Thursday, June 21, 2012

புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய்

பதின்மக்கனவுகள்
பிணங்களும் அழுகையும்
பிணியகலாப் பொழுதின்
விடியலைத் தேடிய வீரரின் தடங்களில்
13வயது அவளுக்குக் காட்டிய வாசல்
களமுனை கைத்துப்பாக்கி
கனரக ஆயுதக் கையாள்கை.....

வெற்றியே அவளது வெறிக்கனவு
விடுதலையே அவளது விழிக்கனவு
விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம்
முடித்திடும் தைரியம்
அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்....

அசாத்தியத் துணிவும் ஆழுமையும்
பகையின் வீட்டுக் குகைக்குள் பணி....
சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும்
அவளுக்கு வலித்ததில்லை
வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி
கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக்
கனவுகள் விரிந்தது....
கனவுகள் பலித்திடக் கைத்துப்பாக்கியும்
கணத்திலே வெடித்திடும் அங்கியும்
கழுத்தில் குப்பியும்.....

அவள் தலைமையேற்றுக்
கடமை முடித்த வெற்றிகள்
வெளியில் வராத கதைகளின் வேர் அவள்.
ஏத்தனையோ சாதனை சில சறுக்கல்கள்
சறுக்கலின் காரணம் தண்டனைகள்
பச்சைமட்டையடிகள் பற்கள் உடைவு
ஆயினும் தின்ற சோற்றுக்கு நன்றியாய்
அனுபவம் யாவும் கனவு வெளியில்
காத்திருத்தல் வெற்றிக்காய்
அவள் ஒரு கரும்புலியாய்.....

000

அழகென்றால் அப்போதைய அசின் அவள்
காதல் அவளையும் கவர்ந்து
காதலுக்காய் 10பச்சைமட்டையடி
கரும்புலிக்குக் காதல் கூடாது
கடும் எச்சரிப்பு கொடும் தண்டனை
ஆயினும் தின்ற சோற்றின் நன்றியையும்
தானே கரியாக்கிய காவியங்களையும்
ஏப்போதும் மறந்ததில்லை....

000

இரட்டை வாழ்வை முடித்து
மீளவும் பணிகள் முள்ளிவாய்க்கால் வரையிலும்...
காதலித்தவன் அவளுக்காய் காத்திருப்பதை
நினைவுபடுத்திய காதல் திருமணத்தில் முடிந்த போது
அங்கியணிவித்து அவளேயனுப்பிக் காற்றாய் கரைந்த
ஒரு காவியத்தின் குழந்தைக்கும் அவளே தாயானாள்.

களமொன்றில் உயிர் நீத்த அவள் நேசித்த தோழியின்
குழந்தைக்கும் தாயாகி
தை2009 குழந்தைகள் இரண்டின் அம்மாவாகி
3ம் குழந்தையை 2011 காதலுக்காய் பெற்றெடுத்து
அவள் வாழ்வது அன்றுமுதல் இன்றுவரை
அவளுக்காயில்லை.....

யாருக்கும் சொல்லாத
யாராலும் புரிந்து கொள்ள முடியாதவளாய்
அக்காவென்று ஆறுதல் தேடிவந்து
யாரையும் நம்பாத இயல்பை மாற்றி
எல்லாத்துயர்களையும்; இறக்கிவிட்டு
ஓய்ந்து போன போது
இரு சிறுநீரகமும் செயலிழந்து
வாழ்வின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்க
அண்மையில் இடியாய் அடுத்த மருத்துவ அறிக்கை
ஒற்றைச் சிறுநீரகத்தில் அவளுக்குப் புற்றுநோயாம்....

என்றுமே கலங்காத இரும்பாயிருந்த இதயம்
இடையில் போகப்போகிற உயிரைப் பிடித்து நிறுத்த
இறைஞ்சி நிற்க எல்லாம் பணமே உயிரும் பணமாய்
உயிரை எடுக்க சொல்லாமல் கொள்ளாமல்
தன் சோகங்களை மறைக்கவா இல்லை
தன் சாவை மறைக்கவா தொடர்பறுத்துப் போய்விட்டாள்....

கண்ணுக்குள் இப்போதும் அவளது புன்னகை
காதுக்குள் எப்போதும் 'அக்கா' என்ற அன்பின் இளை
கடைசியாய் அவள் காட்டிய குழந்தைகள் மூன்றின் முகம்
இதயத்தில் ஈரமாய் இமைக்குள் பாரமாய்.....

000

05.06.2012 அக்கா இருக்கிறேன்
ஏனக்காய் நீங்களும் எனது நேசிப்புக்குரியோரும்
பட்டதுயர் போதும் குறுஞ்செய்தியனுப்பிவிட்டுத்
மீண்டும் மறைந்து போனவளே....!
ஒருமுறை சொல்லிவிடு ஏன் தொடர்பறுத்துப் போனாய்....?

மற்றவர்களுக்காய் வாழ்ந்து மனிதநேயம் மாறாதவளாய்
மற்றோரைச் சிரிக்க வைத்து நீ மெழுகாகிக்
கரைகிற கண்ணீரை மறைத்தெங்கள்
புன்னகையின் காரணங்களாயிருந்தவளே.....!

உன்னை நம்பிய குழந்தைகளைப்
பிரியப்போகிற துயரோடும்
யுத்தம் தின்ற குழந்தைக்கனவுகளை குழந்தைகளை
உன் உழைப்பால் உயிர் வாழ்விக்க
கூலித்தொழிலாளியாய் குறைந்த சம்பளத்தோடும்
நிறைந்த மகிழ்வோடு பணியாற்றியவளே....!

உனக்காய் ஒரு சிறுநீரகம் என்னிடம் இருக்கிறது
அதைப்பெற்றுக் கொள்.....
அக்காவென்று உறவான உனக்காய்
என் ஒரு சிறுநீரகத்தைத் தந்துவிடுகிறேன்
தங்கையே தொடர்பு கொள்.....
16.06.2012

(13வயதில் விடுதலைப்போராளியாகி 30வயதிற்குள் பட்டறிவின் ஞானியாய் களம் முதல் மனிதநேயம் வரை கற்றுத்தேறி 3குழந்தைகளின் உயிர்தரும் அம்மாவாய் மனைவியாய் ஆனவள். கைகளில் லட்சங்கள் புரண்ட காலங்களில் கடமை முடிந்ததும் ஒரு சதமும் தனக்காய் கரைக்காமல் நாட்டின் சொத்தை நாட்டிற்கே திருப்பிக் கொடுத்தவள். இரு சிறுநீரகமும் இழந்து இப்போது ஒரு சிறுநீரகம் புற்றுநோயாகி வாழ்வின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற ஒரு போராளித் தங்கைக்காக இக்கவிதை)

Sunday, June 3, 2012

இது கதையில்லை

அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார்.

உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....?

வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத்திரி மருந்தெண்டு வந்த அழைப்புகளில 16வது அழைப்பு இது. முகம் தெரியாத அந்தத் தம்பி உடனடியாக உதவி தேவைப்படுகிற போராளியின் மருத்துவச்சான்றிதழ் , செலுத்தப்பட்ட பணத்திற்கான ரசீதுகள்  அத்தோடு இரத்தம் கசிந்தபடி அவனது கால்கள் பஞ்சையும் சிவப்பாக்கியிருந்த பஞ்சுகளால் சுற்றப்பட்ட அந்தப்போராளியின் படம் , சத்திரசிகிச்சை உடையோடு ஒரு பொம்மைபோல கட்டிலில் கிடக்கிற கோலத்தை படம் பிடித்து  எல்லாவற்றையும் மின்னஞ்சல் செய்திருந்தான்.

அக்கா அவன் இந்தியாவில தண்ணீர் விநியோகம் செய்யிற வேலைதான் செய்தவன்...அன்றாட கூலிதான் குடும்பத்திற்கான வருமானம்....2பிள்ளைகள் மனைவியும் இவனைத்தான் நம்பியிருக்கினம் கடைசி முயற்சியென்ற வரையும் முயன்றுவிட்டோம். ஆளைப்பாக்கேலாம இருக்குதக்கா என்று அடிக்குறிப்பும் இட்டிருந்தான்.

60ஆயிரம் ரூபா இந்தியப்பணம் கிட்டத்தட்ட 900€. யாரிட்டையும் உடனடியாகத் திரட்ட முடியாது என்பதனை அவனுக்கு அஞ்சலிட்ட கையோடு ஸ்கைப்பில் ஓடிவந்தான் அவன். ஏதாவது முயற்சி செய்யுங்கோக்கா....சரியான பாவமாயிருக்கு....கடன் குடுக்காட்டி பொலிஸில குடுத்திருவாங்களக்கா....வெளிநாட்டு உதவியளோ சொந்தங்களோ ஒருதருமில்லையக்கா.....கெஞ்சினான் அவன். சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கட்டிலில் சுருண்டு போனவனின் மனைவியின் தொலைபேசியிலக்கத்தையும் எழுதிவிட்டு ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ என அவர்களுக்காக மன்றாடினான் தொடர்பில் வந்த சக போராளி.

சிகிச்சை முடிந்து இரத்தக்கறையோடு கிடந்த அந்தத் தம்பியின் மருத்துவச் சான்றிதழை பிறிண்ட் எடுத்தேன். 32வயது அவனுக்கு. செய்யப்பட்ட சிகிச்சைக்கான ஒவ்வொரு செலவுகளும் அட்டவணைப்படுத்தப்பட்டு கணக்கு போடப்பட்டிருந்தது. அவனது படத்தை பார்க்க அந்தரமாயிருந்தது.  அவனது முகத்தைப் பார்த்த பின்னர் எதுவும் செய்ய முடியாதென்று ஒதுங்கவும் முடியாமல் அவன் கண்ணுக்குள் நின்றான்.

அவனது மனைவியின் தொலைபேசியை அழைத்தேன். சொல்லுங்க அக்கா....அவள் அழ ஆரம்பித்தாள். நாங்கள் எங்களுக்கெண்டு ஒண்டையும் கொண்டு வரேல்லையக்கா....ஏதோ உயிரைக்காப்பாற்றுவமெண்டு மட்டும்தான் நினைச்சு இந்தியா வந்தனாங்கள்....இவர் கடைசியாத்தான் காயம்பட்டவர்.....வந்தோடனும் ஒரு வேலையும் கிடைக்கேல்ல...தண்ணி சப்ளை வேலையும் வீடுகளுக்கு பெயின்ற் அடிக்கிற வேலையும் தெரிஞ்சாக்களை பிடிச்சு எடுத்தவர். டொக்ரர்மார் சொன்னவை....கனக்க நடக்கப்படாது நிக்கப்படாதெண்டு ஆனா அப்பிடியிருந்தா பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறும் குடுக்கேலாதெண்டு வேதவனையோடைதானக்கா வேலைக்குப் போனவர்....கால் ஏலாம வந்தப்பிறகுதான் வெளிநாட்டுக்காறாள் ஒருதரின்ரை தொடர்பு கிடைச்சோடணும் ஒப்பிறேசனுக்கு உதவி கேட்டம்....ஓமெண்டு நம்ப வைச்சிட்டு இப்ப எங்களை ஏமாத்தீட்டினமக்கா....அவள் அழுதாள்.

உதவி செய்வேனென வாக்குறுதி கொடுத்தவரின் இலக்கத்தை வாங்கி அழைத்தேன். அது லைகா இலக்கம். தொடர்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அழைக்க வொயிஸ் மெயிலுக்குப் போய்க் கொண்டிருந்தது. பல லைகா இலக்கங்கள் ஏற்கனவே உதவுகிறோம் என பொழுது போக்காட்டிய அனுபவம் போல இதுவுமொரு லைகா போல.....

இந்தியா , இந்தோனேசியா , தாய்லாந்து , பர்மா , நேபாளம் ,ஆபிரிக்கா வரை எத்தனையோ போராளிகள் தெருத்தெருவாய் ஊனங்களோடும் உயிர்வாழ முடியாத வறுமையோடும் அவதிப்பட அந்த உயிர்களுக்கு உதவுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவதில் என்ன நிம்மதியைப் பலர் காண்கிறார்களோ தெரியவில்லை....?
 தன்னுடைய இனத்தை நம்பி தன்னுடைய வாழ்வையும் இழந்து ஊனமாக அன்னிய நாடுகளில் அலைகிற போராளிகளுக்கு மறுவாழ்வை அல்லது மன நிம்மதியை யார் கொடுக்கப்போகிறோம்...?

விழுந்தவர்களை எழ தோழ் கொடுக்காமல் விடுதலையை யாருக்காக வெல்லப்போகிறோம்....?
(இது கதையில்லை ஒருவனின் அந்தரம் மிக்க வாழ்வின் துயர்)
03.06.2012

Friday, June 1, 2012

நீங்கேனம்மா இயக்கமானீங்க ?

அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான்.

அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....!

நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;.
இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.

கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு.

எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக்கமானீங்க...? நாங்க அனாதையாகவா...? நீங்க வேண்டாமெங்களுக்கு....! மாலையோடு அந்தக் குடிசையில் தொங்கிய தகப்பனின் படத்தை எடுத்து முற்றத்தில் எறிந்தாள் மகள் காவியா.

மகனைச் சமாளிப்பதில் கவனமாயிருந்தவளுக்கு ஏதோ உடைகிற சத்தம் கேட்டு முற்றத்திற்கு வந்த போது மூச்சே நின்றது போலிருந்தது.
மகள் என்னம்மா செய்றீங்க ? அப்பான்ரை படமெல்லம்மா....! எங்கட்டை மிஞ்சியிருக்கிறது இதுமட்டுமெல்ல மகள்....! அவள் அழுதபடி உடைந்த கண்ணாடித் துண்டுகளை விலக்கி தனது மாவீரனான கணவனின் படத்தைக் கையில் எடுத்தாள்.

நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அப்பா ஏனம்மா இயக்கமானவர் ? நீங்க ரெண்டு பேரும் இயக்கமாகாட்டிக்கி நாங்க நல்லாயிருந்திருப்பம்....! 12வயதான அந்தக் குழந்தையின் கேள்விகளுக்கும் கோபத்துக்கும் அவளால் எதையும் சொல்ல முடியாது போனது.

அம்மாவும் அப்பாமாதிரிச் செத்துப்போறன் நீங்க இருங்கோ.....அழுதழுது கணவனின் படத்தை சாமிப்படங்களோடு வைத்து மாலையையும் கொழுவிவிட்டு முற்றத்தில் வந்திருந்து அழுதாள்.

கடவுளே சாமி உனக்குக்கூட கண்ணில்லையா....? விழுந்த செல்லொண்டு என்ரை தலையிலயும் விழுந்திருக்காம ஏன் உயிரோடை வாழ வைச்சியோ.....? முள்ளிவாய்க்காலில எத்தினை உயிருகள் போச்சுது எங்களையும் அதில சாகடிக்காம ஏன் கடவுளே என்னை வாழ வைச்சா.....?
சின்னவன் ஓடிவந்து அவளோடு ஒட்டிக்கொண்டான். மூத்தவனும் மகளும் திண்ணையில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கண்களுக்குள் கூடுகட்டிய நீர்த்துளிகளை சின்னவன் துடைத்துவிட்டான். அவளின் கண்ணீரையும் கடவுளர்கள் மீதான கோபத்தையும் புரிந்து கொள்ள முடியாத 3வயதுக் குழந்தையான அவனின் கைகளே அவளை அப்போது ஆறுதல்படுத்திய பெரிய கையாகியது. அவளைப் பார்ப்பதும் அண்ணனையும் அக்காளையும் முறைப்பதுமாக அவனது சின்ன விழிகளையும் கோபம் முட்டிக்கொண்டது. அம்மாவின் கண்ணீருக்கு முழுக்காரணமும் அவர்கள் போல அவர்கள் மீதான தனது கோபத்தையும் தனது பார்வையால் தெரிவித்தான்.

000                 000                000

13வயதில் பருவமடையும் முன்னமே போராளியாகிப் போனவள். பயிற்சிக் களத்திலிருந்து பயிற்சி முடித்து சண்டைக்களம் போனது முதல் பொறுப்பாளர்கள் வரையும் சின்னவளென்ற அடைமொழியோடு நேசிக்கப்பட்டவள். அவளுக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்களை நேரே கொண்டு போய் பொறுப்பாளரிடம் கொடுத்துவிடுகிற அவளது நேர்மையை நம்பிய பொறுப்பாளர்களுக்கும் சக போராளிகளுக்கும் அவள் மீதான நம்பிக்கையையும் மதிப்பையும் உயர்த்தியது.

அப்போது அவளுக்கு 17வயது நடந்து கொண்டிருந்தது. அவளுக்கெல்லாம் காதல் வராதென்று ஆழமாகவே நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் அவளே முன்னுக்கு எல்லா வேலைகளுக்கும் அனுப்பப்படுவது வளமை.

அதுவரையில் அவளுக்காக எழுதப்பட்ட கடிதங்களையெல்லாம் பொறுப்பாளரிடம் கொண்டு போய்க்கொடுத்த அசட்டுப்பிள்ளையான அவளுக்கு பயிற்சியாசிரியனாயிருந்த ஒரு போராளி அவள் மீதான தனது காதலைக் கடிதமாக்கி எழுதிக் கொடுத்தான். அந்தப்பதினேழாவது வயதில் அவளுக்கு எழுதப்பட்ட அந்த ஒரு கடிதத்தை அவள் மறைத்தேவி;ட்டாள்.

உங்கடை விருப்பத்தைச் சொல்லுங்கோ பிரச்சனையில்லை நான் பொறுப்பாளரோடை கதைக்கிறன்....பச்சைமட்டையடி விழுந்தா....அப்பிடியொண்டும் நடவாது என்னை நம்புங்கோ...என்ற அவனது வாக்கில் நம்பிக்கை வைத்து கடிதத்தோடு தனது சம்மதத்தையும் தெரிவித்தாள்.

அண்ணையாக்களுக்கு பச்சைமட்டையடி விழுறேல்லயோ ? கேட்டவளுக்குச் சொன்னான். உங்கடை அக்காக்கள் போல எங்கடை அண்ணாக்கள் பொல்லாதவங்களில்லை.....அப்ப எனக்கு அடிவிழாதுதான.... இல்ல...நானிருக்கிறன்....என்றவனில் நம்பிக்கை வைத்து அவனைக் கனவுகளில் ஏற்றிக் கொண்டாள்.

அவளது விருப்பத்தை அறிந்து கொண்டவன் மேலிடத்திற்குத் தனது விருப்பையறிவித்தான். இவளது பொறுப்பாளருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு இவள் பொறுப்பாளர் அக்காவின் முன் அழைக்கப்பட்டாள்.
காதலோ ? ஓமக்கா...? அவர்தான் கடிதம்...சொல்லி முடிக்க முதல் வாயைப்பொத்தி விழுந்த அடியில் மீதிச் சொற்கள் வரவேயில்லை. காதலுக்கான தண்டனைகள் ஏற்கனவே அறிந்திருந்தும் அந்த நிமிடம் வரை அதன் வலியை அவள் உணரவேயில்லை.

காதலுக்காக 10 பச்சைப்பனம் மட்டைகள் முறியும் வரை பொறுப்பாளர் அக்கா அடித்த அடிக்காயம் ஆறமுதல் காதலித்த குற்றத்திற்காக களமுனைக்கு அனுப்பப்பட்டாள். அவள் களத்திற்குச் செல்லப்பின்னடிக்காமல் தானாகவே போகிறேன் எனப் போனாள். களமுனை போன 4வது நாளில் காலொன்றில் காயமடைந்து பதுங்குகுளி வாசலில் விழுந்து கிடந்தது மட்டுமே ஞாபகம். பின்னர் கண்விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை அவளுக்கு காதல் சொல்லி பச்சைமட்டையடி வாங்க வைத்தவன் வந்திருந்தான். விழுந்த பச்சைமட்டையடிதான் நினைவுக்கு வந்தது. வாங்கிய அடிகூட அவனைக்கண்ட போது வலிக்கவில்லைப் போல சிரித்தாள்.

ஐயோ திரும்பியும் 10பச்சைமட்டையடி வாங்க என்னாலை ஏலாது...இடத்தைக் காலிபண்ணுங்கோ பனம்மட்டையைக் கண்டாலே காச்சல் வரும்போலையிருக்கு....இனியப்பிடியெல்லாம் நடக்காது ஆனா ஒரு சின்ன மாற்றம்...என இழுத்தான்.

என்ன...? உங்களுக்கு அரசியல் வகுப்பெடுத்த ஆளைத் தெரியுமா ? ஓம் புகழண்ணா...ம்..அவன் உங்களைக் கனநாளா விரும்பியிருக்கிறான்.... நான் அவனுக்கு உங்களை விட்டுக்குடுக்கிறன்.... அவனைக் கலியாணம் செய்யுங்கோ....நல்ல பெடியன்....என இன்னொருவனுக்கு சான்றிதழ் வழங்கிச் சிரித்தான்.

என்ன நான் சின்னப்பிள்ளையெண்டோடனும் ஆளாளுக்கு விளையாடுறீங்களா ? உண்மையிலேயே கோபித்தாள். நான் உங்களைத்தான் விரும்பினான்....புகழண்ணாட்டை போய்ச் சொல்லுங்கோ....எனச் சினந்தாள். அவன் சொல்ல முயற்சித்த சமாதானமெல்லாவற்றையும் மறுத்து முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள்.

என்னடா இது....வில்லங்கத்துக்கு காதலெண்டாங்கள் பிறகு இன்னொருத்தனுக்காக விட்டுக் குடுக்கிறதெண்டு....சிலவேளை அவன் விளையாட்டாகத்தான் தன்னைக் காதலித்தானோ என நினைத்தாள். கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது.

அன்றைய பின்னேரமே புகழ் வந்திருந்தான். புகழோடு அவள் காதலித்து காதலித்ததற்காக பச்சைமட்டயைடி வாங்க காரணமாயிருந்த பயிற்சியாசிரியனும் அவளது பொறுப்பாளரும் வந்திருந்தார்கள். புகழை அவள் திருமணம் செய்வதே பொருத்தமென தீர்ப்பு இறுதி முடிவாகியது.
நான் மாட்டன் என்னாலை ஏலாது....மறுத்தாள். இறுதி முயற்சியாக புகழ் அவளோடு தனியே கதைக்க வழிவிட்டு இருவரும் ஒதுங்கினார்கள். போதகர்களின் ஓதல் போல புகழின் பேச்சு... அவள் மீதான தனது காதலை வெளிப்படுத்த அவன் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் புகழ் கதைகளாய் சொன்னான். ஆனால் அவளது முடிவு புகழ் வேண்டாமென்றதாகவே அமைந்தது.

000       000      000

அவள் நேசித்தவன் அவளை ஒருதரம் சந்தித்த போது சொன்னான்.
புகழை நீங்க கட்டாட்டி நானும் கட்டமாட்டன்....!
அப்ப நீங்கள் முடிவெடுத்திட்டீங்களா ? ஓம்....புகழ் பாவம்....அவனும் நானும் பயிற்சியெடுத்தது இயக்கத்துக்கு வந்தது எல்லாம் ஒண்டாத்தான்....அவனுக்காக இல்லாட்டியும் எனக்காக ஓமெண்டு சொல்லுங்கோ.....கடைசி முயற்சியாக இப்படித்தான் சொல்லிவிட்டுப் போனவன் பிறகு அவளைச் சந்திக்கவில்லை.

சிலமாதங்கள் இடைவெளி முடிந்து காயம் மாறி திரும்பியும் சண்டைக்குப் போகப்போவதாக அடம்பிடித்து பொறுப்பாளரின் முன் போய் நின்றாள். அவளைச் சந்திப்பதற்கான காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவளது இடத்திற்கு புகழ் போய்வரத் தொடங்கினாள். களமுனைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு அரசியல் பணிக்கு அனுபப்பட்டாள்.

மெல்லெனப்பாயும் நதியாய் புகழ் கல்லாயிருந்த அவளைக் கரையச் செய்தான். ஒருவருட முடிவில் புகழுக்கும் அவளுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அவள் நேசித்தவனும் வந்திருந்தான். எதுவும் நடக்காதமாதிரியே அவனது கதைகள் இருந்தது. அவனைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஒரு வலி அவளைத் தாக்கிச் சென்றது பொய்யில்லை.
எனக்குக் கலியாணம் பேச வேணும் ரெண்டு பேரும் தான்....புதிய குண்டொன்றை இருவருக்கும் போட்டுவிட்டுப் போனான் அவள் முதல் நேசிப்புக்கு உரியவன்.

000         000        000

புகழோடு வாழத்தொடங்கி 1வது குழந்தை பிறந்திருந்த நேரம் குழந்தையைப் பார்க்க அவன் போயிருந்தான். அவனே எதிர்பார்க்காத ஆச்சரியம் அவனுக்காக புகழும் அவளும் செய்திருந்தார்கள். முதற்குழந்தை ஆண் குழந்தையாகியதால் அவனது பெயரையே பிள்ளைக்கும் சூட்டியிருந்தனர்.
எனக்கு கலியாணம் பேசுகினம்...! சொன்னான். பிடிச்சா சொல்லுங்கோ கட்டிறன்....என அவனுக்காக கேட்டுவந்த பெண்போராளியின் படத்தை அவளிடம் நீட்டினான். மறுநாள் வரை அவகாசம் கொடுத்துவிட்டுப் போனான். அவள் முடிவுக்காக.

மறுநாள் பின்னேரம் போனான். என்ன பிடிச்சுதோ ? நீங்க சொன்னா கட்டிறன்....அந்தப்பிள்ளைக்கு உங்களை விரும்பமோ ? கேட்டாள். வாழ்ந்தா நானெண்டு பிள்ளை நிக்குது....எனச் சிரித்தான். எனக்கும் பிடிச்சிருக்கு கட்டுங்கோ.....

அவனது திருமணத்திற்கு இவளும் புகழும் குழந்தையும் போயிருந்தார்கள். தனது மனைவிக்கு அவளைப்பற்றி எல்லாமே சொல்லியிருந்தான். அவளே அவளைத் தெரிவு செய்தாகவும் சொல்லியிருந்தான்.

காதல் பிரிவு இன்னொருவருக்காக விட்டுக்கொடுத்தமையென அவையெல்லாம் பெரிய பிரச்சனையாக இல்லாமல் இரு குடும்பத்திற்குள்ளும் நல்ல நட்பும் வளர்ந்திருந்தது.

