Saturday, September 26, 2009

அம்மாவின் கனவு சுதர்சனா !


அம்மாவின் கனவு
தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை
சுதர்சனா !
நீயெப்படி ?
நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….?

எப்போதோ செய்தியாய் சந்தேகமாய்
கேள்விப்பட்டது….
அது மறந்து போன ஒருநாளில்
தோழனொருவன் ஊடாய்
தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர்
இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை….

அம்மாக்களுக்கு நிரந்தர துயராய்
பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன
எழுதப்படாத விதியா சுதர்சனா…?

உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய்
புலம்புகிற அம்மாவின் கனவுகளில்
ஏன் தீமூட்டினாய்…..?

அக்காவின் ஞாபகங்களில்
தொலை தூரங்கள் வரையாகத் தங்கள்
கனவுகள எறிகிற உன் உடன்பிறந்தோரின்
உள்ளெரியும் தீயில் அவர்கள்
உயிர்வாழ்வையே வெறுப்பதை….!
எந்த வார்த்தை கொண்டும்
தேறுதல் கொடுக்க முடியாத
எங்கள் ஆறுதல் வார்த்தைகளால்
ஒற்றியெடுக்க முடியாத உனதும்
உன்னுடன் வாழ்ந்ததுமான அவர்களது நாட்களை
எப்படித் தேற்ற…?

*அம்மா நீ என் கடவுள்*
என்ரை தெய்வத்தை எந்தவிதி கொன்றதென
உன் அம்மா எத்தனையோ கதைகள்
உன்னைப் பற்றியே தினமும்….
நீயிருந்திருந்தால் நீயிருந்திருந்தால் என
அவள் நிம்மதியின் காலமெங்கும்
நீயே வெற்றிடமாய் போய்விட்டாய்…..

அம்மாக்களின் விதியை ஏனிந்த உலகு
அழுகையாய் நிரப்பி வைத்திருக்கிறது…?
உன்னுலகில் ஏதேனும் தீர்விருப்பின்
சொல்லியனுப்பு சுதர்சனா….!
26.09.09

2009 March தன்னைத் தீமூட்டி மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி சுதர்சனா இறந்து போனார். அவரது நினைவாய் இப்பதிவு)

4 comments:

  1. அந்தமாணவிக்கு எனது அஞ்சலிகள்
    வரதா

    ReplyDelete
  2. தங்களின் நினைவுகளும், நெஞ்சும் ஈழத்திலேயே சுற்றுவதறிந்து பெருமைகொள்கிறேன்!!

    ReplyDelete
  3. என்ன செய்வது தேவா,
    நினைவுகளோடும் கனவுகளோடும் தமிழினவிதி எழுதப்பட்டுவிட்டது.

    சாந்தி

    ReplyDelete
  4. நினைவுகளில் நீ வாழ்கிறாய் அக்கா

    ReplyDelete