Friday, January 13, 2017

கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு...,

அன்பு வாசகர்களுக்கு,

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன்.


பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. 

பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய....,

ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது.

இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். 


 கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு...,



என்னிலும் ஒருவயதால் மூத்தவன் அவன். நான் அவனை அண்ணாவென்றும் அவன் என்னை அக்காச்சியென்றும் அழைத்துக் கொள்வோம். என்னோடு கூடப்பிறக்காதவன். ஆனால் அதிகம் என்னை நேசித்தவர்களுள் அவனும் ஒருவன். அண்ணா என்ற சொல்லை எனக்கு அர்த்தப்படுத்தியவன்.

ஓரு காலத்தின் பெருவீரம் அவன். அவனுக்கான பாதுகாவலர் தொடக்கம் களங்கள் சமர்கள் அவனை அடையாளப்படுத்திய காலங்களில் அவன் பெயர் அறிமுகமாகியது. பின்னர் அவனே உறவாகினான் அண்ணாவாக.

காலங்கள் போக கடமைகள் பணிகள் அவனோடும் பயணிக்கத் தொடங்கிய போது தினசரி பேசவும் விடயங்களைப் பகிரவும் வழியமைத்தது காலம்.

எதையும் ஒளிவுமறைவின்றி பேசக்கூடிய நெருக்கத்தை காலம் தந்தது. மணிக்கணக்காய் தொலைபேசவும் சேர்ந்து பிடித்த பாடல்கள் கேட்கவும் தொடங்கினோம். நாம் வௌ;வேறு நாடுகளில் இருந்தாலும் இணையம் தொலைபேசி இவையே எங்களது உறவுப்பாலம்.

நேரில் சந்தித்துக் கொள்ளவோ அடிக்கடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளவோ எதையும் நாம் செய்து கொண்டதில்லை. காலை மாலை மதியம் இரவு என பேச வேண்டிய தருணங்களில் பேசிக்கொள்வோம்.

காலம் எங்களையும் நெருப்பில் போட்டு சோதித்த காலங்களையும் நாங்கள் சந்தித்தோம். அப்போதெல்லாம் ஆளாளுக்கு துயர் பகிரவும் கண்ணீர் விட்டு அழவும் காற்றலைகளே எங்களுக்கு கைக்குட்டையாகியது.

ஆறுதல் சொல்லி என்னை அமைதிப்படுத்திய நம்பிக்கைகளில் அவனுக்கு பெரும்பங்குண்டு.

அக்காச்சி நீங்கள் அழப்படாது. நீங்கள் சாதனைப்பெண். நீங்கள் செய்ய ஆயிரக்கணக்கில பணிகள் இருக்கு. உங்களைப் புரிந்து வாழத் தெரியாத ஒருவரால் உலகில் யாரோடும் வாழ முடியாது.

இப்படித்தான் என் அழுகையின் நிமிடங்களை ஆற்றுப்படுத்திய அண்ணா அவன்.

என் வாழ்வைத் தெருவில் இழுத்து வைத்து காலம் பங்கிடத் தொடங்கிய போது  அவன் அருகில் இருக்கவில்லை. தொலைபேசி வழியாக தினம் தினம் என்னை தைரியப்படுத்திய அவனது வார்த்தைகளும் அவன் அனுப்பும் பாடல்களும் இன்றும் என் ஞாபகங்களில் பத்திரமாய்.

எல்லோருமே ஒரு கட்டத்தில் தற்கொலை பற்றி யோசித்திருப்போம். அப்படி பலமுறை நானும் எண்ணியதுண்டு. என் மனநிலையைத் தானே புரிந்து கொண்டு பலமுறை சொல்லியிருக்கிறான்.

அக்காச்சி என்ன பிரச்சனையும் வரட்டும் அதை தாண்டி நாங்கள் தான் வர வேணும். எந்தவிதமான அவசர முடிவுகளும் எடுக்கப்படாது. உங்களுக்கு எந்த நேரம் என்ன தேவையெண்டாலும் என்னோடை கதையுங்கோ நானிருக்கிறேன். ஓண்டுக்கும் யோசிக்கப்படாது. நல்லா சாப்பிடுங்கோ நித்திரை கொள்ளுங்கோ இதுவும் கடந்து போகும்.

