Sunday, November 15, 2009

தனித்துப் போயினர் அவர்கள்


யாரது ?

இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட
குற்றவாழிகளாய்
தனித்தனி அடையாளங்களுடன்.....

தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில்
அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள்
பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப்
பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது....

மணியாய் ஒலித்த குரல்
மறக்காத குரலுக்குரிய மொழி
மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ
இருமருங்கும் தடுத்திருக்க
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் .

செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய்
சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய்
அறிமுகமானவள்......
மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு
களங்களில் நின்று காவியச் செதுக்கலில்
தன் கடமைகள் செய்தவள்.....

இன்று...,
எல்லாம் எல்லாருமாய்
ஆட்தேடும் வரிசையில்
அவளும் அடையாளம் தெரிகிறாள்....
மீட்கவோ அவள் துயர் கேட்கவோ
எந்தக் குரல்களுமின்றி
தனித்துப் போயினர் அவர்கள்.....

தடையரண்கள் தகர்த்த கைகள்
முட்கம்பி முடிச்சுகளுக்குள்
முகம் தொலைந்து
வெறுமையின் கோரங்களால்
சூழப்பட்ட நிழல்களாய்.
இழந்து போனோம் எல்லோரையும்.....

நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வையெனப்
பாரதியின் எழுத்துக்களுக்கு
உயிர் கொடுத்த ஞானக்கண்கள்
குழிவிழுந்து ஒட்டியுலர்ந்து ஒடுங்கிக் கிடக்க
இன்னும் கனவுகளில் நாங்கள்......

(10.11.09 அன்று பார்த்த UNHCR ஒளிப்படத்தில் பாடகி மணிமொழியைப் பார்த்த போது எழுந்த வரிகள்....)

No comments: