Monday, October 12, 2009
அக்காச்சி ஆணியாய் பதிந்து போனாள்
ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம்
உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து
இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின்
அருகாய் அருகாய் துப்பாக்கிகள்…..
*அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று*
கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து
சொட்டிய துயர்…..
கனவுகளைத் துரத்திக் கொண்டு
இரவுகள் அலைகிறது……
கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான
காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்…..
சொல்லால் வசியம் செய்து
சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய
கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்……
‘எனக்குத் தெரியாது‘
எத்தனையோ தரம் எழுத்துமூலமும்
வாக்குமூலமும் எடுத்த பின்னாலும்
கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்…..
*பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் போல்
கம்பிவேலிகளுக்கால் எறிந்த பார்வைகள்
அம்மாவுக்காக அப்பாவுக்காக காத்திருந்த
ஒரு மதியம்…..
அக்காச்சி எங்கையம்மா ?
அம்மா இறைஞ்சியழுது கேட்டது
நினைவுகளுக்குள் வந்தமாதிரியும்
இல்லாமலும் குழம்பியது….
புதுமாத்தளனில் இரத்தம் நிறைந்த சதைகளுக்குள்
அக்காச்சி போலொருத்தி
நீண்டமுடி கத்தரிபட்ட தலையோடு
சிதைந்து கிடந்ததாய் ஞாபகம்…..
சொல்ல எழுந்த சொற்கள் புதைகிறது….
எனக்குத் தெரியாம்மா…..
அக்காச்சியைத் தேடுங்கோம்மா…..
ஞாபகங்கள் தடுமாறி
அக்காச்சி போக மனமின்றி அழுதது
எங்கோ கேட்பது போலிருந்தது…..
போ….போ….என்ற குரல்கள்
அம்மாவையும் அப்பாவையும் துரத்துகிறது…
கண்ணெட்டிய தொலைவு வரையும்
அக்காச்சியைத் தேடிய அம்மாவின் அழுகை
கண்ணுக்குள்ளிருந்து திரள் திரளாய்
உருண்டு விழுந்த கண்ணீருக்குள் மறைகிறது…..
அக்காச்சி நீயெங்கை…..?
கையில் கொடுக்கப்பட்ட துப்பாக்கியை
நடுநடுங்கப் பிடித்துச்
சுடக்கற்றுக் கொண்ட கணத்தில் கூட
அக்காச்சியின் கைகள் உதறியபடிதானிருந்தது….
பயந்தவள் அக்காச்சி பாவம் என்ற இவளுக்குப்
பரிசாய் அக்காச்சியும் இவளும் தனித்தனியாகப்
பிரிபட்டுத் தனித்தார்கள்…..
ஓயாத வெடிச்சத்தங்களும்
ஆளறிய முடியாப் புகைமண்டலில்
கையிலிருந்ததை எறிந்துவிட்டு
ஓடியவர்களுடன் இவளும்……
எல்லார் மீதும் எல்லாம் மீது வெறுப்பாயிருக்கிறது
என்ரையக்காச்சி எங்கையடி போனாய்…..?
நினைவு திறந்து கடந்தவை ஞாபகம் கொள் பொழுதெல்லாம்
அக்காச்சியே இவள் தேடும் வரிசையில்
முன்னுக்கு வருகிறாள்……
முடிவுமின்றித் தொடருமின்றி அக்காச்சி
முல்லைமண் வெளியில் எங்கேனும் இருக்கக்கூடுமென்ற
அம்மாவின் நம்பிக்கை போல இவளுள்ளும் அக்காச்சி
ஆணியாய் பதிந்து போகிறாள்…..
(வவுனியா பம்பைமடு தடுப்புக்காவலில் இருக்கும் ஒரு 15வயதுச் சிறுமியின் குரலிது. அக்காச்சியும் இவளும் ஒன்றாய் பிடித்துச் செல்லப்பட்டு மே மாத முடிவுகளின் பின்னால் புனர்வாழ்வென்ற பெயரில் அமைக்கப்பட்ட கம்பி வேலித்தடுப்பிலிருந்து தன் அக்காச்சியைத் தேடுகிறாள். 15நாளுக்கு ஒரு தரம் 10 நிமிடம் பேசக் கிடைக்கின்ற அனுமதியில் தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துப் பேசும் போதெல்லாம் அவள் அக்காச்சி பற்றி அம்மா கேட்கும் தோறும் இவள் ஆன்மவலி இப்படியாயிருக்கிறது)
02.10.09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யாராலும் காப்பாற்ற முடியான எத்தனை சீறுமிகள் அங்கெ.
சாந்தி என்ன சொல்லிப் போக !எங்கள் அவலங்கள் எமக்குண்டான சாபங்கள்.
Post a Comment