Sunday, June 3, 2012

இது கதையில்லை

அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார்.

உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....?

வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத்திரி மருந்தெண்டு வந்த அழைப்புகளில 16வது அழைப்பு இது. முகம் தெரியாத அந்தத் தம்பி உடனடியாக உதவி தேவைப்படுகிற போராளியின் மருத்துவச்சான்றிதழ் , செலுத்தப்பட்ட பணத்திற்கான ரசீதுகள்  அத்தோடு இரத்தம் கசிந்தபடி அவனது கால்கள் பஞ்சையும் சிவப்பாக்கியிருந்த பஞ்சுகளால் சுற்றப்பட்ட அந்தப்போராளியின் படம் , சத்திரசிகிச்சை உடையோடு ஒரு பொம்மைபோல கட்டிலில் கிடக்கிற கோலத்தை படம் பிடித்து  எல்லாவற்றையும் மின்னஞ்சல் செய்திருந்தான்.

அக்கா அவன் இந்தியாவில தண்ணீர் விநியோகம் செய்யிற வேலைதான் செய்தவன்...அன்றாட கூலிதான் குடும்பத்திற்கான வருமானம்....2பிள்ளைகள் மனைவியும் இவனைத்தான் நம்பியிருக்கினம் கடைசி முயற்சியென்ற வரையும் முயன்றுவிட்டோம். ஆளைப்பாக்கேலாம இருக்குதக்கா என்று அடிக்குறிப்பும் இட்டிருந்தான்.

60ஆயிரம் ரூபா இந்தியப்பணம் கிட்டத்தட்ட 900€. யாரிட்டையும் உடனடியாகத் திரட்ட முடியாது என்பதனை அவனுக்கு அஞ்சலிட்ட கையோடு ஸ்கைப்பில் ஓடிவந்தான் அவன். ஏதாவது முயற்சி செய்யுங்கோக்கா....சரியான பாவமாயிருக்கு....கடன் குடுக்காட்டி பொலிஸில குடுத்திருவாங்களக்கா....வெளிநாட்டு உதவியளோ சொந்தங்களோ ஒருதருமில்லையக்கா.....கெஞ்சினான் அவன். சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கட்டிலில் சுருண்டு போனவனின் மனைவியின் தொலைபேசியிலக்கத்தையும் எழுதிவிட்டு ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ என அவர்களுக்காக மன்றாடினான் தொடர்பில் வந்த சக போராளி.

சிகிச்சை முடிந்து இரத்தக்கறையோடு கிடந்த அந்தத் தம்பியின் மருத்துவச் சான்றிதழை பிறிண்ட் எடுத்தேன். 32வயது அவனுக்கு. செய்யப்பட்ட சிகிச்சைக்கான ஒவ்வொரு செலவுகளும் அட்டவணைப்படுத்தப்பட்டு கணக்கு போடப்பட்டிருந்தது. அவனது படத்தை பார்க்க அந்தரமாயிருந்தது.  அவனது முகத்தைப் பார்த்த பின்னர் எதுவும் செய்ய முடியாதென்று ஒதுங்கவும் முடியாமல் அவன் கண்ணுக்குள் நின்றான்.

அவனது மனைவியின் தொலைபேசியை அழைத்தேன். சொல்லுங்க அக்கா....அவள் அழ ஆரம்பித்தாள். நாங்கள் எங்களுக்கெண்டு ஒண்டையும் கொண்டு வரேல்லையக்கா....ஏதோ உயிரைக்காப்பாற்றுவமெண்டு மட்டும்தான் நினைச்சு இந்தியா வந்தனாங்கள்....இவர் கடைசியாத்தான் காயம்பட்டவர்.....வந்தோடனும் ஒரு வேலையும் கிடைக்கேல்ல...தண்ணி சப்ளை வேலையும் வீடுகளுக்கு பெயின்ற் அடிக்கிற வேலையும் தெரிஞ்சாக்களை பிடிச்சு எடுத்தவர். டொக்ரர்மார் சொன்னவை....கனக்க நடக்கப்படாது நிக்கப்படாதெண்டு ஆனா அப்பிடியிருந்தா பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறும் குடுக்கேலாதெண்டு வேதவனையோடைதானக்கா வேலைக்குப் போனவர்....கால் ஏலாம வந்தப்பிறகுதான் வெளிநாட்டுக்காறாள் ஒருதரின்ரை தொடர்பு கிடைச்சோடணும் ஒப்பிறேசனுக்கு உதவி கேட்டம்....ஓமெண்டு நம்ப வைச்சிட்டு இப்ப எங்களை ஏமாத்தீட்டினமக்கா....அவள் அழுதாள்.

உதவி செய்வேனென வாக்குறுதி கொடுத்தவரின் இலக்கத்தை வாங்கி அழைத்தேன். அது லைகா இலக்கம். தொடர்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அழைக்க வொயிஸ் மெயிலுக்குப் போய்க் கொண்டிருந்தது. பல லைகா இலக்கங்கள் ஏற்கனவே உதவுகிறோம் என பொழுது போக்காட்டிய அனுபவம் போல இதுவுமொரு லைகா போல.....

இந்தியா , இந்தோனேசியா , தாய்லாந்து , பர்மா , நேபாளம் ,ஆபிரிக்கா வரை எத்தனையோ போராளிகள் தெருத்தெருவாய் ஊனங்களோடும் உயிர்வாழ முடியாத வறுமையோடும் அவதிப்பட அந்த உயிர்களுக்கு உதவுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவதில் என்ன நிம்மதியைப் பலர் காண்கிறார்களோ தெரியவில்லை....?
 தன்னுடைய இனத்தை நம்பி தன்னுடைய வாழ்வையும் இழந்து ஊனமாக அன்னிய நாடுகளில் அலைகிற போராளிகளுக்கு மறுவாழ்வை அல்லது மன நிம்மதியை யார் கொடுக்கப்போகிறோம்...?

விழுந்தவர்களை எழ தோழ் கொடுக்காமல் விடுதலையை யாருக்காக வெல்லப்போகிறோம்....?
(இது கதையில்லை ஒருவனின் அந்தரம் மிக்க வாழ்வின் துயர்)
03.06.2012

No comments: