![]() |

ஏன் ? என்ன நடந்தது ? வேலையால் வந்தவுடனும் அனுராஜ் தொலைபேசிக்கு அழைத்தேன்.
வரதகுமார் என்ற பேராற்றலாளனின் மரணம் பற்றி அனுராஜ் சொல்லி முடித்தான். முகநூலில் பலரும் வரதகுமார் பற்றிய தங்கள் பகிர்வுகளைப் பகிர்ந்திருந்தார்கள்.
அங்கிள் என நாங்கள் அழைக்கும் எங்கள் ஆசானை இழந்துவிட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.
வரதகுமார் என்றால் பலருக்கும் நினைவு வருவது லண்டன் கிங்ஸ்ரன் பகுதியில் அமைந்த ‚'துளசி இல்லம்' தமிழர் தகவல் மையம் தான். என்ன வகையான தகவல்கள் வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதோடு இல்லாமல் என்ன தகவல் கேட்டாலும் தந்துதவும் மனிதர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இனங்காட்டி மேடைகள் ஏறாமல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்த கடமையாளன்.
விடுதலைப்புலிகளின் தவறுகள் என பட்டியலிடுவோரின் முன்னால் விடுதலைப்புலிகளின் நேர்மையை சரிகளை வெளிப்படுத்துவார், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது பற்றாளர்கள் முன் விமர்சனங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.
எந்த அரசியல் சார்ந்தோரையும் தன் நட்பிலிருந்து விலத்தி வைக்காமல் எல்லோரையும் ஆதரித்து அணைத்துச் சென்ற ஆழுமை.
புலரால் புரிந்து கொள்ளப்பட்ட சிலரால் விமர்சிக்கப்பட்ட வரதகுமார் அவர்களை முதல் முதலில் 2012ம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்தேன்.
நேசக்கரம் பணிகள் பற்றி அறிந்து எனக்கு முதல் முதலாக மின்னஞ்சல் எழுதியிருந்தார். தமிழர் தகவல் மையத்தில் ஒரு உறுப்பினராகி தனது பணிகளைத் தொடங்கியிருந்த அனுராஜ் தான் முதல் முதலில் வரதகுமாரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்திருந்தான்.
துளசி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழர் தகவல் மையம் வெறும் தகவல் செகரிப்பு மையம் மட்டுமல்ல தாயகத்திற்கான பல்வேறு பணிகளையும் செய்து கொண்டிருப்பதை வரதகுமார் அவர்கள் அறியத்தந்தார். சில உதவித்திட்டங்களில் அவர்களோடு நேசக்கரமும் இணைந்து கொண்டது.
யானைப்பசிக்கு சோளப்பொரியாக செயற்படும் எங்கள் உதவிப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்காலத் திட்டமிடல் செயற்படுத்தல்களோடு பெரும் பலமாக மாற வேண்டிய தேவையை அவரைச் சந்தித்த பிறகே உணர்ந்து கொண்டேன்.
அந்தச்சந்திப்பின் பின்னர் நேசக்கரம் தாயகப்பணியாளர்களோடு வாராந்த உரையாடலில் பலவிடயங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அவை பற்றி அடிக்கடி மின்னஞ்சலில் தொலைபேசியில் பரிமாறிக்கொள்வோம்.
போரால் பாதிப்புற்ற பெண்களுக்கான திட்டங்கள் மட்டுமன்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களைச் சேகரித்துக் கொடுத்திருந்தேன். சட்ட ரீதியான சில வேலைகளைச் செய்து தந்தார். சட்ட ரீதியாக வெளியுலகுக்கு தகவல்களைக் கொண்டு செல்ல வேண்டிய பாதைகளை உருவாக்கித் தந்தார். இப்படி நிறைய பொதுப்பணிகளோடு தன் ஆலோசனைகளாலும் கற்பித்தலாலும் எம்மை வழிநடத்தியவர்.
தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றம் ஊடாக பெண்களை உள்வாங்கி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்வைத்து என்னையும் தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றத்தில் அங்கத்துவராக்கி ஒரு பொறுப்பையும் தந்திருந்தார்.
அத்தோடு ஆங்கில மொழிக்கல்வியை கற்க வைத்து அனைத்துலக அரங்கில் இயங்கக்கூடில வழியினையும் ஏற்படுத்தித் தந்தார். ஆனால் என்னால் தொடர்ந்து அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடியாத தனிப்பட்ட வாழ்வுச்சிக்கல் ஒதுங்க வைத்துவிட்டது.
இன்று அவரில்லாத நாட்களில் அவர் காட்டிய வழியில் போயிருந்தால் எனது ஆங்கில அறிவும் உயர்ந்திருக்கும் பலருக்கு என்னால் நிறைய உதவியிருக்கவும் முடிந்திருக்கும்.
