க்கும் சிறப்பு விடயங்கள் எனக்கு வைபர் ஊடாக அனுப்புவான். அப்படியொரு செய்தியாகவே நினைத்து அவன் அனுப்பிய இணைப்பை அழுத்தினேன்.

அது உனது மரணச்செய்தி. எதிர்பார்த்த செய்தியாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலை இருக்கவில்லை.

அண்மைய நாட்களில் உன்பற்றி நாங்கள் இருவரும் நிறையக் கதைத்திருக்கிறோம். கண்முன்னே நீ பிணமாய் கிடப்பது போலிருந்தது உனது மரணப்படுக்கையின் நிழற்படங்கள்.

தங்கை யோகாவுக்குத்தான் தொலைபேசினேன். யோகா அழுதாள். அத்தான் பாவமக்கா.

யோகாவுக்கு எந்த ஆறுதலையும் சொல்ல முடியவில்லை. அவளது அழுகையைக் கேட்கக்கேட்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளிடமிருந்து விடைபெற்றேன்.

உலகமெல்லாம் உனக்கான அஞ்சலி நிகழ்வுகள் இராணுவ தகுதிநிலை வழங்கல் என ஆரவாரித்தது தமிழ் ஊடகங்கள்.
நீ வாழும் போது உதவாத பணம் உனது அஞ்சலி நிகழ்வாக கரைந்து கொண்டிருந்தது.

நானும் ஒரு பார்வையாளராய் உனது மரணத்தின் பிறகு அமைதியாயே இருந்தேன்.

உனது மரணத்தின் பிறகே பலருக்கு உனது துணை ஜெயன்தேவா என்பது அறிய வந்தது. ஜெயன்தேவா பற்றி பலரது விமர்சனங்கள் மாறிமாறி ஊடகங்களில் செய்திகளாகிக் கொண்டிருந்தது.

ஜெயன்தேவாவின் பல்கலைக்கழக நண்பன் என்று ஒருவர் பிரித்தானியாவிலிருந்து இவனா உனக்குக் கணவன் என எழுதினார்.

ஜெயன்தேவா பற்றி மேலும் சிலர் அப்படி இப்படி என கதைகள் எழுத ஆரம்பித்தனர்.

நீ ஜெயன்தேவாவுடன் ஆத்மார்த்தமாய் வாழ்ந்தாய் என்பதை எவரும் புரிந்து கொள்ளவில்லை.

நீ யாரைத் திருமணம் செய்ய வேண்டும் நீ யாருடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உன் மீதான அக்கறை மிகுந்தோர் என சொல்லப்பட்ட பல கள்வர்கள் எழுதினார்கள் , திட்டினார்கள் , சபித்தார்கள் இன்னும் நிறைய....!

ஒருவாரம் கழித்து ஜெயன்தேவாவுடன் தொலைபேசினேன். நீ அவரது கண்முன்னே இறந்து போனதை நீ துடித்ததை நீ அழுததை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

நீங்கள் தானே சாந்தி அவளோடை கடைசிவரையும் தொடர்போடை இருந்தனீங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. அவள் வாழ ஆசைப்பட்டவள். காலம் பறிச்சிட்டுது. அவரது நம்பிக்கையாய் இருந்தவள் நீ. அவரது வாழ்வாய் இருந்தவள் நீ. உன்னை இழந்த துயரம் அவரது உறுதியை உடைத்துப் போட்டது.

நீ எழுதிய உனது போராட்ட அனுபவ நூலை வெளியிட வேண்டுமென்றார். உனது ஆசையும் அதுவே. நீ எழுதியபடியே நூலை வெளியிடப்போவதாகச் சொன்னார்.

உன்மீது பழியுரைத்தோர் , உன்னை தேசத்துரோகியாய் கதைசொன்னோர் என எல்லோருக்கும் பதிலாக உனது நூல் மட்டுமே இருந்தது.

