Monday, January 11, 2010

வரலாறு எழுதிய கதைகளில் வாழாது போயினர்.

மெல்ல மெல்லக் கசியும்
உண்மைகளிலிருந்து
நீண்ட பெருவெளிக் கனவு
தற்கொலை செய்து கொள்கிறது.....

முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து
சொட்டுச் சொட்டாய்
சேர்த்து வைத்தவையெல்லாம்
இரத்தம் குளி(டி)த்துப்
பெருத்து நாறிப் பிணங்களாய்
மனித எலும்புக் கூடுகளாய்
வெளிவருகிறது.

நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய்
விட்டுச் சென்ற வார்த்தைகளும்
ஆள்மாறி ஆள்மாறி
அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு
துயர் வலியில் தடயமறிவிக்காமல்
தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்.

சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள்
சாவின் நிணம்மாறாத்
தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து....
யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று
ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால்
அவர்கள் உண்மை அடையாளம்
அழிக்கப்படுகிறார்கள்.

களம் விட்டால் அன்றி நிலமறியாப் பிள்ளைகளின்
நிலமை கவலை தருவதற்கும் மேலாய்
இக்காலத்தைச் சப்பித்துப்பிச் சபிக்கிறது.
இன்னொருவன் போராட
இன்னொருத்தி இறந்து போக
மிடுக்கோடு கவியெழுதிய கையில் - அவர்கள்
விட்டுச் சென்ற துயரம் வழிகிறது.

தோழியே என்றவன்(ள்) தொடர்பறுத்துத்
தொலைந்ததும்....
தங்கையே என்றவன் தன் கடைசிச் சிரிப்பை மட்டும்
தந்துவிட்டுச் சென்றதும்....
அக்கா என்றவன் அசுமாத்தமின்றிப் போனதும்....
மகளே என்றவர் மவுனமாய் ஆனதும்....
மருமகளே என்றவர் மண்ணணையில் வீழ்ந்ததும்.....

எல்லாம் போயிற்று
எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்
வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்
பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்
தனித்துப் போயினர்......

ஒரு நேர உணவிற்கும்
ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....
எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு
இன்னும் நம்புகிறார்கள்....
என்னை உன்னை எம் எல்லோரையும்......

01.01.2010

3 comments:

Yoga said...

அக்கா நல்லா கவிதை எழுதியிருக்கிறீங்க. நக்கல் இல்லை,மெய்யாலுமே!வலி தெரிகிறது.என்ன செய்ய?

- இரவீ - said...

//சப்பித்துப்பிச் சபிக்கிறது//
வேறு என்ன சொல்ல இருக்கு? :(

சாந்தி நேசக்கரம் said...

சொல்வதற்கு எதுவுமின்றி எல்லோரும் போய்விட்டனர்.