Wednesday, July 10, 2013

போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம்.


நீயில்லாது போய்
இன்று இரண்டு ஆண்டுகள்
முடிந்து போகிறது.

எல்லாமுமாய் நீ வாழ்ந்த
எங்கள் தேசத்திலொரு
நினைவுக்கல் நாட்டியுன்னை
நினைவு கூரவோ
நெஞ்சழுத்தும் துயர் கரைய
ஊர்கூடி அழுது துயர் போக்கவோ
யாதுமற்றுப் போன விதியை மட்டுமே
நொந்து சாகும் விதி பெற்றோம்.

பிரகாசமாய் ஒரு பெயரும்
எழிலாயொரு பெயரும்
உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள்
ஆயிரம் கதைகளும்
அழியாத நினைவுகளும்....!

அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய்
நம்பும் உனது குழந்தைகள்
அப்பாவைத் தங்களிடம்
அனுப்புமாறு கேட்கிறார்கள்.
அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும்
செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும்
அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு
கட்டளையிடுகின்றனர்.

அப்பா தர வேண்டுமென்ற அவர்களது ஆசைகள்
இப்படி ஆயிரக்கணக்கில் நீண்டு கிடக்கிறது
நீயில்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்ப
எவராலும் முடிவில்லை.

உன்னாலே வாழ்ந்தவர்களும்
இப்போது வரை வாழ்பவர்களும் பலர்.
ஆயினும் அனாதையாய்
நீ போன பொழுதுகூட
அருகிலிந்த அட்டைகள் வரவேயில்லை.

இன்று உனது குழந்தைகள்
ஏழை விதவையின் குழந்தைகளாக
எல்லாக் குழந்தைகள் போலவும்
ஆயிரம் ஆசைகளோடு.....!

உனக்கான கல்லறை நாளை எழுகிறது
உனது ஞாபகங்களைத் தரும் சொத்து
அதுவொன்றே அன்னிய மண்ணில்
உன்னை நினைவு தரும் நினைவிடம்.

போய் வருக என்றுன்னை வழியனுப்பி
மண்போட்டு விடைதரவும் ஆளின்றி
உன் காதல் மனைவியின் கண்ணீரிலிருந்து
சொரியும் ஞாபகங்களே
இன்றுன் நினைவுநாளில்
இதயம் கனக்க இமைகள் பனிக்க எஞ்சியிருக்கிறது.
அமைதியாய் உறங்கு
உன் ஆத்ம அமைதிக்காய்
கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம்.
10.07.2013

Friday, July 5, 2013

ஒரு கரும்புலியின் நினைவாக

தினம் தீயில் நீ குளித்தாய்
தியாகத்தின் பொருள் விளக்க
புலியே நீ புகழ் வெறுத்தாய்.....

இதயத்தில் நீ சுமந்த
இலட்சிய நெருப்பதிலே
உன்னுயிரை முடிந்து வைத்தாய்
என்னொடியும் உன்னுயிரை
உதறிவிட நீ துணிந்தாய்....

விழியுறக்கம் நீ மறந்து
விளக்காகி ஒளிதந்து
எங்கள் விடியலின் கிழக்காகி
சூரியனை வலம் வந்தாய்
பகை வாசலிலே போய்த்திரிந்தாய்....!

உன் இலக்கு உன்னை எட்ட முன்னம்
உயிர்ப்பூ வாடியுதிர
உடற்கணுக்கள் துடிப்பிழந்து
ஓ...எங்கள் உடன்பிறப்பே
உறங்கி போனாயோ ?

உன் முகமறியேன்
உன் குரலும் கேட்டறியேன்
அவன் வரமாட்டான்
உன் கூட நின்றவன்
உறுதிப்படுத்திய செய்தியது.....!

விழி கண்ணீர் மாலையிட
வீரனே....!
விக்கித்து விம்முகிறேன்
வேறென்ன செய்வேன்.

2003 யேர்மனியில் வெளியிடப்பட்ட மாவீரர் மலரில் இடம்பெற்ற கவிதை. ஒரு கரும்புலியின் நினைவாக எழுதப்பட்டது.10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் மீளும் நினைவாக)