Sunday, May 19, 2013

மேமாத நினைவும் இருகண்களை இழந்த போராளியின் கதையும்.

தாயகத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலம் அது. 08.06.2003 மகளின் 5வது பிறந்தநாள். அந்தமுறைப் பிறந்தநாள் செஞ்சோலையில் காலையும் , மாலை காந்தரூபன் அறிவுச்சோலையிலும் , மதியம் நவம் அறிவுக்கூடத்தில் பல்துறை அறிவுசார் கற்கை நெறிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஊனமுற்ற போராளிகளோடும் அன்றைய பொழுதை செலவிடுவதென முடிவாகி காலை 8மணிக்கு வள்ளிபுனம் செஞ்சோலைக்குச் சென்று மதியம் 12மணிக்கு விசுவமடுவில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றோம்.

ஏற்கனவே இருமுறை நவம் அறிவுக்கூடம் போயிருந்ததில் ஏற்பட்ட அறிமுகம் பல பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் , கவிஞர்கள் , எழுத்தாளர்களென பலர் அறிமுகமாகியிருந்தனர். பிள்ளைகளை மாமா , அன்ரி , அக்கா , அண்ணாவென ஆளாளுக்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.

நவம் அறிவுக்கூடத்தின் வளவுக்குள் போவோர் சந்திப்பிடமாக அமைந்த விருந்தினர் வரவேற்பிடத்துக்கு நேராக லெப்.கேணல்.நவம் அவர்களின் பெரிய படமும் நினைவிடமும் அமைந்திருந்தது. ஒரு பக்கம் கணணிப்பிரிவும் , அடுத்த பக்கம் அமைந்திருந்த கூடம் இசைக்கருவிகள் வைக்கப்பட்டு இசைப்பயிற்சி செய்வதற்கான ஒழுங்கமைப்பில் இசைக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது.

இசைக்கருவிகளின் இசையும் பாடலும் காற்றோடு கலந்து அந்த ஆனிமாத மதியம் இசைகருவிகளோடும் பாடலோடும் கலந்திருந்தது. பாட்டென்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது போல.

அக்கா போய்ப்பாப்பமே ? கேட்டான் மருது. விரும்பினா பாக்கலாமக்கா பிள்ளையள் பாட்டு பயிற்சியெடுக்கினம் என்றாள் ஒரு போராளி.

அக்கோய்....! என்றபடி புகழேந்தி வந்திருந்தான். எப்பிடியக்கா இருக்கிறியள் ? நான் நினைக்கேல்ல நீங்க திரும்பியும் வருவீங்களெண்டு ? நேற்று அண்ணை சொன்னவர் இண்டைக்கு வருவியளெண்டு.....! மீண்டும் சந்தித்ததில் அவனடைந்த சந்தோசத்தை அவனது வார்த்தைகள் வெளிப்படுத்தின.

கடந்த முறை சந்தித்த போது புகழேந்தி தனது கிளிநொச்சி களமுனை அனுபவம் பற்றியும் ஓயாத அலைகள் 3இல் ஆனையிறவு பகுதியில் தனது அனுபவங்கள் பற்றியும் நிறையச் சொல்லியிருந்தான். அவனது குரலில் அவனது கிளிநொச்சி கள அனுபவத்தை அவனுக்குத் தெரியாமல் ஒலிப்பதிவு செய்ததை அவனிடமிருந்து விடைபெற்ற போது சொன்னேன். என்ரை குரலை என்னக்கா செய்யப்போறியள் ? எனச் சிரித்தான்.

புகழேந்தி நல்ல சண்டைக்காரன். கதைகளில் வாசித்த களமுனைக்கதைகளை புகழேந்தியின் வாயால் கேட்கிற போது அந்தக்களத்தில் நிற்பது போலவே இருக்கும். அவன் வைத்திருந்த ஆயுதங்களுடன் அவன் எப்படி சண்டையிட்;டிருப்பானோ அதேபோல ஆயுதங்கள் பற்றிய கையாள்கை முதல் சகலத்தையும் விபரிப்பான்.

ஓயாத அலைகள்3 ஆனையிறவை மீட்ட களத்தில் புகழேந்தியும் களத்தில் நின்றான். ஒரு கட்டத்தில் நிலமை இறுக்கமடைந்து அவன் தனது ஆயுதத்துடன் கீழே விழுந்துவிட்டான். போராளிகளின் உக்கிரமான தாக்குதலில் படையினர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

தனது ஆயுதத்தை பாதுகாக்கும் நோக்கில் குப்புற விழுந்து தனது ஆயுதத்தை உடலால் மறைத்துக் கொண்டு படுத்திருந்தான். ஓடிக்கொண்டிருந்த படையினர் அவனுக்கு மேலால் மிதித்துக் கொண்டு ஓடினர். ஏற்கனவே தலையில் காயமடைந்து பாதிப்புற்றவன் மீதேறி ஓடியவர்களின் மிதிப்பில் அவன் உடல் பட்ட ரணங்களை அவன் சொல்லிக் கொண்டிருந்த போது உயிரைப் பிடுங்குமாப்போலிருந்தது.

ஒரு சிறந்த சண்டைக்காரன் தனது தாயகத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராளி அவனுக்குள்ளும் ஈரமுள்ள இதயமொன்று இயங்கிக் கொண்டிருப்பதை கடைசி இரு மணித்தியாலங்களும் பகிர்ந்து கொண்டான்.

ஏழை அம்மாவிற்காகவும் சகோதரங்களுக்காகவும் துயரடைந்தான். அவனது துயரின் ஈரம் இப்போதும் நினைவில் வரும் நேரமெல்லாம் நெஞ்சு வலிக்கும்.
அன்றைய நாள் பலருடன் பேசி பலருடன் உறவாகி பலரது நினைவைச் சுமந்து வந்த போதும் புகழேந்தி மறக்க முடியாத சிலருள் ஒருவனாய்....!

விடைபெறும் நேரம் „'அக்கா எனக்கொரு உதவி செய்வீங்களா ?' சொல்லுங்கோ ! என்றதும் தனது இருப்பிடத்திற்குப் போயிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் ஒரு நாட்குறிப்போடு திரும்பி வந்தான்.
நீலம் சிவப்பு கரையிடப்பட்ட ஒரு கடித உறையில் பலமடிப்புகள் கண்ட ஒரு கடிதத்தை வெளியே எடுத்தான். பலமுறை வாசித்து வாசித்து அந்தக் கடிதம் அவனுக்கு மனப்பாடமாகியிருந்தது. கொஞ்ச வருடங்கள் முதல் அந்தக்கடிதம் அவனுக்கு யேர்மனியிலிருந்து போயிருக்கிறது.

இதக்கா என்ரை தம்பியின்ரை கடிதம் கனவரியம் முதல் யேர்மனி போனவன். கொஞ்சநாள் கடிதம் போட்டவன் இப்ப 2வரியமா தொடர்பொண்டுமில்லை கடிதங்களும் வாறேல்ல....! ஒருக்கா இந்த விலாசத்தைக் கொண்டு போய் தேடிப்பாருங்கோ....அவனைக் கண்டீங்களெண்டா சொல்லுங்கோ அம்மாவைப் பாக்கச் சொல்லி அம்மாக்கு உதவி செய்யச் சொல்லி...! நானும் காயம்பட்டு ஏலாதெண்டு சொல்லுங்கோ.....!

தலையில் ஏற்பட்ட காயத்தின் தன்மை சிலவேளை அவன் கதைத்துக் கொண்டிருக்கும் போது மறந்துவிடும்....! பின்னர் அவன் விட்ட கதையைச் சொன்னால் தொடர்ந்து பேசுவான். தலையில காயம் பட்டனான்தானேயக்கா அதுதான் சிலவேளை இப்பிடி....! வெயில் பட்டா தாங்கேலாம இருக்குமக்கா....!
அவன் கேட்டதற்கிணங்க யேர்மனி வந்து அவன் தந்த விலாசத்துக்கு கடிதம் போட்ட போதும் எவ்வித பதிலும் வரவில்லை. தொலைபேசியிலக்கம் தேடி அது கிடைக்கவில்லை. அவன் தனது அம்மாவுக்கு உதவுவான் என நம்பியிருந்த தம்பியின் நிலமையை அறியவே முடியாது போனது.