பலருக்கு நான் சொன்ன அறிவுரைகள் தைரியமூட்டல்களை அவன் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

என்ன சமையல் ? சாப்பிட்டீங்களோ ? தினசரி அவனது அக்கறையும் விசாரிப்புமே பல தருணங்களில் எனக்கு உணவின் சுவையை ஞாபகப்படுத்தியிருக்கிறது.

தன் வாழ்வின் கடந்து வந்த பயங்கரங்களை துயரங்களை ஏமாற்றங்களைச் சொல்லிச் சொல்லி என்னை தைரியப்படுத்திய நம்பிக்கை அவன். நான் மனம் குழம்பிய தருணங்களை அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான். 

என்னாலை ஏலாதாமண்ணா வரவர தொல்லை கூடுது. செத்திடலாம் போல. பிரிஞ்சு போறதுதான் இனி வேறை முடிவு எனக்கு தெரியேல்ல.

இரத்த உறவுகள் கூட பழிசொல்லி ஊரெங்கும் என்பற்றி எழுதப்பட்ட பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுவைக்க வேண்டிய தேவையை 2012ம் ஏப்றல் மாதம் எடுத்த போது முழுமையாக என்னைப்புரிந்து கொண்ட முதலாம் ஆள் அவன்தான்.

பழிசொன்னவர்கள் எல்லோரும் என் இரத்த உறவுகள் , காணும் போதெல்லாம் கைநீட்டி அணைத்த நண்பர்கள் பலரும் இருந்தார்கள். யாருமே துணைக்கு வராமல் நான் தனித்து நின்ற போது..,

நான் உங்களை நம்பிறன்..நீங்கள் யோசிக்கப்படாது.

ஒவ்வொரு வார்த்தையிலும் என்மீதான தனது நம்பிக்கையை அன்பை அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பான்.

உது சரிவராது பேசாமல் விடுங்கோ. நீங்கள் தனிய வாழலாம். பதினேழு வருசத் தொல்லைக்கு முடிவு கட்ட அவன் தந்த முதல் அனுமதி. இனி யாரும் ஆலோசனை ஆதரவு தர வேண்டாமென்றிருந்தது அவன் தந்த ஆறுதல் தன்னம்பிக்கை.

நீ இரும்புப்பெண் நீ நெருப்பு நீ வீரம் என அடிக்கடி என்னை ஊதிஊதி  அணையாமல் காத்தவன்.

கவனமாயிருங்கோ. வெளியில போக வர உங்களை பின்தொடரும் ஆக்கள் எல்லாரையும் அவதானியுங்கோ. காசைக்குடுத்தா ஆபிரிக்கனோ எவனோ எதுவும் செய்ய முடியும். எங்கடை இனத்துக்கு நீங்கள் வேணும். உங்களால எத்தனையோ பேர் வாழுகினம் அவைக்காக நீங்கள் வாழ வேணும்.

மனம் அமைதியைத் தொலைத்து அந்தரிக்கும் நேரங்களில் அவன் என் அந்தரிப்பை ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டு அழைப்பான்.

வீட்டுக்குள்ளிருந்து என்னை மரணம் துரத்துவதை கொலைஞன் என்னை கொல்லும் கனவோடிருப்பதை அண்ணாவின் அன்போடும் பாதுகாப்பாளனின் அவதானங்களோடும் அடிக்கடி உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

ஓருநாள் விடியற்காலை 5.30இற்கு அழைத்தான். அக்காச்சி எனக்கு இரவிரவா நித்திரையில்லை. உங்களைக் கனவு கண்டனான். கவனம். உங்களுக்கு பெரும் சிக்கல் வரப்போகுது. வுpடியட்டுமெண்டுதான் இரவு எடுக்கேல்ல. இரத்தக்காயம் காணப்போறமாதிரியிருக்கு. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது.