000            000             000
உனது கூர்வாழின் நிழலில் நூல் வெளியானது. ஜெயன்தேவா தபாலில் அனுப்பி வைத்தார். நூலைப்படித்த பிறகு உன்னிலிருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

சிறந்த எழுத்தாற்றல் மிக்க தமிழினி நூலில் நிமிர்ந்து நின்றாள்.

உனது நூலை வாசிக்கமாட்டோம் என சிலரும் வாசிக்காமலே பலரும் உனது நூலை நீ எழுதவில்லை ஜெயன்தேவா அரசகூலியாகி உனது தியாகத்தை விற்பதாய் இணையத்தளங்களில் நீயே பேசுபொருளாகினாய்.

தமிழினக்கு யார் திருமணம் செய்து வைத்தது ?

சாந்தி நேசக்கரமா ?

அவள் இலங்கையரசின் உளவாளியெல்லோ?

ஜெயன்தேவா இலங்கையரசின் விருந்தாளியெல்லோ?

சாந்தி நேசக்கரம் நீ எப்படி தமிழினிக்கு ஒரு துரோகியை திருமணம் செய்து வைத்தாய் ?

அரசகைக்கூலியே உனக்கு தமிழினியின் பெறுமதி தெரியுமா ?

என்மீது விழும் சொ(க)ற்கள் இவை.

என் வரையில் உனக்கு உண்மையான தோழியாய் இருந்திருக்கிறேன். உனக்கு ஆறுதல் தேவைப்பட்ட காலத்திலும் நீ அந்தரித்த காலத்திலும்  உன்னோடு கூட வந்திருக்கிறேன். நீ மீள நானும் சிறு அணிலாய் உன்னோடு பயணித்திருக்கிறேன்.

உனக்கு விசஊசி ஏற்றியே கொல்லப்பட்டாயாம். ஒருசாரார் சொல்கிறார்கள்.
நீ பாலியல் வல்லுறவுக்கு அதிகம் உட்படுத்தப்பட்டதனால் தான் உனக்கு புற்றுநோய் வந்ததாம்.

சாவின் பிறகும் உன் நிம்மதியைப் பறித்து தங்கள் விருப்பிற்கு ஏற்ப எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்.

நீ ஆதரவற்று அந்தரித்த போது ஒளித்தவர்களெல்லாம் கேட்கும் கேள்விகள் கோடிக்கணக்கு.

இந்த மனிதர்களை நீ பார்த்துவிட்டு இறந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தன் கணக்கிலிருந்து உன்னை விடுவித்துக் கொண்டு போய்விட்டது.

000        000         000
2009 இற்கு பிந்திய தமிழினியின் மாற்றம் தெளிவு 2009இற்கு முந்திய தமிழினியைக் காணாமற்போக வைத்தது.

எதிரியாய் இருந்த இனத்தையும் அதன் இராணுவத்தையும் நீ மதிக்கும் நிலைமை எப்படி வந்தது ?

18வருடம் எதிரியாக நீ கருதியவர்களை நீ நேசிக்கும்படியான காலமாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

கொன்றவர்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் மனநிலையை நீயும் உன்போன்ற பலரும் உணரும் நிலை எப்படி உருவானது ?

எதிரி எங்களை எப்படி வென்றான் ? என்னிடமுள்ள ஒரே பதில் :-

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு தனக்கெதிராகப் போராடியவர்களின் உளவுரணை உடைக்கும் மனவலுவை எதிரி கொண்டிருந்த உண்மையை இன்னும் உணராதவர்களாய் , எங்களுக்குள் மல்லுக்கட்டுவதில் காலத்தைக் கழிக்கிறோம்.

'எல்லாப்பலத்திலும் ஒரு பலவீனம் நிச்சயம் உண்டு அந்தப்பலவீனத்தில் அடி'
சொன்ன தலைவனின் வேதத்தை எதிரி நன்றாகவே புரிந்து கொண்டுள்ளான்.

எதிரி எங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டே போகிறான். நாங்கள் இன்னுமின்னும் சிதிலங்களாகிக் கொண்டிருக்கிறோம்.
பல்லாயிரக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இன்று சில ஆயிரங்கள் கூட சேர முடியாது போயுள்ளோம்.

இது ஆயுதங்களால் போராடும் காலமல்ல. தந்திரத்தால் மனபலத்தை தகர்க்கும் போராட்ட காலம். எதிரியின் நாடியில் துப்பாக்கியை வைப்பதற்கு திட்டமிடுவதை விடுத்து தோழில் கைபோட்டுக் கொண்டு வெல்லும் நவீனத்தை தேட வேண்டும்.

இதுவே உனக்கும் உன்போல நாங்கள் விலைகொடுத்த அனைவருக்குமான கைமாறாகும்.

சாந்தி நேசக்கரம்.
22.04.2017.

அன்புத் தோழி மறைந்த தமிழினி அவர்களுக்காக 22.06. 2012 எழுதிய கவிதை மீளும் நினைவு. வெலிக்கடை சிறைவாசம் முடித்து வவுனியா புனர்வாழ்வு முகாம் சென்ற சேதியை அவள் அறியத்ததந்து உரையாடிய போது அவளுக்காக எழுதிய கவிதை இது. பலதடவை வாசித்து தன் கண்ணீரால் பல கதைகள் சொன்னவள் நினைவோடு.....!
-----------------------------------------------------------

கால விதிகளின் கட்டறுத்தெறிந்த
வீரத்தின் விலாசங்களோடு
வனவாசம் போனவர்களுடன்
ஆழுமையின் வீச்சாய்
அடையாளம் காட்டப்பட்டவள் நீ.

பெண் விதியின் முழுமைகளை
நீ பேசிய மேடைகள்
பதிவு செய்து கொண்டதோடு
நீயொரு பெண்ணியவாதியாய்
பெருமை கொள்ளப்பட்டவள்.

உன்னையும் உனது ஆழுமைகளையும்
உச்சத்தில் ஏற்றி எழுதியோரும்
உன் குரலில் பதிவு செய்தோரும்
எண்ணிலடங்காதவவை....

எழுச்சியின் காலங்களை இப்படித்தான்
காலம் கௌரவப்படுத்துவது வரலாறு.
வீழ்ச்சியின் பின்னரே யாவும்
விழித்துக் கொள்கிறது.
அதுவே உனக்கும்
உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது.

000

2009 மே,
காலச் சூரியனின் கைகளிலிருந்து
தவறிப்போனவளாக
வரலாறு உன்னைப் பதிவுசெய்தது....

பணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி
உன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட
காலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்
தோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.

திட்டும் சபித்தல்களும்
உன்மீது சொரிந்த வேளையில்
எல்லோர் போலவும்
நானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்
நீயறியாத இரகசியங்கள்....

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்
கடைசிநேர நிலவரம் பற்றியும்
உங்களைத்தான் விழுங்கியது
எங்களது பேரங்கள்.

இருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ
இருளோடு கரைந்த கதைகள்
அறிந்த போது
எல்லாக் கோபமும் போய்
தோழமை வென்றது.
தோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த
பொழுதுகள் கனத்தது....

கோபம் மறந்து உன்னோடு கதைத்து
உனது கண்ணீரைப் பங்கிட்ட போது
நெஞ்சுக்குள் உறுத்தும்
உன் மீதான எனது கோபங்கள்
அர்த்தமற்றுப் போய்விட்டன....

துயரங்கள் தின்ற உனது நாட்களை
நினைவுகொள் நேரமெல்லாம்
கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்
துயர் கரைக்கும் அந்தரத்தில்
உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்
உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய
வெற்றியை யாரிடமும் சொல்லாமல்
அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

கம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்
உன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்
உனது விடுதலையின் செய்தி
நெஞ்சுக்குள் பொங்கிய மகிழ்வை
நீ வரும் வரை
பொக்கிசமாய் பத்திரமாய் வைத்திருக்கிறேன்....

வா நாங்கள் மீண்டும் பேசிக் கோபித்து விவாதித்து
மிஞ்சிய பொழுதுகளையேனும் மீள் நினைவு கொள்வோம்.

22.06.2012
சாந்தி நேசக்கரம்.

No comments: