Saturday, November 3, 2012

காலச்சூரியன்களும் சிறைக்கம்பிகளும்

சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான். சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தை அக்கால வீதிநாடகங்களும் பரப்புரைக்கூட்டங்களும் உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி விடுதலைப் போராளியானான்.

அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம் போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது. பகைகுகையில் இறங்கிப் பணி செய்ய அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை மாற்றி சிவிலுடைக்கு மாற்றப்பட்டான். சீரியசான போராளி சிரித்துச் சமாளித்து சாதிக்கும் வல்லமையை அவனது வசீகரம் மிக்க கதையும் அவனை நிரந்தரமாக வன்னியைவிட்டுப் பிரித்து பகைகுகையில் நிரந்தரமாக்கியது.

சாகசங்கள் செய்வது போல சாதனைகள் செய்தான். லட்ச லட்சமாய் குறையாத பணவளம் வசதிகள் யாவையும் அமைப்பு அவனுக்கு வழங்கியது. தாய்மண்மீதான பற்று பணிகளுக்காக மட்டுமே நாட்டுக்காசைப் பயன்படுத்துவான் தனது தேவைகளுக்கும் தனது பணியைச் சந்தேகமின்றியும் சாதுரியமாகவும் வெல்ல கடைகளில் பணியாளனாய் விடுதிகளின் வேலைக்காரனாய் அவன் எடுத்த அவதாரங்கள் ஆயிரத்தையும் தாண்டும்.

பொறுப்பானவர்களைச் சந்திக்க இடையிடை தாண்டிக்குளம் தாண்டி ஓமந்தை சோதனைச்சாவடியில் அவனும் சாதாரணமானவனாகவே வரிசையில் நின்று அங்கே கடமையிலிருக்கிற காவல்துறையினர் சிலரின் பொறுப்பற்ற தன்மைகளையும் போட்டுக்குடுத்து திருத்தியிருக்கிறான். இறுக்கம் மிகுந்த சோதனைச்சாவடிக்காலும் உரியவர்களுக்கு வழங்க வேண்டியவற்றையும் ஏதோ வழியாக கொண்டு போய்ச் சேர்ப்பான்.

பணியின் கனம் அவனுக்கு அதிகரிக்கப்பட்டது. பகை இனத்திலேயே அவனை யாரையாவது காதலிக்குமாறு சொல்லப்பட்டது. வேலையாளாய் நின்ற விடுதியிலேயே வந்து போன ஒரு குடும்பத்தை நட்பாக்கி அவர்களது வீட்டுக்கு இவன் விருந்தாளியாய் ஏற்கப்பட்டான். அங்கே ஒரு அழகியிருந்தாள். அவன் வெல்ல அவனது இலட்சியம் வெல்ல அந்த அழகியை அவன் காதலித்தான். காதல் நெருக்கமாகி அவனில்லையென்றால் அவளில்லையென்ற நிலைக்கு அந்த அழகி வந்துவிட்டாள்.

அவனது பணியிடத்தில் அவன் நிரந்தரமான இருப்பிட அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள அவளைத் திருமணம் செய்து கொண்டான். வேகவேகமாய் அவன் படைத்த வெற்றிகளின் தடயங்களையும் வெளித்தெரியாமல் மறைத்துவிடுகிற விவேகத்தையும் அவன் கற்று வந்த கற்பித்தலைவிட அதிவிசேடமாகவே செய்தான். அவனுக்கு மேலே இருந்தவர்களையும் மிஞ்சிய ஆற்றலும் ஆழுமையும் அவனை வசப்படுத்தி வைத்திருப்பதாக கடைசியாகப் புதுக்குடியிருப்புக்கு போய் திரும்பிய போது அவனது துறைக்குப் பொறுப்பானவர் தோழில் தட்டிச் சொன்னதைப் பலமுறை நினைத்துத் தன்மீதே பெருமைப்பட்டிருக்கிறான்.

