Saturday, April 6, 2013

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....!

28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர் தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும் இதுவாகவே இருந்தது.

இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால் பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று வருகிறவர்களுக்கான மாற்று வழியைச் செய்ய வகையும் தெரியவில்லை.

03.04.2013 மதியம் 12.27இற்கு அந்த இலக்கத்திலிருந்து வந்த குரல் ஒரு பெண்ணுடையது.

ஏன்னக்கா உங்களுக்கு இரக்கமே வராதா ? எத்தின தரமமக்கா மிஸ்கோல் விட்டனான் ? உங்கடை பிள்ளை தானக்கா நானும்....நீங்கள் தானக்கா எங்களுக்கு உதவ வேணும்....! எனக்கொரு கையும் கண்ணும் இல்லை நான் காயப்பட்டிருக்கேக்க நீங்கள் வந்து பாத்தனீங்களக்கா....! அழுதழுது தனது கதைகளைச் சொல்லிக் கொண்டு போனவளின் தொடர்பு அறுபட்டது.

அடுத்து அரைமணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் அழைத்தாள். அக்கா காசு முடிஞ்சுது ஒருக்கா எடுங்கோ...! சரி நீங்க கட்பண்ணுங்கோ நானொரு 2மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். காத்திருப்பன் கட்டாயம் எடுங்கோ அக்கா....! சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். உரிமையோடும் அதிகாரத்தோடுமான அவளது குரல் ஞாபகத்தில் எங்காவது பதியமாகியிருக்கிறாளா ? அவள் யார் ?  தேடத் தொடங்கியது மனசு.
அடுத்த 3மணித்தியாலத்தின் பின் அவள் அழைத்த இலக்கத்திற்கு அழைத்தேன்.

உங்கடை பேரென்ன ? சங்கீதத்துடன் சேர்ந்த ஒரு இராகத்தின் பெயரைச் சொல்லித் தன்னை அடையாளப்படுத்தினாள். அவளும் அவளது கணவனோடு வீரச்சாவடைந்துவிட்டதாகவே 2009 முடிவுகளின் பின்னால் கிடைத்த செய்தி. ஆனால் 2013இல் அவள் தான் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை நம்புவதற்கு சிரமமாகவே இருந்தது.

000            000               000

1990களில் அவள் போராளியானவள். அந்த நாட்களில் விடுதலைப்பாதையில் அணிவகுத்தவர்களுள் அவளும் ஒருத்தியாய் மாங்குளத்தில் முதல் சண்டையனுபவத்தைப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பின் 1991ஆனையிறவுச் சமரில் ஒரு கண்ணை இழந்தாள். யாழ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று மீண்டும் பணியில் இணைந்து 1992இல் துறைசார் பயிற்சியொன்றில் இணைக்கப்பட்டாள். அவளது சாதனையும் ஒவ்வொர வீரமிகு விழுதுகளின் கதைபோல 2001 வரையும் எழுதிவிட முடியாத வீரம் படைதோரின் பெயர்களுள் அவளும் ஒருத்தியாய்....!

2001இல் தீச்சுவாலை நடவடிக்கையில் கையையும் காதையும் இழந்தாள். அவள் பணியாற்றிய துறையைச் சேர்ந்தவொரு வீரன் அவளைக்காதலித்தான். 2002இல் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்தது. 2004இல் ஒரு குழந்தைக்கு அம்மாவானாள். பணியின் நிமித்தம் வீடு குடும்பம் பலருக்கு மறந்து போகிற விடயம். அதுபோல அவளது காதல் கணவனும் வீட்டை மறந்து பணியில்....! காற்றுப்புகா இடங்களில் கடமை முடிக்க அவன் வீட்டை மறந்து போயிருந்தான்.

நம்பிய சமாதானம் இரத்தகளமாய் மாறிக்கொண்டிருந்த தருணத்தில் வன்னிக்கள முனையில் கணவனும் மனைவியும் கடமையில் மூழ்கினர். பிள்ளையுடன் கூட நேரம் செலவளிக்க முடியாது பணியில் ஊறிக்கிடந்தனர்.
யுத்தம் வன்னியை இறுக்கிய காலம். 2009ஏப்றல் மாதத்தின் தொடக்கம். புதிய வழியொன்றின் திறவுகோலாக நம்பிய ஆனந்தபுரம் சமர்க்களத்தில் அவளது காதல் கணவனும் களத்தில் நின்றான்.

