அப்பாவை அன்புச்சோலை முதியோர் இல்லத்தில் சமாதான காலத்தில் சந்தித்தேன். மகள் என்று சொல்லி தனது இருப்பிடம் பிள்ளைகளின் படங்களையெல்லாம் காட்டினார். எனது பிள்ளைகளை தன்னோடு கூட்டிச்சென்று தனது உணவிலிருந்து பங்கு கொடுத்தார். அன்புச்சோலையில் இருந்த பல அப்பாக்கள் அம்மாக்களில் அந்த அப்பாவும் ஒருவர். தலைவரிடம் கவுரவம் பெற்ற படமொன்றை தன்னோடு வைத்திருந்தார்.
அன்புச்சோலைக்கு பொறுப்பாயிருந்த டிஸ்கோ அண்ணா அங்கிருந்த பலரது சோகக்கதைகளை கதைகதையாகச் சொன்னார். அன்புச்சோலையை விட்டு வெளியேறும் போது பலரது பாசத்தையும் சுமந்து கொண்டே திரும்பினேன்.
யுத்தம் முடிந்து அனாதைகளான பலரைத் தேடியது போல அன்புச்சோலையின் அம்மாக்களை அப்பாக்களையும் தேடினேன். வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் பலர் இருப்பதாகச் சொன்னார்கள். சிலருக்கு இயன்ற உதவிகளைச் செய்ததோடு போய்விட்டது.
20.04.2013 அன்று ஒரு போராளி அப்பாவைப் பற்றிச் சொன்னான். அவரது 3வது மகளை அவன் திருமணம் செய்துள்ளதாகவும் அப்பா உணவுக்கே வசதியில்லாமல் இருப்பதாகவும் சொன்னான். அப்பாவைத் தேடி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது...., மகள் எனக்கு மருந்து வேணும் என்னாலை தாங்கேலாமல் இருக்கம்மா....! அப்பா அழுதார்.
ஏதாவதொரு உதவியை ஒழுங்கு செய்து தரலாமென்ற வாக்குறுதியை அப்பா நம்பினார். ஓம் மகள் ஓம் மகள் என சொன்ன எல்லா ஆறுதல் வார்த்தைகளையும் ஏற்றுக் கொண்டார். கதைத்துக் கொண்டிருந்த இடையில் அவரால் தொடர்ந்து கதைக்க முடியாமல் இருமல் இடையூறு செய்து அப்பா மகளிடம் தொலைபேசியைக் கொடுத்தார்.
அப்பாவின் மகளின் குடும்ப நிலமையை எழுதி உதவிகோரி முல்லைமண் வலைப்பூ , யாழ் இணையம் முகநூலிலும் போட்ட அடுத்த சில மணித்தியாலங்களில் யேர்மனியிலிருந்து தம்பி ஜீவா அப்பாவின் மகளின் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்த உடனடியாக 50ஆயிரம் ரூபாய்களை வழங்கி அந்த உதவி அடுத்த சிலநாட்களில் அவர்களுக்கும் சென்றடைந்தது.
அவுஸ்ரேலியாவிலிருந்து பிரகாஸ் என்ற உறவு தந்த உதவியை முதல் மாத தேவைக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த மாத தேவைக்கு யாரும் உதவ முன்வரவில்லை. வாழும் நாட்களில் ஒரு நேரம் கஞ்சியேனும் அப்பா குடிக்க வேண்டுமென்ற நினைப்பு தொடர்ந்து அலைத்தது. 27.05.2013 அன்று அப்பாவிற்கு உணவுத் தேவைக்காக சிறுதொகை அனுப்பிவிட்டு அப்பாவின் மருமகனுக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பினேன்.
அப்பாவின் மருமகன் 27.05.2013 இரவு ஐரோப்பிய நேரம் 7மணிக்கு அவசரமாக கதைக்க வேணுமென தகவல் அனுப்பியிருந்தார். ஸ்கைப் வந்த அவன் சொன்ன செய்தி. இலங்கை நேரம் இரவு 9மணிக்கு அப்பா இறந்துவிட்டாராம். மரணம் அப்பாவை விரைவில் எடுக்குமென்றது அறிந்திருந்தாலும் இப்படி திடீரென அது நிகழும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.
காலை அனுப்பப்பட்ட பணம் அன்றே அப்பாவின் மகளின் வங்கிக்கு போயிருந்தது. ஆனால் அந்தப் பணத்தில் ஒரு தண்ணீர் கூட வாங்கிக்குடிக்காமல் அப்பா போய்விட்டதை ஏற்றுக் கொண்டு ஆறுதல்பட முடியவில்லை.
இஞ்சை ஒரே அழுiகாயக்கிடக்குதக்கா....! இவள் சொன்னாலும் கேக்காமல் அழுது கொண்டிருக்கிறாளக்கா....! அவனது குரலும் மாறியது. ஒருக்கா குடுங்கோ கதைக்க....! அவன் கொடுத்ததும் அவள் பெருங்குரலெடுத்து அழுதாள்.
ஏன்ரையப்பா போட்டாரக்கா.....கடைசீல கூட பாக்கேலாத நிலமையில எங்களை ஆக்கீட்டாங்களக்கா....என்ரையப்பாக்கு உதவி கிடைக்குதெண்டு சந்தோசப்பட்டனானக்கா.... அதைக்கூட அனுபவிக்காமல் போட்டாரக்கா....!
அவள் சத்தமிட்டு அழுது கொண்டிருந்தாள்....அவளது குழந்தைகளும் அழத் தொடங்குகிறார்கள். அவளைத் தேற்றவோ ஆற்றவோ வார்த்தைகள் வரவில்லை. அழாதேயென்று சொல்லக்கூட நாவு எழவில்லை.
நான் அக்காவோடை கதைச்சிட்டு பிறகு உங்களோடை கதைக்கிறன் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன். அப்பாவை மரணம் வரையும் காப்பாற்றிய அக்காவின் இலக்கத்தை அழைத்தேன். பெயரைக் கேட்டதும் அவளும் பெருங்குரலெடுத்து அழுதாள்.
எத்தினை துன்பத்தையக்கா தாங்கிறது....? நேற்றைக்கு மூத்தவன் பள்ளிக்கூடத்தில பந்தடியில கை முறிஞ்சு வர ரெண்டாவது கூரைத் தகரத்தை காத்து இழுக்குதெண்டு பிள்ளை மேலையேறி தகரத்தை சரியாக்கீட்டு இறங்கேக்க பிள்ளை தவறி விழுந்து அவனும் முறிஞ்சு போனான்.
மாஞ்சோலைக்குத் தான் கொண்டு போனனான் அங்கை ஏலாதெண்டு வவுனியாவுக்கு அனுப்ப வேணுமெண்டினம் அப்பாவை விட்டிட்டுப் போகேலாமல் பிள்ளையளை தெரிஞ்ச ஒராளைப் பிடிச்சு வவுனியாவுக்கு ஏத்திவிட்டிட்டு வீட்டை வந்தனானக்கா....என்ரையப்பா தனியவெண்டு ஓடியந்தனானக்கா.....
வீடு திரும்பியவள் படுக்கையிலிருந்த அப்பாவிடம் தான் போனாள். பிள்ளைகளின் நிலமையைச் சொல்லி அழுதாள். என்னாலை உனக்குத்தான் மேன கரைச்சல்....நான் நாளைக்கு போய்ச் சேந்திடுவன்....நீ யோசிச்சு கவலைப்படாமல் பிள்ளையளைப் பார் மேன....! மறுநாள் தான் இறந்து விடுவேனெனவே அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
எவ்வளவோ கரைச்சல்பட்டு அவள் காப்பாற்றிய அப்பாவை அவளால் இழக்க முடியாதிருந்தது. ஒரே அபசகுனம் போல பிள்ளைகள் முறிந்து சத்திர சிகிச்சையில் தாயுமின்றி உறவு ஒருவரோடு வவுனியாவில்....இங்கோ மரணத்தை அழைத்தபடி அப்பா.....! இரவு முழுவதும் அவளுக்கு ஒரு கண் உறக்கமில்லை. அப்பாவும் பிள்ளைகளுமே மாறி மாறி மனம் அமைதியிழந்தது.
27.05.2013 காலை விடிந்ததும் அன்று அப்பா இயலாத தனது நிலமையையும் மீறி எழுந்தார். அன்று அப்பாவின் வாழ்வோடு இணைந்து அவரது சுக துக்கங்களில் எல்லாம் துணையிருந்த அவரது மனைவியின் நினைவுநாள். மனைவியின் நினைவு நாளில் மகளுக்கு துன்பம் குடுக்காமல் போய்விடப் போகிறேன் என அடிக்கடி சொல்லிக் கொண்டார்.
நீ அழாத மேன நான் போப்போறன் அம்மாவும் , கொண்ணன்மாரும் தான் கூப்பிடுகினம்.....! பிள்ளையளை கவனமாப் பார் , அவள் தங்கைச்சிக்குச் சொல்லு என்னை நினைச்சு அழாமல் இருக்கச் சொல்லி....! தனது மரணத்தை தானே அறிந்து வைத்திருந்தது போல அப்பா அன்று முழுவதும் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.....!
மதியத்துக்குப் பின்னர் அப்பா கட்டிலை விட்டு அசையவேயில்லை. கண்ணால் கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருந்தது. அசைக்க முடியாத தனது கைகளால் மகளின் தலையைத் தடவிவிட்டார். தண்ணீரையும் மறுத்தார். மாலைநேரத்திற்குப் பின்னர் அப்பாவின் பேச்சு மெல்ல மெல்ல அடங்கிக்கொண்டு போனது. அயலை அழைத்து அவள் அழுதாள்.
மருத்துவமனைக்கு எடுத்துப்போகலாமென அயலாரிடம் உதவி கேட்டாள்.
பிள்ளை இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் நீ அலைஞ்சு பிரியோசனமில்லை......ஊரவர் ஒருவர் சொன்னார். மரணம் அப்பாவின் தலைமாட்டில் வந்து நிற்க அவள் அப்பாவைக் காக்க கண்ணீரால் கடவுளர்களையெல்லாம் வேண்டினாள். கடவுளரும் கைவிட்டு அப்பாவை தங்களடிக்கு அழைத்து போய்க்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு அப்பாவின் மூச்சு , பேச்சு யாவும் அடங்கி அப்பா நிரந்தரமாகவே தான் வாழ்ந்த நிலத்தைவிட்டு மறைந்து போனார்.
நான் எதிர்பாக்கேல்லயக்கா....இப்பிடி கெதியில போயிடுவரெண்டு....! முந்தநாள் மூத்தண்ணான்ரை நினைவுநாள் இண்டைக்கு அம்மான்ரை நினைவுநாள்....அப்பாவும் போயிட்டாரக்கா.....!
அவளுக்கு ஆறுதல் சொல்லி அவள் அதையெல்லாம் கேட்கும் நிலமையில் இல்லாமல் புலம்பிக் கொண்டிருந்தாள். நான் நாளைக்கு எடுக்கிறன்..., சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.
கடைசியாக ஒருமுறை அந்தக் குரலைக் கேட்டிருக்கலாம் போலிருந்தது. எனது அப்பா 2008இல் இறந்த போது வடித்த கண்ணீரைவிடவும் துரத்தை விடவும் இந்த அப்பாவின் மரணம் மேலான துயரைத் தந்தது. எனது அப்பா எல்லா வசதிகளோடும் மரணத்துக்கு முதல் வினாடி வரையும் இருந்தார். பிள்ளைகள் யாருமில்லையென்ற குறையைத் தவிர அப்பா வாழ்வை நன்றாக வாழ்ந்து முடித்திருந்தார்.
இந்த அப்பாவோ தனது ஆண்பிள்ளைகளை மண்ணுக்கு மாவீரர்களாய் தந்துவிட்டு மரணத்தின் கடைசி வினாடி வரையும் வலியோடும் வாய் ருசிக்க ஆசைகள் இருந்தும் எதையும் ஆனுபவிக்க பணமின்றி அந்தரித்தே போய்ச் சேர்ந்தார். மகள் மகள் என்றழைத்த அந்தக் குரல் மீளாத் தொலைவாகிக் கொண்டிருந்தது.
ஸ்கைப்பில் வந்த ஒரு நண்பன் 25.05.1999அன்று கடலில் காவியம் படைத்து வீரச்சாவையணைத்த அப்பாவின் மூத்த மகனின் நினைவுநாள் இணைப்பைத் தந்தான். அந்த மாவீரன் பற்றி அவன் சொல்லிக் கொண்டு போனான்....!
ஒரு லெப்.கேணல் தாயகத்துக்காக தனது உயிரை கடலில் கரைத்துப் போனான்.....அந்த வீர மகனின் அப்பா வறுமையோடு இறந்து போனார் என்ற கதையை அவனுக்குச் சொன்ன போது அதிர்ச்சியால் அவனிடமிருந்து பேச்சு எதுவும் வரவில்லை.
சற்று நேரம் கழித்துச் சொன்னான். எங்கடை நிலமையும் ஒண்டும் செய்யக்கூடியமாதிரியில்லை என்ன செய்யிறது.....! நினைக்காத போதில் ஸ்கைப்பில் வந்த நண்பன் அப்பாவின் மூத்த லெப்.கேணல் மகனின் நினைவுநாள் இணைப்பைத் தந்து மேலுமொரு துயரைத் தந்து போனான்.....!
எதிர்பாரத நிகழ்வுகள் எதிர்பாராத நேரங்களில் நிகழ்வது உண்மையென்பதை ஒரு மரணமும் ஒரு நினைவுநாளும் சம நேரத்தில் துயர் தரும் வலியின் பாரம் கண்ணீராகிக் கொண்டிருந்தது...!
28.05.2013
No comments:
Post a Comment