நாட்டுநிலமையின் மாற்றம் களமாகியபோது இரண்டு வீட்டு ஆண்களும் களத்தில் நின்றார்கள். 2008இல் அவள் காதலித்தவன் வீரச்சாவென வானொலியில் செய்தியும் ஈழநாதத்தில் அஞ்சலியும் வந்திருந்தது. இவர்கள் இருந்த இடத்திலிருந்து அஞ்சலி நிகழ்ந்த இடத்திற்குப் போக முடியாத தூரமும் அவள் 3வது குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருந்தாள்.

2009மாசிமாதம் ஒருநாள் நிகழ்ந்த எறிகணைத் தாக்குதல் அவர்கள் வாழ்ந்த தறப்பாளின் அருகருகாயும் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தது. பதுங்குகுளிக்குள் இறங்கும் அவசரத்தில் 7வது மாதக்கற்பிணியாய் இருந்த அவளை யாரோ அவசரத்தில் தள்ளிவிட பதுங்குகுளியில் விழுந்துவிட்டாள். என்ன நடந்ததோ அன்றே அவள்; குழந்தையைப் பெற்றுக்கொண்டாள்.
ஒருவகையாக அவளது குழந்தை உயிர்காக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் போய்ச் சேர்ந்தார்கள். புகழ் களத்தில் அவள் 3குழந்தைகளோடும் பதுங்குகுளியும் பட்டினியுமாக எல்லோரோடும் போய்க்கொண்டிருந்தாள். கடைசிக்குழந்தையின் உயிர் போய்விடும்போன்ற நிலமையிலும் நம்பிக்கையோடு குழந்தையை காப்பாற்றிக் கொண்டு போனாள்.

மேமாதம் 12ம் திகதி புகழ் அவள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்திருந்தான். அவனைக் கண்ட நேரம் அழுகையாலே அவனை வரவேற்றாள். வந்தவன் சரணடையும் முடிவைச் சொன்னான். கடைசியாய் கழத்திலிருந்து குப்பியையும் எறிந்துவிட்டதாகச் சொன்னான். அவரவர் தங்களது முடிவுகளைத் தேடிக்கொள்ள புகழும் அவளும் 3பிள்ளைகளோடும் மே16ம் திகதி எதிரியிடம் சரணடைந்தார்கள். அவள் போராளியென்றது மறைக்கப்பட்டு அவன் மட்டுமே போராளியென அடையாளம் காட்டப்பட்டான்.

அவளும் பிள்ளைகளும் முகாமுக்குப் போக அவன் தனியாகக் கொண்டு செல்லப்பட்டான். பிள்ளைகளோடு முகாமில் அவள் பட்ட வலிகள் சொல்ல வார்த்தைகளில்லை. ஒருநாள் உணவுக்கு வரிசையில் நின்ற போது எதிர்பாராத வகையில் அவள் காதலித்தவனின் மனைவியைக் கண்டாள். இவளைக் கண்டதும் அவள் அழுதாள். கையில் ஒரு பெண் குழந்தையோடு வரிசையில் நின்றாள். இவளும் அழுதாள். பின்னர் இருவரும் சுகநலம் விசாரித்தார்கள் எல்லோருக்கும் பொதுவான கண்ணீரும் துயரமும் இருவரிடமும் சொல்ல முடியாத துயங்கள் நிறைந்திருந்தது.

000         000          000

மீள்குடியேற்றம் என்ற போது வன்னிக்குள் போயிருக்க அவளுக்கு யாருமில்லாது போனதால் தனது ஊருக்குப் போக பதிவு செய்தாள். சட்டம் பதிவு விசாரணையென எல்லாக் கதவுகளையும் தாண்டி ஊருக்குப் போய் உடன் தாயிடம் தான் போனாள்.

எல்லாவற்றையும் இழந்து போய் வருகிற மகளை அம்மாவும் சகோதரர்களும் ஓடிவந்து அணைப்பார்கள் என்று நம்பியவளுக்கு எல்லாம் தலைகீழாக நிகழ்ந்தது. அவள் சொத்தாக கொண்டு வந்த சில உடுப்புகளையும் அள்ளியெறிந்தாள் அம்மா.

எங்க வாறா இப்ப....? எங்களை விட்டிட்டு பதிமூணு வயசில போகேக்க அம்மா அப்பா தெரியேல்ல இப்ப வாறாவாம்....தாயின் வாயில் வந்த பேச்சும் அண்ணன்களின் அண்ணிமாரின் ஆற்ற முடியாத திட்டும் அவளைத் தெருவில் நிறுத்தியது.

தன்னோடு கூடவிருந்த ஒரு போராளியின் வீட்டில் போய் தனது ஏமாற்றம் இயலாமை அழுகை எல்லாவற்றையும் கொட்டியழுதாள். சுpலநாட்கள் அந்தப் போராளியே இவளுக்கான தங்குமிடம் உணவு யாவற்றையும் கொடுத்து அடைக்கலமாதாவானாள்.

தனது காணியில் இவளுக்கொரு துண்டை எழுதியும் கொடுத்தாள். வரும் போது மிஞ்சிய மகளின் தோடும் ஒரு சங்கிலியையும் விற்று பிள்ளைகளுக்காகவும் தனக்காகவும் 30ஆயிரம் ரூபாவிற்கு ஒரு குடிசை போட்டாள். இயலாத தனது காலோடு தானே எல்லாவற்றையும் செய்து குடிசையை அமைத்தாள்.

உதவி வேண்டி அந்த மாவட்டத்திலிருந்த பல நிறுவனங்களுக்கு ஏறியிறங்கினாள். தனது பிள்ளைகளுக்குப் படிப்பையேனும் வழங்க உதவிகள் வேண்டினாள். எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக கிறிஸ்தவ திருச்சபையொன்றில் போய் தனது கவலைகளையெல்லாம் மதகுரு ஒருவரிடம் கொட்டியழுதாள்.

என்னாலை படிக்க முடியாமப்போட்டுது....என்னாலை இப்ப ஒரு தொழிலையும் செய்ய முடியாம இருக்கு என்ரை பிள்ளையளைத் தத்தெடுங்கோ பாதர்....என மண்டியிட்டு அழுதாள். அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லாத பிள்ளைகளைத் தானம்மா நாங்க பொறுப்பெடுக்கலாம் அம்மா நீங்கள் உயிரோடை இருக்க அதை நாங்க செய்யேலாதம்மா....அப்ப நான் செத்துப்போறன் பாதர் என்ரை பிள்ளையளை எடுங்கோ...என்ரை பிள்ளையளை படிப்பிச்சு விடுங்கோ பாதர்.....என அழுதவள் அந்த மதகுருவின் காலில் விழுந்து கெஞ்சினாள்.

அவ்வளவு நேர மன்றாட்டையும் விட அவள் காலில் விழுந்தது அந்த மதுகுருவையும் கரைத்து விட்டதோ என்னவோ பிள்ளைகளை மாணவர் விடுதியொன்றில் சேர்த்து விடுவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் பிள்ளைகளுக்கான சவர்க்காரம் , உடுப்பு , கல்வியுபகரணங்கள் யாவும் இவள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு மூத்தவனையும் மகளையும் அந்த மதகுருவிடம் பொறுப்புக் கொடுத்தாள்.
தன் சிறிய பிள்ளைகள் இரண்டையும் பிரிய மனமில்லாத வேதனை ஒளித்துக் கொண்டு பிள்ளைகள் இரண்டும் அழஅழ மாணவர் விடுதியில் விட்டுப் போனாள். மாதம் ஒருமுறை போய்ப் பார்த்துவருவாள். பிள்ளைகள் இரண்டும் வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லி ஒவ்வொரு முறையும் அழுகிற கண்ணீரை தாங்க முடியாது வீட்டில் வந்து தன்னை நெருப்பால் சுட்டு அழுது ஆற்ற முடியாத துயரில் கரைவாள்.

பிள்ளைகளின் பிரிவு அவளாலும் தாங்க முடியாத கட்டம் வந்த போது மாதத்தில்  இரண்டு வார இறுதி நாட்களில் பிள்ளைகளை வீட்டுக்கு கொண்டு வந்து திங்கள் திருப்பியனுப்புவாள். வீட்டுக்கு வந்து திரும்புகிற ஒவ்வொரு முறையும் வீடு மரண வீடுபோலிருக்கும். 13வயதில் தாயை உறவுகளைப் பிரிந்த பாவமோ தன்னையும் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கக் காரணமோ எனவும் கனதரம் யோசித்திருக்கிறாள்.
பிள்ளைகளைப் பிரிதல் துயராயினும் அவர்கள் படித்து முன்னேறிவிட வேண்டுமென்ற கனவில் பிரிவின் துயரையும் வெளிக்காட்டாமல் மனசைக் கல்லாக்கினாள். மாதம் இருமுறை பிள்ளைகளை கொண்டு வந்து திருப்பியனுப்பும் போதும் அவர்களுக்குத் தேவையான சவர்க்காரம் முதற்கொண்டு யாவும் வாங்கிக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் நிறைவேற்ற பணமே முன்னுக்கு தேவை. கிடைத்த நிவாரணத்தை விற்றும் தெரிந்தவர்களிடம் கையேந்தியும் சமுர்த்தி வேலைக்குப் போய் கிடைக்கிற அரிசி, மா , சீனியை விற்றும் சமாளித்தாள்.

அப்போதுதான் வெளிநாட்டுத் தொடர்பொன்று கிடைத்தது. தொடர்பில் வந்தவன் அக்கா அக்காவென தினமும் இலங்கைநேரம் 6மணிக்கு அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வான். அவளுக்கு சுயதொழிலாக கடையொன்று போட்டுத் தருவதாகவும் சயிக்கிள் எடுத்துத் தருவதாகவும் பிள்ளைகளின் கல்விக்கு உதவவுதாகவும் வாக்குறுதி கொடுத்தான். 3வாரம் கதைத்து முடிய 5ஆயிரம் ரூபா அவளது வங்கிக்கு அனுப்பி வைத்தான்.

5ஆயிரம் ரூபா அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் பேசி நம்பிக்கையை விதைத்தான். 2மாதம் தொடர்ந்து அழைப்பதும் இதோ கடை திறப்பதற்கு ஒரு லட்சரூபா வருகிறதென கதைசொல்லிக் கொண்டிருந்தவன் தொடர்பையறுத்துக் கொண்டான். அவன் கொடுத்த தொலைபேசியிலக்கத்திற்கு அழைத்தும் பதிலில்லை. 4மாதம் முடிந்தது. தொலைபேசியும் இல்லை உதவியும் இல்லை. உதவுகிறேன் என வந்தவனும் பொழுது போக கதைத்திருக்கிறான் போல. ஒரு கட்டத்தில் சலிப்பும் வெறுப்பும் ஒன்றாகி ஏனடா வாழ்க்கையென்ற நிலமையாகிவிட்டது.

கையில் முதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலமை. நாளுக்கு நாள் ஏறிப்போகிற விலைவாசியில் சம்பலும் சோறும் கொடுக்கவே பெரிய திண்டாட்டமாக வாழ்க்கையை எப்படிக் கொண்டு போவதென்ற சொல்ல முடியாத துயரை இந்தப்பிள்ளைகளுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியவில்லை. ஒன்றாய் பிள்ளைகளையும் அழித்துத் தானும் செத்துப்போய்விட வேணும் போலவுமிருந்தது.

01.06.2012

Thursday, May 10, 2012

காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள்

04.2000....,

ஆனையிறவு வெற்றி மேடையில் சந்தித்தோம்
அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது
அது உனது ஆழுமையின் வெளி....

பெயருக்கு ஏற்றாற்போல்
உனது எண்ணங்களும் பிரகாசமாக
மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்....

பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக
வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின்
நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ.....

பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம்
குற்றப்பட்ட உனது திறனை
சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ....

சமாதான காலக்கதவுகள் திறக்க
ஊர்காணப்போவதாய் விடைபெற்று
போராளியாய் ஆனவன்....

போர்முகம் சூடிப் போராடிய வன்னிக்குள்
ஊர்முகம் காக்க உழைத்தவருள் நீயுமாய்
காயாத ஈரமாய் உன் கடிதங்கள் பத்திரமாய்....

வாழ்கிறாயா இல்லை வன்னிமண்ணணைகளில் புதைந்தாயா...?
எவ்வித தகவலும் வராத காலமொன்றில்
மீண்டாய் மீண்டும் புலம்.....

நீயாய் சேர்த்த நட்புகளையெல்லாம்
நீயாக விடுவித்துக் கொண்டு ஊமையாய் ஆனாய்
உனது மௌனங்களின் மொழி எமக்கு இன்றுவரை புதிராய்.....

நீ வாழ்ந்தால் போதுமென்று வாய்மூடியிருக்கிறோம்
காரணம் சொல்லாத உனது மௌனம்
புரிந்து கொள்ள எக்கருவியும் எம்மிடமில்லை நண்பா....!

யாரோவாகவே இருந்துவிடாமல் ஏன்
எங்களுக்குள் நட்பாய் இறங்கி
நாட்டுப்பற்றாளனாய் உறவானாய்.....?

'தற்கொலைகள் முன்னாள் போராளிகள் மனநலபாதிப்புகள்'
செய்திகள் வந்தால் நீதான் ஞாபகம் நிறைகிறாய்
மயான வாசலில் உன் பற்றிய பயங்கNளூடு துடிக்கிறதெம் ஆன்மா.....

அழிவுகளின் வேர் நாங்களென்றா - இல்லை
அழிவு நிலம் நோக்கியுன்னை அனுப்பியோர்
நாங்களேயென்ற கோபமா....?

காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள்
கடைசிவரை வன்னியில் கரைந்த உனது நாட்கள் பற்றி
எதையுமே கேட்கமாட்டோம்.....

புழையபடி புன்னகையும் பழைய நினைவுகளையும் பேசுவோம் வா
நீண்ட மணித்துளிகள் விவாதிப்போம் கோபிப்போம்
மீண்டும் புதிதாய் உறவைப் புதுப்பிப்போம்.....

10.05.2012(புலமிருந்து நிலம் போய் போராளியாகி தாயகக்கனவோடு கடைசிவரை வன்னி மண்ணில் வாழ்ந்து புலம் மீண்டு தானாய் தேடிய நட்பெல்லாம் வெறுத்துத் தனிமையை நேசித்து தனிமையாய் போன தோழனுக்காய் இக்கவி.)

Saturday, May 5, 2012

முன்னாள் போராளிகளின் தற்கொலைகள் காரணம் நாங்களா ?


நேற்று (04.05.2012) பொலிகண்டியைச் சேர்ந்த 38வயதான சுகந்தி சிவலிங்கம் என்ற முன்னாள் பெண்போராளியின் தற்கொலை பற்றிய செய்தி இந்த நிடமிடம் வரை சூடு தணியாமல் நமது செய்திகளில் நிற்கிறது.

இந்தப் போராளியின் தற்கொலைக்கான இரங்கல்கள் , வீரவணக்கங்கள் , இவற்றையும் தாண்டிய அரசியல் சிந்தனைகள் என சுகந்தியின் மரணம் பல்வேறு வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இனிவரும் சிலநாட்களில் சுகந்தியின் தற்கொலை பற்றிய தமிழ் ஊடகப்புலனாய்வு பரபரப்புச் செய்திகளும் வரும். இன்னும் சில வாரங்களில் சுகந்தியென்ற ஒருத்தியையும் மறந்துவிடுவோம்.

எத்தனையோ மரணங்கள் மனித வலிகள் தந்த தந்துகொண்டிருக்கிற துயரங்களோடு ஒன்றாய் சுகந்தியின் சாவைத் தாண்டிப்போக முடியாது அவள் கண்ணுக்குள் நிற்கிறாள். சுகந்தியுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து இன்று கிடைத்த தகவல்...,

கடந்த சிலநாட்களாக புதிதாக போடப்பட்ட புண்ணால் வேதனைப்பட்டிருக்கிறாள் சுகந்தி. புண்ணால் ஏற்பட்ட வேதனைக்கு மருத்துவத்திற்கு போக கையில் பணமில்லாத கொடுமை. குடும்ப வறுமை உறவுகளால் கூடச் சரியாகக் கவனிக்க இயலாத நிலமையில் ஏற்பட்ட மனவெறுப்பினாலுமே சுகந்தி தன்னைத் தீமூட்டியெரிக்கத் தூண்டியிருக்கிறது.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதும் மருந்தோடு வாழவேண்டிய துர்ப்பாக்கியம். இவர்களை பராமரிக்க தனியாக ஒருவர் தேவை. இவர்களுக்கு படுக்கைப்புண் இலகுவில் வரும். புண்ணிலிருந்து வருகிற மணத்தை தாங்கி அவர்களை பராமரிப்பதற்கென்றே பொறுமையும் கருணையும் உள்ளவர்கள் வேண்டும். மலசலம் கழிப்பதே இவர்கள் உணரமாட்டார்கள். தொடர்ந்து படுக்கையில் அல்லது கதிரைக்குள்தான் இவர்களது காலம் போகும்.

ஆனால் இவர்கள் உருவத்தில் மாற்றம் ஏதுமின்றி இருப்பார்கள். இவர்களுக்கான மருத்துவ தேவையே மிகப்பெரிய செலவு. சுகந்திபோன்ற பலர் வருடக்கணக்காக 2,3வருடங்களும் மருத்துவமனையில் இருந்த இருக்கிற சம்பவங்களும் நிறைய இருக்கிறது.

சுகந்தி முதல் அறிமுகமானது2010ம் ஆண்டு தொடக்கம்.
பாதுகாப்பமைச்சின் நேரடிக்கண்காணிப்பில் இருந்த வவுனியா பம்பைமடு ஆயுர்வேத மருத்துவமனையில் இருந்த 60இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளையும் ஆளுகு என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. காரணமின்றி வெளியார் யாரும் அனுமதிக்கப்படாத இறுக்கம் நிலவிய காலம் அது. குறித்த சில நிறுவனங்கள் மட்டும் உள்ளே சென்றுவரக்கூடிய அனுமதியே இருந்தது. அத்தகைய கட்டுப்பாடுகள் போடப்பட்ட மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 60ற்கும் மேற்பட்டவர்களோடு சுகந்தியும் ஒருத்தியாக மருத்துவம் பெற்றுக் கொண்டிருந்தாள்.

இடுப்பின் கீழ் உணர்விழந்த ஒரு போராளியைத் தேட அனுப்பிய எமது தொடர்பாளர் ஒருவர் சுகந்தியையும் சந்தித்து வந்து தந்த அறிக்கையே பம்பைமடு என்றொரு மருத்துவமனையில் இடுப்பின் கீழ் நெஞ்சின் கீழ் கழுத்தின் கீழ் உணர்விழந்த முன்னாள் போராளிகள் பலர் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அந்த நேரம் இவ்விடயம் பற்றி த.தே.கூ.பா.உறுப்பினர்களுக்குத் தெரிவித்தோம். அவர்களைச் சென்று பார்வையிடுமாறும் வேண்டினோம். ஆயினும் அறிக்கைகளை அள்ளித்தெளித்த தேசிய உணர்வு செறிந்த எந்த பாராளுமன்ற உறுப்பினரும் அந்த மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டார்கள்.

கவிரித்த அரசியல்வாதிகளை விட்டுவிட்டு இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் முடிந்தளவு செய்ய விரும்பி கருணையாளர்களிடம் உதவி கோரியிருந்தோம்.  தம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்த கருணையாளர்களின் உதவிகளை நாமும் மேற்கொண்டோம்.

அந்த நாளில் சுகந்தியும் தனக்காகவும் உதவி கோரியிருந்தாள். மாதம் இருமுறை அங்கு சென்றுவர காரணங்களை உருவாக்கிய எமது தொடர்பாளர் சுகந்தியையும் சுகந்திபோன்ற பலரையும் சந்தித்து அவர்களுக்காக நேசக்கரம் அனுப்புகிறவற்றையும் வழங்கி மனசால் உடைந்து வாழ்வே வெறுத்த பலருக்கான உளவலுவையும் கொடுத்துக் கொண்டு திரும்புவார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துயரங்களைக் கொட்டியனுப்பும் குரல்களை தொலைபேசி மூலம் வந்து சேரும்.  உதவி கட்டாயம் தேவைப்படுவோரை தரம்பிரித்து குறித்த ஒரு சிறுதொகை போராளிகளுக்கான மாதாந்த உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அவை அவர்களுக்குப் போய்க்கொண்டிருந்தது.

யாரும் உட்செல்ல முடியாத நிலமை மாறி 2010 நடுப்பகுதியில் யாரும் சென்றுவரக்கூடிய நிலமை வந்தது. அந்நேரம் வவுனியாவுக்குள் வாழ்கிற தமிழ் அரசியல்வாதி ஒருவர் திடீர்பயணமொன்றை மேற்கொண்டார். வாக்குறதிகளை அள்ளி வழங்கினார். இதோ உதவிகள் தருகிறேன் என நம்பிக்கையையும் கொடுத்தார்.  அந்த அரசியல்வாதியின் பயணத்தால் அதுவரை கிடைத்த சிறு உதவிகளையும் பலர் இழந்து போன துயரம் நிகழ்ந்தது. அதுபற்றிய அப்போதைய நிலமையை வாசிக்க கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பார்வையிடலாம்.
ஆளுகு நிறுவனம் தனது பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டதோடு பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற பல முன்னாள் போராளிகள் வௌ;வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகளுக்குச் செல்லக்கூடியவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகளுக்குச் சென்றவர்கள் வரிசையில் சுகந்தியும் வீடு சென்றாள். புலம்பெயர் கருணையாளர்களால் வழங்கப்பட்டு வந்த சிறு கொடுப்பனவினை சுகந்தியும் பெற்றுக் கொண்டு வந்தாள். அத்தோடு அவளுடனான தொடர்புகளும் விடுபட்டுப்போனது.

4மாதங்கள் முன்னால் இடுப்பின் கீழ் உணர்விழந்த முன்னாள் போராளியொருவன் தொடர்பு கொண்டான். அக்கா எங்களுக்குக் கிடைச்ச உதவியள் எல்லாம் நிண்டு போச்சு....ஏதாவது செய்யுங்கோ என வேண்டினான். சிலரது விபரங்களையும் தந்தான். 

அவன் தந்த விபரங்களில் சிலருக்கான உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அவை போய்க் கொண்டிருக்கிறது. சிலருக்கு உதவிய புலம்பெயர் உறவுகள் அவர்களைக் கைவிட்டுள்ளனர். காரணம் சில அரசியல்வாதிகள் இந்தப்பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு கடித உறைகளில் 5ஆயிரம் 10ஆயிரம் என ஒரு முறை கொடுத்துவிட்டு அவர்களது படங்கள் பெயர் விபரங்களை இணையங்களில் வெளியிட்டு தாம் உதவியுள்ளோம் என்ற செய்திகளைப் போட்டுவிடுகின்றனர்.

இவற்றைப் பார்வையிடும் உறவுகள் தாம் உதவிகள் கிடைக்கிறவர்களுக்கு வீணாக தொடர்ந்து உதவுகிறோம் என நினைத்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளால் ஒரிருமுறை வழங்கப்படும் 5ஆயிரம் 10ஆயிரம் நிரந்தரமானதில்லை என்பதனை பலர் புரிந்து கொள்ளவதில்லை.
பாதிக்கப்பட்டவர்களை சந்தேகிக்கின்றனர். இதனால் பல போராளிகளை தங்கள் கேள்வி விசாரணைகளால் மனவுளைச்சலுக்கும் ஆளாக்கியிருக்கின்றனர். இந்த விசாரணைகளின் குடைச்சல் தொல்லை தாங்காமல் உதவியே வேண்டாம் ஆளைவிடு சாமியென்று பலர் செத்தாலும் பறவாயில்லையென்ற நிலமையில் இருக்கிறார்கள்.

எப்படியேனும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற அவாவில் எவர் கேட்டாலும் உதவுகிறோம் என்றாலும் தங்கள் விபரங்களை கொடுக்கிறார்கள். ஆனால் பலர் உதவிகள் கிடைக்காமல் ஏமாந்து போயிருக்கிறார்கள்.
ஆயினும் தாங்களும் வாழ வேண்டுமென்று கனவுகாண்கிற ஆயிரமாயிரம் போராளிகள் புலம்பெயர் தமிழர்கள் தங்களைக் காக்க கைதூக்கிவிடமாட்டார்களா என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் நாமோ சிறையில் இருக்கிறவர்களுக்குச் சோறு கொடுப்பது தீர்வாகாது விடுதலைக்கான தீர்வு வேணுமென்று தத்துவம் உரைக்கிறோம். தத்துவங்களையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்குகிற நாங்கள் கொலைக்களத்தில் இல்லை. நல்ல பாதுகாப்பு நிம்மதியாய் உறங்க வசதி வாழ்வுரிமை எல்லாவற்றோடும் வாழ்கிறோம். ஆக நாம் விடுமுறைகாலம் தாயகம் காணவே தீர்வைக் கேட்கிறோம்.

நாங்கள் காணும் கனவு நனவாக நமக்காக வாழ்ந்தவர்களும் அவர்களது சந்ததியும் வறுமையிலிருந்து மீள வேண்டும். அவர்களது குழந்தைகள் சிறந்த கல்வியறிவைப்பெற வேண்டும். எங்களுக்காக கடந்த 30வருடம் போராடி நொந்து வாழ்விழந்து போயிருக்கிற சந்ததியே திரும்பவும் எங்கள் விருப்புகளை நிறைவேற்ற கடாக்களாக வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால் அவர்களுக்கான வாழ்வைக் கொடுக்க எங்கள் பொருளாதாரத்தை வழங்குவதில் ஆயிரம் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கிறோம்...?

எத்தனையோ பெண்போராளி அம்மாக்கள் 50ரூபாவுக்கும் 100ரூபாவுக்கும் விலைபோகிற அநியாயம்  சத்தமின்றி நிகழ்கிறது. ஆடைத்தொழிற்சாலைகள் என்றும் அரச உத்தியோகங்கள் என்றும் முன்னாள் போராளிகள் பலரது வாழ்வும் உடலும் விற்பனையாகிறது. இன்னும் 5வருடம் இப்படியே போகுமாயின் தாய்லாந்தாகவும் பம்பாயாகவும் எங்கள் பெண்களின் நிலமை மாறிவிடுகிற அபாயத்தை நோக்கிப்போகிறது நிலம். எவராவது எங்களை விடுதலை செய்தால் போதும் அவர்களுக்கு ஆதரவாயிருப்போமென ஆதரவற்றுப்போன கைதிகள் பலரது எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வராதென்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

வெற்றிகளுக்காக அள்ளி வழங்கியும் வெற்றிச்சமர்களுக்காக விழாவெடுத்தும் பெருமிதம் கொண்ட எங்கள் வெற்றிகளுக்கு வேராக இருந்த முன்னாள் போராளிகளின் வாழ்வை இன்று நாம் மேம்படுத்தாது தவறுவோமாயின் சுகந்திபோன்ற தற்கொலைகள் மட்டுமல்ல தங்களை விற்கின்ற அவலமும் தாராளமாயே நடக்கப்போகிறது.
நாங்கள் இங்கு வாழ்கிற வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கிற வாழ்வும் வசதியும் அங்கே ஒவ்வொருவரும் சிந்திய இரத்தத்தின் பரிசு. எங்களது உயிர் அந்த உறவுகள் தந்த பிச்சை. அவர்களது வாழ்வை மே;படுத்த ஒவ்வொருவரும் முன்வாருங்கள்.

சுகந்திக்கு இன்று செலுத்துகிற கண்ணீரஞ்சலியும் இரங்கலும் அவளது மனச்சுமையை அவளைத் தற்கொலைக்குத் தூண்டிய வறுமையை ஏதாவது செய்யுமா ? பெறுதற்கரிய உயிரை அவளது வாழும் கனவை அழித்த எங்களது சுயநலத்தை அவளது ஆன்மா மன்னிக்குமா ? எல்லாவற்றுக்குமாய் அவளது மரணத்திற்கு நாமெல்லாம் பொறுப்பாளிகள். இன்னும் பல முன்னாள் போராளிகள் இவள் போன்ற முடிவே சரியென்று செத்து அழிவதற்கிடையில் எங்களுக்காக தங்கள் வசந்தங்களை கரைத்தவர்களுக்காய் உதவ முன்வாருங்கள்.
05.05.2012

Friday, May 4, 2012

காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப் போகிறது.....?

2வாரங்கள் முன்னொரு ஞாயிற்றுக்கிழமை விடிய அவனது தொலைபேசிதான் அவளை நித்திரையால் எழுப்பியது. அக்கா நான் ***கதைக்கிறன். ஏனக்கு ஒரு உதவி வேணும் அதான் எடுத்தனான்.....ஸ்கைப் வருவியளோ கதைக்க......? அத்தோடு தொடர்பறுந்தது.

ஆசிய நாடுகளுக்குள்ளே ஐக்கியநாடுகள் சபையில் அகதி அந்தஸ்த்திற்கு பதிந்துவிட்டு சிறைகளில் இருக்கிற பலர் இப்படித்தான் வந்திருக்கிறார்கள். ஒன்றில் சிறையிருக்கும் நாடுகளில் தமக்கான உதவிகோரல் அல்லது இலங்கை போகிறோம் உதவியென்றே பல அழைப்புகள் வந்திருக்கிறது. அப்படியான ஒன்றாயே இவனது அழைப்பையும் நினைத்தாள். ஸ்கைப் போனாலும் ஓயாத தொடர்புகள் வந்து நிறைந்து விடுவதால் அவனை மறந்து போயிருந்தாள்.
நேற்று ஸ்கைப்பில் வந்தவன் ஒரு தகவலை எழுதியிருந்தான்.

அக்கா எனக்கு இலங்கைக்கு போக அனுமதி கிடைச்சிருக்கு....ஆனா எயாப்போட்டாலை தப்பி வெளியில போட்டா நீங்கள் தான் உதவ வேணுமக்கா.....அதாலை தப்பீட்டா இந்தியா இல்லாட்டி மலேசியாப்பக்கம் போகலாமெண்டு யோசிக்கிறன்....! ஏன ஸ்கைப்பில் எழுத ஆரம்பித்தவனின் எழுத்தை நீள விடாமல் அவள் தனது பதிலை எழுதினாள்.

இந்தியா மலேசியாவுக்கெல்லாம் உதவிற அளவுக்கு எங்கடையாக்கள் முன்வராயினம்.....!

அக்கா என்னுடன் தொலைபேசியில் பேசுங்கள். உங்களுடன் நிறையக் கதைக்க வேணும். எனது குடும்பம் 3மாவீரர்களையும் நாட்டுக்கு கொடுத்தது. நானும் எனது 3தம்பிமாரும் நாட்டுக்காக 18வருடங்கள் உழைத்தோம். நாங்கள் போராட வெளிக்கிட்டதிலிருந்து துரங்களைத் தான் சுமந்தோம் அதுவே இன்றும் தொடர்கிறது. உதவாவிட்டாலும் பறவாயில்லை ஒருதரம் பேசுங்கள். என்றதோடு ஸ்கைப் தொடர்பும் அறுந்தது.

இன்று அவன் கொடுத்த இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினாள். அவன்தான் மறுமுனையில் பதில் கொடுத்தான். முகமறியாத இருவருக்குள்ளுமான சுகவிசாரிப்புகளின் பின்னர் அவன் தனது கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.

000          000              000

அவன் பிறந்தது வடமராட்சி. கடற்தொழிலால் வசதிகளோடும் நல்ல வாழ்வோடும் இருந்த குடும்பத்தின் பிள்ளைகளை நாடு தனதாக்கிக் கொள்ள உயர்தரம் படித்துக்கொண்டிருந்த அவனும் தனது கடமைகளுக்காக புறப்பட்டான். தம்பிகள் களத்தில்  நிற்க அவன் கடல்கடந்து சர்வதேச வலையமைப்பில் பணிக்குச் சென்றான். முகவரி பெறாத வெளித்தெரியாத முகத்தைத் தனக்கானதாய் ஆக்கியவன் 12வருடங்கள் தாய் நிலம் காணாமல் சர்வதேசமெங்கும் அளந்து திரிந்தான். அலைவின் பெரும்பகுதி முழுவதும் கடலோடு தான் அவன் வாழ்வு போய்த்தொலைந்தது.

நிலம்விட்டுப் பல்லாயிரமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசமெங்கும் தாயகக்கடமைக்காய் தலைமறைவாய் பணிக்காய் திரிந்தான். வசதியான வாழ்வும் வருமானமும் பெற்றுவிடக்கூடிய லட்சங்கள் கையில் தவழ்ந்த போதும் தனக்காய் எதையுமே அனுபவிக்கவோ ஆசைப்படவோ இல்லை எல்லாம் மண்ணுக்காய் எல்லாவற்றையும் அர்ப்பணித்தான்.

ஜெயசிக்குறு வெற்றிக்காய் பணியாற்றிய அவனதும் அவன்போன்ற பலரதும் உழைப்பில் யெஜசிக்குறு வெற்றிவாகை சூடிக்கொள்ள அவனது 2தம்பிகளும் கண்டிவீதியின் காற்றோடு தங்கள் மூச்சை நிறுத்திய சேதியும் , அவன் அதிகம் நேசித்த அவனது கடைசித்தம்பி ஆனையிறவில் வேவுப்பணியில் வீரச்சாவடைந்த செய்தியைக்கூட வருடம் போன பின்னாலேயே அறிந்து தனக்குள் அழுதான். ஆயினும் தனது பணியில் வீச்சாய் உயர்ந்தான். விழவிழ எழுவோம் என்ற வார்த்தைகளை அவன் தினமும் உச்சரித்தபடியே தாயக விடுதலைக்காய் உழைத்தான்.

சமாதான காலம் சர்வதேச வலைப்பின்னலில் புதிய நிர்வாகப்புகுதல் அவனையும் பிரித்தது. கடலோடும் அன்னிய தேசங்களோடும் அலைந்தவன் சமாதான காலத்தில் தாயகம் போனான். மண்ணுக்குள்ளிருந்து மறைமுகப்பணிகள் அவனுக்காய் காத்திருந்தது. நிர்வாக மாற்றத்தில் ஏற்பட்ட மனச்சோர்வுகள் நம்பிக்கைத் துரோகங்களை மறந்துவிட்டு சலிக்காமல் மீண்டும் பணிகளில் இறங்கினான்.

2003திருமணம பந்தத்தில் இணைந்தவன் தொடர்ந்தும் தன் பணிகளோடே தன்னை இணைத்தான். 2004அவனது உலகத்தைப் புதுப்பித்துப் பிறந்தாள் அவனது செல்லமகள். உரிமையுடன் அப்பாவென்றழைக்கவும் அவனை மகிழ்ச்சிhல் கட்டிப்போடவும் வீட்டில் அவனது குழந்தை அவனுக்காகக் காத்திருந்தது. கிடைக்கிற ஓய்வுகளை குழந்தையோடு கழித்தான்.