வெற்றிவரும் ஒரு பெரும் மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் அவளும் அவள் போன்ற பலரும் தங்கள் கணவர்களை , சக தோழ தோழிகளின் வெற்றிச் செய்திக்காய் காத்திருந்தார்கள்.

சமரின் உக்கிரம் எதிர்பாராத பேரிடியாய்.....ஈழவிடுதலைப்பாதையின் விடிவெள்ளிகளான  முதல் நிலைத்தளபதிகள் பலரையும் இழந்து களம் மாறியது. ஏல்லோருடைய கனவுகளும் நம்பிக்கைகளும் கரைந்து போனது. அவளது கணவனும் அந்தச் சமரில் வீரச்சாவடைந்து விட்டதாய் செய்தி மட்டும் வந்தடைந்தது.

நெஞ்சில் விழுந்த பேரிடியைத் தாங்கும் வலுவை இழந்தாலும் குழந்தைக்காக அவள் உயிர் மீண்டாக வேண்டிய கட்டாயம். மணவாழ்வில் அவனோடு கரைந்த பொழுதுகளின் நினைவோடு வழியும் கண்ணீரின் கடைசிச்சொட்டு காயும் வரை அவனுக்காய் அழுதாள். ஊலகத்தின் மூலையெங்கும் எழுச்சி கொண்டிருந்த உலகத்தமிழரின் பேரெழுச்சி மூலம் மாற்றமொன்று துளிர்க்குமென நம்பிய ஆயிரமாயிரம் பேரைப்போல அவளும் நம்பியிருந்தாள்.

கால நேரம் பாராமல் வெடிக்கும் குண்டுகளின் சத்தமும் சாவுகளின் குரல்களுமான பொழுதொன்றில்; விழுந்த எறிகணையில் வயிற்றில் காயமடைந்தாள். சாவின் கடைசித்துளி வரை போனது நிலமை. இடையில் செத்துப்போய்விடாமல் தன்னுயிர் மீள வேண்டுமென அவள் இயன்றவரை முயன்று மருத்துவம் பெற்றாள்.

000         000           000

நினைத்தவை எல்லாம் மாறி நிலமையும் மாறியது. 2009மே 17கால் போன போக்கில் எதிரியின் எல்லைக்குள் குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள். களையெடுப்பில் அவளும் கைநீட்டப்பட்டு சிறையில் அடைபட்டு வெளியுலகை வெளியுலக மனிதர்களையெல்லாம் மறந்த காலங்கள் அவை. சூனியத்தின் வாயில் சிதைந்து போனது குரல்கள். அவளது குரலும் 4ம் மாடிவரை போய் மீண்டு சிறையொன்றில் அடைக்கப்பட்டாள்.
வாழ்வுக்கும் சாவுக்குமான மரண வேதனையை அந்த நாட்களில் அனுபவித்தாள். துயரமே அவளைத் தின்று தொலைத்தது. ஒரு புறம் ஊனத்தின் வலி....மறுபுறம் குழந்தையின் எதிர்காலம்.....இன்னொரு புறம் சிறைவாழ்வின் நீளம்....? இரவுகள் நித்திரை தொலைக்க மன அழுத்தம் பயங்கரம் மிக்க கனவுகள் இதுவே நிரந்தரமானது.

எல்லா இழப்பின் இறுதியிலும் எல்லோரும் இனி கடவுளே எல்லாம் என நம்புகிற ஒரு நிலமை இவளுக்கும். 2011இல் சிறைவாழ்வு முடிந்து குழந்தையுடன் இணைந்தாள். வருமானமில்லை வாழ்வுக்கான ஆதாரமில்லை.

அப்போது சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு உள்ளுரில் இயங்கிய நிறுவனமொன்று 10ஆயிரம் ரூபா பண உதவி கொடுத்தது. அந்தப் பத்தாயிரம் ரூபாவோடு இரவல் காணியில் தறப்பாளைக்கட்டிக் கொண்டு அவளுக்கு மிஞ்சிய உறவான அம்மாவும் வன்னியில் ஒரு ஊரில் குடியேறினார்கள்.
அன்றாடப் பொழுதைக் கழிக்கவே பேரவலம் மிக்க கொடுமையை தினம் தினம் அனுபவிக்க வேண்டிய துயரம். உதவிகள் தேடி யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாத அச்சம். வெளிநாடுகளிலிருந்து முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் செய்கிறார்கள் என ஆட்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் யாரிடம் தொடர்பு கொண்டு யாரிடம் கேட்பது ? இன்னொருவரிடம் கையேந்த சுயகௌரவமும் இடங்கொடுக்காத மனநிலை....!

அண்மையில் ஊனமுற்ற முன்னாள் போராளியொருவனின் மரணவீட்டுக்குப் போயிருந்தாள். வந்திருந்த பலரும் ஆளையாள் கண்டதும் அழுது தங்களை ஞாபகம் கொண்டனர். மரண வீட்டில் வந்திருந்த ஒரு ஊனமுற்ற முன்னாள் சக தோழன் தான் அவளுக்கொரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்தான். இலக்கம் கிடைத்தும் எப்படி அறிமுகமாவது எப்படி உதவி கேட்பதென்ற குழப்பம் மீண்டும் அந்தத் தோழனே நம்பிக்கை கொடுத்தான்.

எடுத்துக் கதையுங்கோ அவையின்ரை கடமைதானே எங்களுக்கு உதவிறது ? இதிலையென்ன பயப்பிடக்கிடக்கு ? பயப்பிடாமல் கேளுங்கோ... யோசிக்காமல் உரிமையோடை கேளுங்கோ.....! என்ற அவனது வார்த்தைகளோடு கொஞ்சம் தெம்பு வந்தது.

000         000            000

பேச ஆரம்பித்து ஒரு மணித்தியாலமும் 23நிமிடங்களும் கரைந்து போனது. ஆயிரமாயிரம் கதைகளை அவளது வாழ்வு சுமந்து துடிப்பதை அவள் விளக்கிக் கொண்டு போனாள்.

என்னாலை வேலையொண்டும் செய்யேலாதக்கா பிள்ளையின்ரை படிப்பு , வயது போன அம்மா இதோடை இந்த ஊனத்தோடை இந்த சமூகத்தோடை சண்டை போட்டு சமாளிக்கேலாமல் இருக்குதக்கா...! எங்களைக் கண்டாலே சனம் ஒரு மாதிரியாத்தானக்கா பாக்குது...! றோட்டில போனா ஒவ்வொருதற்றை பார்வையும் ஏதோ நாங்கள் தீண்டத்தகாத மாதிரித்தானக்கா பாக்கினம்....அந்த நேரம் செத்துப் போகாமல் ஏன் வாழ்றமெண்ட வெறுப்புத்தான்....என்னேயிறதெண்டே தெரியாமல் தானிருக்கிறன்.

நீங்களும் நான் கனதரம் மிஸ்கோல் விட எடுக்காமல் விட்டது சரியான கோவமாக் கிடந்தது அதுதான் கோவமாக் கதைச்சுப்போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோக்கா. நாங்கள் இருந்த நிலமையும் வாழ்ந்த வாழ்க்கையும் பாருங்கோ இப்ப என்ன நிலமையெண்டு ? ஏனடா இயக்கத்துக்கு போனமெண்டும் சிலவேளை நினைக்கிறது தான்.  

அழுகை மாறி அவள் அந்தநாள் கதைகள் முதல் ஆயிரமாயிரம் நினைவுகளை மீளவும் தந்தாள். இறந்து போனதாய் நம்பிய பலர் உயிருடன் வாழும் கதைகளையெல்லாம் சொன்னாள்.

அக்கா அமுதினியைத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரியுமெல்லோ அவளுக்கு காலில்லை கையும் ஏலாதுதானே...! அவளை ஒருவர் பிரான்சிலையிருந்து வந்து கலியாணங்கட்டி ஒரு குழந்தையும் பிறந்திருக்கு தெரியுமே ?

அமுதினியாரைக்கட்டினாள் ?

அது பெரிய கதையக்கா....அவளுக்கு 35வயது. குடும்பம் சரியான கஸ்ரம் கடையொண்டில வேலை செய்து கொண்டிருந்தவள். பிரான்சிலயிருந்து ஒருவர் இஞ்சை வந்து நிண்டு ஆக்களுக்கு உதவி செய்தவர். அவருக்கு இப்ப வயது 66. தான் கலியாணங்கட்டிறனெண்டு உங்கை கனபேரைக் கேட்டவர். அமுதினி வேலை செய்த இடத்திற்கு நெடுகப்போய் வந்திருக்கிறார்.
இஞ்சை எங்கடை சனம் தெரியும்தானேக்கா தனிய எங்களை வாழ விடாதுகள்.....! அவளுக்கும் வேறை வழியில்லை இவர் வெளிநாடு எடுக்கிறனெண்டு சொல்லி கலியாணங்கட்டீட்டார். பிறகு வெளிநாடும் எடுக்கேல்ல வருசத்துக்கு ஒருக்கா வந்து 3மாதம் நிண்டிட்டுப் போறார். ஒரு கடையும் போட்டுக்குடுத்து ஓட்டோ ஒண்டும் எடுத்துக் குடுத்திருக்கிறார். பிள்ளைக்கும் இப்ப 2வயதாகீட்டுது. அவர் வெளிநாடு கொண்டு போறது கஸ்ரமெண்டு சொல்றாராம்.

அவரது பெயர் விபரத்தை விசாரித்தேன். அவள் சொன்ன போது எனக்கு யாரோ மூஞ்சியைப் பொத்தி அடிச்சது மாதிரியிருந்தது. 2010ம் ஆண்டு நான் வானொலியொன்றில் நேசக்கரம் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒருவர் தொடர்பு கொண்டு விதவைகளுக்கு உதவ விரும்புவதாகக் கேட்டிருந்தார். நானும் வயதான ஒருவர் தன் பிள்ளையைப் போலொருத்திக்கு உதவுவார் என நம்பி கதைத்த போது அவர் ஒரு போரால் பாதிக்கப்பட்ட விதவையை தான் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்.
எனக்கு அறுவது தாண்டீட்டுது மனிசி செத்துப்போட்டா 4பிள்ளையள் அவையெல்லாம் கலியாணம் கட்டீட்டினம் நான் நல்லா வேலை செய்தனான்...இப்ப பென்சன் வருது....நான் செத்துப் போனா என்ரை பென்சன் வீண்தானே.....ஆரும் ஒரு பிள்ளையை கலியாணம் கட்டினா அந்தப்பிள்ளைக்கு என்ரை காசும் பிரியோசனப்படுமெல்லே ?

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் அந்த அறுபது தாண்டிய ஐயாவின் இரக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஐயா நீங்கள் கலியாணம் கட்டாமல் உங்கடை பென்சனில பத்துப்பிள்ளையளைப் படிப்பிச்சு விடுங்கோவன் ? எங்கடை பிள்ளையின்ரை வறுமையை நீங்கள் ஒரு தமிழன் இப்பிடி பயன்படுத்த நினைக்கிறது சரியோ ?

ஐயாவுக்கு கடும் கோவம் வந்திட்டுது. நான் ஊரில போனால் ஆளாளுக்கு வயது வித்தியாசம் பாக்காமல் வந்து நிக்குங்கள். இப்பத்தைய நிலமையில வெளிநாடு வாறதெண்டா உந்த வயது வடிவு ஒண்டும் பாக்காமல் வெளிக்கிடுங்கள் தெரியுமே ?

அதுக்கு மேல் அவரோடு முரண்பட்டு வாதிட விரும்பாமல்.....சரி உங்கடை விருப்பப்படி செய்யுங்கோ ஆனால் தயவு செய்து எனக்கு ரெலிபோனெடுக்காதையுங்கோ என்னிட்டை இப்பிடி கலியாணங்கட்ட பெண் கேட்காதையுங்கோ.....! சொல்லிவிட்டுத் தொடர்பை நானே அறுத்தேன்.
அதன் பின் பல தடவை அந்த ஐயா தொடர்பு கொண்டு ஒரே தொல்லையான போது இனிமேல் என்னுடன் இத்தகைய கதையோடு வந்தால் பெயர் விலாசம் யாவற்றோடும் ஊடகங்களில் அம்பலப்படுத்திவிடுவேன் எனச் சொன்னபோது „' நீ பாரன் நான் ஊருக்குப் போய்....அடுத்த வார்த்தைகள் தமிழில் உள்ள கெட்டவார்த்தைகளாக தொடர்பைத் துண்டித்து அந்த இலக்கத்தையும் தொலைபேசியில் நிறுத்தி விட்டேன்.

அன்று சவால்விட்டு  இதோ பார் என்ற அதே நபர் அமுதினியைத் திருமணம் செய்துள்ளதை மனசால் ஏற்க முடியாது போனது. இந்த நிலமைக்கு இட்டுச் சென்ற எல்லார் மீதும் கோபமே வந்தது.

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

அக்கா என்னை பிழையாய் நினைக்கக்கூடாது இப்பிடியான வயது போன யாரும் இருந்தா எனக்கும் ஒண்டைக்கட்டித்தாங்கோக்கா நானும் என்ரை பிள்ளையை ஒரு நல்ல நிலமைக்கு கொண்டு வந்திருவன்...!

உமக்கென்ன விசரோ ? பைத்தியம் மாதிரி....! (தணிக்கை...) எனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது கட்டுப்பாட்டை இழந்து அவள் மீது கோபமாக மாறியது. அவள் அழத்தொடங்கினாள்.

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான் தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம் இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!
சாமானுகள் விக்கிற விலையில சாதாரணமா வாழிறதெண்டாலே நாளுக்கு ஐநூறு ரூவாய் வேணும்....மாதத்துக்கு 15ஆயிரம் ரூவாய் அதுகும் என்னைமாதிரியான ஊனங்களுக்கு மருந்து அதிதெண்டு எவ்வளவு தேவையள்...! ஆரிப்ப எங்களை மதிக்கினம் சொல்லுங்கோ பாப்பம் ?
அறுவது வயதோ எழுவது வயதோ இருக்கிற வரையும் ஏதோ வாழ்ந்திட்டுப் போக ஆராவது வெளிநாட்டு ஆம்பிளையள் முன் வந்தா நான் கட்டுவனக்கா....! ஏனெண்டா எனக்கு என்ரை பிள்ளையின்ரை வாழ்க்கை முக்கியம்....! அவள் அழுதழுது சொல்லிக் கொண்டு போனாள்....

என்னால் அவளது முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தொலைபேசியை நிறுத்தினேன். அவளது கதைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் ஊனமென்றதை தெரிந்தே முன்வந்து காதலித்து அவளை அவளது கணவன் திருமணம் செய்தான். அவளது ஊனத்தை அவன் ஒரு போதும் சுமையாகவே எண்ணியதில்லை. கண்ணுக்குள் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். இன்று அவன் ஒரு வேளை உயிரோடிருந்து இந்த முடிவினைக் கேட்க நேரின்....???

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்திருந்த போராளிப்பெண்களின் குரல்களில் ஒரு குரல் போலவே இவளது குரல் எனக்குள் வந்து வந்து போனது....! இந்த அவலங்களுக்கெல்லாம் காரணமான நானும் என்போன்ற தமிழர்களும் இவர்களது வாழ்வை மாற்ற என்ன செய்யப்போகிறோம் ?????
05.04.2013 அதிகாலை தொடக்கம் மதியம் வரையும் 11தடவைகள் மிஸ்கோல் விட்டிருந்தாள். 2குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தாள்.

05.04.2013 மாலை 15.57இற்கு அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் இப்படித்தான் எழுதியிருந்தாள்:-

அக்கா மன்னிச்சுக் கொள்ளுங்கோ....உங்கடை தொடர்பு வந்த போது என்னுறவை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தேன். எனது இயலாமையையே உங்களிடம் சொன்னேன். நான் கதைத்தது பிடிக்காமல் கட் பண்ணீட்டீங்கள். அக்கா உங்களை நம்புகிறேன் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் எதிர்பார்த்திருக்கிறேன்.

06.04.2013 (இரவு 00.45மணி)

3 comments:

தீபிகா(Theepika) said...

தர்மம் கைவிட்ட தேசக்குழந்தைகள்
---------------------------------------------------

நீதியும் தர்மமும் கைவிடாதென்றற நம்பிக்கையில் ஈழத்தில் களம் குதித்த புதல்விகளை எல்லோரும் இன்று கைவிட்டு விட்டார்கள். தம் சொந்த மக்களின் வாழ்க்கைக்காக மனமிரங்கி களம் குதித்தவர்கள் இன்று தம் சொந்த வாழ்க்கைக்காகவே போராட வேண்டியவர்களாகி விட்டார்கள்.

சண்டை முடிந்து நாட்டு நிலைமை சீராயிற்று என்கின்றோம். எல்லோரும் வீடு கட்டுகிறோம். விழா எடுக்கிறோம். வீதி புணரமைக்கிறோம். மிகப்பெரிய கடவுள் சிலை அமைக்கிறோம். வெளிநாட்டிலிருந்து போய் வருகிறோம். இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை. நாடு அந்த மாதிரி இருக்கு என்கின்றோம்.

தங்கள் தங்கள் பாடசாலைப் பற்றை வளர்த்து பழைய மாணவர் சங்கத்தின் பெயரில் கட்டிடம் கட்டுகின்றோம். மாபெரும் துடுப்பாட்டப் போட்டிகள் நடத்துகின்றோம்.

தன் இனத்திற்காக...தன் மக்களிற்காக..தன் மண்ணிற்காக...தன் மொழிக்காக...தன்னை கொடுத்த மனிதர்களை தாங்கிக் கொள்ளத் தான் தயங்கி நிற்கின்றோம்.

அவர்களுக்காகவும்..அவர்கள் குழந்தைகளுக்காகவும்..அவர்கள் குடும்பங்களுக்காகவும் கேட்காமலே தேடிச் சென்று உதவி செய்ய வேண்டுமென்று எங்கள் மனசுகள் நினைக்க வேண்டாமா?

ஒவ்வொரு கழகத்தின் பெயராலும்..ஒவ்வொரு ஆலயங்களின் பெயராலும்..ஒவ்வொரு அமைப்புக்களின் பெயராலும்...ஒவ்வாரு பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க கிளைகளின் பெயராலும்..ஒவ்வொரு வர்த்தக சங்கங்களின் பெயராலும்...நாம் சிறுதுளி பெருவெள்ளமாய் எத்தனை பெரிய உதவியை கொண்டு போய்ச் சேர்த்திருக்க முடியும்?

ஆங்காங்கே தனித்தனி மரங்களாய் சில மனிதாபிமான மனிதங்கள் மிகச்சிலருக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பதற்கு அப்பால் நாம் பாராமுகமாய் இருந்து கொண்டிருக்கின்றாம் என்பது தான் நிதர்சனம்.

விளம்பரங்களற்று உதவிக்கரம் நீட்ட வேண்டிய மனிதநேயப்பணி இது. ஈழத்தில் ஒரு சகோதரி சாப்பிட வழியற்று கைக்குழந்தையோடு இப்போதும் அலைந்து கொண்டு தானிருக்கிறாள். அவள் நம்மை தேடிக் கண்டுபிடித்து உதவி கேட்கிற நிலையில் இல்லை. நாம் தான் அவர்களை தேடி கண்டு அடைய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

சாந்தி நேசக்கரம் said...

தர்மமும் தர்மர்களும் கைவிட்ட அவலங்கள் எங்கள் இனத்தின் இப்போதைய கையறு நிலைக்கான காரணங்கள் தீபிகா.

குட்டிபிசாசு said...

படித்த பிறகு சொல்ல முடியாத வேதனை.