அண்ணை இப்பத்தான் அண்மையில தடுப்பிலயிருந்து வெளியில வந்தவர். 25வரியம் இயக்கத்தில இருந்தவர். ஒரு நல்ல களமுனைச்சண்டைக்காரனும் கூட. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சுடுகலனும் , கனரகமும் அதுகளை இயக்கிற வகையளுமே.
ஆயுதங்களோடை அண்ணை காடுகளெல்லாம் நடந்து திரிஞ்சவர். தாயகக்கனவை நெஞ்சில சுமந்தபடி அண்ணை உருவாக்கிய போராளிகள் அண்ணையின் கையிலை வீரச்சாவான நேரங்களிலயெல்லாம் அண்ணை தன்ரை கண்ணீரை மறைச்சு இலட்சியத்தை இறுக்கமாவே வரிச்சுக் கொண்டு இயங்கின மனிசன்.
2006மாவிலாற்றில சண்டை துவங்கினோடனும் மாவிலாற்றில சண்டைக்களத்தில நிண்டார். பிறகு சம்பூர் , மூதூர் , கொக்கட்டிச்சோலை , தொப்பிகல எண்டு கிழக்க மாகாணத்தில அண்ணை நிக்காக களங்களில்லை. அண்ணைக்குப் பின்னாலை அவற்றை மனைவியும் , குழந்தையும் அலைச்சல்தான் அவைக்கும்.
கிழக்கை படைகள் கைப்பற்றி முடிய கிழக்கின்ரை இழப்புகளில அண்ணையும் இழந்தது நிறைய. களத்தில காயங்களாகியும் மனசில ஈ(வீ)ரம் காயமால் தான் விதைச்ச தான் வளத்த போராளிகள் மாவீரர்களைத்தான் நினைச்சு நினைச்சு உழைச்சவர். ஒரு நாளும் குடும்பம் குழந்தை வீட்டைப்பற்றி நினைச்சதேயில்லை. அவற்றை மனசைப்புரிஞ்ச மனைவி அவரோடை வாழக்கிடைச்சதுக்காக பெருமைப்பட்ட காலங்கள் அது.
கிழக்கை இழந்தப்பிறகு வடக்கிற்கு அண்ணையின்ரை அணி காடுகள் கடந்து நீண்ட நடைப்பயணம் செய்து வன்னிக்களமுனைக்குப் போய்ச்சினம். தான் போன வன்னிக்கு தன்ரை குடும்பத்தையும் இடம்பெயர வைச்சு அவையளுக்கும் தொடர் அகதி வாழ்வையே குடுத்த மனிசன். இப்ப கேட்டாலும் அது குற்றமெண்டு ஒத்துக் கொள்ளமாட்டார். கடினங்களோடை வாழப்பழகின தன்னை காதலிச்ச மனைவி அதையெல்லாம் அனுபவிச்சது பிழையில்லையெண்டு நாண்டுபிடிப்பார்.
கடைசியில 2009 அண்ணையும் சரணடைஞ்சார். இப்பவும் அதெல்லாம் ஒரு கனவுமாதிரியே அவருக்கு கனவுகளில வருகிறது. எந்த நம்பிக்கையில சரணடைஞ்சாரெண்டது இப்பவும் ஞாபகத்தில வருதில்லை. ஆனால் சரணடைஞ்சு சித்திரவதையள் அனுபவிச்சு நோஞ்சானாகி விடுதலையாகியிருக்கிற மனிசன் இன்றும் நல்லவனவாகவும் , நேர்மையானவனாகவும் வாழ நினைச்சு கஸ்ரப்படுறதைப் பாக்கிற ஊர்ச்சனம் இப்பிடித்தான் சொல்லுது...
'உலகத்தோடை ஒத்துவாழப்பழகுங்கோ'.
யாரிட்டையும் உதவி கேப்பம் எத்தினை நாளைக்கு இப்பிடி கஞ்சியும் வறுமையும் எங்களை வாழ வைக்கப்போகுது...? ஏன்று சலிக்கிற மனைவிக்கு ‚'வா நஞ்சைக்குடிச்சுச் செத்துப்போவம்'' எண்டு சொல்லி வாயை மூடப்பண்ணீடுவர்.
எத்தினை பேரை வாழ வைச்ச மனிசன் எத்தினையோ பேருக்கு வாழ வழிசெய்த மனிசன் தினக்கூலி வேலைக்கும் உரிய ஊதியம் கிடைக்காமற்போயும் வரம்பு கட்டியும் கரைவலைக்குப்போயும் தான் குடும்பச் சீவியத்தைக் காவாந்து பண்ணிக் கொண்டிருக்கிறார்.
எத்தனையோ வலிகளும் கடினங்களும் தாங்கிய உடல் வதைகளால் பாதிப்புற்று வலிமையும் இழந்து போய் இப்ப ஒரு நோயாளி. ரெண்டுநாள் வேலை மூண்டாம் நாள் படுக்கையிலென இதுதான் இப்ப மனிசன்ரை வாழ்க்கை.
வாழிறதுக்கு சொந்த வீடில்லை தகரக்குடில் அதுதான் அண்ணையின்ரை வசந்தமாளிகை. வெப்பத்தைச் சேகரிச்து வைச்சிருக்கிற தகரக்குடிலின் வெப்பியாரம் தாங்காமல்....,
‚'எப்பப்பா நாங்க வீடு கட்டுவம் ?'' என அழுகிற மகனுக்கு....என்ரை குஞ்சுக்குத்தான இந்த வீட்டை எழுதித்தாறது'' எனச் சொல்லுவார். 8வயசுப்பிள்ளையும் ஏதோ அப்பா பெரிய வில்லாவைத் தனக்கு முதிசமாத்தரப்போறாரெண்டு வில்லாக்கனவில் இருக்கிறான்.
வரப்புகட்டப்போறதிலும் வருவாயில்லாமல் போய்விட இப்ப ஆத்தில மீன் பிடிக்க இரவலுக்கு வலைவேண்டி மீன் பிடிக்கப்போய்வாறார். இப்ப மீன்படுற காலமாம் அதிலை ஏதும் முன்னேறிடலாமெண்ட கனவில பின்னேரம் 5மணிக்கு வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுவார். மறுநாள் மதியம் ஒரு மணிக்குத்தான் வீட்டை வருவார். சிலநேரம் நித்திரை முளிப்புக்கும் 10மயில் சயிக்கிள் ஓடிப்போனதுக்கும் பயனில்லாமல் வெறுங்கையோடு திரும்பி வருவார். இப்போது தண்ணீர் வற்றுக்காலம் என்பதால் முதலைகள் அவர்கள் மீன்பிடிக்கும் ஆற்றில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள காலமிது.
மீன்கள்பட்டதும் முதலைகள் வலைகளை அறுத்துவிடுகிறது. அறுபட்ட வலையை மீளக்கட்டி மீண்டும் தொழிலுக்குத் தயாராக கிடைக்கிற கொஞ்ச ஓய்வும் போய்விடுகிறது. முதலைகளைத் துரத்த இரவிரவாய் நித்திரை முளித்துக் ஆற்றங்கரையில் காவலிருக்கிறதே இப்போது வாழ்வாகிப் போயிருக்கிறது.
வலையும் சொந்தமாயில்லை ஆளம் மிகுந்த ஆற்றில் தொழில் செய்ய தோணியும் இல்லை. இந்த மீன்படும் காலத்தைப் பயன்படுத்த விரும்புகிற மனிசனுக்கு 40ஆயிரம் ரூபா கையிலிருந்தால் இருண்ட வாழ்க்கையை வெளிச்சமாக்க முடியுமென்ற நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது.
„'உங்கடை கவுரவமும் நீங்களும் போங்கோ...' என்று அண்ணையின் கவுரவத்தை விட்டிட்டு அண்ணையின் மனைவி காயத்திரியக்கா எழுதிய கடிதம் அவர்களுக்காக எதையாவது செய்துவிட வேண்டுமென்றதைச் சொல்கிறது.
காயத்திரியக்காவின் கடிதம் இது கருணையாளர்களிடம் விட்டுவிடுகிறேன்:-
26.06.2012
No comments:
Post a Comment