Saturday, April 2, 2022

நிழற்குடை சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது

 எனது முப்பது சிறுகதைகள் அடங்கிய *நிழற்குடை * சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கிறது. இந்த நூலை வெளியீடு செய்த தடாகம் பதிப்பகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி.

2009 தொடக்கம் 2016 காலப்பகுதியில் எழுதப்பட்ட போரின் கதைகள்.


ஒன்லைனில் புத்தகத்தை வாங்கலாம்.

கீழ் வரும் இணைப்பில் சென்று பாருங்கள் :

https://www.panuval.com/nizharkudai-izhathu-sirukadhaikal-10020436

2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு. இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு நிழந் குடையை இந்தச் சிறுகதை வழங்கியிருக்கிறது. 

யுத்தத்தின் சத்தங்கள் நின்று போனதே தவிர அந்த மனிதர்களின் வாழ்வு போராட்டம் நிறைத்தே கடந்துகொண்டிருந்த நேரத்தில் நிழல் கொடுத்து அவர் களைத் தாங்கிய கதைகள் இவை. 

போரின் பின்னான காலத்தின் துயரம் என்பது உயிர்களை எப்படி வதைக்கும் என்பதன் சாட்சிகளாக 'நிழற்குடை' உயிரும் உணர்வும் கலந்திருக்கிறது. 

Friday, July 2, 2021

செல்வச்சந்திரன் மரணமும் நினைவுகளும்

 https://youtu.be/2oeotNpiNwY



வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன்  இறந்துவிட்டான்.

 அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான்.

அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். 

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது. 

சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம். 

இரவு 12.25 வீட்டுக்குள் போனதும் தொலைபேசியில் வந்திருந்த 

குரல் வழியான குறுஞ்செய்தியில் செல்வச்சந்திரனின்  மரணச் செய்தியை சிறையில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு விடுதலையான நண்பர் ஒருவர் குரல் பதிவிட்டிருந்தார். 

செல்வச்சந்திரன்...,

2011ம் ஆண்டு தைமாதம் எனக்கு அறிமுகமானான். 

செல்வச்சந்திரன்...., 

அக்கா அக்கா என அவன் சொன்ன கதைகள் அவன் சிரிப்பு..., ஞாபகங்களில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. 



தான் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். எனினும் தன் மரணம் பற்றிப் பேசியது இல்லை. வாழ்வேன் எனும் நம்பிக்கை தான் அவனோடு பேசிய பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். 

கல்வி கற்க வேண்டிய காலத்தில் அவன் பாதை மாறியது நீண்ட இலட்சிய ஓட்டத்தில் அவனும் ஒருவனாகினான். காலக்கடனைத் தீர்க்க செல்வச்சந்திரன் தன்னை ஒப்படைத்தான். 

காலநதி அவனைச் சிறையில் அடைத்து அவன் உயிர்நதியை இடையறுத்து நோயாளியாக்கியது. ஆனால் ஒருநாள் சிறையிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற அவனது நம்பிக்கை நிறைவேறி ஒன்றரை வருடத்தில் இறந்துவிட்டான். 

25.06.21 அன்று மதியம் குளிக்க கிணத்தடிக்குப் போன செல்வச்சந்திரன் மயங்கி விழுந்தான். மருத்துவம் கிடைக்க முன்னே அவன் உயிர் பிரிந்துவிட்டது. 


செல்வச்சந்திரனுக்கு என்ன நடந்தது? 

2வது தடவையாக மாரடைப்பு வந்து இறந்து போனான். சொல்கிறது மருத்துவ அறிக்கை. 

வாழும் கனவுகளோடு வாழத்தொடங்கியவன் இவ்வுலகிலிருந்தும் எங்களிடமிருந்தும் பிரிந்து விட்டான். 

2011 காலம் நேசக்கரம் ஊடாக செல்வச்சந்திரனின் குடும்பத்தினருக்கு தொழில் முயற்சி உதவியை வழங்கியும். கொஞ்சக்காலம் மருத்துவ உதவிக் கொடுப்பனவினை வழங்கியவர்களுக்கும் நன்றி. 

