சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்
அவள் அணிந்த ஆடைகளையும்
அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்
படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்
செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..
இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி
76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..
அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..
ஆளாளுக்கு விளக்கங்கள்
அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.
மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்
அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்
பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட
விட்டு வைக்காத இனம் நாங்கள்.
நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.
விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க
சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி
ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்
கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?
கெளரவம் கவரிமான் சாதியாய்
தன்னையே பெருமைகொள் தமிழினம்
உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்
வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை
இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!
எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!
இதுவா மனிதப் பண்பு…?
இதுவா சீர்திருத்தம்…..?
இதுவா தமிழினப் பெருமை….?
ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்
தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்
இன்றோடு நிறுத்துவோமா…..?
31.12.10
(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)
2 comments:
குமாலயனாக வந்து கருத்து எழுதிய அனானிக்கு,
உங்கள் கருத்து இங்கு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அனானிகளாக அடையாளமில்லாது அலட்டுவதற்கெல்லாம் இங்கு பதிலும் கிடையாது. அனுமதியும் கிடையாது.
உங்கள் கருத்தை போட வேண்டுமாயின் உங்கள் முகமூடியைக் கழற்றிவிட்டு வாருங்கள்.
நன்றி
வணக்கம்.
Post a Comment