Wednesday, July 10, 2013

போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம்.


நீயில்லாது போய்
இன்று இரண்டு ஆண்டுகள்
முடிந்து போகிறது.

எல்லாமுமாய் நீ வாழ்ந்த
எங்கள் தேசத்திலொரு
நினைவுக்கல் நாட்டியுன்னை
நினைவு கூரவோ
நெஞ்சழுத்தும் துயர் கரைய
ஊர்கூடி அழுது துயர் போக்கவோ
யாதுமற்றுப் போன விதியை மட்டுமே
நொந்து சாகும் விதி பெற்றோம்.

பிரகாசமாய் ஒரு பெயரும்
எழிலாயொரு பெயரும்
உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள்
ஆயிரம் கதைகளும்
அழியாத நினைவுகளும்....!

அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய்
நம்பும் உனது குழந்தைகள்
அப்பாவைத் தங்களிடம்
அனுப்புமாறு கேட்கிறார்கள்.
அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும்
செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும்
அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு
கட்டளையிடுகின்றனர்.

அப்பா தர வேண்டுமென்ற அவர்களது ஆசைகள்
இப்படி ஆயிரக்கணக்கில் நீண்டு கிடக்கிறது
நீயில்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்ப
எவராலும் முடிவில்லை.

உன்னாலே வாழ்ந்தவர்களும்
இப்போது வரை வாழ்பவர்களும் பலர்.
ஆயினும் அனாதையாய்
நீ போன பொழுதுகூட
அருகிலிந்த அட்டைகள் வரவேயில்லை.

இன்று உனது குழந்தைகள்
ஏழை விதவையின் குழந்தைகளாக
எல்லாக் குழந்தைகள் போலவும்
ஆயிரம் ஆசைகளோடு.....!

உனக்கான கல்லறை நாளை எழுகிறது
உனது ஞாபகங்களைத் தரும் சொத்து
அதுவொன்றே அன்னிய மண்ணில்
உன்னை நினைவு தரும் நினைவிடம்.

போய் வருக என்றுன்னை வழியனுப்பி
மண்போட்டு விடைதரவும் ஆளின்றி
உன் காதல் மனைவியின் கண்ணீரிலிருந்து
சொரியும் ஞாபகங்களே
இன்றுன் நினைவுநாளில்
இதயம் கனக்க இமைகள் பனிக்க எஞ்சியிருக்கிறது.
அமைதியாய் உறங்கு
உன் ஆத்ம அமைதிக்காய்
கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம்.
10.07.2013

No comments: