Sunday, September 22, 2013

ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டான் உதவியவர்களுக்கு நன்றிகள்.

அன்பின் சாந்தி, எனது தம்பி ஜெகதீஸ்வரன் 14.09.2013 அன்று இறந்துவிட்டார். அவரது உயிர் காக்க நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள். அவரது கடைசி ஆசைப்படி திருக்கேதீஸ்வரத்தில் இறுதி நிகழ்வுகள் செய்தோம். நேசக்கரம் ஊடாக எனது தம்பிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பியின் மரணச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க முயன்றேன் உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லை.

15.09.2013 அன்று வந்தடைந்த செய்தியிது. இந்த செய்திக்குரிய முன்னாள் போராளி இறந்துவிட்டான். இவனைப் பற்றியொருமுறை மீள் நினைவு கொள்வோம்.

ஒரு முன்னாள் போராளி மகசீன் சிறைச்சாலையில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலமையில் இருப்பதாக 2011 செப்ரெம்பர் அளவில் உலகத்தமிழர்கள் அறிந்த செய்தியை யாரும் மறந்திருக்கமாட்டோம். பிபிசி தொடக்கம் தமிழ் ஊடகங்கள் யாவும்  சூடான பதிவாக வெளியிட்டிருந்த செய்தியாக பலநாட்கள் பல இணையத்தளங்களில் முதல் செய்தியாக இருந்தது ஜெகதீஸ்வரன் என்ற இளைஞனின் நிலமை.

அறிக்கைகளும் ஆய்வுகளும் ஜெகதீஸ்வரனுக்காக பலராலும் எழுதப்பட்டது. அரசியல்வாதிகள் முதல் அவன்மீது அக்கறை கொண்ட யாவராலும் அவனது உயிர்காக்கத் தொடர் முயற்சிகள் நடைபெற்றது. உயிர் போகும் தறுவாயில் அந்தரித்துக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் சிறைச்சாலை மருத்துவமனையிலும் பின்னர் கொழும்பு மருத்துவமனையிலும் அவனுக்கு விலங்குமாட்டப்பட்டே வைத்திருக்கப்பட்டான்.

மனிதாபிமானமற்ற முறையில் அந்த முன்னாள் போராளி வதைக்கப்பட்டுக் கொண்டிருந்தான். உணவு இறங்க மறுத்து அவன் பட்ட வலி சொல்லில் முடியாது. எழுந்து நிற்கவோ அசையவோ திராணியற்ற நிலமையில் அவனிருந்த போதும் அவனுக்கு இடப்பட்ட விலங்கு கழற்றப்படாமல் அவன் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவன் உயிர்காக்க அவனைத் தொடர்ந்து வாழ வைக்கப் பெருந்தொகை பணம் தேவைப்பட்டது. தம்பியின் உயிர்காக்க அவனது அக்காவும் மகனின் உயிர்காக்க அவனது அம்மாவும் அலைந்த அலைச்சலும் கண்ணீரும் இப்போது நினைத்தாலும் தாங்க முடியாத பெருந்துயர். சிலரால் சிறுதொகையை மட்டுமே வழங்க முடிந்தது.  ஊரில் யாராலும் அந்தப் பெரிய தொகையைக் கொடுக்க முடியவில்லை.

அப்போது நேசக்கரம் சிறையில் வாடிக்கொண்டிருந்த முன்னாள் போராளிகள் தமிழ் அரசியில் கைதிகளுக்கான உதவிகளை இயன்றளவு வழங்கிக் கொண்டிருந்தது. சிறையில் இருந்த நண்பர்கள் நேசக்கரத்திடம் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்கும் அவசர நிதியுதவியைக் கோரியிருந்தனர்.

அவனது உயிர்காக்கப் பெருமளவு நிதி தேவையாயிருந்தது. முதலில் இலகுவில் நிதியைப் பெற்றுக் கொள்ளும் வசதி படைத்த சில ஊடகங்களிடம் உதவியைக் கோரினோம். ஆனால் அவர்கள் முன்வரவில்லை. போகப்போகிற உயிரை பிடித்து வைக்க சேகரிக்கும் நிதியை காக்கப்படக் கூடியவர்களுக்கு பயன்படுத்தலாமே என ஆலோசனைதான் தந்தார்கள்.

இதோ போகப்போகிறது உயிர் என்றாலும் தனது மகனை தனது தம்பியை எப்படி அவனது குடும்பத்தால் இழக்க மனம் வரும் ? ஒருநாள் அதிகம் அவன் உயிர் வாழ்ந்தாலும் அவனது உறவுகளுக்கு அது பெரும் நம்பிக்கைதானே ?
இறுதியில் நேசக்கரம் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க நிதியினைத் திரட்டுவதென முடிவெடுத்தது.

யாழ் இணையம் , நேசக்கரம் இணையம் , முகநூல் என இயன்ற வழிகளில் உதவியைக் கோரி செய்தியை வெளியிட்டோம். அத்தோடு ஐஎல்சி (லண்டன்) வானொலியில் திரு.தாசீசியஸ் ஐயாவின் ஆதரவில் வாரம் ஒருமுறை நடைபெற்றுக் கொண்டிருந்த ‚'உறவுகளுக்கு உதவுவோம்' நேசக்கரம் நிகழ்ச்சியில் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவியைக் கோரினேன்.

ஐஎல்சி வானொலி தனது நிகழ்ச்சிகளை இரத்துச்செய்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் உயிரை மீட்கத் தனது சக்தியை முழுமையாகத் தந்துதவியது. இந்த ஆதரவைத் தந்துதவிய ஐஎல்சி வானொலி நிர்வாகம் , நான் கேட்ட நேரமெல்லாம் தங்கள் நிகழ்ச்சி நேரங்களை விட்டுத் தந்து ஆதரவு தந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மற்றும் உயிர்காப்பில் தனது முழுமையான ஆதரவையும் தந்து பொறுமையுடன் நேரடி ஒலிபாரப்பில் கலந்து ஆதரவு தந்த திரு.தாசிசியஸ் ஐயாவை என்றென்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட நேரம் வானொயில் குழப்பியடிக்க வந்து தங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொட்டி அந்த நிகழ்ச்சி நின்று போக முயன்ற பல நல்லுள்ளங்களையும் இந்நேரம் நினைவு கூருவோம்.

வழக்கறிஞர் தம்புவும் வேறு பலரும் இவனது பிணைமனுவை மேன்முறையீடு செய்து அவனது மருத்துவ சிகிச்சையைச் செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்த செய்த உதவிகள் அளப்பரியவை. சட்டத்தரணி தம்பு அவர்கள் எப்போது தொடர்பு கொண்டாலும் சினக்காமல் ஜெகதீஸ்வரன் உயிர்காக்கத் தனது ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தது காலத்தால் மறக்க முடியாத நன்றியாகும்.

எந்த நேரம் தொடர்பு கொண்டு அவனது நிலமையை அறிய முயற்சித்து அழைத்தாலும் ஒருபோதும் தனது கடமையைத் தட்டாமல் ஆதரவு தந்த சட்டத்தரணி தம்பு அவர்களுக்கு நன்றிகள் என்றென்றும். பணமே ஒரு கைதியின் வாழ்வை மாற்றும் சக்தியாக இருந்த காலத்தில் பணம் இல்லாமல் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தி தனது சக்தியை ஜெகதீஸ்வரனின் பிணைக்காக உழைத்த திரு.தம்பு அவர்களுக்கு காலம் முழுவதும் நன்றிகள்.

நீண்ட முயற்சியின் பின்னர் பிணை கிடைத்து கொழும்பு மருத்துவமனையில் ஜெகதீஸ்வரன் அனுமதிக்கப்பட்டான். அப்போதும் அவனுக்கு போடப்பட்ட விலங்குகள் அகற்றப்படவில்லை. அந்த நேரம் அவனைப் பார்க்கப்போன ஒரு சிங்கள இனத்தவர் விலங்கிடப்பட்ட நிலமையில் இருந்த அவனது சமகால நிலமையை படம்பிடித்து வந்தார். சில நாட்கள் அந்த நிழற்படம் ஊடகங்களை நிறைத்தது.

சில நாட்களில் அவன் மீது பூட்டப்பட்ட விலங்கு கழற்றப்பட்டு மருத்துவம் பெற்றுக் கொண்டிருந்தான். மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான மருத்துவ ஆதரவு வேண்டிய போது அதற்கான உடல்வலுவை ஜெகதீஸ்வரன் கொண்டிருக்கவில்லை.

நீண்ட சிறைவாழ்வு  அவனை உடலாலும் பலத்தை இழக்க வைத்திருந்தது. ஒருநாள் நன்றாயிருப்பான் மறுநாள் இதோ போகப்போகிறான் போல அந்தரிப்பான். அவன் உயிரோடு போராடினான். அவனுக்காக அவனது தோழர்கள் அவனது உயிர்காக்க இயங்கிய எல்லோரும் தினம் தினம் அவனது உயிர் மீட்பை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தோம்.

தொடர் மருத்துவம் ஓரளவு உடல்நிலமை தேறினான். அதுவரையான செலவு 8லட்சத்தைத் தாண்டியிருந்தது. அடுத்து மாற்றுச்சிறுநீரக சிகிச்சை செய்வதானால் மேலும் தொகை பணம் தேவையென்றது மருத்துவம். அதனையும் செய்துவிடலாம் என முயன்ற போது மருத்துவ அறிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்கு மாறாக வந்தது.

ஏற்கனவே போரில் காயமுற்ற அவனது உடலில் சிறுநீரகத்தை அண்மித்த ஒரு பகுதியில் அகற்றப்படாதிருந்த செல்துண்டு அகற்றப்படாமல் சிகிச்சையை மேற்கொள்வதில் சிரமம் எனச் சொல்லப்பட்டது. செல்துண்டு அகற்றுவது அவனது உயிரையும் கொண்டு போகும் வாய்ப்பே 90வீதத்துக்குமேல் இருந்தது. எனவே குருதிமாற்றுச் சிகிச்சையை மட்டுமே அவன் வாழும் நாட்கள் வரையும் செய்து கொள்வதே சரியெனச் சொல்லப்பட்டது.

அவனுக்காக மாற்றுச் சிறுநீரகத்தை அவனது உடன்பிறந்த சகோதரி வழங்க முன்வந்திருந்தார். 4பிள்ளைகளின் தாயான தனது சகோதரி சிறுநீரகத்தை தானம் செய்து அவருக்கு ஏதும் நிகழ்ந்தால் அனாதையாக 4 பிள்ளைகள் போய்விடுமென அஞ்சிய ஜெகதீஸ்வரன் தனது சகோதரியிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்று தான் உயிர்வாழ விரும்பாமல் அதனை மறுத்துவிட்டான். ஒரு போராளியென்பவன் மற்றவர்கள் நலத்தில் அக்கறையுடையவன் என்பதற்கு ஜெகதீஸ்வரன் மீண்டுமொருவனாய் உதாரணமானான்.

உனக்கு மாற்றுச்சிறுநீரகம் பொருத்த முடியாத உடல்நிலமையில் இருக்கிறாய். உனது உயிர் வாழும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதனை எவரும் அவனுக்குச் சொல்லவில்லை. கடைசிவரை அவன் இடையில் செத்துப் போகப்போகிறேன் என்பதனை அறியாதே வாழ்ந்தான்.

ஆனால் அவனது கடைசி ஆசை அவனது அக்கா தனாவுடன் வாழ வேண்டுமென்றதே. அவன் ஆசைப்படி அக்கா தனாவுடன் தனாவின் குழந்தைகளோடும் தனது இயலாத உடல்வலியோடும் இறுதிக் காலங்கள் வரையும் வாழ்ந்தான்.

உடல்நிலமைய தேறி பேசக்கூடிய காலம் வந்த போது தானே ஒரு குறுஞ்செய்தியனுப்பினான். அக்கா, உங்களுடன் கதைக்க வேணும். எனது உயிர்காத்த உங்களுக்கு நன்றிகள். இந்த இலக்கத்துக்கு அழையுங்கள். என சில தடவைகள் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

முதல்முதல் அவனது குறுஞ்செய்தி வந்தது ஒருநாள் விடியற்காலை. உடனே அழைத்த போது அவன் அனுராதபுரத்தில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். தொலைபெசியெடுத்ததும் உடன் ‚'அக்கா' என்றுதான் அழைத்தான். வார்த்தைக்கு வார்த்தை அவன் சொன்ன அக்கா என்ற அந்த வார்த்தைகள் அவனில்லாத இன்றைய நாட்களில் மீளவும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

தனது நலத்தைவிட தனது உயிர்காக்க உதவிய எல்லோரையும் ஆயிரம் முறை நன்றியோடு நினைவுபடுத்திக் கொண்டிருந்தான். தனது உயிர்காக்க உதவிய ஒவ்வொருவருக்கும் அவன் நன்றி சொன்னான். சாகும்வரையும் நன்றியுடனிருந்தான்.

பல தடவைகள் அவனது இலக்கத்தில் அழைத்து அவனது உடல் நலம் பற்றி விசாரித்திருக்கிறேன். சில தடவைகள் அழுதான் தனது நோயின் வேதனையை வெளிச் சொல்லத் தெரியாத குழந்தையாய் அந்தக் கனத்தை அறிய முடியாதவனாய் அவன் அழுத நாட்கள் அவனுக்காக என்னையும் கண்ணீர்விட வைத்ததைத் தவிர வேறொரு ஆற்றுதலையும் கொடுக்க முடியாது போனது.

சாகக்கிடந்தவனுக்கான ஆதரவு தேவைப்பட்ட போது தள்ளி நின்று விமர்சித்தவர்கள் சிலர் இடையில் வந்தார்கள். அவனுக்கு தொடர்ந்த உதவிகளில் குறுக்கிட்டு நேசக்கரம் அவனுக்கான உதவிகளிலிருந்தும் ஒதுங்கும் வகையில் இடைஞ்சல் தந்தார்கள். இரவு சாமம் எதுவென்றில்லாமல் பல உபத்திரவம் தந்தவர்களின் தேவையற்ற தொலைபேசியழைப்புக்கள் துரத்தத் தொடங்கியது.

சாவின்நுனியில் நிற்கிற ஒருவனின் உதவியிலும் குழுவாத நிலமையும் , நான் நீ என்ற அதிகாரங்களும் வந்தடைய தொடர்ந்து ஜெகதீஸ்ரவனோடு தொடர்பில் இருக்க முடியாது போக வைத்தது.  சரி நீங்களே செய்து கொள்ளுங்கள் என அவனது தொடர்பிலிருந்து ஒதுங்கிப் போனேன்.

குழுவாதம் குத்துப்பாடு எதுவும் அவனுக்குத் தெரியாது. அக்கா கதைக்கவும். என அவன் பல தடவைகள் குறுஞ்செய்தி அனுப்பினான். யாரோ ஒரு கருணையாளர் அவனுக்கு குருதிமாற்றுச் சிகிச்சைக்கு உதவிக் கொண்டிருப்பதாக சிறையிலிருந்து நண்பர்கள் சொன்னார்கள். உதவி கிடைக்கிறது அவன் உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு போனது 2வருடம். அந்த இடைவெளியில் குறுக்கிட்டு எதையும் மேலதிகமாக உதவக்கூடிய நிலமையும் இருக்கவில்லை.

இடையில் சிலதரம் அவனது அக்கா தனாவுடன் தொடர்பு கொண்டு அவன் பற்றி விசாரித்ததோடு போய்விட்டது காலம். உனமுற்ற , பெற்றோரை இழந்த ,பிள்ளைகளை நாட்டுக்குத் தந்தவர்கள் என பல இடங்களிலிருந்தும் வந்து போகும் அழைப்புக்கள் கடிதங்கள் உதவி கோரல்கள் ஓயாமல் காலம் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அந்த வேலைகளோடு ஜெகதீஸ்வரன் இடையிடை நினைவில் வந்து போவான். ஆனால் அவனது மரணத்தின் தறுவாயில் அவன் பேச விரும்பிய போது என்னால் அவனது குரலை இறுதியாய் கேட்க முடியாது போகும் ஒருநாள் என்பதனை ஒருநாளும் நினைத்திருக்கவில்லை.

அவன் இறப்பதற்குச் சில வாரம் முதலும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். வேலைப்பழு அலைச்சல்களோடு அவனுக்கு அழைக்க மறந்து போனேன். ஆனால் அவன் பேச ஆசைப்பட்டதைத் தன் அக்காவுக்குச் சொல்லிவிட்டே இறந்து போயிருக்கிறான். தனக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொண்டே உயிரை விட்டிருக்கிறான்.

அவனது அக்காவின் குறுஞ்செய்தி எனது தொலைபேசியில் ஏற்பட்ட கோளாறினால் 3நாட்கள் கழித்தே என்னால் வாசிக்க முடிந்தது. தகவல் வாசித்ததும் அவனது அக்காவை அழைத்த போது...., அவனது மருமகள் தான் எடுத்தாள். தனது பிஞ்சுக்குரல்களால் ஆரு நீங்கள் ? எனக் கேட்டாள். நான் சாந்தியன்ரி அம்மாட்டைக் குடுங்கோ...! என்றதும் அந்தக் குழந்தை தாயிடம் தொலைபேசியைக் கொடுத்தாள்.

ஜெகதீஸ்வரனின் இறுதி ஆசைகள் இறுதி நம்பிக்கைகள் என அக்கா கதைகதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றுங்கள் என 2வருடம் முதல் அழுத அந்தக்குரலில் விரக்திதான் மிஞ்சியிருந்தது. தனது தம்பி தங்களை விட்டுப்பிரிந்த போதும் அந்தத் துயரத்திற்குள்ளும் புலம்பெயர்ந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டு அவன் சிலகாலம் உயிர்வாழ உதவியவர்களுக்கு நன்றி சொன்னாள்.

அவன் இதுவரை காலம் உயிர் வாழ நீங்கள் ஆணிவேராய் நின்று அடித்தளமிட்டவர்கள் உங்களுக்குத் தான் நன்றி. அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் முகத்தில் அறைவது போலிருந்தது. நெடுகலும் உங்களோடை கதைக்க வேணுமெண்டு சொல்லிக் கொண்டேயிருந்தவன்....என அடிக்கடி சொன்னாள்.

போரில் கணவனை இழந்து வாடும் அந்த விதவை அக்காவின் வாழ்வாதாரம் ஜெகதீஸ்வரனின் வயதான அம்மா எல்லோரும் அவன் வாழ்ந்தவரை போதும் என்றுதான் சொல்கிறார்கள். தொடர்ந்து அவனை வாழ்விக்க அவர்களிடம் இல்லாது போன பணம் மீது அவர்கள் பற்றற்றவர்களாக ஏதோ அவன் இருந்தவரை அவனை மகிழ்வோடு வாழ வைத்த திருப்தியில்....! ஆனால் 35வயதில் முடிந்து போன அவனது இளவயளது மரணம் அந்தக் குடும்பத்தைத் துயரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒருமுறை அவனோடு இறுதியாகப் பேசியிருக்கலாம் என்கிற துடிப்புத் தொடர்கிறது. அதுவொரு குற்றவுணர்வாக அண்மைய நாட்களை அமைதியில்லாது ஆக்கியிருக்கிறது...! பேசிய பொழுதுகளில் அவன் அக்கா என்றழைக்கும் அந்த அன்பில் இருந்த இணைப்பு இனியென்றும் மீளக்கிடைக்கப்போவதில்லை....! வருடத்தில் அவனை ஒருநாள் நினைவு கூர்ந்துவிட்டு இனிமேல் மறந்துவிடப்போகிறது காலம்....!

இன்றொரு குறுஞ்செய்தி. அதுவும் ஒரு சிறையிலிருந்து வந்திருக்கிறது. அங்கும் ஒரு முன்னாள் போராளி புற்றநோயால் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு போராளி தனது மூச்சை களத்தில் கரைத்த காலங்கள் அந்த மரணங்களை நாங்கள் எத்தனை மரியாதை கொடுத்து வணங்கினோம்.

இன்று அந்த மாவீரர்களை அவர்கள் துயின்ற துயிலிடங்களை அழித்துத்துடைத்து அடையாளம் இல்லாது செய்தவர்கள் இன்று அதே கொள்கைக்காகப் போனவர்களசை; சிறைகளிலும் அவர்கள் வாழும் ஊர்களிலும் வதைக்கிறது. கொள்கைக்காக தங்கள் வாழ்வைத் தந்தவர்கள் இன்று அநாமதேயமாய் அழுவதற்கோ நினைவு கூர்வதற்கோ ஆட்களின்றி அநாதையகளாய்....சாகிற அவலம்....!

20.09.2013

தொடர்புபட்ட செய்தி இணைப்புகள் :-
http://nesakkaram.org/ta/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%EF%BF%BDb/

http://nesakkaram.org/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4/

Monday, September 16, 2013

அன்புள்ள சின்னண்ணா....!

அதுதான் நான் அவனுக்கு வைத்தபெயர் அவனும் தனது பெயரைச் சொல்லாமல் அடம்பிடித்துக் கொண்டு திரிந்தான். மற்றவர்களும் தனது பெயரைச் சொல்லக் கூடாதென்று எல்லோரையும் தனது சொற்களால் கட்டிவைத்திருந்தான்.

சமாதிகோவிலடிக் காவலரணில் அறிமுகமான அந்தச் சின்னண்ணா ! எங்கேயிருக்கிறாய் ?

1987இல் இராணுவம் கட்டுவனுக்கு வந்ததோடு வீடுகளைவிட்டு வெளியேறிய நாங்கள் வளவுமரங்களைக் காயவிடாமல் தண்ணீர் ஊற்றுவது வளக்கம். அப்படியொரு மாலைப்பொழுதில் தான் இளனீர் தந்து உறவானான் சின்னண்ணா.

கிணற்றிலிருந்து பெரியவாளியைத் தூக்கக்கச் சிரமப்பட்ட எனக்கும் உதவி செய்து அம்மம்மாவோடும் ஆச்சியென்று உறவு சொல்லியழைத்து அந்தப் போராளிகள் இருவரும் அறிமுகமானார்கள்.

சிறிய உருவம் , சிரிப்பு மாறாத முகம் , தங்கைச்சியென்றழைக்கும் அவர்கள் அடிக்கடி வீடுபார்க்கப் போகும் போது வருவார்கள். அரசியல் பேசுவார்கள், இனிப்புத்தருவார்கள் , தவமன்ரிவீட்டு மாங்காய் ஆய்ஞ்சு தருவார்கள் , பேய்வரும் கதையெல்லாம் சொல்லுவார்கள் , பேய்க்கதை கேட்காது விலகும் எனக்கு வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.
தண்ணீரள்ளி உதவுவார்கள். தங்கள் போராட்டம் பற்றி விளக்குவார்கள்.மீண்டும் அடுத்தோ அல்லது மறுநாளோ வருவார்கள். கதைப்போம் சிரிப்போம். போய்விடுவார்கள்.

அந்தப் போராளிகளில் அவன்மட்டும்தான் கொஞ்சம் ஓயாத வாய். மற்றவன் சிரிப்பான் அதிகம் கதைக்கமாட்டான்.

உங்கடைபேரென்ன ? கேட்ட எனக்கு திண்டுவளந்தான் என்றான் சிரித்தபடி. திண்டுவளந்தான் ! கேட்டவுடனேயே நான் சிரித்த சிரிப்பைப்பார்த்துவிட்டு என்ரை பேர் திண்டுவளந்தான் என்று திரும்பவும் சொன்னான்.

ஆனால் நான் அடிக்கடி சின்னண்ணாவென்றே கூப்பிடுவேன். அதுவே என்வரையில் அவன் பெயராயும் போயிருந்தது. அவனது இயக்கப் பெயரோ வீட்டுப்பெயரோ அறியவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

அவன் சாகக்கூடாது என்வீட்டில் ஒருவனாய் எண்ணி அவனுக்காயும் பிரார்த்திப்பேன். இலங்கை , இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டு இலங்கை இராணுவம் பழையபடி பலாலிக்குள் போய்விட போராளிகளும் காவலரண்களைவிட்டு தங்களது முகாம்களுக்குப் போய்விட்டனர்.

அதன்பின் என் சின்னண்ணாவைக் காண்பதுமில்லை. அந்தத்திண்டு வளந்தான் வருவதுமில்லை. ஆனால் ஞாபத்தில் நிற்கும் பலருள் அவனும் மறக்காத நினைவாய்....!

தியாகி திலீபனண்ணா 5அம்சக்கோரிக்கைகளோடு நல்லூர் மேற்குவீதியில் உண்ணாநோன்பிருந்து இந்திய வல்லாதிக்கத்தின் சதியால் 12ம் நாளன்று வீரச்சாவடைந்து தேசமே அழுதுதுடித்திருந்த அந்தநாள் திலீபனண்ணாவுக்கு அஞ்சலிசெய்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறோம்.

தனது போராளி நண்பன் ஒருவனுடன் மோட்டார் சயிக்கிளில் போனான் என் சின்னண்ணா. வாடிய முகமும் , குழம்பிய தலையுமாய் , முதுகில் இருந்த துப்பாக்கியைத் தாண்டி காற்றில் ஒரு கையசைப்போடு போனான். அன்றைய அந்தச் சோகத்தில் யாரையும் தேடும் நினைவும் இருக்கவில்லை. என் சின்னண்ணாவும் போய்விட்டான்.

அதன்பின் ஒரு நாள் மதியம் பாடசாலைவிட்டு வரும் வழியில் வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ராஜேஸ்வரியம்மன் கோவிலடியில் சின்னண்ணாவைச் சந்திக்க நேர்ந்தது. மோட்டார் சயிக்கிளில் வந்தவன் சற்றுத்தூரம் போய் திரும்பி வந்தான். சற்று வளர்ந்துவிட்டவன் போலிருந்தான்.

திடீரென வந்தவனுடன் கதைக்கத் தொடங்க சில விநாடிகள் கரைந்தது....! மறந்திட்டீங்களோ திண்டுவளந்தானை ? அவன் தான் கேட்டான். எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள் ?  சுகமாயிருக்கிறீங்களோ ? அம்மம்மாட்டைப் போனனான்.

பதில் சொல்லி முடிக்க முன்னம் அவன் படபடவென்று பல்லாயிரம் வார்த்தைகள் பேசிமுடித்தான். பின்னால் இருந்தவனுக்கு தனக்கு திண்டுவளந்தான் பெயர் வந்தது பற்றிச் சொன்னான். அப்போதும் தனது பெயரை அவன் சொல்லவேயில்லை. அன்றைக்கும் ரொபி தந்தான்.

நல்லாப்படிக்க வேணும்...! அம்மம்மாட்டை சொல்லுங்கோ திண்டு வளந்தான் திரும்பி வருவனெண்டு....! வரட்டா ? சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் திண்டு வளந்தான் சின்னண்ணா....!


அதுதான் அவனைக்கண்ட இறுதிநாள். அதன்பின் அவனைக் காணவேயில்லை. இன்று வரை காணவே இல்லை.

ஓ...
என் சின்னண்ணாவே
எங்கேயிருக்கிறாய்....?
களத்தில் நிற்கிறாயா.....?
கல்லறையில் உறங்குகிறாயா....?
நீயும் உனது தோழர்களும்
சென்றியிருந்து காத்த எங்களது ஊர்
சிங்களம் ஆள்கிறது.

நீ நடந்த
அந்தத் தெருக்கள் பற்றைக்காடாயும் ,
பதுங்கு குழியாயும்
மிதிவெடியாயும் இருக்கிறதாம்.

நீ தந்த இளனீர் மரம்
அதுவும் அழிந்திருக்கும்.
ஓ....
என் சின்னண்ணாவே எங்கேயிருக்கிறாய்.....?
21.07.2000

000            000           000

காலம் 2002. முல்லைத்தீவு  ஒரு தென்னந்தோப்பு நிறைந்த வளவு. அதுவொரு பெண் போராளிகள் முகாம். இரவு 10மணிதாண்டியிருந்தது. பழைய கதைகள் பழைய மனிதர்கள் பற்றிய கதையில் சின்னண்ணாவின் கதையும் வந்தது....!

உன்ரை சின்னண்ணாவை இப்ப எந்த அண்ணாவெண்டு தேடுறது ? ஒருத்தி சொன்னாள். அன்றைய பலரது கதைகளில் திண்டு வளந்தான் சின்னண்ணா அதிகம் பேசப்பட்டவனாகினான்.

உனக்குக் கோதாரி மறதி மருந்து தர வேணும் சின்னண்ணா பெரியண்ணாவெண்டு ஒருதரையும் மறக்கேல்ல....! சொன்னாள் ஒருத்தி.

மறக்கக்கூடியவர்களாகவா விடுதலையை நேசித்தவர்கள் எங்களுடன் வாழ்ந்தார்கள்....? நினைவு மட்டும் மீதமாக எத்தனையோ பேர் இன்று வரை நினைவுகளில் மட்டும் தேங்கி நெஞ்சங்களில் வாழ்ந்தபடி....!

மறுநாள் ஒரு சந்திப்பு. அதில் பலர் வந்திருந்தார்கள். அப்போது திண்டு வளந்தான் பற்றி ஒரு தளபதி பகிடியாகக் கேட்டார். யாரடா அந்தத் திண்டு வளந்தான்....? முதல்நாள் இரவு கதைத்தது விடிய முதல் அந்த மதிப்புக்குரிய தளபதியின் காதிலும் விழுந்து....! நமது பிள்ளைகள் தங்கள் தகவல் பரிமாற்ற வேகத்தை நிறுவியிருந்தார்கள்.

தலையைக் கவிழ்த்துச் சிரித்தாள் தோழி. காலில் மிதித்து மெல்லச் சொன்னாள். உனக்குத்தான் நடக்குது நக்கல்...!

அன்று எல்லோராலும் திண்டு வளந்தான் சின்னண்ணா நினைக்கப்பட்டான். ஆனால் 16வருடம் முதல் பார்த்த அந்தத் திண்டு வளந்தானை அங்கிருந்த எவரிலும் காண முடியவில்லை....!

கால மாற்றத்தில் திண்டு வளந்தான் எப்படி ? எங்கே ? இருப்பான்....எவராலும் கண்டுபிடிக்க முடியாதவனாய்....! ஆனால் நினைவுத் துளிகளில் அவ்வப்போது நினைவில் வந்து போகிறான்...!

23.03.2002.
(11வருடங்கள் முதல் எழுதப்பட்டு ஒரு பகுதி மட்டும் எங்கோ பத்திரிகையொன்றுக்கு அனுப்பப்பட்டது. இன்று தியாகி திலீபனின் பழைய பதிவுகள் தேடப்போனதில் மீளக்கிடைத்துள்ளது. தியாகி திலீபனண்ணாவின் நினைவு சுமக்கும் நாட்களில் 26வருடங்கள் கழித்து நினைவில் வரும் திண்டு வளந்தான் சின்னண்ணாவின் நினைவோடும் மீளும் நினைவு இது)

Saturday, September 14, 2013

எழுகின்ற தேசத்தின் விழுதாக....விலையாக....!

அம்மா நான்...! முடிக்க முதலே அம்மா அழத்தொடங்கிவிட்டார். என்ரையம்மா இண்டைக்கு எடுக்க வேணுமெண்டு நேந்து கொண்டிருந்தனான். ஒவ்வொரு நாளும் நினைக்கிறனான் என்ர செல்லத்தை....!

அம்மா அப்படித்தான் ஒவ்வொரு முறையும் குரல் கேட்டதுமே அழத் தொடங்கிவிடுவா...! தன் சோகங்களை தனது கனவுகளை ஒவ்வொன்றாய் ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும் கொட்டிவிட்டு கண்ணீரோடே விடைபெற்றுக் கொள்வா.

அம்மாவின் பிள்ளைகளுக்காக நோர்வேயிலிருந்து ஒரு குடும்பம் மாதம் 6ஆயிரம் ரூபா கல்விக்காக நேசக்கரம் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உதவியில் அம்மாவின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தின் காலாண்டு அறிக்கை தொகுப்பதற்காகவே அம்மாவை இன்று அழைத்திருந்தேன். வளமைபோல அம்மா சொல்லியழ கனக்க கதைகளை வைத்திருந்தா போல....!

அம்மாவின் கணவர் , மகள் , மருமகன், 2 மகன்கள் என வீட்டில் விடுதலைக்காகக் கொடுத்த உயிர்களின் விலையும் அவர்களின் தியாகமும் உலகை விற்றுக் கொடுத்தாலும் ஈடாகாதது. வீரச்சாவடைந்தவர்கள் விட்டுச் சென்ற கனவுகளை அம்மா இன்றும் சுமந்தபடி வறுமையின் கோரத்தில் அம்மா படுகிற துன்பம் பிள்ளைகள் பசியில் அம்மாவைச் சினக்கும் பொழுதுகளில் வருகிற துயரம் எல்லாம் ஒவ்வொரு வினாடியும் கடும் போராட்டமாகவே கழிந்தது.

தடுப்பிலிருந்து வந்திருந்த அம்மாவின் 4வது மகள் 23வயது. அவளுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்க மாப்பிளை தேடத்தொடங்கிய நேரமது. தடுப்பிலயிருந்து வந்தவளின் கற்பைச் சோதனையிட முனைந்தவர்களின் கலியாண விலங்கை அவள் விரும்பாமல் அம்மாவின் பிள்ளையாக வாழவே விரும்பினாள். அக்காவும் அத்தானும் விட்டுப்போன பெறாப்பிள்ளைகளுக்கும் அவளுக்கு அடுத்துச் சில வயது இடைவெளியில் நிற்கும் 3சகோதரங்களுக்காகவும் வாழ்ந்துவிட விரும்பியவளை அம்மாவால் மனம்மாற்ற முடியவில்லை.

அவள் வேலை தேடத்தொடங்கினாள். 23வயதில் அவளிடம் எவ்வித தகுதியும் இல்லையென்று அலுவலகக் கதவுகள் வியாபார நிறுவனங்கள் கதவுகளை மூடிக்கொண்டனர். அவளுக்கொரு வேலைகிடைத்தால் மிஞ்சிய 6குழந்தைகளுக்கும் உணவு கிடைக்குமென்ற நம்பிக்கையும் பொய்யாகிப்போன ஒருநாள் அம்மா அதிரடியாய் எடுத்த முடிவு மகளைப் பெருங்கோபத்துக்கு ஆளாக்கியது.

அவ்வப்போது விசாரணையென்ற பெயரால் படும் இம்சையைத் தாண்டி ஏதோ வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இனி எந்த வழியும் இல்லையென்று போனது. 6சிறுவர்களையும் நஞ்சூட்டி தானும் செத்துப்போக முடிவெடுத்து அம்மா ஒருநாள் இரவுச்சாப்பாட்டில் எல்லோர் கதையையும் முடித்து தானும் போய்விடவே யோசித்து ஏற்பாடுகளைச் செய்தாள்.

அம்மா அன்றைய நாளோடு எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் முடிவோடு அன்றைய மாலைநேரம் அடையாள அட்டையளவில் அம்மா காப்பாற்றி வைத்திருக்கும் தனது மாவீரரான கணவரின் படத்தை வைத்து புலம்பியழுத போதுதான் அம்மாவின் திட்டம் மகளுக்குப் புரிந்து போனது.
மரணத்தின் வாசத்தை நுகர்ந்து பாராத அதன் நெடிலை அறியாத குழந்தைகளுக்கு நஞ்சூட்டுதல் என்பது உலகில் மாபெரும் குற்றமாகும் அக்குற்றத்தைச் செய்கிறவருக்கு உலகநீதி கொடுக்கும் தண்டனையை அம்மா புரிந்து கொள்ளவோ அதனை அறிந்து கொள்ளவோ இல்லை.

ஒருவரில்லை எட்டுப்பேரின் உயிரை அழிக்கத் துணிந்த அம்மாவிற்கு எதிராய் இப்போதைய அம்மாவின் மூத்த மகள் நெருப்பானாள். இதுக்காத்தானேயம்மா இவ்வளவு கஸ்ரங்களையும் தாங்கினம்....! எனக்கும் உங்களுக்கும் சாவெண்டா என்னெண்டு தெரியும் ஆனால் இந்த 6 சின்னனுகளையும் ஏனம்மா...? அதுகள் வாழ வேணுமம்மா....! எங்கயெண்டாலும் ஒரு வேலை தேடீடுவனம்மா அது மட்டும் பொறுத்திருங்கோ...நான் பாப்பனம்மா எல்லாரையும்....!

அவள் அழுத அழுகையில் அவளது நம்பிக்கை தரும் வார்த்தைகளில் அம்மாவின் ஓர்மமும் கரைந்து ஒரு நொடியில் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போயிருந்தது. அன்றைக்கு அம்மாவின் அவசர முடிவை மாற்றியமைத்த மகளே இன்று அம்மாவும் ஆறுபிள்ளைகளும் உயிரோடு வாழக்காரணமாய் இருக்கிறாள்.

கூலித்தொழிலுக்கு குறைந்த சம்பளத்திற்கு அவள் வேலைக்குப் போகத்தொடங்கியவள் ஒரு பழைய நட்பொன்றின் உதவியில் நாச்சிக்குடாவில் ஒரு துணிக்கடையில் மாதம் 7ஆயிரம் ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தாள். சொந்த இடத்தைவிட்டு நாச்சிக்குடாவிற்குப் போனமகள் மாதம் மாதம் இப்போது 7ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் அனுப்பிக் கொண்டிருக்கிறாள். இப்போதுள்ள பொருளாதார இறுக்கம் பொருட்களின் விலையேற்றம் அவளது 7ஆயிரம் ரூபாவில் ஒருவாரம் ஓடுவதே சிரமம். ஆனால் அந்த 7ஆயிரம் ரூபாயில் அம்மா அந்த ஆறுபிள்ளைகளையும் காத்து தானும் உயிர்வாழ்கிறாள்.

தினம் தினம் போராடும் அம்மாவின் போராட்டத்தை ஒரு முன்னாள் போராளிதான் அறியத்தந்தான். கெட்டித்தனமான பிள்ளைகள் படிக்கவேனும் ஒரு உதவியை வழங்குமாறு கேட்டு நேசக்கரம் முகவரிக்குக் கடிதம் எழுதியிருந்தான். அவனது வேண்டுகையை உறுதிப்படுத்த அம்மாவின் முகவரிக்கு சென்று நேரில் அவர்களது நிலமையை படம்பிடித்து பார்த்து வந்து ஒரு பணியாளர் அறிக்கை சமர்ப்பித்தார். அடிக்குறிப்பில் இவர்களை அடையாளப்படுத்தி உதவியைக் கோராமல் வெளிப்படுத்தாமலே உதவி செய்யப்பட வேண்டிய குடும்பம் இது....எனவும் எழுதப்பட்டிருந்தது.

அடையாளம் சொல்லாமல் அவர்களை நம்பும் நிலையில் யாரும் முன்வரவில்லை. நான் உதவுவன் ஆனால் என்ரை முகப்புத்தகத்தில அவேன்ரை படம் கடிதங்களை போடவேணும்....ஏனெண்டா என்ரை நண்பர்கள் கனபேர் இருக்கினம்....அவைக்கு நான் செய்யிறதை அறிவிக்க வேணும்....இதுக்கு நீங்கள் ஓமெண்டால் விபரத்தை தாங்கோ....! என ஒரு அன்பர் உதவ விரும்பி முன் வந்தார்.

அந்த அன்பரின் கோரிக்கையை நிராகரித்தேன். கோபித்த அன்பர் அத்தோடு நின்றுவிடாமல்.... உங்களுக்குத் தெரியுமோ எத்தனை பேர் பொய்சொல்லி கனக்க இடங்களிலயிருந்து உதவியெடுக்கினம்...! உந்தக் குடும்பமும் எங்கேயும் எடுக்கிற உதவி பிடிபட்டிடுமெண்டுதான் மறைக்கினம் போல....!

அண்ணா நீங்க சொல்றமாதிரியும் சிலபேர் செய்திருக்கினம்....ஆனால் எல்லாரையும் ஒரேமாதிரி நினைச்சு உண்மையான ஏழையளைத் தண்டிக்கச் சொல்றீங்களா ? சரி நீங்கள் விடுங்கோ ஏதாவது பாப்பம்...! அத்தோடு குறித்த அன்பர் தொடர்பில் வருவதில்லை. ஆனால் முயற்சி கைவிடப்படாமல் அந்தக் குடும்பத்திற்கான உதவியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

02.06.2013 அன்று ஒரு மின்னஞ்சல் நோர்வேயிலிருந்து வந்திருந்தது. அந்த அஞ்சலுக்கு பதிலெழுதிவிட்டுக் காத்திருந்த மறுநாள் ஒரு அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். தன்னால் முடிந்தது மாதம் ஆறாயிரம் ரூபாய் ஒரு குடும்பத்துக்கு உதவ முடியுமென்றார்.

அம்மாவின் குடும்பத்தின் இழப்புகளைச் சொல்ல உடனே அந்தக் குடும்பத்துக்குத் தன்னால் உதவ முடியுமெனத் தெரிவித்தார். மாதம் மாதம் என்னாலை அனுப்பேலாது...உங்களுக்கு அனுப்பிவிடுறேன் நீங்கள் மாதம் மாதம் குடுங்கோ அவைக்கு....!

நீங்களே நேரடியா அனுப்பு முடியுமெண்டா நல்லமண்ணா....! நான் முடிக்க முன்னம் இன்றுவரை முகமறியாத அந்த அண்ணன் சொன்னார். எனக்கு உங்களில நம்பிக்கையிருக்கு....இந்த ஆறாயிரத்தை வைச்சு நீங்களொண்டும் கோடீஸ்வரியாகமாட்டீங்கள்....! எனச் சிரித்தார்.

நீங்கள் போடுற பதிவெல்லாம் வாசிக்கிறனான்....2010இல 3யுனிவேசிற்றி பிள்ளைகளையும் உங்களிட்டை வாங்கி அவைக்கு உதவி செய்தனான். அந்தப்பிள்ளையள் நீங்கள் அனுப்புற உதவியளையெல்லாம் எனக்கு கனக்க கடிதங்களாக எழுதியிருக்கினம்....! உதவியைத் தாற நானே உங்களை நம்பிறன் நீங்கேன் யோசிக்கிறீங்கள்...வாறகிழமை காசு வரும் அனுப்பிவிடுங்கோ....!

நானும் உங்களைப்பற்றி கிட்டடியில ஒருவர் எழுதினதை வாசிச்சனான்....! குறித்த நபரின் பொய்யான குற்றச்சாட்டு எழுத்து மீதான தனக்கிருந்த கோபத்தையும் வெளிப்படுத்தி நேசக்கரம் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

முகமே தெரியாமல் நம்பிக்கை வைத்து அம்மாவின் ஆறு பிள்ளைகளின் கல்விக்காக மாதம் அந்த அண்ணனின் ஆதரவில் ஆறாயிரம் ரூபா போய்க்கொண்டிருக்கிறது. அந்த அண்ணன் எந்த ஆதாரத்தையும் ஒரு போதும் கேட்டதில்லை. ஆனால் எதையுமே கேட்காமல் நம்பிக்கையோடு உதவுகிற அந்த நல்லுள்ளத்தின் நம்பிக்கையை காக்க வேண்டிய கடமையைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது.

உதவிகள் செய்யப்படுகிற குடும்பங்களில் பலரது தொடர்புகளை தனியே பேணுவதால் மாதம் ஒருமுறை அல்லது 2மாதம் ஒருமுறை தொடர்பு கொண்டு அவர்கள் நிலமை முன்னேற்றம் பற்றி அறிந்து உதவிக் கொண்டிருப்போருக்கு அறிவிக்கும் வளமையின் தொடர் இன்று அம்மாவை அழைத்தேன்.

000        000             000

இண்டைக்கம்மாச்சி எலெக்சன் கூட்டத்துக்கு அள்ளிக் கொண்டு போனவங்கள்...இப்பதான் போய் வந்து இதில தேத்தண்ணியொண்டு குடிச்சிட்டு இருக்கிறனம்மா...! இன்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு இலவச பேரூந்துகள் அனுப்பி மன்னார் தொடக்கம் பல ஊர்களிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய பிரசாரம் நடைபெற்றுள்ளது. அம்மாவும் தனது 7பிள்ளைகளையும் வீட்டில் தனியே விட்டுவிட்டு பஸ்சேறி போய் இரவுதான் வீடு திரும்பியுள்ளார்.

அவங்களம்மா எங்களை இப்பவும் வெருட்டலாமெண்டு நினைக்கிறாங்கள்...ஏதோ எங்கடை பிள்ளையள் அநியாயம் செய்து அழிஞ்சு போனமாதிரி நினைக்கிறாங்கள். பெத்த தாய் சொல்றன் உவங்கள் நாசமாப்போவாங்கள்....எங்கடை பி;ள்ளையள் உயிரைக்குடுத்து போனதுகளின்ரை மூச்சு உவங்களை சும்மாவிடாது மோன....!

அவன் சொன்னானம்மா கூட்டமைப்புக்கு வாக்களிச்சா திரும்பியும் உங்கடை பிள்ளையளை சாகடிக்கத்தான் அனுப்புவாங்கள்....30வருச பயங்கரவாதத்தை முடிச்சு 4வரியம் முடிஞ்சுது இதில நீங்கள் எவ்வளத்தை இழந்தனீங்கள்....? இதையெல்லாம் கூட்டமைப்பாலை தர முடியுமா ? வெளிநாட்டில இருந்து உங்களை வைச்சுப் பிழைக்கிற வெளிநாட்டுத் தமிழன் உங்களை கொல்லவிட்டு தங்கடை பிள்ளைகளை படிப்பிச்சு வசதி வாய்ப்போடை வாழ்ந்து கொண்டு உங்களைத்தான் திரும்பவும் சாக வைக்க அங்கை போராட்டம் அது இதெண்டு ஏமாத்திறாங்கள்....!

அவங்களையெல்லாம் நம்பினால் திரும்பியும் உங்களுக்குத் தான் அழிவு...செத்துப்போன உங்கடை பிள்ளையளின்ரை மரணச்சான்றிதழைக்கொண்டு வந்து எங்களிட்டை பதியுங்கோ நாங்க உங்கடை பிள்ளையளுக்கு நட்ட ஈடு தாறம்....! இப்பிடி கனக்கச் சொன்னானம்மா....அதைக் கேக்கக் கேக்க என்ரை நெஞ்செல்லாம் பத்தியெரிஞ்சது.....அவனை அதிலையே வைச்சு சாக்கொல்ல வேணும் போலையிருந்தது.....! அவங்க நினைக்கிறாங்கள் இப்பிடியெல்லாம் சொன்னா நாங்க தங்கடை பக்கம் வந்திடுவமெண்டு....!

என்ரை மகன் கரும்புலியா போகேக்க ஒரு வார்த்தை சொன்னானம்மா....தலைவரை கைவிடாதையம்மா தலைவருக்கு துணையாயிரெண்டு....என்ரை புள்ள தான் வெடிக்கப்போற நேரத்தையும் தெரிஞ்சு வைச்சு எனக்கு இப்பிடித்தான் சொல்லீட்டுப் போனவன்....மற்றவனும் மருமேனும் ஆனந்தபுரத்தில விழேக்க என்ன நினைச்சிருக்குங்களெண்டது எனக்குத் தெரியும்....!

என்ரை மகள் 18வரிசம் இயக்கத்தில இருந்தவள்....கடைசி சண்டையில அவள் சாகேக்க தன்ரை 3 பிள்ளையளையும் என்னை நம்பி விட்டிட்டுப் போகேக்கயும் சொல்லீட்டுப் போனது என்ன தெரியுமா ? என்ரை குஞ்சுகளையும் நாட்டுக்காக விட்டிட்டுப் போறனம்மா பாரெண்டுதான்....! ஏன்ரை கடைக்குட்டி கடைசியா வரேக்க அம்மா அண்ணைக்காகப் போறனம்மா எண்டுதான் போனது பிள்ளை இண்டை வரைக்கும் அவன் இருக்கிறானா இல்லையா எதுவும் தெரியாதம்மா....!

இப்பிடி நாங்கள் எல்லாத்தையும் இழந்து எங்கடை குடும்பங்களும் சீரளிஞ்சு இண்டைக்கு என்ரை குஞ்சுகளுக்கு கஞ்சி குடுக்கவே படுறபாட்டை உவங்களுக்கென்னண்டம்மா விளங்கும்....? இண்டைக்கும் விடியக் காலமை அள்ளிக் கொண்டு போனவங்கள் சாப்பிடேல்ல....மத்தியானமும் இல்ல இரவு பிள்ளையள் கிடந்ததை சாப்பிட்டுதுகள் எனக்கு சாப்பாடில்லை தேத்தண்ணியை போட்டுக் குடிச்சிட்டு படுக்கப்போறன்.

நான் தெருத்தெருவா பிச்சையெடுத்து என்ரை பிள்ளையளை வளத்தாலும் வளப்பனே தவிர உந்த அரசாங்கத்திட்டையோ உந்த அரசியல்வாதியளிட்டையோ ஒரு ரூபாய் கூட வேண்டமாட்டனம்மா....! என்ரை குஞ்சுகளுக்கும் இதத்தான் சொல்லியிருக்கிறன்....சிலவேளை அம்மா செத்துப்போனா  உவங்களின்ரை பிச்சைக்காசுக்கு போய் கையேந்த வேண்டாமெண்டு.....!

அண்டைக்கு 2009இல சண்டை நடக்கேக்க இந்தக் குஞ்சுகள் சின்னனுகள் இதுகள் சண்டைக்கு போற வயசா இருந்திருந்தா கொண்டு போய் சண்டையில விட்டிருப்பன்.....என்ரை அண்ணைக்கு துணையா என்ரை பிள்ளையள் எல்லாத்தையும் குடுத்திட்டு போயிருப்பன்....தலைவர் தானம்மா எங்களை பாதுகாத்த மனிசன் இவங்களெல்லாம் படு சுயநலவாதியள் கள்ளன் காவாலியள்....!

நான் பெத்ததுகளுக்கு ஒரு விளக்குக் கொழுத்தக்கூட ஏலாமல் பண்ணின அறுவாரை நம்பி எங்கடை சனமும் பின்னாலை போகுது...என்ரை சீவன் இருக்குமட்டும் ஒரு ரூவா காசு உவங்கடை கையாலை வாங்கமாட்டன்....அப்பிடி வாங்கினா நான் பச்சைத் துரோகியம்மா....!

அவனொருத்தன் எனக்குச் சொன்னானம்மா ஒரு கதை...., நினைக்க நினைக்க வாற கோவம்....! என்ரை பிள்ளையளின்ரை மரணச்சான்றிதழைக் கொண்டு வந்து தங்களிட்டை பதியட்டாம் 4லச்சம் வேண்டித்தருகினமாம்...மகளுக்கு கலியாணம் கட்ட சீதனத்துக்கு தாங்க ஒழுங்கு செய்யிற 4லட்சத்தையும் எடுக்கலாமாம்....! என்ரை பிள்ளையள் உவங்கடை காசுக்காகவே செத்துப்போனதுகள்....?

அம்மா ஆவேசமாகவும் அழுகையோடும் தனது இன்றைய அனுபவத்தைப் பகிர்ந்து தனது துக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். மரண வீட்டில் ஒப்பாரியெடுத்து கத்துவது போல அம்மா பெலத்து சத்தமிட்டு அழுது கொண்டிருந்தார். மனசுக்குள் பூட்டி வைத்த வெப்பியாரத்தையெல்லாம் இன்றைய இருளின் பொழுதோடு சொல்லியழுது ஆறுதல் தேடும் தாயாக என்னோடு தன் சுமைகளையெல்லாம் பங்கிட்டுக் கொண்டிருந்தா.....!

தினம் தினம் நான் கடவுளிட்டை வேண்டிறனானம்மா எனக்கும் என்ரை குடும்பத்துக்கும் ஒரு நல்ல காலம் வர வேணுமெண்டு....! இவ்வளவு நாளும் நான் கேக்காததை இப்ப கேக்கிறனம்மா என்ரை பிள்ளையளைக் கொண்டவனிட்டை என்னையும் என்ரை பிள்ளையளையும் கையேந்த விடாமல் உதவுங்கோம்மா....!

நான் சொந்தமா ஒரு தொழில் செய்ய ஒரு கை தாங்கோ நான் எழும்பீடுவன்.....! என்ரை பிள்ளையளை படிப்பிச்சுப் போடுவன்...இண்டைக்கு திமிரா நிக்கிறவனுக்கு முன்னாலை என்ரை பிள்ளையள் நிமிந்து நிக்க வைக்க என்னாலை ஏலுமம்மா....! இப்போது அம்மா உறுதி மிக்க ஒரு போராளியின் இயல்பை தன் குரலிலும் வெளிப்படுத்தினா.

ஒரு தாயின் கண்ணீருக்கான பெறுமதியும் அர்த்தமும் அம்மாவின் கண்ணீரிலிருந்தும் உறுதியிலிருந்தும் தெளிவாகியது. உண்மையான தேசத்தின் மீதான நேசத்தின் சாட்சியாக அம்மா ஒருத்தியே ஈழத்து அம்மாக்களின் பிரதிநிதியாக உயர்ந்து எழுகின்ற தேசத்தின் விழுதாக....விலையாக....!

அம்மாவுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இருக்கு. பயிர்செய்து இருக்கிற வியசாய நிலத்தை வளமாக்க கையில் எதுவுமில்லை. தனது உழைப்பில் உயர தனது குழந்தைகளை வாழ வைக்க விரும்பும் அம்மாவிற்கு குறைந்தது ஒரு லட்சரூபாவேனும் தேவை.

வசதிகள் தருகிறோம் என ஆசைகாட்டுவோர் பின்னால் போகாமல் இன்னும் தனது மாவீரான பிள்ளைகளின் கனவை நெஞ்சில் சுமக்கும் அந்தக் கனவுகள் ஒருநாள் நிறைவேறும் என நம்பும் அம்மாவிற்கு அம்மாவின் பிள்ளைகளாய் புலம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளில் ஒரு பிள்ளை இதோ உதவ நானிருக்கிறேன் அம்மாவென நேசக்கரம் தருமென்ற நம்பிக்கையில் அம்மாவின் வாழ்வை மாற்றும் கனவோடு....!

12.09.2013