பெண்களை அரசியல் வேலைத்திட்டங்களில் இணைப்பது பற்றி நிறையவே பகிர்ந்து கொள்வார். அவரது கனவுகளில் ஒன்று தமிழ்ப்பெண்களை இணைத்து சர்வதேச சமூகத்தோடு இணைந்து பணியாற்றக்ககூடிய ஆற்றல் மிக்கவர்களை உருவாக்குதல். அதற்கான பயிற்சிகளை வழங்கவும் ஒழுங்குகளைச் செய்து பலரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் அவரது சிந்தனையைப் புரிந்து கொண்டு உண்மையாக இயங்குவதற்கு பெரிதாக யாரும் அக்கறை காட்டவில்லை. அவரது பல முயற்சிகள் தோல்வியடைந்து போனது. காரணம் அவரது எதிர்பார்ப்பை சரியாக உள்வாங்கி செயற்படாமல் பலர் இடையில் ஒதுங்கிப் போனார்கள். அவரது கனவு நிறைவேறாமலே கலைந்து போய்விட்டது.
2013அனைத்துலக விதவைகள் தினம் லண்டனில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். அந்நிகழ்வில் உரையாற்ற என்னையும் அழைத்திருந்தார்.
பெரும்பான்மையானோர் ஆங்கிலத்தில் தான் அங்கே உரையாற்றினார்கள். அதில் நான் தமிழில் என்ன சொல்ல ? எனக்கேட்ட போது நீங்கள் தமிழில் உரையாற்றுங்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரை ஒழுங்கு செய்வதாக கூறி என்னை அந்த மேடையில் ஏற்றுவித்தார்.
தமிழ் நிகழ்வுகளில் மேடையேறுவது எனக்குப் பழகிப்போன காரியம். வேற்று நாட்டவர்கள் அங்கம் வகிக்கும் மேடையில் ஏறியது அதுவே எனக்கு முதல் அனுபவம். அந்நிகழ்வுக்கு தாயகத்தில் இருந்து திருமதி சாந்தி சச்சிதானந்தம் உட்பட பலரும் பேச்சாளர்களாக வந்திருந்தார்கள். அந்த மேடை எனக்கு மென்மேலும் பல திட்டங்களை நேசக்கரம் ஊடாக உருவாக்கவும் செயற்படுத்தவும் உதவியது. புதிய எண்ணங்களை செயற்திட்டங்களையும் உருவாக்க புதிய வழிகளை யோசிக்க வைத்தது.
2014 சர்வதேச பெண்கள் தினத்தை ‚'தமிழ்ப் பெண்கள் அபிவிருத்தி மன்றம்' ஏற்பாட்டில் செய்யலாமெனக் கேட்டிருந்தேன். தமிழ்ப்பெண்களை பலதரப்பிலும் இருந்து அழைத்ததோடு நின்றுவிடாமல் அந்நிகழ்வுக்கு குர்திஸ் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்போராளிகளையும் அழைத்து அவர்களது அனுபவங்களையும் பகிர வைத்தார்.
உலகில் போராடும் தேசங்களோடு நாங்கள் எவ்வாறு உறவைப பேண வேண்டும் அரசியல் பணிகளைத் தொடர வேண்டும் என்பதனை அந்நிகழ்வில் உணர்த்தியிருந்தார்.
அந்நிகழ்விற்கு பீபீசி நிறுவனத்தில் பணியாற்றிய ஊடகர் பிரான்ஸ்சிஸ் கரிஷன் அவர்களை சிறப்பு விருந்தினராகவும் அழைத்து நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தார். அந்நிகழ்விலும் எனது உரையை தமிழில் செய்தேன். வெளிநாட்டவர்களுக்காக எனது உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரை நியமித்தார். எனது இரண்டாவது உரை ஆங்கில மொழிபெயர்ப்போடு நிகழ்ந்தது அன்று.
ஆழுமைப் பெண்களை அன்றைய அரங்கில் மதிப்பழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். கேட்டதும் சிரித்தார்.
சாந்தி ஒரு விருது குடுக்கிறதெண்டால் அந்த விருதைப் பெற நீங்கள் தெரிவு செய்யும் நபர் தகுதியானவராக இருக்க வேண்டும். அரசியல் பேதம் கட்சிபேதம் பாராமல் தெரிவு செய்ய வேணும் அதுதான் சரியான ஆழுமைக்கான விருது. என தனது கருத்தை முன்வைத்தார்.
அவரது கருத்துக்கமைய சிலபெண்களை தெரிவு செய்து அனுப்பினேன். தன்சார்பாக சில ஆழுமைகளின் பெயர்களையும் சிபாரிசு செய்திருந்தார். ஆழுமைப் பெண்களில் மானிடத்தின் குரல் 2014 விருதினை ஊடகர் பிரான்சிஸ் கரிஷன் அவர்களுக்கு வழங்கினோம். அவ்விருதினை போராளி சீதா அவர்கள் பிரான்சிஸ் கரிஷனுக்கு வழங்கினார்.
ஏப்போதுமே நாம் நடாத்தும் நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தனது ஆதரவு ஒருங்கிணைப்பு யாவையும் செய்து தந்துவிட்டு நாங்கள் மேடையேற அரங்கின் கடைசிக் கதிரையில் போயிருந்து நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவார். அடுத்த நிகழ்வு இன்னும் எப்படி சிறப்பாக நடத்தலாம் என்பதை அடுத்த சந்திப்பில் கருத்திடுவார். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த விரும்பாமல் எம்மை வழிநடத்திய தலைமைத்துவச் சிறப்பாளன்.
தாழ்ந்து போகத் தயரானவர்களே தலைமைத்துவப்பண்பும் தலைவராகும் தகுதியும் உள்வர்கள் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டிய மனிதர். 2014 அனைத்துலக பெண்கள் தினத்தில் எங்களுக்கு பின்பலமாய் ஆதரவு தந்துதவிய வரதகுமார் , அனுராஜ் இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவம் செய்தோம்.
வரதகுமார் அவர்கள் அந்த அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென மேடைக்கு வருமாறு அழைத்ததும்.., ஏனென்னை கூப்பிடுறியள் எனக் கேட்டார். ஆனால் சபையின் முன் எங்கள் அழைப்பையேற்று மேடைக்கு வந்து கௌரவத்தை ஏற்றுக் கொண்டார்.
வருடாவருடம் ஒவ்வொரு நாடுகளிலும் அனைத்துலக பெண்கள் தினத்தை தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றம் ஊடாக நடாத்துவதென அன்று திட்டமிட்டோம். ஆனால் காலவோட்டம் தொடர்ந்து அதை நிறைவேற்ற முடியாது எங்களைக் கடந்து போய்கொண்டிருக்கிறது.
பொதுவாகவே தமிழ் அமைப்புகளின் எற்பாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழர்களால் தமிழர்களுக்கான பரப்புரைகளாகவே இருக்கும். ஆனால் வரதகுமார் அவர்கள் அனைத்துல இராஜதந்திரிகள் , தொண்டு அமைப்புகள் , விடுதலைக்காக போராடிய உலகப் போராளி அமைப்புகள் , அரசியல்வாதிகள் என பலரையும் அணுகி அவர்களோடெல்லாம் எங்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வழிகளைத் தேடியவர் செயற்பட்டவர்.
அவரது இச்செயற்பாடானது பொதுவான தமிழ் மனநிலையில் துரோகமாக உலக உளவு அமைப்புகளின் முகவராக புனைவுகளாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டவர்.
புலிக்கொடியால் கௌரவம் பெறுவதையே தங்கள் வாழ்நாள் கொள்கையாக வரித்து தமிழினத்துக்கு துரோகம் செய்யும் பலரால் வரதகுமார் விமர்சிக்கப்பட்டவர். அனால் அந்த விமர்சகர்கள் ஆயும் பத்தி ஆய்வுகளுக்கான தகவல்களை பின்கதவால் வரதகுமாரிடமிருந்து பெற்றவர்கள் பலர். அத்தகையவர்களை அவர்களது இயல்பை அறிந்திருந்தும் அவர்களையெல்லாம் முறித்து கோபித்துக் கொள்ளாமல் நட்பை பாதுகாத்துக் கொண்டவர்.
இன்னும் சிலர் துளசி இல்லத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தங்கள் பறக்கணிப்பை செய்வார்கள். இப்புறக்கணிப்பு எவ்வளது மடமைத்தனம் என்பதை இன்னும் உணராது இருப்போர் பலர்.
தமிழர் தகவல் மையம் அனைத்துத் தரப்பையும் துளசி இல்லத்தில் வரவேற்றிருக்கிறது. யாரெல்லாம் தமிழினத்து விரோதிகள் துரோகிகள் என சில குழுக்கள் வகுத்து வைத்துள்ளார்களோ அவர்களையெல்லாம் வரதகுமார் கைகுலுக்கி துளசி இல்லத்தில் வரவேற்றுள்ளார். அவர்களோடு பணியாற்றியுள்ளார்.
அனைவரும் இணைந்ததே தமிழர் விடுதலையென்ற உண்மையை புரிந்து செயற்பட்டவர் இறக்கும் வரையும் தனது எல்லையை விட்டு விலகாமல் இயங்கி ஓய்ந்தார்.
தான் இல்லாது போனாலும் தமிழர் தகவல் மையத்தை தொடர்ந்து செயற்பட வைக்க அவரால் உருவாக்கப்பட்ட இளையோரும் ஆற்றலாளர்களும் அவரது இடைவெளியை நிரப்பி காலத்தின் பணியைச் செய்வார்கள்.
பலர் வாழும் வரை அவர்களது மதிப்பு பெறுமதி தெரிவதில்லை. ஆவர்கள் மறைந்த பிறகு வரும் நினைவுமீட்டல்கள் கூட காலவோட்டத்தில் அழிந்து அந்நபர்களையே காலம் மறந்துவிடுகிறது. வரதகுமார் இத்தகைய புறக்கணிப்புகளால் மறைக்கப்பட்ட இறுதி நபராக இருக்க வேண்டும். வுhழும் போது வல்லமையாளர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிப்போம். மதிப்பழிப்போம்.
சாந்தி நேசக்கரம்.
15.03.2019