அன்றைக்கு எனக்கும் ஏதோ மனம் அமைதி தொலைந்து போயிருந்தது. அன்று பலமுறை அவன் அழைத்தான். அடிக்கடி கவனம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்றைக்குப் பின்னேரம்....>

எனது மன அமைதி நிம்மதி குலைத்து அதில் மகிழும் என்வாழ்வை ஊரூராய் விற்கும் எமன் என் வீட்டுக்கதவை உடைத்தான். நான் நிதானிக்க முதல் என்னை மரணம் நெருங்கியிருந்தது.

முதல் உங்களைப் பாதுகாக்க கையில எது கிடைக்குதோ அதை கையில எடுங்கோ. அவன் அடிக்கடி சொல்வது போல என்னை பாதுகாக்க நான் வைத்திருந்த கோடரி அன்று என்னை பாதுகாத்தது.

மறுநாள் என் அண்ணாவை அழைத்தேன். அவன் எச்சரித்தது போல அன்று எனது உயிர் போக இருந்ததைச் சொன்ன போது.., நான் வரட்டே அக்காச்சி ? ஏன் அந்தரிப்பை அழுகையை கேட்டவன் உடனே யேர்மனி வருவதாக நின்றான்.

இல்லை நான் சமாளிக்கிறன் நில்லுங்கோ பாப்பம்.

உடனடியாக ஒரு பணயம் வெளிக்கிடுவதில் உள்ள சிக்கலை நானும் அறிவேன். அவனது வேலை இன்னொரு நாட்டிலிருந்து வந்து போவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அவனை வர வேண்டாமென்றேன்.

ஆனால் யாராவது அருகில் இருந்தால் மனம் அமைதி பெறும் போலிருந்தது. அன்றைய அந்தரத்தை அவன் தொலைபேசியூடாக கதைத்துக் கதைத்து என்னை ஆற்றினான்.

ஓவ்வொரு வார்த்தையும் என்னைப் பாதுகாப்பதில் தான் இருந்தது.

நானெல்லாம் இந்த உலகத்துக்குப் பெரிய ஆளில்லையண்ணா. சொல்லும் போதெல்லாம் உங்கடை பலம் உங்களுக்கு விளங்கேல்ல. சொல்லிச் சொல்லிப் பலம் தந்தான்.

புதினேழு வருடப்பிணியிடமிருந்து விலகிக்கொள்ளுமாறு பிள்ளைகளும் வலியுறுத்திய போது 'இனியென்ன யோசிக்கப் போறியள்' விட்டுத்துலையுங்கோ. அவனும் தந்த துணிச்சலோடு என் முடிவை நிரந்தரமாய் மாற்றிக் கொண்டேன்.

இனி கருணையில்லை இரக்கமில்லை மன்னிப்பில்லை. ஓரே முடிவு. என் முடிவை எடுத்த போது..,

இனித்தான் நீங்கள் கவனமா இயங்க வேண்டிய தருணம். உங்களைக் கோபப்படுத்த வேணுமெண்டு பிரச்சனையளைத் தருவினம். உங்கடை மன அமைதியை குழப்பி  மனம் சமநிலையில்லாமல் அந்தரிக்க வைப்பினம் , எதையும் யோசிக்கப்படாது உங்கடை இலக்கு அது மட்டும் தான் இப்ப உங்கடை கண்ணில கனவில நினைவில. சுரியோ.

தினமும் தொலைபேசுவோம். சட்டத்தை நாடி என் காலத்தை மாற்றும் தருணத்துக்காக ஓடிக்கொண்டிருந்தேன்.

அவனது இருபது வருடக்காதல் கைகூடி வந்த தருணம் அது. அவனது மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இப்போது நான் அவனுக்கு ஆலோசகராகியிருந்தேன்.

என்ர வாழ்க்கையில எல்லா தருணங்களிலயும் நீங்களும் இருந்திருக்கிறியள் அக்காச்சி. நான் சோர்ந்த நேரங்களில அழுத நேரங்களில நீங்கள் தந்த ஆறுதல் ஆற்றுப்படுத்தல் எவ்வளவு பெரிய நம்பிக்கை தந்தனீங்கள். வாழ்க்கையில நான் மறக்க முடியாதவர் நீங்கள்.

மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்திட்டு செத்திட்டாலும் அதுதான் மகிழ்சியண்ணா. உங்கடை வாழ்க்கையை நீங்கள் வாழுங்கோ. இடையில வாறவையளை விலத்திக் கொண்டு நடவுங்கோ. அடடு;தவைக்காகவே வாழ்ந்த என்னால இண்டைக்கு என்னத்தை சாதிக்க முடிஞ்சது?

உங்களுக்குப் பசிச்சா இந்தக் கதைசொல்றவை யாரும் உங்களுக்காக சாப்பிடமாட்டினம். உங்களுக்கு நித்திரை வந்தா உங்களுக்காக யாரும் நித்திரை கொள்ளமாட்டினம்.

ஏன் உங்களுக்கு ஒருயூரோ அவசர தேவையெண்டால் கூட தரமாட்டினம். கைதர வேண்டிய நேரத்தில  கைவிட்டு ஓடுற ஆக்கள் தானனண்ணா இந்த உறவுகள்.

நான் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவன் அன்றைக்குத் தான் இறுதியாய் நிறைய நேரம் கதைத்தான். வுpடியற்காலை 3மணிவரையும் பேசிவிட்டு உறங்கப் போனான்.

இன்னொருவருக்கு இலகுவாய் ஆற்றுப்படுத்தல் செய்யும் நம்மால் நம்மை ஆற்றுப்படுத்த இன்னொருவரையே நம்புகிறோம். நாங்கள் இருவரும் ஆளாளுக்கு நம்பிக்கையாயிருந்து நமது துயர்களை தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்தோம்.

தனது காதலியை அறிமுகம் செய்தான். என்பற்றி அவளுக்கும் நிறையச் சொல்லியிருக்கிறான் என்பதை அவனது காதலி பேசுகிற தருணங்களில் பகிர்ந்து கொள்வாள்.

நாம் பேசிக்கொள்ளும் நேரங்கள் குறைந்தது. அவனாக எடுத்தாலன்றி நான் அவனை தொல்லைப்படுத்த விரும்பியதில்லை. தனக்குப் பிடித்த வாழ்வை அவன் வாழத் தொடங்கினான்.

ஒருநாள் அழைத்தான். கலியாணம் செய்யப்போறன். நீங்கள் வரவேணும். திருமணநாள் குறித்ததும் முதலில் எனக்குத் தான் அறிவித்தான். திருமண அழைப்பிதழ் அனுப்பினான்.

அவனது திருமணவிழாவுக்கு போக வேண்டுமென நினைத்திருந்தும் அந்த சந்தர்ப்பம் தவறியது. கோவிக்கவில்லை என் நிலையை புரிந்து கொண்டான்.

சரி பிள்ளைக்கு பிறந்தநாளுக்கு சொல்லுங்கோ வாறன். பின்ன அக்காச்சிக்குச் சொல்லாமல்? சிரித்தான்.

அவ்வப்போது குறுஞ்செய்தியனுப்புவான் சுகநலன்களைக் கேட்டுக் கொள்வான். எப்போதாவது தொலைபேசுவான். பழைய பாடல்கள் பகிடிகள் கதைகள் பற்றியும் பரிமாறிக் கொள்வோம்.

2016 அவனது பிறந்தநாளன்று குறுஞ்செய்தியனுப்பினேன். வருடம் வருடம் தொலைபேசியில் வாழ்த்தும் நான் குறுஞ்செய்தியனுப்பிய போது நன்றியென்று பதிலிட்டான். மறுநாள் தொலைபேசியில் அழைத்தான்.

எனக்கும் சட்டப்படி தொல்லை நீங்கீட்டுதண்ணா. சொன்ன போது இனி நீங்கள் நிம்மதியா இருங்கோ. இருப்பியள். இதயம் நிறைய வாழ்த்தினான். மனம் நிறைந்த அவனது வாழ்த்து மீண்டும் தைரியம் தந்தது.

2016 கிறிஸ்மஸ் வந்தது அவன் வாழ்த்து வரவில்லை. புதுவருடம் வந்தது அன்றும் வாழ்த்து வரவில்லை. அந்த நாட்களில் அவனது வாழ்த்தை எதிர்பார்த்திருந்தேன்.

என்ர அண்ணாச்சி என்னை மறந்து போயிட்டார். நண்பனுக்குச் சொன்னேன்.

இந்தமுறை அவரும் நீங்கள் வாழ்த்தேல்லயெண்டு நினைச்சிருக்கக்கூடுமெல்லோ ? நீங்கள் புதவருட வாழ்த்து அனுப்புங்கோ.

நண்பன் சொன்ன போது எனக்கும் அது சரிதானெனப்பட்டது.

அவனது மனைவியின் இலக்கத்திற்கு புதவருட வாழ்த்து அனுப்பினேன்.

அக்காச்சி எப்பிடி சுகம் ? ஏன் தொடர்பில்லை ? என்ன செய்றியள் ? மறந்திட்டியளோ எங்களை ? எப்ப இங்காலை வாறியள்? மறுமுனையில் இருந்து வந்த அக்கறையும் அன்பும் மீண்டும் எங்களது பழைய நாட்களை நினைவுபடுத்தியது.

நண்பன் சொன்னது போல அவர்களும் எனது வாழ்த்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்.

அக்கா நாங்கள் அம்மா அப்பா ஆகப்போறம். நான் சொன்னது போல அவர்களது குழந்தையின் பிறந்தநாளுக்கு போக வேணும் மனதுக்குள் குறித்துக் கொண்டேன்.

10.01.2017 இன்று கொஞ்சம் மனச்சோர்வாக இருக்கிறது. அவன் நினைவுகளில் நீண்ட நேரம் வந்து போகிறான். கதைக்க வேண்டும் போலிருந்தது. அவனும் நானும் சேர்ந்து கேட்ட பாடல்களை யூரியூப்பில் கேட்கத் தொடங்கினேன்.

ரிதம் படத்தில் வரும் 'நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே' என்ற பாடல் பற்றி ஒருமுறை அதிகம் பேசிக்கொண்டோம். இன்றைக்கு நதியே நதியே பாடல் 30வது தடவை தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என்னை ஒருகாலம் தாங்கி என் நம்பிக்கையாய் நின்று என்னை உயிர்ப்பித்தவன் தந்த நம்பிக்கைகள் நினைவுகளாகி அடிக்கடி சோர்கிற போது புத்துயிர் தந்து கொண்டேயிருந்தது.

என்மீது அவன் கொண்ட நம்பிக்கை தந்த ஆற்றுப்படுத்தல் அன்புக்காக கைமாறாக கூலி வாங்காத கூலி கேட்காத சுயநலமில்லாத தூயவன். இவன் என்னோடு கூடிப்பிறந்திருக்கலாம். காலம் அந்த வாய்ப்பைத் தரவில்லை.

கடந்து வந்த தடங்களில் ஏத்தனையோ பேர் வந்தார்கள் போனார்கள் பணிகளோடு கடமைகளோடு. அத்தனைபேரிலும் பலரை மறந்து போயிற்று. நினைவுகளில் அவர்கள் முகங்கள் கூட சரியாக நினைவுவருவதில்லை.

சிலர் காலமும் காவிவரும் புனிதமானவர்களாகி என்னோடு பயணிக்கிறார்கள். என்னோடு தொடரும் உறவுகளில் அவனும் சக பயணியாக வந்து கொண்டேயிருக்கிறான்.

சாந்தி நேசக்கரம்
10.01.2017

No comments: