Wednesday, October 12, 2011

தொடரும் துயரங்கள்…..! 2

தொடரும் துயரம் 2

அன்புள்ள அக்கா,
எனது குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கிறது. கடைசிச்சண்டையில் புதுமாத்தளனில் எனக்கு தலையில் காயம்பட்டது. அதனால் எனது கையும் காலும் இழுத்துள்ளது. எனது மனைவிக்கு ஒருகால் இல்லை மற்றக்கால் முறிவு. தகரக்கொட்டிலில் தான் இருக்கிறோம். கிணறு மலசலகூட வசதிகள் எதுவுமில்லை. மகன் இந்த வருடம் பாடசாலை போகிறார். 01.10.2011 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. எங்கள் படம் கடிதத்துடன் அனுப்புகிறேன். எங்களது நிலமையை கருத்தில் கொண்டு உதவுங்கள்…..,

அவன் ஒரு முன்னாள் போராளி. நீண்ட அவனது கடிதத்தின் கிடைசிப்பந்தி இப்படித்தான் முடிந்திருந்தது. அவனது குடும்பப்படம் ஸ்ரூடியோக்காரரின் கைவண்ணம் பட்டு அந்த மாதிரியிருந்தது.

அவனது கடிதம் படம் எல்லாத்தையும் உதவிசெய்ய முன்வந்த ஒரு குடும்பதிற்கு மின்னஞ்சல் செய்துவிட்டு அவர்களது பதிலுக்காக 4நாள் காத்திருந்தேன். 5ம்நாள் காலை அவர்கள் அழைத்தார்கள்.

நீங்களென்ன கஸ்ரப்பட்ட குடும்பத்தை தாங்கோண்டு கேட்டா வசதியான ஆக்களின்ரை விபரத்தை அனுப்பியிருக்கிறியள்…?

அதெப்பிடியண்ணை கஸ்ரப்படாதவையெண்டு கண்டுபிடிச்சனீங்கள்…?

படத்தில அந்தமாதிரி வடிவாத்தானே உடுப்புப்போட்டு வெளிக்கிட்டிருக்கினம்….? பிறகென்ன கஸ்ரமவைக்கு ?

அண்ணை அவேட்டை சொந்தமா கமறா இல்லை. உதவிசெய்யிற உங்களுக்குத் தாறதுக்காக நான்தான் ஸ்ரூடியோவில போய் படமெடுத்து அனுப்பச் சொன்னனான். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது எங்கடை சனம் சோறுசாப்பிடாட்டிலும் வெளியில போகேக்க தங்கடை கஸ்ரத்தை வெளியில தெரியாமல் அயல்வீட்டில கடன்வாங்கியெல்லாம் நகைபோட்டு உடுப்புப்போட்டு வெளிக்கிட்டுப் போறதுகள். கஸ்ரமெண்டாலும் இருக்கிறதை வடிவாப் போடத்தானே எல்லாரும் விரும்புவினம். அதைத்தான் அதுகளும் செய்து படமெடுத்து அனுப்பியிருக்கினம். மற்றது ஸ்ரூடியோ போய் படமெடுக்கிறதெண்டா ஸ்ரூடியோக்காரரும் பிச்சையெடுக்கிறமாதிரிப் போனா படமெடுக்கவும் யோசிப்பினம்.

மறுமுனையில நிண்ட அண்ணை என்னைக் குறுக்கறுத்தார்.

நான் இயக்கத்தில இருந்த குடும்பமாத்தான் தரச்சொன்னனான்….நீங்களும் ஈமெயிலில எழுதியிருந்தியள் பொடியன் இயக்கத்திலயிருந்ததெண்டு ஆனா பொடியன் இயக்கத்தில இருக்கேல்லயாம்.

அதென்னண்டண்ணை அறிஞ்சனீங்கள் ?

நான் கேட்டனான் இயக்கத்தில இருந்தீரோ ? உம்முடை மனிசி இருந்ததோண்டு ? மற்றது எனக்குத் தெரிஞ்ச இயக்கக்காறரைக் கேட்டன் பொடிக்கு ஒருதரையும் தெரியாதாம்…..பொடியன் தாங்கள் ஒண்டிலையும் இருக்கேல்லயாமெண்டு சொல்லிச்சுது. எனக்கெண்டால் அவையில நம்பிக்கையில்லை.

அடுத்த விசயமென்னெண்டா உந்தச் சண்டையில அழிஞ்சு கஸ்ரப்பட்டு வந்திருக்கினம்….ஆனா அதுக்கிடையில அடுத்த குழந்தை பெறப்போறாவாம் மனிசி…..மனிசன் காலும் கையும் ஏலாது மனிசியும் ஏலாது ஆனால் அடுத்த குழந்தையை றெடிபண்ணீட்டினம்……உதெல்லாம் வைச்சுப் பாக்கேக்க எனக்கெண்டால் அவை நல்ல வசதியானவையெண்டுதான் தெரியுது. நீர் பிள்ளை எனக்கொரு கஸ்ரப்பட்ட இயக்கத்திலயிருந்த குடும்பமா தாரும் 3,4பிள்ளையள் உள்ள குடும்பமா அதுவும் அவை ஏலாத ஆக்களாயிருந்தா நல்லம். நான் அவைக்கு மாதம் ஒரு 5ஆயிரம் ரூபா குடுப்பன்.

எனக்கெண்டால் கோவம் பத்திக்கொண்டு வந்திச்சு. என்னேயிற பிச்சைகேக்க வெளிக்கிட்டாச்சு இதில ரோசம் மானம் பாத்து என்னத்தைச் செய்யிறதெண்டு வாயில வந்த எல்லாத்தையும் அடக்கிக்கொண்டு விளக்கத் துவங்கினேன்.

அண்ணை அந்தப்பொடியனும் ஒரு பெரிய பொறுப்பில இருந்தவன். கடைசிச் சண்டையிலதான் காயம்பட்டது…. அடுத்து நீங்கள் எடுத்தவுடனும் இயக்கமோ எண்டு கேட்டிருந்தா உடனும் யோசிக்குங்களெல்லோ ?

மற்றது நாட்டிலை குழந்தையளில்லை….எல்லாம் ஊனமும் நோயுமாத்தான் இருக்குதுகள். இஞ்சையிருந்து நாங்கள் பெத்த பிள்ளையளை ஒருதரும் அங்கை கொண்டு போய் நாட்டுக்காகக் குடுக்கப்போறதுமில்லை. ஆக குழந்தையள் பெறக் கூடிய ஆக்களை நாங்கள் ஊக்குவிக்க உதவியளைக் குடுத்தால் கூட நல்லமண்ணை….. அங்கை ரண்டாந்தரப் பிரசையளான தமிழர் 3ம்தரமாகிற நிலமையில இருக்கிறம். அதுகளும் மனிசர்தான….அதுகளிட உணர்வுகளை நாங்கள் கட்டி வையுங்கோண்டு சொல்றது ஞாயமில்லைத்தானே…?

இயக்கம் இருக்கேக்க இயக்கக்குடும்பங்களே 3,4 பிள்ளையணெ்டு பெத்தவை ஏனெண்டா நாட்டுக்கு பிள்ளையள் வேணுமெண்டு….அப்பிடிப் பெத்த கனபேர் கூட கடைசிச்சண்டையில தங்கடை 12,13வயதுப்பிள்ளையளையே களத்திலயும் விட்டு தாங்களும் மண்ணோடை மண்ணாப்போனவை…..!

எங்கடை இனம் அழிஞ்சு போச்சண்ணை கனக்க பிள்ளையள் பிறக்க வேணும்…..இந்த நாடுகள் மாதிரி எங்கடை சனத்துக்கு கூடக் குழந்தை பெறுகிறவைக்கு ஊக்குவிப்பா நாங்கள் உதவியளைக் குடுத்து எங்கடை சனத்தைப் பெருக்க வேணும்.

நான் விடாமல் கதைச்சுக் கொண்டு போனதையும் வெட்டிக்கொண்டு அண்ணை குறுக்காலை பாஞ்சார்…..

தங்கைச்சி நீர் உவையளை விட்டிட்டு எனக்கு வேறை குடும்பத்தைத்தாரும்….என்ரை மகளும் மருமகனும் உவையின்ரை படத்தைப் பாத்திட்டு சொல்லீட்டினம் உவைக்கு உதவி செய்ய வேண்டாமெண்டு….

அதுக்குமேலை என்ரை கதையைக் கேட்காமல் அண்ணை ரெலிபோனை கட்பண்ணீட்டார்.

000 000 000

24,09.2011

கலோ…..தம்பி நான் யேர்மனியிலயிருந்து…

சொல்லுங்கோக்கா….

உங்களோடை ஒரு அண்ணை கதைச்சவரோ ?

ஓமக்கா…. என்ற அவனது குரல் மாறீட்டுது. இயக்கத்தில இருந்தீரோ ? கடைசியில என்ன நடந்தது ? தலைவர் எங்கை ? எத்தினையாம் திகதி தலைவரை பாத்தமெண்டெல்லாம் கனக்கக் கேட்டவரக்கா……நான் இயக்கத்தில இருக்கேல்லயெண்டே சொல்லீட்டனக்கா…..அவர் கதைச்சதுகள் கொஞ்சம் பயமாவும் இருந்ததக்கா…
எங்கடை குடும்பப்படத்தில வடிவான உடுப்புப் போட்டிருக்கிறமாம் படத்தைப்பாக்க வசதியானாக்கள் மாதிரியிருக்கிறமாமெண்டெல்லாம் கதைச்சாரக்கா….. சரியான கவலையாக்கிடக்குதக்கா…. நாங்கள் படத்தில போட்டிருந்த உடுப்பு எங்களுக்கு காம்பில கிடைச்சதக்கா….. உங்களுக்கு அனுப்பிறதுக்காகத்தானேக்கா ஸ்ரூடியோவில போய் படமெடுத்தனாங்கள்…. அவன் அழுதான். அவன் தொலைபேசியை அவனது மனைவியிடம் கொடுத்தான்.

எங்களுக்கெண்டு இப்ப ஒண்டுமில்லையக்கா….இருக்கிறது தகரக்கொட்டிலக்கா ,தண்ணி வசதியில்லை , ரொயிலெட் வசதியில்லை, நான் இந்தப் பிள்ளை வயித்தோடை ரொயிலெட்டுக்கு போறதெண்டா வெளியில தூரமாத்தான் போயிருக்கிறனான். சமைக்கிறதுக்குக்கூட நல்ல பாத்திரங்களில்லையக்கா. 1ம் திகதி பிள்ளை பிறக்கப்போகுதக்கா ஆனா பிள்ளைக்கான சாமானுகள் கூட ஒண்டும் வாங்கேல்லயக்கா… அவனது மனைவியும் அழுதாள்.

சரி விடுங்கோ அழாதையுங்கோ…..எல்லாருக்கும் உங்கடை நிலமை விளங்காது. வேறையாரையும் ஒழுங்கு செய்யிறன்.

அவனதும் அவனது மனைவியின் அழுகையும் தான் அந்தரமாக்கிடந்தது. ஒருகாலம் அவனுக்காக தனியாக வாகனம் முதல் காவலாள் வரையும் இருந்தது. ஆனால் இயக்க வேலை தவிர்ந்த தனது சொந்த அலுவல்களுக்காக அவனிடம் ஒரு சயிக்கிள் தான் இருந்தது.

சமாதான காலத்தில் எத்தனையோ வசதிகளை எத்தனையோபேர் பெற்றிருந்த போதும் அவன் கிளிநொச்சி வீதியில் சயிக்கிளில் தான் திரிந்தான். அவனுக்காக கிடைத்த வசதிகள் என்றால் கணணி மட்டும்தான். அதுவும் அவனது வேலைக்குத் தேவையானதால் கணணி வசதியைப் பெற்றிருந்தான்.

எப்போதும் அவன் அயன்பண்ணி அழகாகவே ஆடைகளை அணிவான். இருக்கிற ஆடைகளை துப்புரவாகத் தோய்த்து அயன்பண்ணித்தான் போடுவானாம். அவனது நண்பர்கள் சொல்வார்கள்.

24.09.2011 அன்று பின்னேரம் அவனது விபரத்தை அனுப்பிய அவனது தோழன் எங்கள் தொடர்பாளன் தொடர்பு கொண்டான்.

அக்கா அவன் சரியாக்கஸ்ரப்படுறான். இண்டைக்கும் அவன்ரை வீட்டை போனனானக்கா. வேணுமெண்டா நான் ஒரு போட்டோக்காரரைக் கூட்டிக் கொண்டு போய் அவன்ரை உண்மையான நிலமையை படமெடுத்துத் தரட்டேக்கா….? அவன்ரை நிலமையை வேணுமெண்டா நேரிலை வந்து பாக்கச் சொல்லுங்கோக்கா.

குழந்தை பிறக்கப்போகுது ஏதும் உதவினீங்களெண்டா நல்லமக்கா. இல்லது ஒரு சுயதொழிலுக்கு ஏதாவது செய்து விட்டாலும் நல்லம். இயல்பில அவன் ஒரு ஒதுங்கின சுபாவமக்கா. இயக்கத்தில இருந்த காலத்திலயும் தனக்கெண்டு ஒண்டும் வாங்கமாட்டானக்கா.

அந்தத் தொடர்பாளன் அவனைப்பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன்கூட ஒரு காலையிழந்தவன். மற்றக்கால் முறிவு கையொன்று முளங்கையின் கீழ் இயக்கமில்லை….ஆனால் தன்னைப்போன்ற நிலையில் இருக்கும் சக தோழனுக்காக இரக்கப்பட்டான்.

எனக்கு விளங்குது ஆனால் இஞ்சை எல்லாருக்கும் விளங்காது தம்பி. பாப்பம் வேறையாரையும் ஒழுங்குபடுத்துவம். அடுத்த கிழமை 10ஆயிரம் ரூபா அனுப்பிவிடுறென் குடுத்துவிடுங்கோ. ஏதாவதொரு ஒழுங்கைச் செய்வம்.

02.10.2011. தொடர்பாளன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்.

அன்புள்ள அக்கா,

நீங்கள் *** மூலம் அனுப்பிய 10ஆயிரம் ரூபா கிடைத்தது. 01.10.2011 எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. உங்கள் உதவியால் பிள்ளைக்கான சாமான்கள் வாங்கினோம். உயிருள்ளவரை உங்களது இந்த உதவியை மறக்கமாட்டோமக்கா…..என அவனது கையெழுத்துக்கடிதம் தொடர்ந்தது……
02.10.2011

துயரங்கள் தொடரும்……………….

http://mullaimann.blogspot.com/2011/09/blog-post.html