26.06.21 

சாந்தி நேசக்கரம்

Friday, February 26, 2021

நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!

 யாழ் இணையம் 23வது ஆண்டு நிறைவையொட்டிய சிறப்பிதழில் எனது கொரோனாகால  அனுபவப்பகிர்வு

31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது.

அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம்.

அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது.
29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான்.

பார்த்திக்குட்டி...,

அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது.
எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ?
நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ?
இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ?

ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது.
அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது.

அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான்.
அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ?

பிள்ளைகள் கொண்டு வந்து  தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம்.

அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது.
எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன்.

கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி.

நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக.

நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ?

இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம்.
இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம்.
நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான்.

என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன்.

தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன்.  கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன்.

ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான்.

என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது.

அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது.
எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன்.

பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான்.
ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான்.

அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது.

மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான்.
எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி.

2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது.

அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும்.

ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ?
அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா.

என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன்.

ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது.

எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது.
கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில்  இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன்.

என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47.

அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான்.
இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான்.

கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை.

08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம்.

காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன்.

அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன்.
02.05.2020

சாந்தி நேசக்கரம்

Monday, December 28, 2020

றைன் நதியோடு நானொருநாள்

சாந்தி நேசக்கரம் யேர்மனி

நேரத்தைப் பார்க்கிறேன்.  காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள்.

காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள் கனவுகள் மெய்ப்பட உன் கைகளால் ஆசீர்வதித்து ஒளியிடு. நீயே நிதர்சனம் நித்தியம்.  உன்னைச் சரணடைகிறேன் என்னை வதைக்காதே.

குறையுறக்கத்தில் கண்கள் தடுமாறுகிறது.

மலைகளின் உறக்கத்தையும்  மரங்களின் சோம்பலையும் கலைத்துக் கொண்டு வெயில் கீழிறங்கிக் கொண்டிருந்தது.

சூரியக் கோளத்துச் சிவப்பு சந்தனமாகிக் கரையத் தொடங்கிப் பிறகு வெண்ணிறத்தை மலையின் இடுக்குகளில் வடித்தது.

அழகான ஏப்றல் மாதத்தின் துளிர் மரங்களின் வர்ணப்பச்சையில் குதித்தன வெயில் கதிர்கள்.

ஒடிக்கொண்டிருந்த ரயிலில் எனது இருக்கையைத் தேடிவந்து ஊற்றிய காலை ஒளியில் என் நித்திரை கலங்கி விழித்து கலங்கி மீண்டும் குறைத்தூக்கம் என் கண்களைப் பிடிக்கிறது.


றைன் நதியோரமாய் இன்ரசிற்றி எக்ஸ்பிறஸ் நடைவேகத்தில் உருளத் தொடங்கி வேகமெடுத்தது.

நதியின் கரையோரத்து மரங்களின் கிளைகளும் இலைகளும் பரப்பிய நிழல்க்கவிதை நதியில் ஏறி நின்றது.

மரங்களின் நிழலோடு முகில்கூட்டம் சேர்ந்து அழகான ஓவியமொன்றைக் கண்முன்னே விரித்து வைத்தது.

இயற்கை எவ்வளவு மர்மம் நிறைந்தது. வினாடிக்கு வினாடி எத்தனை அற்புதங்களையும் அனர்த்தங்களையும் நிகழ்த்தி விடுகிறது ?

வந்து வந்து போன ஒளிச் சிதறலில் நித்திரை தீர்ந்து போகிறது.  முழுமையாக முறிந்தது சோம்பல்.  றைன் நதியின் கரும்பச்சை நிறத்தின் மீது கண்கள் பாய்கிறது.

கண்ணில் தெரிந்த ஓவியம் கண்ணெதிரே கரைகிறது.  காவல்துறையென எழுதப்பட்ட படகொன்று  சத்தமேயில்லாம் கிடந்த சித்திரம் மீது ஏறிச்செல்ல வர்ணங்களெல்லாம் கலந்து கலங்கி நவீன வர்ணச் சித்திரமாகியது.

குட்டித்தீவுகள் போல இடையிடையே கற்பாறைகள் அதைச்சூழ சில மரங்கள். அங்கங்கே வாத்துக் குஞ்சுகள்.  ஈரச்சிறகுகளைக் கற்களின் மேலேறி உலர்த்திக் கொண்டிருந்தன. தாய் வாத்துகளின் அருகே சில குஞசுகள் குந்தியிருந்தன.

காற்றிலே மெல்லவூரும் அலைகளின் கைகளால் நீருயரம் இடையிடையே மேலேறிப் பிறகு தன் பாதைகளை தேடி ஓடிக் கரைகளை உதைக்கிறது.

நீண்ட அகன்ற பெரிய  சரக்குக்கப்பல்கள் சில பச்சை அடையாளமான பெருங்குற்றிகளின் வழியே பயணிக்கின்றன.

தன்னை யாரென அடையாளம் சொல்வது போல தன் பாதைவழியே றைன்நதி நடந்து கொண்டிருந்தது.

இந்தக் கரைகளின் வழியில் எனது பயணங்கள் ஆரம்பமாகி ஒன்றரை வருடமாகிவிட்டது.

வருடத்தின் அனைத்துக் காலநிலை மாற்றத்தையும் கடந்தே நடக்கிற  நதியோடு  என் மௌனங்களும் கண்ணீரும் கலந்தேயிருக்கிறது.

10. 15மணிக்கு மைன்ஸ் ரயில் நிலையத்தில் இறங்கி மகளின் வீட்டுக்கு நடக்கிறேன்.  மலைகள் றைன்கரைகள் தாண்டி மனிதத்தலைகள் நடுவே போகிறேன்.

12பாகை செல்சியஸ் வெக்கை. வியர்க்கிறது போட்டிருந்த யக்கற்றைக் கழற்றி இடுப்பில் கட்டுகிறேன். மகளுக்கான பொருட்கள் பாரம் வலது தோளில் இருந்து இடது தோழுக்கு மாற்றுகிறேன்.

அவளது வீட்டுக்கு 300மீற்றர் இருப்பதாக ஜீபிஎஸ் குரல் ஒலிக்கிறது.  50மீற்றர் தொலைவில் வரும் பாதசாரிகள் சமிஞ்ஞை விளக்கில் வலது பக்கம் திரும்பி நடவென்கிறது ஜீபிஎஸ்.

திரும்புகிறேன் அந்த வளைவின் நான்காவது உயர்ந்த கட்டடம் வங்கியொன்று. ஆட்கள் போயும் வந்தும் கொண்டிருந்தார்கள். அதைத்தாண்டி ஒரு துருக்கிய உணவகம்.  அதனருகில் ஒருத்தி வெள்ளை நிறத்திலான கப் ஒன்றினை நீட்டிப் பிச்சை கேட்டுக் கொண்டிருநதாள்.

பிச்சையெடுப்போர் மீது முன்பெல்லாம் கோபம் வரும்.  என்னை மறித்துப் பிச்சை கேட்ட பலருக்கு 'வேலைக்கு போங்கோ' சொல்லியிருக்கிறேன்.

அம்மா... உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையோ? ஒருதரம் பிள்ளைகள் என்னில் சினந்தார்கள்.

 எல்லாராலையும் வேலை செய்ய ஏலாது தெரியுமோ ?  உதவி செய்யாட்டில் பேசாமல் போங்கோ... அவையளும் மனிசரம்மா....

இங்கே வாழ வசதிகள் இருந்தும் வாழத்தெரியாது சோம்பேறிகளாக இருப்போரே இப்படி வீதிகளில் இரப்போரென்பது  என் எண்ணம்.

நேசக்கரம் செய்து கொண்டு உப்பிடிச் சொல்லைதையுங்கோ....

இப்போது அப்படிச் சொல்வதில்லை.  அவர்களுக்கும் என்னென்ன இடைஞ்சல்களோ ?  முடிந்தால் இயன்றதைப் போட்டு விட்டுப் போகப்பழகி விட்டேன்.

பச்சைப் பாவாடையும் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட மேலாடையணிந்து இன்னொரு பெண் அடுத்த வீதியில் இருந்தாள்.

000         000              000

மணி 12.10 மகளோடு அவள் வீட்டிலிருந்து வெளியில் வருகிறோம். சனிக்கிழமை அவசரமில்லாது இயங்குவது போல கடைகளில் வீதிகளில் மனிதர்கள் திரிந்தார்கள்.

அடுத்து பிராங்பேட் நகரத்திற்கு நான் போக ரயிலுக்கான நேரத்தை இணையத்தில் பார்க்கிறேன்.

மகள் வேலைக்குப் போகும் ரயில் வர இன்னும் 10நிமிடங்கள் இருந்தன.

நான் உங்களை ஏத்தீட்டு போறனம்மா...

சொல்லிக் கொண்டு என்னோடு வீதிச் சமிஞ்ஞையைக் கடந்து  என்னோடு வருகிறாள்.

அம்மா..., ஒரு வீடில்லாத ஆளுக்கு கிழமைக்கு ஒருக்கா சாப்பாடு குடுப்பேன் அந்த ஆளைப்போன கிழமை கண்டனான். நல்ல உடுப்புப் போட்டு ரயிலுக்கு நிண்டவர்.  என்னட்டை வந்து கதைச்சவர்.  நான் சாப்பாடு தந்ததுக்கு கனதரம் நன்றி சொன்னவர். அவர் இப்ப வேலை செய்றாராம்...

நல்லது...

அந்த மனிதனை அவள் சந்தித்த அனுபவம் பற்றி கடந்த வருட இறுதியில்  சொல்லியிருந்தாள்.  

அப்போது அவள்  மனவுளைச்சல் அதிகமாகி மிகவும் அந்தரப்பட்ட நேரம்.  வாரம் ஒருநாள் தேவாலயம் சென்று வருவாள்.

ஒரு இரவு உறங்க முடியாது அவள் விடியற்காலை 4மணி வரையும் தொலைபேசியில் என்னோடு அழுதபடியிருந்தாள்.  உடனடியாக அருகே ஓடிப்போக முடியாத அந்தரம் எனக்கு. மறுநாள் பின்னேரம் தான் அவளிடம் போனேன்.

முதல் நாள் அவள் தேவாலயம் போகும்போது வாசலில் அந்த மனிதன் தேவாலயத்தின் வாசலில் கையேந்தி நின்றான். அவனுக்கு கொடுக்க அன்று அவளிடம் எதுவும் இல்லை.

 மனக்கலக்கத்தில் தேவாலயம் போனவள் திரும்ப வரும் போது பணம் தருமாறு அவன் கேட்டால் தனது மனநிலை மேலும் துயரடையும் என நினைத்தபடி வந்தாள்.

அவன் எதுவும் கேட்காமல் கையை நீட்டிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்துச் சிரித்தான். இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டுமெனச் சொன்னான்.  

சிலர் பிச்சையேந்துவார்கள் எதுவும் கொடுக்காமல் போகிறவர்களை சபிப்பார்கள். இவன் யாரையும் சபிக்காமல் அமைதியாகவே கையேந்திக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு சிலநாட்கள் பேரூந்து நிலையத்தில் கையேந்திக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.

வீட்டிலிருந்து தனக்கு கொண்டு போகும் சாப்பாட்டில் அவனுக்கும் கொடுக்கத் தொடங்கினாள்.  

ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து பெறும் உணவுக்கு அவன் சொல்லும் நன்றி அவளுக்கு பசியிருக்கும் ஒருவரின் பசிபோக்கும் ஆறுதலைக் கொடுத்தது.

வாரத்தில் சிலநாட்கள் தொடர்ந்து ஒருநேர உணவைக் கொடுத்து வந்தாள்.

000             000            000

13.35 மணிக்கு பிராங்பேட் பிரதான ரயில் நிலையத்தை அடைகிறேன். ஓர் விஞ்ஞானியுடனான சந்திப்புக்கான பயணம்.

மின்னஞ்சல் குறுஞ்செய்தியில் ஆரம்பித்த எங்கள் உறவு இன்று நேரே சந்திக்கப் போகிறோம்.

என் பெரும் பலத்தை நம்பிக்கையை கனவுகளைக் காவு கொண்டது 2019ம் ஆண்டு. இந்த வருடம் தந்த  பெருந்துயரையும் அதிர்ச்சியையும் கடந்து போக  அதற்கான தீர்வைத் தேடியலையும் இந்த நாட்கள். இனி இழப்பதற்கு எதுவுமற்ற நிலையை மாற்றும் வழியொன்னை எதிர்பார்த்து எங்கெல்லாமோ அலைகிறேன்.

ஒரு சிறு துவாரம் கிடைத்தாலே அதனூடு பயணித்து என் பாதையைக் கண்டடைவேன் என்ற என் நம்பிக்கை மீது வீழ்கின்ற பாறைகளைத் தாண்டியோடும் பயணத்தில் இதுவும் ஒன்று.

ரயில் நிலையத்தில் என்னை வரவேற்ற உறவும் நானும் நெருக்கம் மிகுந்த பிராங்பேட் நகரின் வீதியொன்றில் நடந்து உணவகமொன்றிற்குப் போனோம்.

எங்களுக்கான உணவு வந்தது. சாப்பிட்டபடி பேசத் தொடங்கினோம்.  திறமைகளைப் பலிகொள்ளும் உலகின் பயங்கரங்கள் பலியெடுப்புக்கள் பற்றிய உரையாடலில் என் கண்ணீரும் கலந்தது. ஆச்சரியமும் பரிதவிப்பும் அந்தக் கண்களிலிருந்த கருணையும் எனக்கு உதவுமென்ற நம்பிக்கையைத் தந்தது.

மூன்றரை மணிநேரம் நாங்கள் பேசினோம். நான் வேண்டிய உதவி தவிரவும் நிறையவே பேசினோம். ஒரு சின்ன வழியைக் கண்டு பிடித்த ஆறுதல் என்னுள் குடியேறுகிறது.

16.38 மணிக்கு மீண்டும் மைன்ஸ் நகர் நோக்கிப் போகிறேன். நதிகளைக் குறுக்கறுக்கும் பாலங்களையும் பாதைகளையும் கடந்து ஓடும் ரயிலில் கண்ணாடி வழியே என் விழிகள் போகிறது.

எத்தனையோ கேள்விகள் அதிர்ச்சிகள் பயங்கரங்கள் நடைபெறும் நாடு.  துறைசார் போட்டிகள் நேர்மையை மட்டுமே நம்பும் மனங்களை தடயங்கள் இல்லாமல் அழிக்கும் கொடூரம், வியாபாரிகள் பணமுதலைகள் கையில் சிக்கிய நேர்மையாளர்களின் இழப்பு... இப்படி எத்தனை மர்மங்கள்....?

ஜனநாயகம் மனிதம் பேசிக்கொண்டு  அடையாளமில்லாத பலியெடுப்புக்கள்.

எத்தனை அம்மாக்களை என்போல் உயிரோடு கொல்லும் நுணுக்கங்களை  இந்த உலகம் தன் பொய்யான முகத்துள் புதைத்து வைத்திருகிறது...?

நினைவுகளில் தடக்கித் தடக்கி விழும் என் காலத்தைத் தொடரும் பயம் வெறுப்பாகிக் கண்ணீராகி கைவிரல்களில் காய்கிறது.....????

17. 20 மணிக்கு மைன்ஸ் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். அடுத்த பயணத்திற்கு இன்னும் 81 நிமிடங்கள் இருந்தன.  ஆட்கள் குறைந்த இடமொன்றில் இருந்த இருக்கையொன்றில் போயிருந்தேன்.  

மைன்ஸ் ஓப்பிள் அரேனாவில் நடைபெற்ற மைன்ஸ் டுசில்டோர்ப் இடையேயான காற்பந்தாட்டத்தில் மைன்ஸ் 3கோலடித்து வென்றதை செய்தியில் வாசித்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை மனிதர்களின் வாழ்வையும் கனவுகளையும் சுமந்து செல்லும் ஒவ்வொரு ரயிலுக்காகவும் காத்திருக்கும் பலரோடு நானும் ஒருத்தியாக காத்திருந்தேன்.

நான் காத்திருந்த பகுதிக்கு டுசில்டோர்ப் ரீசேட்கள் அணிந்த பலரும் வந்திருந்தார்கள்.  அவர்கள் அனைவருமே டுசில்டோர்ப் காற்பந்தாட்ட அபிமானிகள். பலரின் கைகளில் பியர்ப்போத்தல்கள்.

 சிலர் நடனமாடியும் சிலர் மௌனமாகவும் பலர் பாடியும் அந்த நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தது.

18. 41மணிக்கு ரயிலேறுகிறேன். டுசில்டோர்ப் காற்பந்து ரசிகர்கள் பலராலும் அதிகம் ரயில் பெட்டிகள் நிறைந்தது.

மீண்டும் றைன்நதிக் கரைகளால் ரயில் போகிறது.  இரவு 19. 42மணி.  கண்ணுக்கு நேரே தன் கதிர்களை வீசுகிறது சூரியன். கண்ணில் ஒளிவீழக் கண்கள் கூசுகிறது.

மேலிருந்து கீழாக நிழலைக் கீறுகிறது சூரியக்கதிர்கள்.  எதிர் வளத்தில் படிக்கட்டுக்களாக ஒழுங்கமைக்கப்பட்ட மேடுகளில் துளிர் கட்டியிருக்கும் முந்திரிகைக் கொடிகள் மீதும் நதிக்கரைகளில் அமைந்த வீடுகளின் முகடுகளில் படிந்த சூரிய வெளிச்சம் தண்ணிரில்லாத சித்திரமாகி தன்னழகோடு என்னை அழைக்கிறது.

அங்கங்கே பழங்கால வரலாறுகள் எழுதிய கோட்டைகள் பழமை மாறாத இளமையோடு கூட ஒடிவருவது போலிருந்தது.  

யேர்மனியக் கோட்டைகள் ஒரே கலைஞரின் கைவண்ணமோ ?    பலதடவை நினைத்திருக்கிறேன். அவை எப்போதும் ஒரே வடிவங்களையே கொண்டிருக்கிறது.

சில இடங்களில்  உள்மனைகளை ஊடறுத்து ரயில்  ஓடும் போது கோடைகாலத் தோட்டங்கள் தேவாலயங்களைக் கொண்டு வரும் ஊர்மனையழகு உயிரோவியங்களைக் கண்ணிலூற்றுகிறது.

நேரம் 20. 02 நிமிடங்கள்...,
கண்ணைக் காந்திய சூரியன் கோபமாறிச் சிவக்கிறது. கீழிருந்து மென்னிருள் மேலேறுகிறது. மலைகளின் மறைவுகள் கருமண்ணிறமாகிறது. மரங்களின் குருத்திலைகள் இருளையேந்தத் தயாராகிறது.

நேரம் 20. 24....
நதிகளின் பாதைகளை மறைத்துக் கொண்டு ரயில் பதிவான பகுதியில் ஓடுகிறது.  

மஞ்சள் வெளிகளாய் கடுகுத் தோட்டங்கள்.  ஒரே சீராக வடித்த குன்றுகளாக கடுகுப் பூக்கள். பரந்த பச்சை வெளிகளில் புற்கள் பாய்விரித்திருக்க சிறு பறவைகள் குந்தியிருக்கின்றன.

மீண்டும் றைன்நதிக்கரை வருகிறது. மலைகளின் வெளிகளில் ஆங்காங்கே புகார் மூட்டம்.

நேரம் 20. 33....,
துரத்தே தெரியும் கட்டடங்களிலிருந்து ஒளிப்பூக்கள் கண் திறக்கிறது. நதியின் மடியில் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பல்களும் மின்குமிழ்களால் ஒளியேறிக் கண்திக்கிறது.

றைன்நதிக்கு நித்திரை வருது போல. அலைகளின்றி நதி அமைதி கொள்கிறது. மரங்கள் ஆடாமல் அப்படியே கண்ணுறங்கத் தொடங்குகிறது.

நதியோடு நானும் கரைகிறேன். பயண அலைவின் களைப்புத் தீர காதில்  கெட்செற்றூடாக காதை நிறைக்கும் தாமரையக்காவின் '  கண்கள் நீயே காற்றும் நீயே 'பாடல் ஒலிக்கிறது.  

கொலோன் நகரத்துக் கோபுரங்களிலிருந்து சிதறும் ஒளிவெள்ளம் இரவு நேரத்தின் கொலோன் அழகை இதோ பாரென அழைத்தது.எத்தனை தடவைகள் இந்தக் கரைகளையும் அழகையும் அனைத்துக் காலநிலை மாற்றங்களோடும் கண்டாயிற்று. ஆனாலும் புதிது புதிதாய் தன்னழகை கொலோன் நகரும் கோபுரங்களாய் உயர்ந்து நிமிர்ந்திருக்கும் கட்டடங்களும் கண்ணுக்குள் புதிதுபுதிதாய் எழுதிக் கொள்ளும் கவிதைகளின் படிமங்களாய் பதிகிறது.

கொலோன் ஆற்றங்கரைகளை அடையாளம் சொல்லுமாப் போல ஆற்றிலோடிக் கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சம்.

இருளைப் பிரித்தோடிக் கொண்டிருந்த ரயில் யன்னல்களில் பயணிகளின் முகங்கள் தெரிந்தன.

கொலோன் பிரதான தொடரூந்து நிலையத்தை அடையவிருப்பதை ரயில் அறிவிப்பு ஒலிவாங்கி அறிவித்தது.

நேரம் 20. 54..,
நான் இறங்க வேண்டிய தரிப்பிடத்தை இன்னும் சில நிமிடங்களில் அடையவிருப்பதாக அறிவிப்புக் கேட்கிறது.

இப்போது இருளோடு வெளிச்சப் பொட்டுகள் தெரிகின்றன. இருள் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியாகி ரயில் வெளிச்சம் மட்டுமே இப்போது கனமடைகிறது.  

சாந்தி நேசக்கரம் யேர்மனி
04/2019

றைன்நதி பற்றிய குறிப்பு :-
றைன் நதியானது சுவிஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைத்தொடரின் தென்கிழக்குப் பகுதியில உருவாகி ஐரோப்பாவின் பல நாடுகளை ஊடறுத்து ஓடும் பிரதான நதியாகும்.

இது ஐரோப்பாவின் நீளமான நதிகளில் ஒன்றாகும். நீளம் கிட்டத்தட்ட 1230கிலோமீற்றர். நீர்வழிப் போக்குவரத்தின் பிரதான வழியாகவும் அமைகிறது.

யேர்மனியில் றைன் ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் கொலோன் நகரமாகும். யேர்மனியின் பிரதான வரலாற்று நகரங்களில் கொலோன் நகரும் ஒன்றாகும்.

றைன் நதியானது சுவிஸ்,ஒஸ்ரியா ,லக்சம்பேர்க் யேர்மனி ஆகிய நாடுகள் உடாகப் பாய்ந்து நெதர்லாந் நாட்டின் வடகடலில் கலக்கிறது. இந்த நதிக்கரைகளையண்டி பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

 (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது)