2வாரங்கள் முன்னொரு ஞாயிற்றுக்கிழமை விடிய அவனது தொலைபேசிதான் அவளை
நித்திரையால் எழுப்பியது. அக்கா நான் ***கதைக்கிறன். ஏனக்கு ஒரு உதவி
வேணும் அதான் எடுத்தனான்.....ஸ்கைப் வருவியளோ கதைக்க......? அத்தோடு
தொடர்பறுந்தது.
ஆசிய நாடுகளுக்குள்ளே ஐக்கியநாடுகள் சபையில் அகதி அந்தஸ்த்திற்கு
பதிந்துவிட்டு சிறைகளில் இருக்கிற பலர் இப்படித்தான் வந்திருக்கிறார்கள்.
ஒன்றில் சிறையிருக்கும் நாடுகளில் தமக்கான உதவிகோரல் அல்லது இலங்கை
போகிறோம் உதவியென்றே பல அழைப்புகள் வந்திருக்கிறது. அப்படியான ஒன்றாயே
இவனது அழைப்பையும் நினைத்தாள். ஸ்கைப் போனாலும் ஓயாத தொடர்புகள் வந்து
நிறைந்து விடுவதால் அவனை மறந்து போயிருந்தாள்.
நேற்று ஸ்கைப்பில் வந்தவன் ஒரு தகவலை எழுதியிருந்தான்.
அக்கா எனக்கு இலங்கைக்கு போக அனுமதி கிடைச்சிருக்கு....ஆனா எயாப்போட்டாலை
தப்பி வெளியில போட்டா நீங்கள் தான் உதவ வேணுமக்கா.....அதாலை தப்பீட்டா
இந்தியா இல்லாட்டி மலேசியாப்பக்கம் போகலாமெண்டு யோசிக்கிறன்....! ஏன
ஸ்கைப்பில் எழுத ஆரம்பித்தவனின் எழுத்தை நீள விடாமல் அவள் தனது பதிலை
எழுதினாள்.
இந்தியா மலேசியாவுக்கெல்லாம் உதவிற அளவுக்கு எங்கடையாக்கள் முன்வராயினம்.....!
அக்கா என்னுடன் தொலைபேசியில் பேசுங்கள். உங்களுடன் நிறையக் கதைக்க வேணும்.
எனது குடும்பம் 3மாவீரர்களையும் நாட்டுக்கு கொடுத்தது. நானும் எனது
3தம்பிமாரும் நாட்டுக்காக 18வருடங்கள் உழைத்தோம். நாங்கள் போராட
வெளிக்கிட்டதிலிருந்து துரங்களைத் தான் சுமந்தோம் அதுவே இன்றும்
தொடர்கிறது. உதவாவிட்டாலும் பறவாயில்லை ஒருதரம் பேசுங்கள். என்றதோடு ஸ்கைப்
தொடர்பும் அறுந்தது.
இன்று அவன் கொடுத்த இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினாள். அவன்தான்
மறுமுனையில் பதில் கொடுத்தான். முகமறியாத இருவருக்குள்ளுமான
சுகவிசாரிப்புகளின் பின்னர் அவன் தனது கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.
000 000 000
அவன் பிறந்தது வடமராட்சி. கடற்தொழிலால் வசதிகளோடும் நல்ல வாழ்வோடும் இருந்த
குடும்பத்தின் பிள்ளைகளை நாடு தனதாக்கிக் கொள்ள உயர்தரம்
படித்துக்கொண்டிருந்த அவனும் தனது கடமைகளுக்காக புறப்பட்டான். தம்பிகள்
களத்தில் நிற்க அவன் கடல்கடந்து சர்வதேச வலையமைப்பில் பணிக்குச் சென்றான்.
முகவரி பெறாத வெளித்தெரியாத முகத்தைத் தனக்கானதாய் ஆக்கியவன் 12வருடங்கள்
தாய் நிலம் காணாமல் சர்வதேசமெங்கும் அளந்து திரிந்தான். அலைவின்
பெரும்பகுதி முழுவதும் கடலோடு தான் அவன் வாழ்வு போய்த்தொலைந்தது.
நிலம்விட்டுப் பல்லாயிரமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசமெங்கும்
தாயகக்கடமைக்காய் தலைமறைவாய் பணிக்காய் திரிந்தான். வசதியான வாழ்வும்
வருமானமும் பெற்றுவிடக்கூடிய லட்சங்கள் கையில் தவழ்ந்த போதும் தனக்காய்
எதையுமே அனுபவிக்கவோ ஆசைப்படவோ இல்லை எல்லாம் மண்ணுக்காய் எல்லாவற்றையும்
அர்ப்பணித்தான்.
ஜெயசிக்குறு வெற்றிக்காய் பணியாற்றிய அவனதும் அவன்போன்ற பலரதும் உழைப்பில்
யெஜசிக்குறு வெற்றிவாகை சூடிக்கொள்ள அவனது 2தம்பிகளும் கண்டிவீதியின்
காற்றோடு தங்கள் மூச்சை நிறுத்திய சேதியும் , அவன் அதிகம் நேசித்த அவனது
கடைசித்தம்பி ஆனையிறவில் வேவுப்பணியில் வீரச்சாவடைந்த செய்தியைக்கூட வருடம்
போன பின்னாலேயே அறிந்து தனக்குள் அழுதான். ஆயினும் தனது பணியில் வீச்சாய்
உயர்ந்தான். விழவிழ எழுவோம் என்ற வார்த்தைகளை அவன் தினமும் உச்சரித்தபடியே
தாயக விடுதலைக்காய் உழைத்தான்.
சமாதான காலம் சர்வதேச வலைப்பின்னலில் புதிய நிர்வாகப்புகுதல் அவனையும்
பிரித்தது. கடலோடும் அன்னிய தேசங்களோடும் அலைந்தவன் சமாதான காலத்தில்
தாயகம் போனான். மண்ணுக்குள்ளிருந்து மறைமுகப்பணிகள் அவனுக்காய்
காத்திருந்தது. நிர்வாக மாற்றத்தில் ஏற்பட்ட மனச்சோர்வுகள் நம்பிக்கைத்
துரோகங்களை மறந்துவிட்டு சலிக்காமல் மீண்டும் பணிகளில் இறங்கினான்.
2003திருமணம பந்தத்தில் இணைந்தவன் தொடர்ந்தும் தன் பணிகளோடே தன்னை
இணைத்தான். 2004அவனது உலகத்தைப் புதுப்பித்துப் பிறந்தாள் அவனது செல்லமகள்.
உரிமையுடன் அப்பாவென்றழைக்கவும் அவனை மகிழ்ச்சிhல் கட்டிப்போடவும்
வீட்டில் அவனது குழந்தை அவனுக்காகக் காத்திருந்தது. கிடைக்கிற ஓய்வுகளை
குழந்தையோடு கழித்தான்.
நிலமைகள் மாற்றமடைந்து காலம் எல்லாரையும் களம் வாவென்ற போது தானே
முன்னின்று தங்கையின் பிள்ளைகளையும் வாவென்றழைத்துக் களம் போனவன். 'அண்ணை
கேக்கிறார்' வீட்டுக்கொரு பிள்ளையைத் தாங்கோவன் என சொந்தங்களையும் அழைத்து
நிலம் மீட்கும் பணிக்காய் நின்று பணிசெய்தான்.
அவன் வீட்டிலிருந்து அம்மா அப்பா எல்லோரும் தமக்காயான பணிகளை ஒன்றாயே
சேர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அங்குலம் அங்குலமாய் அவர்கள் நேசித்த
பூமியை அதிகாரம் ஆயுதபலத்தால் வென்று கொண்டிருக்க கடைசிக்காலக்களமுனையில்
மாற்றங்களும் ஆளாளுக்கானதாய் ஆனது.
அவன் நேசித்த 'அண்ணை''க்குத் தெரியாமலே பல அக்கிரமங்கள் நிகழத்தொடங்கியது.
மக்களின் மனங்களை வென்ற மக்களின் தலைவனுக்கும் மக்களுக்குமான தொடர்புகளும்
அறுந்து போனது. கட்டாய ஆட்பிடியும் அநியாங்களும் அவனதும் அவன் போன்ற
ஆயிரமாயிரம் பேரின் உழைப்பையெல்லாம் அரசியல்பிரிவு அநியாயமாக்கிக்
கொண்டிருந்தது.
கட்டாயப்பிடி வேண்டாம் கடைசிவரையும் நாங்கள் போராடுவோம் என பலருடன்
முரண்பட்டுத் தோற்றுப்போனார்கள் மக்களை நேசித்தவர்கள். அத்தகையோருடன்
அவனும் அமைதியானான். எங்கெங்கோ சிலரிடம் அதிகாரம் பகிரப்பட்டு
உண்மையானவர்களையே போட்டுத்தள்ளும் நிலமையில் களம்மாறியது. அங்கே மனசால்
அழுதபடி தாங்கள் நேசித்த தலைவனுக்கும் மக்களுக்குமாய் பல்லாயிரம் போராளிகள்
தங்கள் பணிகளைச் செய்(த்)தார்கள்.
முடிவுகள் தலைகீழாய் நம்பமுடியாதனவாய்.....மாறிய போது மிஞ்சிய உயிரையும்
மண்ணுக்குள் பலர் புதைத்து வெடித்துச் சிதைக்க இவனால் மட்டும் அப்படியே
அழிந்து போக முடியாது போனது. அவனது செல்லமகளும் அவனது காதல் மனைவியும்
கைகளில் விலங்கில்லாமல் அவனைச் சிறையிட்டனர். மண்ணுக்காய் கடலோடே காலத்தை
அழித்தவன் கடமைக்காய் உலகமெங்கும் திரிந்தவன் தனது மகளுக்காக கடைசியாய்
மிஞ்சிய குப்பியையும் கழற்றியெறிந்துவிட்டுக் கடல்கடந்தான்.
வெளிநாடு போகலாமென்று நம்பி ஆசியநாடொன்றில் சிறையில் அடைபட்டு வருடம் 2
முடிந்துவிட்டது. கடைசிநேர முடிவோடு காணாமற்போன தம்பி உயிருடன்
இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. 3வது தம்பி மட்டும் தடுப்பிலிருந்து
விடுபட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிஞ்சியிருக்கிறான். அப்பா பழையபடி
கடற்தொழிலுக்குப் போய்வருகிறார். களத்தில் 16வருடங்கள் வாழ்ந்த 3வது தம்பி
உடலால் பாதிப்புற்று உழைக்க முடியாத நிலமையில் அப்பாவை நம்பியிருக்கிறான்.
ஊரிற்குத் தொடர்பு கொண்டு உதவி கேட்டான். தம்பி ஆரிட்டையும் கடமைப்படாதை
வெளிக்கிட்டு வா பாப்பம்....இவ்வளவு காலமும் ஒருதரிட்டையும் நாங்க
கையேந்தேல்ல....இனியேனப்பு கைNயுந்துவான்....உயிருகளைக் குடுத்தம்
உடமைகளைக் குடுத்தம்.....என்ரை பிள்ளையளையும் நாட்டுக்காக நான்தான ராசா
ஓமெண்டு குடுத்தனான்....பிடிச்சா சிறையில போடுவினம்....போடட்டும்....ஆனா
மானத்தைவிட்டு கடமைப்பட வேண்டாம் ராசா....என அம்மா முடிவாகச் சொல்லிவிட்டா.
ஆரிடமாவது கையேந்தினால் உனது மகன் உயிர் பிழைக்க வாய்ப்புண்டென்று சொல்ல
வேணும் போலிருந்த விருப்பை அம்மாவுக்குச் சொல்லாமல் மௌனமானான்.
அவனை நம்பிய அவனது மனைவியும் மகளும் அவனுக்காக தாயகத்தில் கடலோரக்
கிராமமொன்றில் காத்திருக்கிறார்கள். அடைபட்ட சிறைவாழ்வின் கொடுமையும்
ஒன்றுமேயில்லாத வெறுமையும் துரத்த இறுதி முடிவாய் இலங்கை போக
எழுதிக்கொடுத்துவிட்டு அனுமதியும் பெற்றுவிட்டிருக்கிறான். .
இலங்கை போறது ஆபத்தெல்லோ அண்ணா...? கேட்டவளுக்குச் சொன்னான். வேறை
வழியில்லை....இங்கினை எங்கேயும் ஒரு மாற்றத்தைச் செய்து தப்பிறதெண்டாலும்
நாட்டுக்காசு குறைஞ்சது 3லட்சம் வேணும்....என்னிட்டை அப்பிடியெல்லாம்
வசதியில்லை.....நடக்கிறதைக் காண்பமெண்ட முடிவோடை எழுதிக்குடுத்திட்டன்....
தன் வழிச்செலவுக்குக் கூடக்கையில் காசில்லாதவனுக்கு 3லட்சத்தை யார் கொடுப்பார்...? அவன் உயிரை எவர் காப்பார்....?
தாய்நாட்டுக்காக தங்களை இழந்து ஆயிரமாயிரமாய் ஆசியநாடுகளிலும்
ஆபிரிக்கநாடுகளிலும் சிறைகளிலும் வாழு(டு)கிற போராளிகளுக்காக அனைத்துலகத்
தமிழினம் என்னத்தை கைமாறாய் செய்யப்போகிறது...? அவள் தனக்குள் கேட்டுக்
கொண்டாள்.
அக்காவென்று அவளுக்கு அறிமுகமானவன் இப்போ அவளுக்கு அண்ணணாகியுள்ளான். அவனை
வெளிச்சொல்லி அவனுக்காய் உதவி கேட்க முடியாத துயரம். அவர்கள் நெடுகலுமே
உச்சரிக்கும் 'அண்ணை' வளர்த்து வெளிநாடனுப்பி வைத்த பண முதலைகள் மீதும்
கோபம் வருகிறது.
இத்தகைய தியாகங்களின் மீது குளிர்காய்கிற சொத்துகளுக்கும்
வருமானங்களுக்கும் சொந்தமான சுயநலங்கள் மனம் வைத்தால் எத்தனை உயிர்கள்
காக்கப்படலாம்....? நினைத்தாள்.
02.05.2012 அவளது அண்ணனிடமிருந்து ஒரு தகவல் வந்திருந்தது.
தங்கையே நான் தொடர்பில்லாமல் போய்விட்டால் எனது 8வயது மகளுக்கான
கல்வியையாவது கொடுத்து உதவுங்கள். கட்டுநாயக்கா தாண்டி தப்பித்தால்
என்னிடம் 250ரூபா காசிருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.
தனது கடைசி விருப்பைத் தட்டச்சி மெயிலிட்டிருந்தான். அவனுக்காய் எதையும்
செய்ய முடியாது போகிற இயலாமையையும் தாங்கமுடியாத வலியையும்
வெளிப்படுத்தியது கண்கள். கணணித்திரை மங்கலாக கண்ணீரால் நிறைந்தது கண்கள்.
யாருமற்ற கணணியறையில் கண்ணீர் விட்டழுதாள் அந்த அண்ணனுக்காய்.
பெயர் பொறிக்கப்படாத வரலாற்றுக்குள் அவனது பெயரைக் காலம் எழுதி வைத்தது.
ஆயினும் காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப்போகிறது.....?
எங்காவது ஒரு அதிஸ்டம்
கிடைத்தால் அவனுக்கான 3லட்சம் கிடைத்தால் எப்படியிருக்கும்....? ஏண்ணிக்
கொள்கிறாள்.....
03.05.2012