அக்கா ! நான் கேட்ட விசயம் அறிஞ்சீங்களே ? ஒருவருடத்தின் பின்னர் நேரில் சந்திக்கும் வரையும் அவன் காத்திருந்திருக்கிறான். எந்தப்பதிலும் அந்த முகவரியிலிருந்து வரவில்லையென்றதை சொன்ன போது அவனது முகம் மாறிப்போனது.

அம்மான்ரை தொடர்பை தாங்கோவன் நான் ஏதாவது செய்யிறன் ? இல்லையக்கா பாப்பம்...என சமாளித்தான். அவன் விரும்பினால் இயக்கம் அவனது குடும்பத்தை கவனிக்கும் ஆனால் தனது குடும்ப நிலமையைச் சொல்லாமல் தனக்குள்ளே அழுது கொள்வான் போல.

000                000            000
அங்கே பாடல் பயிற்சியில் பாடிக்கொண்டிருந்தவர்களின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு பெரிய இசைக்கச்சேரியே நடந்து கொண்டிருந்தது.

அப்போது பாடிக்கொண்டிருந்த இருகண்களையும் இழந்த பெண் போராளியைப் பற்றியும் புகழேந்திதான் சொன்னான். அந்தப்பிள்ளையக்கா தீச்சுவாலைச் சண்டையில காயம்பட்டுத்தான் கண் ரெண்டும் தெரியாமப்போனது நல்ல கெட்டிக்காரி நல்லாப்பாடுவா கவிதை எழுதுவா எனச் சொன்னான்.

பாடல் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவனே அறிமுகப்படுத்தினான். அவளையும் அறிமுகப்படுத்தினான். அவள் எழுதிய கவிதைகளையும் கதைகளையும் எடுத்து வந்து தந்தாள். வாசிச்சிட்டு அனுப்பிவிடச் சொன்னாள். ஒரு சிறிய நேயர் விரும்பம் நிகழ்ச்சியையும் ஆளாளுக்கு செய்து முடித்தார்கள்.

அங்கேதான் இன்னொரு பாடகனும் அறிமுகமானான். அவன் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போராளி. ஒலிப்பதிவு செய்யப்படுவதற்காக ஒத்திகை பார்க்கப்பட்ட பாடலொன்றை அவன் பாடினான். அந்தப்பாட்டை ஒலிப்பதிவு செய்யுமாறும் கூறினான். இசையில்லாத அவனது குரலில் ஒலித்த „' நாட்காட்டி நாளெல்லாம் எம் வீரவரலாறு குறிகாட்டும் இலக்கெல்லாம் எம் ஈழம் தனிநாடு'' பாடல் இன்றுவரை அந்தத் தம்பியின் ஞாபகமாய்.....!

பதிவேறமுன்னர் பாடித்தந்த போராளியின் நினைவாக அவன் பாடிய பாடல் :-http://nesakkaram.org/ta/wp-content/uploads/thanaa.mp3

அங்கிருந்தவர்கள் எல்லோருமே ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் ஆனால் சிலர் மட்டும் நிரந்தரமாக மனசில் இடம்பிடித்துக் கொண்டார்கள். புகழேந்தி உட்பட சிலரது பெயர்களையும் அவர்களது கையெழுத்துக்கள் நினைவுவாசகங்களையும் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

பின்னர் 2004இல் ஐரோப்பாவிற்கு வருகை தந்திருந்த கலைக்கோன் மாஸ்ரரிடம் எல்லோரைப்பற்றியும் விசாரித்ததன் பின்னர் அவ்வப்போது வருகிற சில கடிதங்களில் நவம் அறிவுக்கூடத்துப் போராளிகள் பற்றியும் வரும்.

2009 யுத்தத்தின் இறுதி நாட்களில் உனமுற்றவர்ளெல்லாம் இறந்து போய்விட்டார்களென்ற கதைகள் வந்தது. நாட்கள் செல்லச் செல்ல நவம் அறிவுக்கூடம் , அருமை புலனாய்வுப்பள்ளி , மயுpரி இல்லங்களில் இருந்த பலர் உயிருடன் இருப்பதாய் செய்திகள் வந்து எங்கிருந்தோவெல்லாம் அழைப்புக்கள் வந்தது.

அக்கா அருமையில இருந்த....! அக்கா நான் நவம் அறிவுக்கூடத்தில இருந்த....! என வந்த குரல்களில் பலரது தொடர்புகள் மீளவந்தது. அப்போது வந்தவர்களிடமெல்லாம் புகழேந்தி பற்றி விசாரித்தேன். யாரும் தொடர்பில் அவனில்லையென்றார்கள்.

ஒருவன் சொன்னான். இறுதியுத்தத்தில் புகழேந்தியின் குழந்தை இறந்ததாக , குழந்தையின் இறப்பின் பின்  புகழேந்தி தற்கொலை செய்ததாக....! புகழேந்தி பற்றிய பல்வேறு கதைகள் புகழேந்தி உயிரோடில்லையென்று தான் வந்தது.
02.05.2013 அன்று தொலைபேசியில் ஒருத்தி அழைத்திருந்தாள். அக்கா நான் ம..... நவம் அறிவுக்கூடத்துக்கு நீங்க வந்த நேரம்....! அவள் தன்னை யாரென அடையாளப்படுத்தி முடிய முதல் தொடர்பறுந்தது. திரும்ப அழைத்தவள் சொன்னாள். அக்கா காசில்லை ஒருக்கா எடுங்கோ.

அன்று மாலை அவளை அழைத்த போது2009இன் பின்னர் அவள் படுகிற துன்பங்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

கடைசீல எங்களை ஆமிதானக்கா உள்ளை கொண்டு போனது. நாங்கள் பட்ட கேவலத்தை இப்ப நினைச்சாலும் தாங்கேலாதக்கா.....! 2வருசம் தடுப்பிலயிருந்துதானக்கா வெளியில வந்தனான். 2011இல வீட்டை வந்தனான். ரெண்டு கண்ணும் தெரியாத என்னைக் கவனிக்க என்ரை வீட்டுக்காறராலை ஏலாதுதானேக்கா....!

மொத்தம் 6பெண்பிள்ளைகள் அவள் வீட்டில். அவள் வீட்டில் 5வது பிள்ளை. 4சகோதரிகளும் திருமணம் முடித்துவிட்டார்கள். கடைசித் தங்கை பிறப்பில் ஊனமடைந்தவள். அவளோடு கண்ணிரண்டையும் இழந்த இவளையும் பெற்றோரால் கவனிக்கக்கூடிய வசதியில்லை. தெரிந்தவர்களிடமெல்லாம் தங்கள் பெண்பிள்ளைகள் இருவரினதும் நிலமையைச் சொல்லி சின்னச் சின்ன உதவிகளைப் பெற்று 2நேர சோற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடுகளிலிருந்து உதவிகள் பலருக்கு கிடைப்பதாக அறிந்து பலரிடம் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றும் எந்தவித வழியும் கிடைக்கவில்லை. ஊரில் இயங்கிய நிறுவனங்களுக்கு வெண்கம்பைக் கொண்டு பெற்றோருடன் திரிந்தாள். அவளைப் நிழற்படமும் ஒளிப்படமும் எடுத்தார்கள் பலர்.

வாக்குறுதி கொடுத்துவிட்டுப் போனவர்கள் திரும்பி எந்த உதவியையும் கொண்டு வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. வயதான தந்தை கூலிக்கு போனால் மட்டுமே அந்த வீட்டில் அடுப்பெரியும் நிலமையில் குடும்ப வறுமை.

2011அவளைக் காதலித்தவன் தடுப்பு முகாமொன்றில் இருப்பதாக அவளுக்கு கடிதம் போட்டான். விரைவில் விடுதலையாகி வந்து விடுவதாயும் அவளைத் திருமணம் செய்வதாகவும் தகவல் அனுப்பியிருந்தான். கண்ணில்லாத அவளுக்குக் கண்ணாயிருப்பேனென சில வருடங்கள் முன்னர் சொல்லிக் கொண்டிருந்தவனின் தொடர்புகள் இல்லாது போய் அவன் உயிரோடிருப்பதாக வந்த செய்தி ஆறுதலைக் கொடுத்தது.

2012இல் விடுதலையானவன் பெற்றோரின் விருப்போடு அவளைத் திருமணம் செய்து கொண்டான். தன்னை வருத்தி கூலிவேலை செய்து கண்ணில்லாத அவளையும் காத்து தறப்பாள் ஒன்றில் வாழ்வை ஆரம்பித்தார்கள். வேலையின் கடினம் அவன் நோயுற்றான். பலமுறை காயங்களுக்கு உள்ளானதில் உடலெங்கும் இரும்புச் சிதறல்கள்.

திடீரென எழுந்திருக்க முடியாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தலையிலும் , முள்ளந்தண்டுப் பகுதியில் ஓரிடத்தில் பெரிய செல்துண்டொன்று உள்ளதாகவும் அந்தத் துண்டுகள் நகர்வதாகவும்; வலியேற்பட்டு இயங்க முடியாதுள்ளதாகவும் சொன்னார்கள்.

அந்த இரும்புத் துண்டுகளை வெளியில் எடுப்பது மிகவும் ஆபத்து எனவும் சொன்னார்கள். நிரந்தரமாக முள்ளந்தண்டு வடம் பாதிப்படையும் நிலமையே 90சதவிகிதம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. கடுமையான வேலைகள் செய்யக்கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

வாழ்க்கையின் ஆரம்பமே இடைஞ்சலாக வருமானமில்லாது போனது. அவர்களுக்கு இப்போதைய வருமானம் அரசாங்கம் மாதாந்தம் வழங்கும் பிச்சைச்சம்பளம் 150ரூபாய்தான். இருவருக்குமான பிச்சைச்சம்பளத்தை பெறுவதற்கு போய்வரும் போக்குவரத்தில் பாதி போய்விடும்.

பாதிநாள் அவனது வீட்டாருடனும் , பாதிநாள் அவளது பெற்றோரின் வீட்டிற்குமென அலைந்தார்கள். அன்றாடச் சாப்பாடு இரண்டு வீட்டிலிருந்தும் பங்கு பிரிக்கப்பட்டது. வீட்டில் கிடைக்கிறதை வைத்து அவர்களுக்கும் பங்கிட்டார்கள்.

ஊனமுற்றவர்களை இயக்கம் இருந்த போது பராமரித்த பராமரிப்பும் கவனிப்பும் மனசுக்குள் அடிக்கடி வந்து போகும் நேரமெல்லாம் ஆளையாள் சொல்லி அழுது ஆறுதற்படுவதைத் தவிர வேறெதையும் பெற முடியவில்லை.

மீண்டும் அவன் உடல் இயலாமல் போன போது மருத்துவமனையொன்றிற்கு போனார்கள். தலைமை மருத்துவரிடம் தங்கள் இயலாமையை அன்றாட வாழ்வுப் போராட்டத்தைச் சொன்னார்கள். தலைமை மருத்துவர் ஒரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்து அந்த இலக்கத்துக்கு உரிய பெயரைச் சொல்லி உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இல்லது நான் தந்ததெண்டு சொல்லிக் கதையுங்கோ எனக் கொடுத்தார்.

கனநாள் உங்கடை நம்பர் தேடினான். ஆனா கிடைக்கேல்லயக்கா டொக்ரர் சொன்னோடனும் எவ்வளவக்கா சந்தோசப்பட்டனாங்கள் தெரியுமேக்கா ? அழுதாள். சாப்பாட்டுப் பாடே பெரிய பிரச்சனையாக் கிடக்குதக்கா....!

அரையேக்கர் காணிதானக்கா சொத்து அதிலயொரு தறப்பாள் போட்டிட்டு இருக்கிறமக்கா. ரொய்லெட் இல்லை கிணறில்லை வேறையாக்களின்ரை வளவுக்குத் தானக்கா போறனாங்கள். ரெண்டு பேற்றை குடும்பங்களும் வசதியில்லை. அவையளும் எல்லாத்தையும் இழந்திட்டு இருக்கினம் அவை தந்தாத் தானக்கா சாப்பாடு.

பெரிசா அதைத்தாங்கோ இதைத் தாங்கோண்டு உங்களைக் கேக்கேலாதக்கா.....! ரெண்டு கண்ணும் தெரியாமல் என்னாலை ஒரு வேலையும் செய்யேலாது அதோடை காலொண்டும் ஏலாது. மாதத்துக்கு ஒரு ஆறாயிரம் ஏழாயிரம் ரூபா ஒழுங்கு செய்து தந்தீங்களெண்டா பெரிய உதவியா இருக்குமக்கா. எங்கள் ரெண்டு பேருக்கும் சாப்பாட்டை சமாளிக்க காணுமக்கா.

000                    000                        000

புகழேந்தியின்ரை தொடர்பிருக்கோ ? கேட்ட போது சொன்னாள். அவர் கடைசிநேரம் இல்லையக்கா....! புகழேந்தி பற்றி கடைசி உறுதிப்படுத்தலாக அவளும் புகழேந்தி உயிரோடில்லையென்பதை உறுதிப்படுத்திச் சொன்னாள்.
ஞாபகத்தில் புகழேந்தியின் கடைசிக் கதைகளும் சிரிப்பும் கண்ணுக்குள் வந்து போனது....! அவள் புகழேந்தி பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் கையோடு கொண்டு திரிந்த நீல உறை போட்ட நாட்குறிப்பையும் காவிக்கொண்டு தாண்டித் தாண்டி நடந்து வருவது போலிருந்தது.....!

கிழக்குமாகணத்தைச் சேர்ந்த புகழேந்தியின் நண்பன் எனக்கு கடைசியாக நாட்காட்டி பாடலைப் பாடிப் பதிவு செய்து தந்த போராளிப்பாடகனை விசாரித்தேன். நீங்கள் ஒருத்தரையும் மறக்கேல்ல என்னக்கா....! என்றாள். எங்கையிருக்கினமெண்டு தெரியேல்லயக்கா....! தொடர்பு கிடைச்சா தாங்கோ என்றேன். ஓமக்கா....! என்றாள்.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் முடிகிற இந்த நாட்களில் யுத்த உச்சத்தின் இழப்புகள் பலரது நினைவுகள் அவர்களது கடைசிக் கடிதங்கள் , கவிதைகள் , பாடல்கள்......என பலரது ஞாபகங்களைத் தந்து மனசை அலைக்கிறது இந்த மேமாத நாட்கள்....!

18.05.2013

(கண்கள் இரண்டையும் இழந்த பெண்போராளிக்கு தண்ணீர்; வசதிக்கு ஒரு கிணறு தேவை. கிணற்றிக்கு ஒரு லட்ச ரூபாய் தேவை. மலசலகூடம் ஒன்றுக்கு அறுபத்தைந்தாயிரம் ரூபாய் தேவை. இவ்விரண்டும் இல்லாமல் கண்ணிரண்டையும் இழந்த இந்தப் பெண்ணால் தொடர்ந்து அலைந்து திரிய முடியாத துயர நிலமையைப் புரிந்து உதவக்கூடியவர்கள் இவ்வுதவியைச் செய்து கொடுங்கள்)
இவர்களுக்கு கிணறு மலசலகூடம் அமைக்க தேவையான உதவி – 165000.00ரூபா(அண்ணளவாக 1025€)



No comments: