Wednesday, June 11, 2014

மரணத்தின் வாசலை நெருங்கியிருக்கும் வீரத்தாய் (இது கதையில்லை)

ஈழவிடுதலை வரலாறு எத்தனையோ வீரத்தாய்களையும் அவர்களது வீரக்குழந்தைகளின் வரலாறுகளையும் சேமித்து வைத்திருக்கிறது. ஈழக்கனவு கலைந்ததாய் நம்பப்படுகிற இந்நாட்களிலும் இன்னும் அந்தக் கனவின் நனவுக்காய் வாழ்கிற ஆயிரமாயிரம் அம்மாக்களின் வரிசையில் தனது பிள்ளைகளை தமிழீழக்கனவுக்காய் ஈந்த அம்மா பெயரைப்போல அழகான அம்மா. தனது குடும்பத்தின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளென 10 உறுப்பினர்கள் வரை நாட்டுக்குத் தந்த வீரத்தாய்.

வயது 90ஐத் தாண்டும். கண்பார்வையும் குறைந்து காதும் கொஞ்சம் கேட்காது. ஆனால் குரலை வைத்தும் நிழலை வைத்தும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய திறனை இன்னும் இழக்கவில்லை.

இன்றும் இடையறாத மாவீரர் நினைவும் அந்த மனிதர்களின் புனிதமும் அம்மாவால்  ஞாபகம் கொள்ளப்படும் பொழுதுகளில் அம்மாவின் ஆற்றாமையும் துயரமும் கண்ணீராகிக் கரைந்து கதைக்கிற நொடிகளையெல்லாம் சிதிலமாக்கிவிடும்.

ஒரு காலம் அம்மாவின் வீட்டில் போராளிகளின் வருகையும் அவர்களுக்கான விருந்தும் ஆரவாரமுமே அதிகமான நாட்களவை. பிள்ளைகள் ஒவ்வொன்றும் வித்துடல்களாய் வீழ வீழ அம்மாவோ ஈழவிடியலின் நாளைத்தான் எண்ணிக் கொண்டிருந்தா. அம்மாவின் நம்பிக்கையும் கனவும் அவரது பிள்ளைகளின் கனவுபோல தமிழீழமாகவேயிருந்தது.

தனது பிள்ளைகள் விதைக்கப்பட்ட ஊருக்குள்ளேயே தானும் இறுதிவரை உயிர்வாழ்ந்து முடிந்துவிடும் கனவோடிருந்த அம்மாவின் கனவுகளும் தகர்ந்து சிதைந்து போய் இன்று ஒரு அனாதை போல அம்மா....! வருமானம் எதுவுமில்லை யாரும் கொடுக்கிறதை வாங்கி நிறைவடைகிற அம்மாவாக தனது வாழ்வின் முடிவின் நாட்களை எண்ணிக் கொண்டு நிறைவேறாத கனவின் நிறைவேறும் நாளை நம்பியபடி....!

இடைக்கிடை அம்மாவின் ஊர் தாண்டுகிற போதெல்லாம் அம்மாவை எட்டிப்பார்த்துவிட்டே அவன் தனது பணிகளைச் செய்திருக்கிறான். யாரை அடையாளம் தெரிகிறதோ இல்லையோ அவனது குரலும் முகமும் அம்மாவுக்கு எப்படியோ அவனை அடையாளப்படுத்துகிறது.

மண்குடிசை முற்றத்தில் அம்மா ஒரு பிளாஸ்டிக் கதிரையில் தான் இருப்பா. அவனது மோட்டார் வாகனம் வீட்டுவாசலை அடைகிற அம்மா அவனுக்காக ஆயிரக்கணக்கில் கதைகள் சொல்ல வைத்திருப்பா. போகிற நேரங்களில் தன்னால் இயன்றதை அம்மாவுக்கு கொடுத்து அவவுடன் கொஞ்ச நேரம் செலவளித்து விட்டு வெளியேறும் போது மீண்டும் கனவுகள் அவனுள்ளும் துளிர்க்கும்.

தலைவர் வருவர் மோன....பாரன் தலைவர் கட்டாயம் வருவர்....அம்மா அவனுக்கு அடிக்கடி சொல்லிக்கொள்வா. தலைவன் வரவை அவன் நம்புகிறானோ இல்லையோ அம்மா சொல்லும் போது அவனும் „'ஓமம்மா வருவர்.....'ழூ எனத்தான் சொல்லிக் கொள்வான்.

அம்மாவை பிரத்தியேகமாய் தலைவர் சந்தித்த கதைகளையெல்லாம் அம்மா சொல்லத் தொடங்கினால் அவன் அப்படியே உறைந்துவிடுவான். வுpழவிழ வீரக்குழந்தைகளைத் தந்த அம்மாவை அம்மாவின் விடுதலையின் மீதான பற்றுதலை மதிக்கும் பொருட்டு தலைவர் அம்மாவை பலமுறை சந்தித்திருக்கிறார். தனது மகன்களின் பாசத்தை தலைவனின் கவனிப்பில் அனுபவித்தா அம்மா.

அம்மா தனக்காக தனது குடும்பத்துக்காக ஒன்றையும் சேர்க்கவுமில்லை சேர்க்க ஆசைப்பட்டதுமில்லை. நாடு கிடைத்தால் தன் வீடும் விடியும் எனவே நம்பினா.

அம்மாவின் நம்பிக்கையும் நிறைவாகாமல் 2009 மேமாதம் உலகின் ஆணவமெல்லாம் அணிதிரண்டு தமிழர்களின் கனவுகள் மீது காலூன்றி மிதித்து ஆயிரக்கணக்கில் உயிர்களை அள்ளி விழுங்கியது.

முள்ளிவாய்க்கால் என்ற பெயரை உலகத்தில் ஒவ்வொருவரும் அழிவு தின்ற நகராக அறிந்து கொண்டார்கள். அம்மாவின் குழந்தைகள் உறங்கிய துயிலிடங்களை இடித்தளித்து அம்மாவினதும் ஆயிரக்கணக்கான அம்மாக்களின் பிள்ளைகள் துயின்ற துயிலிடங்கள் அடையாளமற்றுப் போனது. அம்மா விளக்கேற்றி வீரப்பாட்டிசைத்த வெளிகளெல்லாம் வெறிச்சோடிப்போனது.

11.06.2014 இன்றைக்கு மதியம் அம்மாவின் ஊரைத்தாண்டும் போது அம்மாவின் நினைவு வந்தவனாய் அம்மாவிடம் போனான் அவன். அம்மாவின் வாழ்வுக்காலம் முடியப்போகிறதென காலம் அம்மாவின் உற்சாகத்தையும் ஓட்டத்தையும் முறித்துப் போட்டிருக்கிறது. அம்மாவின் நாட்கள் இன்னும் நெடுப்பயணமில்லை முடிவுரைக்காக காத்திருக்கும் தருணம் இது.

இன்று வரையும் அம்மா எதையும் முடிந்து போனதாய் நினைப்பதில்லை எல்லாம் எல்லோரும் வாழ்கிறார்கள் என்றுதான் நம்புகிறா. ஞாபகங்கள் தவறிப்போன இன்றைய நாளிலும் அம்மா „'தலைவர் வருவார் தமிழீழம் வரும்' எனச்சொல்லிக் கொண்டே படுத்திருக்கிறாள்.

வறுமையின் நிறம் என்னவென்பதனை அடையாளம் சொல்ல அம்மா ஒருத்தியே போதும். அந்தளவுக்கு அம்மாவை வறுமையும் நோயும் முடக்கிப்போட்டுள்ளது. அம்மாவுக்கு விருப்பமான பாக்கு வெற்றிலை வாங்கவும் பத்துரூபாய் ஆராவது கொடுத்தால் தான்.

அம்மாவைப் பார்க்கப் போனவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. மோன பாக்குவெத்திலை வேணுமடா...! இன்னும் அவனது குரலையும் அவனது நிழலையும் நினைவு வைத்து அவனிடம் கேட்டாள் அம்மா. கையில் இருந்த 500ரூபாவைத்தான் அம்மாவிடம் கொடுத்தான்.

வரும் வழி முழுவதும் அம்மாவின் நினைவுதான் அவனைச் சுற்றிக் கொண்டிருந்தது. எப்படியிருந்த அம்மா இன்று ஒரு நல்ல உணவைக்கூட தனது இறுதிக்காலத்தில் தனது இறுதி நாட்களிலேனும் சாப்பிடக்கூட கொடுக்க அந்த வீட்டில் வசதியில்லை. அன்றாடம் கூலிவேலை செய்தே வாழ்வை ஓட்டும் மகளிடம் அம்மாவுக்கு பெரிதாய் எதையும் செய்ய முடியாது.

அம்மாவுக்காக மாதம் ஒரு 2ஆயிரம் ரூபா கொடுத்தாலும் உதவியா இருக்கும் அக்கா !  நேசக்கரத்தின் ஒரு பணியாளரான அவன் சில மாதங்கள் முன்னர் அம்மாவிடம் போய் வந்த போது சொன்னது வேலைகள் உதவிகளின் பல்வேறுபட்ட வேண்டுதல்களுடன் மறந்து போனது.

இன்றைக்கு அவன் கொண்டு வந்த விபரம் அறிக்கைகளோடு அம்மாவின் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மாவின் நிழற்படத்தையும் தந்திருக்கிறான். ஏதாவது செய்யோணும் அக்கா. சாப்பாட்டுச் சாமான்கள் கொஞ்சம் வாங்கி குடுப்பமோ ? பாவம் கண்ணும் முந்திமாதிரி பார்வையில்லை , காது ஏற்கனவே கேட்காது கிட்டப்போயிருந்து சொன்னாத்தான் கொஞ்சம் விளங்குது. பாவமாயிருக்கு எப்பிடி வாழ்ந்த மனிசி....

ஒரு சந்ததியையே நாட்டுக்குத் தந்த மனிசீன்ரை நிலமையைப் பாருங்கோ....! அவ சாகப்போறாவாம்.... அவன் சொல்லச் சொல்ல ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே வலுக்கிறது. அம்மாவுக்கான கடமையை மறந்து போனதற்காக மீண்டும் காலமே மன்னித்துக் கொள். யாரையென்று நினைக்க யாரையென்று மறக்க ?

தாயே உனக்காய் கடைசி அஞ்சலியை எங்காவது அல்லது ஏதாவது ஒரு ஊடகம் எங்கோவொரு மூலையில் போட்டு அழக்கூடும். அல்லது உனது மரணத்தின் பின்னால் உனது மரணம் வறுமையில் முடிந்ததென்று கட்டுரைகள் ஏதும் வரையலாம். ஆனால்  வாழும் போது உனக்கான வழியைத் தராத எங்களை மன்னித்துக் கொள் தாயே.

11.06.2014