Wednesday, September 21, 2011

காலம் கரைத்துவிட்ட வசந்தங்கள்.

வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம்.

அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது.

அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்மா அப்பா எல்லாரும் கூடியிருந்து அயல்வீட்டில் படம் பார்ப்பார்கள். சிலவேளைகளில் சினிமாக் கொட்டகைகளுக்கும் அவள் போனதாகச் சொல்வாள். அவளுக்குத் தெரியாத பாடல்களே இல்லையெனும் அளவு அவள் எல்லாப்பாடல்களையும் ஞாபகம் வைத்துப் பாடிக்காட்டுவாள்.

அவளும் நானும் அதிகம் பேசத் தொடங்கியது உறவாடத் தொடங்கியது 6ம்வகுப்பு சித்தியடைந்து1986 வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்திற்குப் போன நேரம்தான். நான் குப்பிளான் விக்னேஸ்வராவிலிருந்து போக குரும்பசிட்டி பரமானந்தாவிலிருந்து அவளும் வசாவிளானுக்கு வந்தாள். எனது வகுப்பிற்கே அவளும் வந்தாள். புதிய முகங்கள் நடுவில் எனது ஊர்க்காரி அவளுடன் தான் போயிருந்தேன். உயரவமானவர்களை பின்வரிசையில் இருத்தினார்கள். அத்தோடு நானும் அவளும் இன்னும் 3பேரும் எங்கள் வகுப்பில் அதிக உயரமாகையால் கடைசி மேசையில் எங்கள் படிப்பு ஆரம்பமானது.

அவள் குரும்பசிட்டியால் வசாவிளானுக்கு வந்துவிடுவாள். நான் பலாலி வீதியால் போய்விடுவேன். கிடைக்கின்ற இடைவெளிகளில் அவளிடமிருந்து படக்கதையும் பாட்டும்தான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவள் சொல்லும் படங்களை நானும் பார்க்க விரும்புவேன். வீட்டில் சினிமாவென்று சொன்னாலே சொல்லத் தேவையில்லை. அம்மா அடிக்கடி படிப்பு படிப்பென்றுதான் ஓதிக்கொண்டிருப்பார்.

அப்பா வசந்தமாளிகை படத்தில் சிவாஜி கணேசனின் , வாணிசிறியின் நடிப்பையும் வசனங்களையும் பாடமாக்கி கள்ளடித்துவிட்டு ஊரெல்லாம் கேட்கப் பாட்டுப்பாடுவார். தனது இழந்துபோன காதலியின் வேலியில் போய் நின்று வெறியில் வசந்தமாளிகையை புதுபுதுப்பித்து உரைப்பார். வேலியைப் பிரித்துக் கொண்டு வந்து வெட்டு விழும்போல வேலிக்கால் குரல்கள் வரும். பின்னர் அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் அம்மாவும் நாங்களும் அப்பாவின் வாயைமூடுவிக்க ஆயிரம் வழிகளைத் தேடுவோம். ஆனாலும் அப்பா ஆளையறியாத வெறியிலும் கண் விழிக்கும் நேரமெல்லாம் காதலியின் பெயரை உச்சரிக்க மறப்பதேயில்லை.

அப்பாவின் சினிமாப்பயித்தியம் எங்களில் ஒட்டிவிடாமல் நாங்கள் படிக்க வேணும் என்பதும் தமிழர்களால் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் டொக்கர் தொழிலையுமே அம்மா கனவு காணுவா. காதில கொழுவி அம்மாவை நாங்கள் வருத்தம் சோதிக்க வேணுமெண்டது அம்மாவின் கனவு. அயல் பிள்ளைகள் அல்லது பாடசாலை நண்பர்கள் எவருடனும் பழக்கம் வைத்துக் கொள்ள அல்லது போய்வர எதுவித அனுமதியுமில்லை. காலமை பொழுது விடிய முதல் எழும்பிப்படிப்பு , விடிஞ்சா வீட்டு வேலைகளுக்கு உதவிவிட்டு 7.30இற்கு பள்ளிக்கூடம் போய் மதியம் 2மணிக்கு வந்து ரியூசன் படிப்பு மாலை இருளில் வீடு வந்து வளமையான சுழற்சி. அந்த வயதுக்கான விளையாட்டு அயல் பிள்ளைகளுடன் ஓடியாடி உலாத்தல் எதுவுமில்லை.

அம்மாவில் கடும் கோபம்தான் வரும். அதுவொரு சிறைச்சாலை போலவேயிருந்தது. எங்கள் வீட்டுக்கு ஒரு வளவு தாண்டியிருந்த வயிரவர் கோவில் ஆல்விழுதில் ஊஞ்சல் ஆடியும் வாசகசாலையின் முன்னுக்கு கிளித்தட்டு விளையாடுவதற்கும் அனுமதியில்லை. ஊர்ப்பிள்ளைகள் அங்கே விளைாயடுவதை வடக்குப் பக்க வாசல் கதவாலும் யன்னல் கம்பிகளாலும் நானும் தங்கைகளும் வரிசையில் நின்று பார்ப்போம். சிலவேளைகளில் அம்மா வரும் நேரத்தை முன்கூட்டி அறிந்தால் அம்மா வர முதல் ஆலடியில் போய் விளையாடுவோம். அம்மாவின் அரவம் கேட்டால் ஓடிப்போய் புத்தகங்களை எடுத்துப் படிப்பது போல் நடிப்போம். ஆனாலும் அம்மாவின் அந்தச் சிறைச்சாலைக் காவலுக்குள்ளும் அம்மா அறியாமல் தோழிகளுடன் சுற்றியது கீரிமலைக்குப் போனது பலாலிக்கடற்கரை பார்த்தது பலாலி விமான ஓடுதளம் பார்த்ததென நிறைய சொல்லாத சேதிகள். அதெல்லாம் போகட்டும். எனக்குள் இன்று மீண்டும் ஞாபகமாய் வந்த அவளைப்பற்றி அவள் கதைபற்றிச் சொல்லப்போறன்.

அவள் தான் அழகாயில்லையென்று தனக்குள்ளேயே ஒரு தத்துவத்தை வைத்திருந்தாள். தான் உருவத்தால் பெருத்தவள் என்ற தாழ்வுச்சிக்கலை அவளது சினிமாக் கதைகளுக்கு நடுவில் சொல்லிக் கொள்ள மறக்கமாட்டாள். அவளது வரிசையான நேர்த்தியான பற்களும் அவளது நீண்ட தலைமுடியை இரட்டைப்பின்னலாய் கறுத்த றிபனால் கட்டி வரும் அழகை மடிப்புக்கலையாத அவளது வெள்ளைச்சட்டையில் அவள் ஒரு தேவதையென்று சொன்னாள் நம்பவேமாட்டாள்.

முதலாவது றிப்போட் வந்தது. எல்லாப்பாடங்களுக்கும் அவளும் சிறந்த புள்ளிகள் பெற்றாள். சினிமாவும் பார்த்து சினிமாப்பாடல்களையெல்லாம் பாட்டுப்புத்தகம் வாங்கி படித்து எப்படி சிறந்த பெறுபேறுகளையும் பெற்றாள் என்பது எனக்கு விளங்கவேயில்லை.
சிலருக்கு இயல்பாயே எல்லாவற்றையும் கிரகிக்கவும் செய்யவும் கூடிய வரத்தை இயற்கையின் கொடையாய் இறைவனாக நம்பும் சக்தி கொடுத்துவிட்டிருக்கிற வரத்தை அவளும் பெற்றிருந்தாள்.

படங்களில் வந்த நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் சொல்லுவாள். அவள் வகுப்பில் இருந்தால் அது எனக்கு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும். அவள் பார்த்த சினிமாப்படங்களையெல்லாம் எனது கொப்பிகளில் குறித்து வைப்பேன். படிச்சு முடிய அம்மா சொன்னமாதிரி எல்லாப்படங்களையும் பாக்க வேணுமென்ற ஆசையில். அந்தக் கொப்பிகளுக்குள் ஆயிரமாயிரம் கதைகளை கதைகளுக்கான தலைப்புகளையெல்லாம் எழுதி வைத்ததெல்லாம் அம்மா அறியவேயில்லை.

எங்கள் ஊரில் இயங்கியது இரண்டு தனியார் கல்வி நிலையங்கள். அதில் ஒன்றில் அவள் படித்தாள். மற்றையதில் நான் படித்தேன். இரண்டு நிலையங்களிலும் படிப்போருக்கு ஆளாளுக்கு அவர் பெரிசு இவர் சிறிசென்று சண்டையும் வரும். ஆனால் எங்களுக்குள் எவரைப்பற்றியும் பிரச்சனையில்லை. மாலைநேர வகுப்புகளுக்குச் செல்லும் சாட்டில் அவளோடு நானும் சேர்ந்து போவேன். கிடைத்த தருணங்களை அவளோடு செலவளிப்பதில் அத்தனை பிரியம்.

அடுத்த றிப்போட்டுக்கு முதல் பலாலியிலிருந்த ஆமி வசாவிளான் பள்ளிக்கூடத்தை ஆக்கிரமிக்கப் போவதான அசுகைகள் வெளியாகியது. கேணல்.கிட்டுவின் அறிவிப்பில் வசாவிளான் மத்தியமகாவித்தியாலயத்தின் கூரைகளும் கதவுகளும் கழற்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு மாலைநேரம் அந்தச் செய்தி எங்கள் ஊர்வரையும் வந்தது. பாடசாலைப் பொருட்கள் புன்னாலைக்கட்டுவன் வழியாய் இடம்மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அழகான பள்ளிக்கூடத்தின் நாங்கள் ஆசையுடன் ஏறியிறங்கும் மேல்மாடிக்கட்டடம் குரோட்டன்கள் அழகான தாமரைக்குளம் எல்லாம் தனித்து எங்கள் கனவுகள் புதைந்த பள்ளிக்கூடம் அகதியாகிப்போனது. நாங்களும் அகதியாகினோம். எங்கள் சமாதிகோவிலடி வீடுகளெல்லாம் உயர்பாதுகாப்பு வலயமாகி நாங்களெல்லாம் இடம்பெயர்ந்தோம்.

அடுத்து வந்த மாதங்கள் எறிகணை வீச்சு எங்களுடன் படித்த புன்னாலைக்கட்டுவன் பதுமநிதியும் அவளது அப்பா இளையதம்பியும் அவளது அக்காவும் இறந்து போன துயரம் அத்தோடு மட்டுமில்லாது எங்கள் ஊரிலும் பல உறவுகள் ஆமியின் செல்லிற்கும் கெலியின் சூட்டிற்கும் இறந்து போனார்கள்.

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம். இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.
அகதியான எங்கள் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் மீண்டும் புதிதாய் பிறந்தது. அவளும் பாடசாலைக்கு வந்தாள். திரும்பவும் வகுப்புப் பிரிப்பில் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான். அவளுக்கும் எனக்கும் 14வயதாகியிருந்தது. அவள் ரியூசன் போய்வரும் வழியில் சில சயிக்கிள்கள் அவளைச் சுற்றுவதாகச் சொன்னாள். அவள் பாடிய பாடல்களையெல்லாம் மிகுந்த இரசனையுடன் படித்தாள். பாடநேரங்களில் புத்தகத்துக்கு நடுவில் பாட்டுப்புத்தகத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவளைச் சுற்றியோர் கோட்டையை உயர்த்தி அந்த உலகில் அவள் சஞ்சரிக்கத் தொடங்கினாள். நல்ல கெட்டித்தனமாகப் படித்தவள் படிப்பிலிருந்து கவனத்தைச் சிதைக்கத் தொடங்கினாள். பலர் தனக்கு கடிதங்கள் எழுதுவதாகச் சொன்னவள். ஒருநாள் எங்கள் ஊரவன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவன் தன்னைக் காதலிப்பதாய் சொன்னாள். தானும் அவனைக் காதலிப்பதாய் சொல்லிச் சிரித்தாள். அவளது காதல் கதைகள் கேட்கப்பயமாயிருந்தது. அம்மா அறிந்தால் அவளுடன் பழகுவதையும் நிறுத்திவிடுவா. நான் பார்க்க முடியாத சினிமாக்கதைகளைச் சொல்ல அவள் இல்லாமல் போய்விடுவாள் என்ற சுயநலம் என்னை ஆட்கொண்டது.

அவளது அந்தக் காதலன் 5ம் வகுப்பு வரையும் தான் படித்திருந்தாகக் கேள்விப்பட்டேன். அவனது குடும்பத்தில் படிப்பு வாசனை சற்றுமில்லை. அவனது அண்ணன்கள் அக்காக்கள் மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவனது அக்காக்களுக்கும் அண்ணன்களுக்குள் 4,5,6,7 என குழந்தைகள் பிறந்திருந்தனர். காலையில் தோட்டங்களுக்குக் கூலிவேலைக்குப் போவார்கள். மாலையில் மம்மலுக்குள் வருவார்கள். புழுதியில் குளித்துக் குழந்தைகள் இருக்க சமைப்பார்கள் சாப்பிடுவார்கள் வீட்டின் ஆண்கள் சில நேரம் அதிகம் குடித்துவிட்டு சண்டை பிடிப்பார்கள். பெண்கள் ஆண்களின் அடிதாங்காமல் ஓலமெடுத்து அழுவார்கள் ஒப்பாரி வைப்பார்கள். இரவுகளில் 10வீடு தாண்டியும் அவர்களது சண்டைச் சத்தம் கேட்கும். அத்தகையதொரு குடும்பத்தில் வாழும் ஒருவன் 16வயதில் கூலிவேலைக்குச் சென்றுவரும் அவனை இவள் காதலித்தாள். அவனது வீட்டு ஆண்கள் போல் உன்னை அடிக்கமாட்டானா என்று கேட்டதற்குச் சொன்னாள். அவன் றெம்ப நல்லவன். என்னைக் கண்கலங்காமல் பாப்பனெண்டு சொன்னவன்.

இப்போது அவளது பள்ளிக்கூடப் பாதையில் ரியூசன் பாதையில் எல்லாம் அவன் வரத் தொடங்கினான். அவள் அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். அவனது தமிழ்க்கொலைக் காதற்கடிதங்களைத் திருத்தி வாசித்துக் கொண்டிருப்பாள். தனது அழகான கையெழுத்தால் அவனுக்காக பாடநேரங்களில் கடிதம் எழுதினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாய் நடமாடினாள். அதிகமான காதல் பாடல்களையெல்லாம் அழகாகப் பாடக்கற்றுக் கொண்டாள்.

உங்கடை அம்மா பேசமாட்டாவோ ?

கேட்ட எனக்குச் சொன்னாள்.

எங்கடையம்மாவும் காதலிச்சுத்தான் கலியாணங்கட்டினவா….

என்னுடைய அம்மாவும் அப்பாவை காதலிச்சுத்தானே கலியாணம் கட்டினவை…?
ஆனால் அவையளுக்குள் அந்தளவு அன்பு இருந்ததாய் தெரியேல்ல…?

அம்மாவின் அழுத முகம் , தனது வாழ்வை அப்பாவுக்காக தியாகம் செய்ததாய் சொல்லிக் கொள்ளும் தோல்வியும்தான் அம்மாவின் கதைகள் பற்றிய எனது அறிதல். இவள் எப்படி….? எனக்குள் பெரும் குழப்பத்தை உருவாக்கியது அவளது காதல்.

000 000 000

மீண்டும் போன எங்கள் பாடசாலையில் கட்டடங்கள் வெறுமையாகி கூரைகள் இல்லாது மொட்டையாகியிருந்தது மண்டபங்கள். தற்காலிக ஓலையால் வேயப்பட்ட கூரைகளின் கீழ் எங்கள் கல்வியும் கற்பித்தலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1988ம் ஆண்டு தைமாதம் எனது வெள்ளைச் சட்டையில் சிவப்புகறைகள் படிந்ததை அவள்தான் முதலில் காட்டினாள். அதைக்கேட்டு அழுத என்னைச் சமாதானப்படுத்தி சிவபாதம் ரீச்சரிடம் சொல்லி ஏ.எல் அக்காக்கள் இருவரோடு என்னை வீட்டுக்கு அனுப்ப வைத்ததும் அவள்தான்.

எனது ரியூசன் தோழிகளுக்கெல்லாம் அவள் தகவல் சொன்னாள். எனக்குள் இன்று வரையும் காயமாய் கடிதமாய் கதைகளாய் கவிதைகளாய் இனிய ஞாபகமாய் இருக்கிற என் அந்தநாள் தோழி ஏழாலை நதியாவுக்குக்கும் புதினம் சொல்லியதும் அவள்தான்.

ஊரைக்கூட்டி பந்தல் போட்டு மணவறை வைத்து கம்பளம் விரித்து ஆராத்தியெடுத்து அழகான சேலையுடுத்தி போட்டோ எடுத்து எனக்கு அம்மாவினதும் அப்பாவினதும் ஏற்பாட்டில் நடந்த கொண்டாட்டத்திற்கும் அவள் எனது பிரத்தியேக அழைப்பின் பேரால் வந்திருந்தாள். கனகாம்பரமாலை கட்டி சிவத்தப்பாவாடை சட்டையும் வெள்ளைத் தாவணியும் போட்டு எனக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். என்றும் போல அவளது நகைச்சுவையும் சிரிப்பும் எனக்குள் புத்துயிர்ப்பைத் தந்தது.

கொண்டாட்டம் முடிந்து பள்ளிக்கூடம் செல்லத் துவங்கினேன். அவள் எங்கள் ஊரில் நடைபெற்றுக் கொண்டிருந்த காதல் கதைகளையெல்லாம் சொன்னாள். கோவில் திருவிழாவில் காணாமற்போன சோடிகள் பற்றியெல்லாம் சொன்னவள் ஒரு நாள் அவளும் அவனோடு ஓடிப்போனாளென்ற செய்தி எனக்கும் வந்தது.

அவள் ஓடிப்போவதற்கு முதல் ஒருநாள் எனக்கு ஒரு பரிசு தந்தாள். ரகுமானின் படம் போட்ட பாட்டுப் புத்தகம் அது. என்னை வைச்சிருக்கச் சொன்னாள். அத்தகைய புத்தகம் என்னிடம் இருப்பதை அம்மா அறிந்தால் சர்வாதிகாரி கிட்லராக மாறிவிடுவதுடன் அம்மாவின் கையில் எட்டும் எல்லாவற்றாலும் சாத்துவாங்க வேண்டுமென்று சொன்னேன். அவள் என்னை நக்கலடித்துச் சிரித்தாள். பயந்தாங்கொள்ளியென்று பரிகசித்தாள்.

சர்வாதிகாரி கிட்லரின் அடிக்குப்பயந்து அழகான ரகுமானின் படம்போட்ட பாட்டுப்புத்தகத்தை வாங்கவில்லை. அந்தப்புத்தகத்தில் முன்பக்கத்தில் இருப்பது ரகுமானென்றும் ரகுமானின் படப்பாடல்கள் அவையெனவும் சொன்னாள். படம் பார்க்காமல் முதல் பிடித்த நடிகராக ரகுமானுக்கு நான் ரசிகையாகிவிட்டேன்.

அடுத்த வருடத்துச் சிவராத்திரியில் எங்கள் வயிரவர் கோவிலில் ஓடிய சினிமாப்படத்தில் ரகுமான் , பிரபு நடிப்பில் வெளியான ஒருவர் வாழும் ஆலயம் படம் போட்டார்கள். வதனிமாமி ஊடாகக் கேள்விப்பட்டேன். எப்பிடியும் ரகுமானின் அந்தப்படத்தைப் பார்க்க வேணுமென்ற ஆசை. அம்மாவுக்குத் தெரியாமல் அம்மம்மாவிடம் இரகசிய அனுமதி வாங்கி வதனிமாமி இதயம்மாமியாக்களுடன் படம்பார்க்கப் போனேன்.

ஊர்ப்பிள்ளைகள் பெரியவர்கள் படம்பார்க்கக் காத்திருந்தார்கள். எனது முதலாவது சினிமாக்கனவு நிறைவேறிய நாள். நான் எதிர்பார்த்த ரகுமானின் படம் வராமல் பழசுகளின் விருப்பத்தில் கறுப்பு வெள்ளைப்படம் பராசக்தி தான் முதலில் ஓடியது.

2வதாக ரகுமானின் படம் துவங்கியது. அந்தச் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்து கலர்கலராய் நடிகர்கள் வந்தார்கள். அவள் எனக்குக் கதைசொன்ன சினிமாக்களில் நான் கண்ட சினிமாவுலகம் மிகவும் பெரியதாய் என் முன்னால் விரிந்தது. ஒற்றைச் சிறுபெட்டிக்குள்ளிருந்து இத்தனை அதிசயங்களா ?

அந்த வயிரவர் கோவில் முன் வெளியில் இருளில் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளியை மட்டும் பரவவிட்டிருந்தார்கள். முன்வரிசையில் வதனிமாமிக்குப் பக்கத்தில் இருந்தேன். என்னிலும் 3வயது மூத்த வதனிமாமி தியேட்டரெல்லாம் போய் படம்பாத்திருக்கிறாள். வதனி மாமிக்கும் பாட்டு படமெண்டால் பயித்தியம்தான். ரயில் பயணம் தியேட்டரில் பாத்திட்டு வந்து ஒருநாள் எங்களுக்கெல்லாம் கதைசொல்லி பாட்டெல்லாம் பாடிக்காட்டியிருக்கிறாள். பிரபுவின் ரசிகர்கள் பிரபுவுக்குக் கைதட்டி ஆரவாரிக்க சிவகுமாரின் ரசிகர்கள் சிவகுமாருக்குக் கைதட்ட ரகுமானின் ரசிகை நானும் ரகுமானுக்குக் கைதட்டினேன்.

வானத்தில் பூத்திருந்த நட்சத்திரங்கள் யாவும் இறங்கி எங்கள் வைரவர் கோவில் வெளியில் கொட்டிக் கிடப்பது போலிருந்தது. அந்த இரவின் அமைதியையும் அழகிய நட்சத்திரங்களை அள்ளி வைத்திருக்கும் மேகத்தின் நடுவில் நடக்கின்றதான மிதப்பு. முதல் பார்க்கும் சினிமாவின் நாயக நாயகிகள் அந்த வெளியில் இறங்கி வந்திருப்பது போலிருந்தது.
எடியே எழும்படி…..! எழும்பு…! வதனிமாமியின் குரல் கேட்டு எழும்பிய போது பொழுது விடிந்துவிட்டிருந்தது. என்னைப்போல பல சிறுவர்கள் அங்கே அந்த மண்ணுக்குள் நல்ல நித்திரை. வதனிமாமி இதயம் மாமி இன்னும் சிலரும் நித்திரையான எல்லாருக்கும் கரியால் மீசை வைத்து விட்டிருந்தார்கள். *ஒருவர் வாழும் ஆலயம்* பார்க்கும் ஆசையில் போய் கடைசியில் மண்ணுக்கை நித்திரை கொண்டதுதான் மிச்சம். ரகுமானின் படம் பார்க்கும் கனவு நிறையாமல் போனது சோகம் தான்.

வீட்டுக்கு ஒளித்து வந்தேன். ஆனால் கிட்லர் அம்மாவுக்கு இரகசியம் தெரிஞ்சு கிழுவங்கட்டையோடு அம்மா நிண்டா. சர்வாதிகாரி கிட்லர் அம்மாவிடம் அடிவாங்காமல் தப்ப அன்னை தெரேசாவின் வடிவான அம்மம்மாவிடம் அடைக்கலமானேன்.

கிட்லர் அம்மா அம்மம்மாவைப் பேசிக்கொண்டு போனா. குமர்ப்பிள்ளையை இரவில படம்பாக்க விட்டிருக்கிறா. படம்பாத்தா படிப்பெங்கை ஏறப்போகுது….ஓமடியாத்தை போ நீ படிச்சுக் கிழிச்சனிதானே….அம்மம்மா புறுபுறுத்துக் கொண்டிருந்தா.

அது இந்திய இராணுவ காலம். காலையும் மாலையும் அவர்களது ஒலிபரப்பிலும் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனலிலும் புதுப்புதுப்பாடல்கள் வரும். எங்காவது வானொலிச் சத்தம் கேட்டால் அந்தத் திசைநோக்கியே எனது செவிப்புலன் வேரூன்றிவிடும். அன்றோடு அம்மாவின் நேரடிக்கண்காணிப்பில் கொண்டு செல்லப்பட்டேன்.

அவளை வீதியில் காணுவேன். அவள் சேலையுடுத்துக் கொண்டு போவாள். அவளுடன் ககைக்க முடியாது தடைச்சட்டம் அம்மாவிடமிருந்து பிறந்திருந்தது. அவள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறாள் எனச் சொன்னார்கள். அவளை அம்மாவாகப்போகிற பெரிய வயிற்றுடன் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நிறைவேறியது. அவள் கிளினிக் போய்விட்டு ஒரு நாள் பகல் 11மணிபோல் எங்கள் வீட்டடியால் நடந்து போனாள். என்னைப் பாத்திட்டுத் தெரியாதமாதிரிப் போனாள்.

இந்திய இராணுவம் முளத்துக்கு முளம் சென்றிபோட்டு இருந்த வீதிகள் தாண்டி அவள் ஒருநாள் குழந்தைப்பேற்றுக்காக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது முதல் பிரசவம். அவளது குழந்தை உலகைக்கண்திறந்து பார்த்த மறுநாள் அந்தப் பெரியாஸ்பத்திரியில் ஒரு மனிதப்படுகொலை நிகழ்ந்தேறியது. பல உயிர்கள் அங்கு பலியெடுக்கப்பட்டது. தங்கியிருந்த நோயாளிகள் ஆளாளுக்குத் தப்பியோடினர்.
அவள் தனது குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டை வந்திட்டாளாம்….பஞ்சாய் செய்தி ஊரெல்லாம் பரவியது. பின்னர் அவளது அம்மாவும் வேறு பெரியவர்களும் குறுக்குப் பாதைகளால் போய் யாழ் பெரியாஸ்பத்திரியில் அவளது குழந்தையைக் கொண்டு வந்துவிட்டதாய் 5வது நாள் செய்தி அடிபட்டது.

000 000 000

காலம் யாரினதும் இடைஞ்சலுமின்றித் தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் அதன் பின்னான எங்கள் ஊர்பிரிவு…..இடம்பெயர்தல் என எங்கள் பயணங்களில் 1992 மார்ச்மாதம் 5குடும்பம் இணைந்திருந்த அவள் இருந்த வீட்டுக்கு முன்னால் நாங்களும் போயிருந்தோம். அவள் 3பிள்ளைகளுக்கு அம்மாவாகியிருந்தாள்….. அவளது பழைய முகம் அவளிடமில்லை. வயதிற்கு மீறிய முதுமையும் குடும்பபாரமும் அவள் மீது விழுந்து கிடந்தது. அவளது வாழ்வு மாறிப்போனது.

000 000 000

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்த 2002…சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரம். வவுனியாவிலிருந்து வன்னிக்குப் போவதற்கான பாஸ் அனுமதிக்காக பிறவுண் கொம்பனியில் காத்திருந்த நேரம் அவளது சித்தியை அங்கே கண்டேன். அவளது சித்திக்கு என்னை ஞாபகமில்லை மறந்துவிட்டிருந்தா.

உறவினர் ஒருவரிடம் அவளைப்பற்றி விசாரித்த போது இப்படிச் சொன்னார்கள்.….,
அவளது காதல் கணவன் தற்கொலை செய்துவிட்டானாம். இவள் உயிரோடு இருக்க அவனை நம்பி பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் அவனை மட்டும் நம்பித் தனது எதிர்காலத்தை இருளாக்கிப் போனவளை விட்டு ஊரில் ஒருத்தியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாம். அவன் குடித்துவிட்டு அவளை நெடுலும் அடிப்பானாம்.

அவனது கள்ளத் தொடர்பு அவளுக்குத் தெரிய வந்து அவளுடன் முரண்பட்டானாம். கள்ளக்காதலி நல்ல வடிவான பெட்டையாம். அவளும் அவனோடு வாழ வேணுமெண்டு அடம்பிடித்தாளாம். கடைசியில் கள்ளம் ஊரெங்கும் தெரியவர அவன் தற்கொலை செய்து கொண்டானாம். அவள் தனது குழந்தைகளுடன் தனித்துப் போனாள். இளவயதுக்காதல் திருமணம் அவளை இளவயதிலேயே விதவையாக்கி குழந்தைகளோடு கூலி வேலைக்குச் சென்று தனது குழந்தைகளைப் பராமரித்தாளாம்.

2004இல் அவளது பெண்குழந்தை நோயுற்றிருப்பதாகச் சொன்னார்கள். கண்டுபிடிக்கப்படாத நோயால் வலிதாங்கியது அவளது குழந்தை. ஓடியாடிய குழந்தை படுக்கையில் போனது. அதன் பின்னர்தான் அவளது பெண் குழந்தையின் எலும்பில் புற்றுநோயென்று அறியப்பட்டது. அவளது குழந்தையும் நோயின் கடைசி எல்லையைத் தொட்டு இறந்துபோனது. 30வயதிற்குள் அவள் வாழ்வு எல்லாச்சுமைகளையும் தாங்கி துயரப்பட ஏதுமில்லாமல் நொந்து போனாள்.
2010இல் முகப்புத்தகத்தில் உறவு ஊரவர் என நண்பர்களாக்கிய ஒரு உறவின் அல்பத்தில் அவளைப் பார்த்தேன். திரும்பி அவளைப்பற்றித் தேடியதில் கிடைத்த விடை. அந்தப் படத்தில் நல்ல அழகான ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார்கள். அதுதான் அவளது மகன். தகப்பன் மாதிரி நல்ல வெள்ளைப்பொடியனெல்லே…? அடையாளம் காட்டிய நட்பு எனக்குச் சொல்லியது. அந்த மகன் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியிருக்கிறானாம். பண உதவி தாராளமாகக் கிடைக்கிறதாம். வெளிநாட்டில் உள்ள உறவுகளால் அவள் நல்ல வசதியோடு வாழ்கிறாளாம்.

உவ லேசுப்பட்ட ஆளில்லைத் தெரியுமோ…? ரெண்டு மூண்டு வருசத்துக்கு முன்னை காசைக்கண்டவுடனும் பெட்டைக்கு கால்கை புரியேல்ல…..ஆரோ ஒரு வான்காரனோடை தொடர்பிருந்ததாம்…..பிறகு ஆக்கள் பேசி அவனை விட்டிட்டுதாம்…..ஊரவர் ஒருவரின் வாயிலிருந்து இந்தச் செய்தி வந்தது.

திருமண வயதை எட்டாத வயதில் அவள் காதலித்தாள். காதலுக்கான அர்த்தம் பரியாத அவளது காதலுக்கு ஆதரவு கொடுத்த அவளது அம்மா அப்பாவின் அக்கறையீனம்….திருமணம் என்றால் வாழ்க்கையென்றால் புரிந்து கொள்ள முடியாத வயதில் அவள் குழந்தையைப் பெற்ற போது....காதல் கணவன் கள்ளத் தொடர்பு தற்கொலை வரை பேசாமலிருந்தவர்கள்……

இப்போது எல்லாம் அறிந்த வயதில் அவள் ஒருவன் மீது காதல் கொண்டிருந்தாள் என்பதனை ஏற்கமுடியாது அவளை விமர்சித்து கலாசாரம் பண்பாடு பேசுகின்ற எல்லார் மீதும் கோபம் வருகிறது. அவள் துன்பத்தோடு வாழ்ந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்…..?

08.06.2011

1 comment:

தீபிகா(Theepika) said...

எதுவும் எழுத வார்த்தைகளற்று எரிகிறது மனது. ஆறுதலளிக்க முடியா கனத்த துயரின் வலியில் வழிகிறது கண்ணீர்.