நிலமைகள் மாற்றமடைந்து காலம் எல்லாரையும் களம் வாவென்ற போது தானே முன்னின்று தங்கையின் பிள்ளைகளையும் வாவென்றழைத்துக் களம் போனவன். 'அண்ணை கேக்கிறார்' வீட்டுக்கொரு பிள்ளையைத் தாங்கோவன் என சொந்தங்களையும் அழைத்து நிலம் மீட்கும் பணிக்காய் நின்று பணிசெய்தான்.

அவன் வீட்டிலிருந்து அம்மா அப்பா எல்லோரும் தமக்காயான பணிகளை ஒன்றாயே சேர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அங்குலம் அங்குலமாய் அவர்கள் நேசித்த பூமியை அதிகாரம் ஆயுதபலத்தால் வென்று கொண்டிருக்க கடைசிக்காலக்களமுனையில் மாற்றங்களும் ஆளாளுக்கானதாய் ஆனது.

அவன் நேசித்த 'அண்ணை''க்குத் தெரியாமலே பல அக்கிரமங்கள் நிகழத்தொடங்கியது. மக்களின் மனங்களை வென்ற மக்களின் தலைவனுக்கும் மக்களுக்குமான தொடர்புகளும் அறுந்து போனது.  கட்டாய ஆட்பிடியும் அநியாங்களும் அவனதும் அவன் போன்ற ஆயிரமாயிரம் பேரின் உழைப்பையெல்லாம் அரசியல்பிரிவு அநியாயமாக்கிக் கொண்டிருந்தது.
கட்டாயப்பிடி வேண்டாம் கடைசிவரையும் நாங்கள் போராடுவோம் என பலருடன் முரண்பட்டுத் தோற்றுப்போனார்கள் மக்களை நேசித்தவர்கள். அத்தகையோருடன் அவனும் அமைதியானான். எங்கெங்கோ சிலரிடம் அதிகாரம் பகிரப்பட்டு உண்மையானவர்களையே போட்டுத்தள்ளும் நிலமையில் களம்மாறியது. அங்கே மனசால் அழுதபடி தாங்கள் நேசித்த தலைவனுக்கும் மக்களுக்குமாய் பல்லாயிரம் போராளிகள் தங்கள் பணிகளைச் செய்(த்)தார்கள்.

முடிவுகள் தலைகீழாய் நம்பமுடியாதனவாய்.....மாறிய போது மிஞ்சிய உயிரையும் மண்ணுக்குள் பலர் புதைத்து வெடித்துச் சிதைக்க இவனால் மட்டும் அப்படியே அழிந்து போக முடியாது போனது. அவனது செல்லமகளும் அவனது காதல் மனைவியும் கைகளில் விலங்கில்லாமல் அவனைச் சிறையிட்டனர். மண்ணுக்காய் கடலோடே காலத்தை அழித்தவன் கடமைக்காய் உலகமெங்கும் திரிந்தவன் தனது மகளுக்காக கடைசியாய் மிஞ்சிய குப்பியையும் கழற்றியெறிந்துவிட்டுக் கடல்கடந்தான்.

வெளிநாடு போகலாமென்று நம்பி ஆசியநாடொன்றில் சிறையில் அடைபட்டு வருடம் 2 முடிந்துவிட்டது. கடைசிநேர முடிவோடு காணாமற்போன தம்பி உயிருடன் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. 3வது தம்பி மட்டும் தடுப்பிலிருந்து விடுபட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிஞ்சியிருக்கிறான். அப்பா பழையபடி கடற்தொழிலுக்குப் போய்வருகிறார். களத்தில் 16வருடங்கள் வாழ்ந்த 3வது தம்பி உடலால் பாதிப்புற்று உழைக்க முடியாத நிலமையில் அப்பாவை நம்பியிருக்கிறான்.

ஊரிற்குத் தொடர்பு கொண்டு உதவி கேட்டான். தம்பி ஆரிட்டையும் கடமைப்படாதை வெளிக்கிட்டு வா பாப்பம்....இவ்வளவு காலமும் ஒருதரிட்டையும் நாங்க கையேந்தேல்ல....இனியேனப்பு கைNயுந்துவான்....உயிருகளைக் குடுத்தம் உடமைகளைக் குடுத்தம்.....என்ரை பிள்ளையளையும் நாட்டுக்காக நான்தான ராசா ஓமெண்டு குடுத்தனான்....பிடிச்சா சிறையில போடுவினம்....போடட்டும்....ஆனா மானத்தைவிட்டு கடமைப்பட வேண்டாம் ராசா....என அம்மா முடிவாகச் சொல்லிவிட்டா. ஆரிடமாவது கையேந்தினால் உனது மகன் உயிர் பிழைக்க வாய்ப்புண்டென்று சொல்ல வேணும் போலிருந்த விருப்பை அம்மாவுக்குச் சொல்லாமல் மௌனமானான்.

அவனை நம்பிய அவனது மனைவியும் மகளும் அவனுக்காக தாயகத்தில் கடலோரக் கிராமமொன்றில் காத்திருக்கிறார்கள். அடைபட்ட சிறைவாழ்வின் கொடுமையும் ஒன்றுமேயில்லாத வெறுமையும் துரத்த இறுதி முடிவாய் இலங்கை போக எழுதிக்கொடுத்துவிட்டு அனுமதியும் பெற்றுவிட்டிருக்கிறான். .

இலங்கை போறது ஆபத்தெல்லோ அண்ணா...? கேட்டவளுக்குச் சொன்னான். வேறை வழியில்லை....இங்கினை எங்கேயும் ஒரு மாற்றத்தைச் செய்து தப்பிறதெண்டாலும் நாட்டுக்காசு குறைஞ்சது 3லட்சம் வேணும்....என்னிட்டை அப்பிடியெல்லாம் வசதியில்லை.....நடக்கிறதைக் காண்பமெண்ட முடிவோடை எழுதிக்குடுத்திட்டன்....

தன் வழிச்செலவுக்குக் கூடக்கையில் காசில்லாதவனுக்கு 3லட்சத்தை யார் கொடுப்பார்...? அவன் உயிரை எவர் காப்பார்....?
தாய்நாட்டுக்காக தங்களை இழந்து ஆயிரமாயிரமாய் ஆசியநாடுகளிலும் ஆபிரிக்கநாடுகளிலும் சிறைகளிலும் வாழு(டு)கிற போராளிகளுக்காக அனைத்துலகத் தமிழினம் என்னத்தை கைமாறாய் செய்யப்போகிறது...? அவள் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அக்காவென்று அவளுக்கு அறிமுகமானவன் இப்போ அவளுக்கு அண்ணணாகியுள்ளான். அவனை வெளிச்சொல்லி அவனுக்காய் உதவி கேட்க முடியாத துயரம். அவர்கள் நெடுகலுமே உச்சரிக்கும் 'அண்ணை' வளர்த்து வெளிநாடனுப்பி வைத்த பண முதலைகள் மீதும் கோபம் வருகிறது.

இத்தகைய தியாகங்களின் மீது குளிர்காய்கிற சொத்துகளுக்கும் வருமானங்களுக்கும் சொந்தமான சுயநலங்கள் மனம் வைத்தால் எத்தனை உயிர்கள் காக்கப்படலாம்....? நினைத்தாள்.

02.05.2012 அவளது அண்ணனிடமிருந்து ஒரு தகவல் வந்திருந்தது.

தங்கையே நான் தொடர்பில்லாமல் போய்விட்டால் எனது 8வயது மகளுக்கான கல்வியையாவது கொடுத்து உதவுங்கள். கட்டுநாயக்கா தாண்டி தப்பித்தால் என்னிடம் 250ரூபா காசிருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.

தனது கடைசி விருப்பைத் தட்டச்சி மெயிலிட்டிருந்தான். அவனுக்காய் எதையும் செய்ய முடியாது போகிற இயலாமையையும் தாங்கமுடியாத வலியையும் வெளிப்படுத்தியது கண்கள். கணணித்திரை மங்கலாக கண்ணீரால் நிறைந்தது கண்கள். யாருமற்ற கணணியறையில் கண்ணீர் விட்டழுதாள் அந்த அண்ணனுக்காய்.

பெயர் பொறிக்கப்படாத வரலாற்றுக்குள் அவனது பெயரைக் காலம் எழுதி வைத்தது. ஆயினும் காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப்போகிறது.....?

எங்காவது ஒரு அதிஸ்டம் கிடைத்தால் அவனுக்கான 3லட்சம் கிடைத்தால் எப்படியிருக்கும்....? ஏண்ணிக் கொள்கிறாள்.....
03.05.2012

Thursday, April 26, 2012

அலைபாடும் இசையோசை கேட்கலையா

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

***நீமறைந்து போனாலும் உனது ஞாபகங்களை என்றும் சுமக்கும்உ னது தோழமைகள் உனது குரலுக்கு வசமான உலக இசைவிரும்பிகளும் உனது குரலையும் உனது நினைவுகளையும் காலமுள்ள வரையும் காத்துச் செல்வோம்***