ஒருபுறம் அவன் குடும்பத்தலைவன். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாயும் ஆகினான். மறுபுறம் அவனது தேசக்கனவை நனவாக்கும் பாதையில் தடைகள் அகற்றும் தடையகற்றியாக இயங்கிக் கொண்டிருந்தான். ஒருநாள் தானும் காற்றாகும் கனவோடு கடமையில் கலந்தான்.

ஒரு பெரும் தடையை அகற்ற அழிக்க அவனுக்கு கட்டளை வந்தது. காற்றும் அந்தத்தடையைத் தாண்டுவதானால் ஒன்றுக்குப் பலமுறை பரிசோதனை செய்யப்படும் குகையது. ஆயினும் அவனது சாதுரியமும் கெட்டித்தனமும் அந்தக் குகையை உள்ளடைந்து வேவுபார்த்து இலக்கையடைய உயிராயுதத்தையும் தயார்படுத்தி அந்த இலக்கையடையும் நாளுக்காக காத்திருந்து எல்லா ஒழுங்கும் முடித்து தடையுடைக்கும் பொழுதுக்காய் காத்திருந்தான்.

அந்தக்கடைசி நாள் அவனே எல்லாவற்றையும் இரவுபகலாய் கவனித்து உயிராயுதத்தையும் தயார் செய்து கடைசி ஒத்திகையும் முடித்து வழியனுப்பிவிட்டு போகிற ஆயுதம் பிழைத்தால் அடுத்து தன்னையும் தணலாக்க தயார்படுத்திக் கொண்டு போயிருந்தான்.

வரிசையாக வந்து கொண்டிருந்த வாகன நெருக்கத்தில் உரிய இலக்கை அவன் தயார்படுத்தியனுப்பிய உயிராயுதம் சிதறடிக்கும் கனவோடு அந்தக் கண்ணில் தெரிந்த பிரகாசம் அன்றைய சூரியக்கதிர் ஒளியையும் மிஞ்சியது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு தொலைவாய் நின்ற உயிராயுதம் அவன் கண்முன்னே தீயாகித் தணலாகிப் பெருநெருப்பாகியெரிந்தது. அகற்ற நினைத்த தடையும் தொலைந்ததென்றே நினைத்தான். ஒரு கணம் எல்லாம் ஸ்தம்பித்து தீப்பிழம்பே அவனது கண்களையும் மறைத்தது.

அடைய நினைத்த வெற்றியும் அழிக்க நினைத்த தடையும் அன்று அழியவில்லை. அந்த வெற்றியை எதிர்பார்த்திருந்தவர்கள் அவன் மீது கோபமாயிருந்தனர். அவனது கவனக்குறைவே அந்தத் தோல்வியின் காரணம் எனப்;பட்டது. உலகெங்கும் அந்தச் செய்தி பரவியது. உலக ஊடகங்களில் அவன் தயார்படுத்தியனுப்பிய உயிராயுதத்தின் உடற்கூறுகளை ஐரோப்பிய நிபுணர் குழு பரிசோதனை செய்யப் போவதாகவும் குற்றவாளிகள் மீது கடும் விமர்சனத்தையும் வைத்து பயங்கரவாதத் தாக்குதல் அதுவென்றும் சொல்லப்பட்டது.

பயங்கரமானவர்களாக நாங்கள் மாற யார் காரணமான பயங்கரவாதிகள் என்பதனை ஏனிந்த உலகம் புரிந்து கொள்ளாதிருக்கிறது. அவனும் வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அந்த நெருப்பை அந்த இலக்கைச் சென்றடைய அவன் பட்ட வலிகள் கண்ணீராய் பெருகியது. அவனது அழகி சந்தேகப்படாதிருக்க சாதாரணமானவனாய் காட்டிக் கொண்டான். இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்தான். அடைய முடியாது போன இலக்கை இனித்தானே அழிப்பதென்ற ஓர்மத்தை நெஞ்சில் விதைத்தான். அந்தத் தோல்வியின் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்த அவனது ஆட்களுக்குத் தகவல் சொன்னான். அந்த இலக்கை நான் அடைவேன்.

ஒருநாளில் நெருப்புப்பற்றிய தெருவும் வாகனங்களும் அன்றைய பகைக்கான இழப்புக்களையும் எண்ணியெண்ணி அதன் காரணமானவர்களைத் தேடும் நடவடிக்கையை பகைவன் தொடர்ந்து கொண்டிருந்தான்.

000              000                    000

ஒருநாள் அவனது வீடு முற்றுகைக்கு உள்ளானது. ஏப்போதுமே தடயங்களை விட்டு வைக்காமல் அழித்துவிடுகிறவனின் வீட்டைச் சூழ்ந்தவர்கள் அவனையும் அவனது மனைவியையும் மகளையும் மாமியாரையும் கைது செய்தனர். அவனைக் காதலித்து அவனில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அவனை நம்பியவளுக்கம் அவளது குடும்பத்திற்கும் இருண்டது விடிஞ்சது எதுவும் தெரியாது. ஏதோ தங்கள் இனத்தவர் அவனை வீணாக சந்தேகித்துத்தான் அவனையும் தங்களையும் கைது செய்கின்றனர் எனவே நினைத்தார்கள்.

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமொன்றை எட்டியபோதுதான் அவன் ஒரு விடுதலைப்போராளியென்றது தெரிய வந்தது. அவனைக் கொன்று போட்டுவிடும் கோபம் அவளுக்கு.

சட்டத்தின் முன் அவளும் அவளது குடும்பமும் அவன் தங்களை ஏமாற்றியது தமக்கும் நடந்து முடிந்த சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று வாதாடினார்கள். இருந்த வசதிகளையெல்லாம் விற்று அவளும் அவளது குடும்பமும் விடுதலையானது. 3வயதில் பச்சைக் குழந்தையாக சிறையில் அவலப்பட்ட அவனது குழந்தை மீதும் அவளுக்கு வெறுப்பு அதிகமாகியது. அவனை உரித்து ஒட்டியது போலவே தமிழும் சிங்களமும் கலந்த பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தையில் ஓடும் தமிழ் இரத்தம் அவளுக்கு எரிச்சலையும் வெறுப்பையுமே அதிகரித்தது.

000            000               000

என்றாவது ஒருநாள் எங்காவது தெருவிலோ வாகனநெரிசலிலோ காற்றாய்விடுகிறவனே தானென்று நினைத்திருந்தவனுக்கு தனது குழந்தையின் மேல் சொல்லியளவிட முடியாத அன்பு. அவளோடு கழிகிற பொழுதுகளை அவன் அதிகம் விரும்பிய தருணங்கள் நிறைய. குழந்தை எதையெல்லாம் விரும்பும் என்பதனையெல்லாம் தானாகவே முடிவு செய்து வாங்கிக் கொடுப்பான். இரவுகளில் உறங்கப்போனால் குழந்தை நித்திரையாகும் வரை அவளோடிருப்பான் கதைகள் சொல்லுவான். எல்லோரும் உறங்கிய பின்னர் உறங்கச் செல்வான்.

பின்னிரவில் உறங்கப் போகிறவன் எல்லோருக்கும் முன்னம் முதல் ஆளாய் எழும்பிவிடுவான். காலை எழுந்ததும் யோகாசனம் முதல் உடற்பயற்சிகள் செய்து காலையுணவை மகளுக்கும் மனைவிக்கும் தயார் செய்து கொடுத்துவிட்டே வீட்டைவிட்டு வெளியேறுவான். அவனது நடமாட்டம் ஒவ்வொன்றும் இலக்குகள் தேடியதாகவே அமையும்.

ஓன்றாயிருந்து களமாடி உறங்கிப்போன ஒவ்வொருவரின் இறுதிக் கணங்களையும் திரும்பத்திரும்ப நினைவு கொள்ளும் அவனது மனசுக்குள் மூண்டெரியும் தீயில் அவனது பணிகளை விரைவுபடுத்துவான். பெயர் , புகழ் , முகம் , முகவரி எதுவுமற்று ஒருநாள் எரிந்து போவதற்காயே அவன் கனவோடலைந்தான்.

கம்பிகளின் பின்னால் அடைபடக் காரணமாயிருந்த தாக்குதலைத் திட்டமிட்டு முடிக்க அவன் பட்ட சிரமங்கள் யாவையும் ஒரு தடயம் அழித்து இன்று அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முடக்கி சிறையில் அடைத்திருப்பது பற்றி அதிகம் சிந்தித்திருக்கிறான். எனினும் எல்லாம் விடுதலைக்கே என்ற நினைப்பில் கொடும் சித்திரவதைகளையும் மின்பாச்சிகளின் இரக்கமற்ற தாக்குதல் வரை அவன் அனுபவித்த சித்திரவதைகள் மாதக்கணக்காய் அவனைப் பிணமாய் போட்டது. எனினும் இலட்சிய நெருப்பு நெஞ்சுக்குள் சூரிய நெருப்பாய் கனன்று கொண்டேயிருந்தது.

000               000                   000

காலம் 2009மே. நம்பியவர்களும் அவன் நேசித்தவர்களும் துடைத்தளிக்கப்பட்டு அவன் அடைக்கப்பட்ட சிறையில் கடைசிக்களமாடியவர்கள் பலர்; வந்தடைந்தனர். இழப்பதற்கு இனியெதுவுமே இல்லை உயிர்கள் தப்பினால் போதுமென்றதாக வந்திருந்தவர்கள் சொன்ன கதைகள் அவனையும் கலங்க வைத்தது.

தனியே போயிருந்து யோசித்துக் கொண்டிருப்பான். விடுதலையாகிப் போன மனைவி அவனைப் பார்க்க வருவதில்லை. அவள் அவனால் ஏமாந்து போன கோபம் அவன் வெளியில் வந்தால் தன்கையாலேயே அவனுக்கான சாவு எழுதப்படுமென்று மிரட்டிக் கொண்டிருந்தாள். அவனது குழந்தையை அவனது உயிரை அவள் வேண்டாமென்று வெறுத்தாள். அவனைக்காண வருகிற அவன் அம்மா அவனது குழந்தை பற்றிச் சொல்லியழுவாள்.

வெளிநாட்டில் 3உணவகங்களுக்குச் சொந்தமாயிருக்கிற வசதி படைத்த உடன்பிறப்புடன் தொடர்பு கொண்டான். தனது பிள்ளைக்கும் தாய்க்கும் ஏதாவது உதவுமாறு கேட்டான். உடன்பிறந்தவளோ அவனது மைத்துனனோ அவனது குழந்தை சிங்களக் குழந்தையென்றும் அதற்கு தங்களால் எதுவும் செய்ய இயலாதென்று மறுத்தார்கள்.

நாடுமில்லை நாடென்று வாழ்ந்தவர்களுமில்லை. அவனுக்காக யாருமில்லை. இருண்டுபோனது அவன் வாழ்வு மட்டுமல்ல அவனது கனவுகளும்தான். முடிவற்று இழுபட்டுக் கொண்டிருந்த வழக்கு உள்நீதி மன்றுக்கு 4வாரம் ஒருமுறை போய் வந்து கொண்டிருந்தவனின் வழக்கு உயர்நீதிமன்றம் வந்த போது மீண்டும் உடன்பிறந்த உறவுடன் தொடர்பு கொண்டான்.

பணம் கொடுத்து சட்டத்தரணியை வைத்து அவனது வழக்கை வாதாடுவதென்றால் அதற்கான பணச்செலவு அதிகம். எதுவுமற்று எவருமற்றுப் போனவனைக் கட்டாயம் உடன்பிறப்பு காக்குமென்று நம்பிய அவனது நம்பிக்கையில் விழுந்தது பேரிடி.

சரி என்ரை பிள்ளைக்கெண்டாலும் மாதம் ஒரு ஆயிரம் ரூபா குடுத்தீங்களெண்டா அவள் படிக்க உதவியா இருக்கும். கடைசியாக தனது பிள்ளைக்கான கல்வியுதவியையாவது செய்யுமாறு கேட்டான். எதுவும் தம்மால் முடியாது இனிமேல் இப்படி தொடர்பு கொண்டு தம்மை தொந்தரவு பண்ணக் கூடாதென்று எச்சரித்து விட்டார்கள்.

அவனது இரத்தத்தை அவனது கனவின் தேவைதையை அவனது குழந்தையை அவனது காதல் மனைவி உதறிவிட்டாள். அவனது வயதான அம்மாவே தன்னால் இயன்றதைக் கொடுத்து அவனது மகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்தார். இலட்சியம் தோற்று சிறையில் அடைபட்டு வாழ்வு இனி இருளெண்டு ஆகியது.

000            000                000

அப்போதுதான் நேசக்கரம் அமைப்பின் தொடர்பு அவனுக்கு இன்னொரு சிறையிருக்கும் அவனோடு கூடவிருந்த தோழன் ஒருவனால் கிடைத்தது. ஒருநாள் இரவு அவனுடன் தொடர்பு கொண்டேன். நீண்டகாலம் அவன் சேர்த்து வைத்திருந்த சோகங்களை அன்று ஒன்றரை மணித்தியாலங்கள் அவனோடு கதைக்கக் கதைக்க கொட்டித் தீர்த்தான். கதைவாக்கில் கேட்டேன்.
எந்த ஊர் நீங்கள் ?

அவன் தனது ஊரைச் சொன்னான். அவனது ஊரில் அவனது ஒழுங்கையில் எனது சயிக்கிள் ஓடியிருக்கிறது. அவனது உறவுகள் எனது நட்புகள் ஆகியிருக்கின்றனர். அவன் சொல்லச் சொல்ல சிறுவனாய் பார்த்த அவனது முகம் மெல்ல மெல்ல மங்கலாய் ஞாபகம் வந்தது. எவனோ ஒருவனாய் அறிமுகமானவன் என்னோடு உறவான அவனது வீதியும் வீடும் அவனையும் என் குடும்பத்தில் ஒருவனாய் நிறுத்தியது.

சிறைக்கு வந்த பின்னர் தான் காணாத தனது மகளின் எதிர்காலம் அவளது வாழ்வ பற்றியே அவனுக்குள்ளிருந்த கற்பனைகளையெல்லாம் சொன்னான். ஒரு அப்பாவாக அவன் ஆசைகள் கனவுகள் அவனது மகள் பற்றியே எழுப்பியிருக்கிற கோட்டையில் ஒரு சதம் சேமிப்பும் இல்லாமல் மிகவும் பெரியதாய் உயர்ந்திருந்தது.

என்ரை மகளுக்கு ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் படிப்பு உதவியாக உதவினீங்களெண்டா அது பெரிய உதவியா இருக்கும். நான் ஒருநாள் வெளியில வருவன் எனக்கு நம்பிக்கையிருக்கு.....எனக்கு உதவமாட்டமெண்ட என்ர சகோதரத்தின்ரை கண்ணுக்கு முன்னாலை நானும் உழைச்சு முன்னுக்கு வந்து காட்டுவன் என அன்று சபதமுரைத்தான்.

அவன் கேட்டது போல அவனது மகளுக்கு மாதாந்தம் கல்வியுதவியாக 1500ரூபாய் ஒழுங்கு செய்து அந்த உதவி மாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒருமுறை மகளின் படமும் தனது படமும்  ஒருவர் மூலம் அனுப்பியிருந்தான். இடையிடை பேசக்கிடைக்கிற போது தொடர்பு கொண்டு கதைப்பேன். வழக்கின் நிலமைபற்றி நல்ல முடிவொன்று கிடைக்குமென்றுதான் சொல்லுவான். தன் வசதிக்கு ஏற்ப இலவச சட்டத்தரணியொருவரையே அவனது வழக்கை வாதாட வைத்திருந்தான்.
000          000             000

கடந்த ஆறுமாதங்கள் அவனோடு பேசவும் முடியவில்லை. வழக்கு பற்றிய தகவல்களையும் அறியவில்லை. தொடர்பில் உள்ளவர்களுடன் கதைக்கிற போது வழக்கு நடக்கிறது என்றே சொல்லிருந்தார்கள்.

அவனுடன் கூடவிருந்த ஒரு நண்பன் யாழ் சிறைக்குச் சென்றிருந்தான். அவனிடம் கதைத்த போது கேட்டேன்.

அவன் என்னமாதிரியிருக்கிறான் ? வழக்குத் தெரியும் தான இலவச சட்டத்தரணியை வைச்சிருக்கு....ஆனால் அவன் நம்பிறான் தனக்கு நல்ல முடிவு கிடைக்குமெண்டு.....போன கிழமை வழக்கிற்காக ஏத்தீட்டாங்கள். என அந்த நண்பன் சொன்னான். தனது வழக்குக்கும் எவ்வித ஆதரவுமில்லாமல் இருப்பதாக அந்த நண்பன் வேதனைப்பட்டான்.

000              000               000

கனவுகளோடலைந்தவனுக்கு 35வருடகடும் சிறைத்தண்டனையென்பதை அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியொன்று எல்லா இணையங்களையும் நிறைத்தது. தான் விடுதலையாவேன் உழைத்து முன்னேறிக்காட்டுவேன் என்றவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நம்பவே முடியவில்லை.

இன்னும் அவன்மீது 129 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. மீதக்குற்றச் சாட்டுகளுக்கும் தீர்ப்புகள் கொடுக்கப்பட்டால் அவன் காலம்....! ஆயுள் முழுவதும் கொடுஞ்சிறையாகவே போகப்போகிறது. செய்திகள் அவனை இப்போது மறந்து விட்டது.

சில நாட்கள் முன் வந்த அழைப்பொன்று அவனைப் பற்றி விசாரித்த போது சொன்ன சேதி.
பாவம் சரியா உடைஞ்சு போயிருக்கிறான். காசிருந்திருந்தா அவனுக்கொரு நல்ல சட்டத்தரணியைப் பிடிச்சிருக்கலாம்.....எங்கை காசில்லாததில இப்பிடியே கிடக்கப்போறம்....! ஒருக்கா கதையுங்கோ அவனோடை ஆறுதல் சொல்லுங்கோ.....!

அவனது 35வருட தண்டனைக்காக வேதனைப்பட்டு தகவலைச் சொன்னவனுக்கு இம்மாதம் இறுதியில் வழக்குத் தவணை வருகிறது. சில லட்சங்கள் இருந்தால் இவன் வெளியில் வருவதற்கான விதி மாற்றம் இருக்கிறது. இவனுக்கும் இத்தகையதொரு கொடிய தீர்ப்பு வந்துவிடக்கூடாதென்று விதியைத் தான் வேண்டுகிறேன். ஆனால் விதியை மாற்ற எதிர்பார்க்கிய லட்சங்களை என்னால் வழங்க முடியாதுள்ளது.

இள வயதில் தங்கள் வாழ்வைத் தந்தவர்கள் சிறைகளின் பின்னால் ஒளியிழந்த சூரியன்களாய் தங்களது விடுதலைக்கான நாளை எதிர்பார்த்தபடியிருக்கிறார்கள். தங்கள் விடுதலைக்கான கதவுகள் திறபட காசுக்கடவுளர்களைத் தேடுகிறார்கள்  காசுக்கடவுளர்களின் கண்கள் இவர்களுக்காய் திறக்காதா ?

28.10.2012

No comments: