Monday, January 31, 2011

எயிட்ஸ் தமிழரை, வன்னியை , யாழ்மண்ணை அழிக்குமா….?


எங்கள் இன்றைய கனவு போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மீளவும் அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் வாழ ஒரு வழி. இதைத்தான் மே2009இன் பின்னர் அதிகம் சிந்திக்கின்றோம். எம்மை வந்தடைகிற செய்திகள் தொடர்புகள் யாவும் வறுமை நசுக்கும் எமது மக்களின் துயரம் நிறைந்த கதைகளையே கொண்டு வருகிறது.

ஆயினும் அண்மையில் சில பரபரப்பான செய்திகள் எம்மை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒருதரம் எரிச்சல்பட அல்லது இப்படியுமா என யோசிக்கவும் வைத்தது. போர் நடந்து முடிந்த ஊர்களில் விபச்சாரம் , பதின்மவயதினரின் பாலியல் நடத்தைப் பிறள்வு , மாணவர்கள் போதைப்போருள் பாவனை, 76பேருடன் பாலியல் உறவுகொண்ட 17வயதுப்பள்ளி மாணவியென எங்களை வந்தடைந்த செய்திகள் சற்று அதிகமாகத்தானிருந்தது.

மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் எமது ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தொடர்புபட்டவர்களை விமர்சித்து பதின்மவயதினரைக் குற்றம் சுமத்தி கிட்டத்தட்ட ஒரு சினிமாக்கதையை திரையில் பார்த்தது போலவே வெளியிட்டிருந்தது. செய்தியின் சூடு அடங்க அவ்விடயங்களின் தொடர்ந்த தாக்கம் அது தரப்போகிற அழிவு எதிர்காலச் சந்ததியின் பாதிப்பு எதையுமே சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஊடகம் ஊடகர்கள் ஒரு இனத்தின் காவலர்கள் என்ற நிலமை போய் இனத்தின் எதிர்காலம் எப்படியும் போகட்டும் என்ற கணக்கில் பல ஊடகர்கள் பணத்துக்காக எதையும் எப்படியும் எழுதுவோம் என்ற அளவில் எழுதுவதையே அவதானிக்க முடிகிறது.

மேற்படி விடயங்களில் ஒன்றான எயிட்ஸ் உயிர்கொல்லி நோய்பற்றித் தேடியதில் பல திடுக்கிடும் உண்மைகளை அறிய முடிந்தது. இந்நோய் சார்ந்து சிந்திக்கின்ற, எம்மினம் இந்நோயால் அழிந்து போகப்போகிற அபாயம் பற்றிய பயங்கரத்தை , நாங்கள் சிந்திக்க மறந்த உண்மையை , சில சமூக அக்கறை மிக்க மருத்துவர்களை அணுகிய போது அறிய முடிந்தது.
போர் முடிவின் பின்னர் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமாக எயிட்ஸ் தொற்று எங்கள் தாயகத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் உண்மையை பல தொடர்பாடல்கள் ஊடாக உணர முடிந்தது. இந்நோயிலிருந்து எம்மினத்தைக் காக்க என்ன செய்யலாம் என்ற எண்ணமே கடந்த சில வாரங்களாக தலையைக்குடையும் விடயமாக உள்ளது.

பயங்கரம் மிக்க நோய் எமது சந்ததியை நிரந்தர அழிவுக்கு இட்டுச்செல்லவுள்ள உண்மையை மக்கள் பிரதிநிதிகளான சில அரசியல்வாதிகள் வரையும் விளக்கப்பட்டும் எவரும் அக்கறையெடுக்கவில்லை. உலகெங்கும் உள்ள நோய்தானே இதில் என்ன பயம் என்கிற அசமந்தமான பதில்களைத்தான் திரும்பப்பெற முடிந்தது.

இளம் பெண்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அதிரடியாக வெள்ளைவேட்டி அரசியல்வாதிகள் கண்டுபிடித்தனர் என்றெல்லாம் செய்தியெழுதும் செயலாளர்களும் ஊடகங்களும் பல வெள்ளைவேட்டிகளும் விபரச்சாரத்தை ஊக்குவிக்கின்ற முகவர்களாக உள்ள உண்மையை ஏன் எழுத மறந்தன ? (இப்ப நீ மட்டுமென்ன அப்பிடியானவர்களை இனங்காட்டுகிறாயா இல்லையே என்றுதான் கேட்கப்படும்)

மக்களுடன் உறவாடும் பல வெள்ளைவேட்டி அரசியலாளர்கள் கூட விதவைகளை நாடுவதும் சலுகைகைளைக் காட்டி அவர்களை தம்மோடு உறவுகொள்ள நிர்ப்பந்திப்பது இம்சிப்பது சத்தமில்லாமல் வன்னிக்குள்ளும் யாழ்மண்ணுக்குள்ளும் நடப்பது வெளிவராத உண்மைகள். சாதாரண கிராமசேவகர் முதல் அரசியல்வாதிகள் வரை நொந்துபோன பெண்களையும் சிறுமிகளையும் அவர்கள் அறியாமல் பாலியல் தொழிலாளர்களாக்கியுள்ளார்கள்.

இப்போதைய யாழ், வன்னிப் பகுதியில் நிலவரம்:-

தனது சொந்தக்காணியை திரும்பப்பெற , காணாமல் போன கணவனைத்தேட , வறுமையைத் தாங்க முடியாத நிலமையில் வாழ்வாதார உதவியைத் தேட , குடும்பத்தில் ஆண்துணையை இழந்த பாரம் அழுத்தும் சகல சமூக அக்கிரமங்களை எதிர்கொள்ள , அல்லது குறைந்த பட்ச நிவாரணச் சலுகையைப்பெறுவதற்கே அரசியல்வாதியையும் அரச உத்தியோகத்திலுள்ள ஆண்களையும் நாட வேண்டியுள்ள நிலமையில் பெண்கள் சிறுவர்கள் இளைஞர்களின் நிலமை இருக்கிறது.

நல்லவர்களென சமூகம் உலவ அனுமதித்துள்ள வெள்ளைவேட்டிகளை அல்லது காற்சட்டைகளை நம்பி சொல்ல முடியாதளவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பிள்ளைகள் பெண்கள் இன்னும் தமிழ் கலாசாரப்பற்றைக் கடந்து வெளியில் வர முடியாதுள்ளார்கள். ஆனால் எயிட்ஸ் எனும் கொல்லி இத்தகைய பலரை துணிச்சலுடன் தின்று கொண்டிருக்கிறது.

பரபரப்பாகப் பேசப்பட்ட 17வயது மாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாள் என எழுதிய ஊடகங்கள் அவளை முதலில் உடலுறவில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியவன் ஒரு ஆசிரியன் என்ற உண்மையை ஏன் எழுத மறந்தது ? கடவுளுக்கு அடுத்ததாய் நேசிக்கப்படுகிற ஆசிரிய சமூகம் ஏன் இத்தகையவர்களைக் கவனிக்க மறந்தது ? தன்னால் பாலியல் உறவில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீதி 75ஆண்களுக்கும் முகவராக இருந்து பதின்மவயதுச் சிறுமியை நிரந்தர பழியாக்கிய ஆசிரியனை யார் தண்டிப்பார்கள் ?

தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்கள் ,நெற்கபேகளில் காலம் கடத்தும் இளையோரிடம் போதைப்பொருள் பாவனை மலிந்துள்ளதை அதனை விநியோகிப்பவர்கள் யாரென அறிந்தும் பேசாமல் இருக்கிற ஆசிரிய சமூகத்தை யார் தட்டிக்கேட்பார்கள் ?
இந்த மாணவர்களை நாசம் செய்கிற முகவர்களில் நாம் நம்புகிற அரசியல் தலைகளும் உண்டென்ற உண்மையை எங்குபோய் உரைத்தாலும் யாரும் நம்பப்போவதில்லை. பல விடயங்களில் இது பட்டறிந்த உண்மை.

போலிவெள்ளை வேட்டிகளை அம்பலப்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தி சத்தியசோதனையில் இறங்குகிற முட்டாள்தனத்தை விடவும் , எம்மினத்தை அழிக்க உள்நுளைக்கப்பட்ட எயிட்சின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என முன் வந்துள்ள அக்கறைமிக்கவர்களுடன் கைகோர்த்துக் கொள்வதே இன்றைய அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிற நேரம், இம்முயற்சியில் இறங்கியுள்ள மருத்துவர் குழுவினருடன் இணைந்து எயிட்ஸ் கொல்லிபற்றி கல்வியறிவு ஊடகஅறிதல் குறைந்த இடங்களுக்குள்ளும் கொண்டு செல்ல என்னையும் இணைத்துக் கொள்கிறேன். இம்முயற்சியில் அனைவரையும் வரவேற்றுக் கொள்கிறோம் வாருங்கள்.

தமிழ் மருத்துவசமூகமே உங்களிடமும் ஒரு வேண்டுகோள் :-
ஒரு நோயாளியை கடவுளின் மறுபிறப்பாக காக்கும் வல்லமை மிக்கவர்கள் நீங்கள். காசுக்காக உயிர்களை விலையெடுக்கும் பலியெடுப்பை விட்டு எங்கள் இனத்தைக் காக்க முன்வாருங்கள்.

எயிட்சால் பாதிக்கப்பட்ட 17வயதுச் சிறுமியை பலருக்கு முன்னால் அவமானப்படுத்தி அந்த நோயாளிப் பெண்ணை மனரீதியாகவும் பாதிக்க வைத்த மருத்துவர் போல் நோயாளிகளை நிரந்தரமாய் மனநலப்பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள். அப் 17வயதுச்சிறுமியை ‘எயிட்ஸ் நோய் வந்த பெண் நீயா‘ என சம்பந்தப்பட்ட மருத்துவர் அழைத்து அவளை அவமரியாதைப்படுத்தி வார்த்தைகளால் வதைத்த சம்பவத்தை நேரில் கண்டு வந்து சொன்னவளின் பெயரை இங்கு தவிர்க்கிறேன். அன்றைய தினம் அந்த மருத்துவமனையில் அச்சம்பவத்தை கேட்ட பார்த்த பலர் தம்மை இனங்காட்டி தலையை இழக்க விரும்பவில்லை.

ஒருத்திக்கு எயிட்ஸ் அவளோடு இது முடிந்து போகப்போவதில்லை இன்னும் எத்தனையோ பேரை இந்நோய் கொல்லப்போகிறது. இரண்டாம் பெருங்குடித் தமிழினம் இலங்கையில் 3ம்குடி நிலமைக்கு வரப்போகிற அபாயத்தை கட்டுப்படுத்த அல்லது காப்பாற்ற வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மருத்தவருக்கும் உள்ளது. உங்களை சாமிகளாக நம்பியே மனிதர்கள் உங்களிடம் வருகிறார்கள். அவர்களைக் காக்கும் கடவுள்கள் நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா ?

தமிழர்களைக் குறிவைத்துள்ள எயிட்ஸ் இன்னும் சில வருடங்களில் சிங்களவர்களையும் அழிக்கப்போகிறது. யுத்தம் முடிந்து முகாம்களிலும் ஊர்களிலும் நடமாடும் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் எயிட்சை வாங்கிக் காவத்தொடங்கிவிட்டார்கள். அவர்களாலும் எமது அறியாமையினாலும் லட்சக்கணக்கில் அழிந்து ஒரு சந்ததியின் வெற்றிடம் நிறைக்கப்படாத எங்கள் இனம் எயிட்சால் அழிந்து போக வேண்டுமா ?

இனி என்ன செய்யலாம்:-
அதிகம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளும் நிறைந்து கிடக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரும் நமது ஊர்களுக்கு ஊரில் உள்ள கல்விமான்களுக்கு மாணவர்களுக்கு பெண்களுக்கு எயிட்ஸ் உயிர்கொல்லி பற்றி தெரிவிப்போம். அது அன்றாட தொலைபேசி உரையாடல் ஊடாக அல்லது பேஸ்புக் போன்ற சமூகத்தளங்கள் ஊடாக , கிடைக்கிற சகல வழிகளாலும் தெரிவிப்போம்.

எப்போதாவது ஒரு கருத்தரங்கு அல்லது எயிட்ஸ் தினத்தில் அதுபற்றி நினைக்காமல் ஒவ்வொரு நாளும் எங்கள் இனத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்போம். யுத்தத்தால் அழிந்த சந்ததியின் மிச்சம் எயிட்சால் அழிந்து போகப்போகிற அபாயத்தை அறிவிப்போம். அழிவு தமிழரை இப்போது எயிட்ஸ் வடிவில் கொன்று போடும் உண்மையை உணர வைப்போம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாங்கள் அல்லது எங்கள் பிள்ளைகள் தாயகத்துக்குத் திரும்பி அந்த மண்ணை ஆழப்போகிறவர்கள் அல்ல. அந்த மண்ணில் வாழ்கின்றவர்களே அம்மண்ணின் அனைத்தையும் தாங்கி ஆழப்போகிறவர்கள். அவர்களது சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எங்களுக்கானது.

தனது பிள்ளைகளுக்காக விபச்சாரியான அம்மாக்களை , தனது வாழ்வுக்கான பாதுகாப்பாக விபச்சாரியாக்கப்பட்ட தங்கைகளை , தனது உயிரைக் காத்துக் கொள்ள தடுப்பரண்களில் ஓரினச்சேர்க்கையில் சகிப்போடு சாகும் தம்பிகளை , பதின்ம வயதுக் குணங்களுக்குரிய மிடுக்கோடு தனது எதிர்காலம் அழிக்கப்படுவதை உணராத எங்கள் இளையோரை எயிட்சிலிருந்து காப்பாற்றுவோம்.

பிற்குறிப்பு :- எயிட்ஸ் பற்றி தமிழ் யாழ் வன்னி மருத்துவ சமூகத்திடமிருந்து ஏதாவது குறிப்புகள் செய்திகள் உள்ளனவா என கூகிழில் தேடியதில் கிடைத்தது கீழ் வரும் இணைப்பு. http://sivaajihealthwings.blogspot.com/ பல விடயங்கள் எயிட்ஸ் பற்றி சமகாலத்தில் சிந்திக்கின்ற ஒரு மருத்துவரின் எழுத்துக்கள் மேற்படி இணைப்பில் உள்ளதை அறிய முடிந்தது. இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு அடையாளமாக இத்தகைய மருத்துவர்களும் உள்ளார்கள் என்பதை இந்தத்தளம் சொல்கிறது. சென்று பாருங்கள். எயிட்ஸ் கொல்லியை இப்போதே உணர்விப்போம்

28.01.2011

Thursday, January 20, 2011

துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…?

புனிதம் என்ற சொல்லுக்கு
அர்த்தம் தந்தவன் நீ.
அடர்வனப் புதர்களோடும்
ஆயுதங்களோடும்
ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ.

பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ
பெயரின்றிப் புகழின்றிக்
கடமையை மட்டும் கவனித்த
களமாண்ட கடவுள் நீ.

ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச்
சிருஸ்டித்த சிற்பி நீ.
ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும்
ஒரு கனவின் கணங்கள் போல
காய்ந்து போனது களவாசம்.
நீ இன்னும் கனவுகளுக்காகக்
கரைந்து கொண்டிருக்கிறாய்.

உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ
மூழ்கடிக்கப்படுகிறாய்.
உனது மனிதம் மிக்க இதயத்தை
அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப்
புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின்
இதயம் உனக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் உன்னை விட்டொதுங்க முடியாது
உன்னையே சுற்ற வைக்கிறது.
சண்டைக்கோழியாய் நின்றுன்னைக் காக்க
தாய்க்கோழியாய் தவமியற்றச் செய்கிறது.
தர்மமுரைக்கச் சொல்கிறது.
இதையும் தர்க்கித்து உடைத்தெறியத்
தரகர்கள் பலவாய்…..!

உனக்கு ஒரு முகமும்
எனக்கு மறு முகமும் மாற்றி
உன்னை முகமிழக்கச் செய்கின்ற
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…….?

புன்னகைத்து உன்னைப் பகைக்காமல்
முதுகில் குற்றும் முகங்களே
உன்னைச் சுற்றி நிற்கின்ற
உண்மைகளைச் சொல்ல எழுகிற சொற்களைக் கூட
விழுங்கிக் கொள்கிறேன்….
என்னையும் எதிரியாக்கி உன்னை
அன்னியப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில்
எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வெள்ளையென்று இன்னும் நம்பும் உன்
கள்ளமற்ற குணத்தை என்ன செய்ய….?
நீ நம்புகிற எதுவும் எவரும்
உன்னை நம்பவில்லையென்கிற உண்மையை
எப்படியுனக்குப் புரிவிக்க….?

எங்கோ உதிர்கின்ற தளிர்களுக்காய்
இன்னும் இர(ய)ங்குகின்ற ஈரநிலமே
இயங்குவிசையே
பூச்சில்லை உன்னை மறைக்க
புகழ் இல்லையுன்னைப் புதுப்பிக்க
இகழ்வோரே உன்னைச் சுற்றியோர்
இதையாவது புரிந்து கொள்.

20.01.2011 (காலை 10.10) இலட்சியங்களுக்காக 26 வருடம் வனங்களில் வாசம் செய்த ஒரு மூத்த முதுநிலைப் போராளிக்காக இது)

Sunday, January 16, 2011

வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் தாருங்கள்

www.nesakkaram.org
இயற்கையின் சீற்றத்தால் தற்போது இலங்கையின் கிழக்குமாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வேண்டுகிறோம்.

உறவுகளே உங்களால் இயன்ற சிறுதுளியும் தண்ணீரில் அள்ளுண்டு அவலப்படும் மக்களுக்கான பேருதவியே.

உதவி செய்ய விரும்பும் உறவுகள் உதவ வேண்டிய விபரங்கள்.

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Sri France – 0033 611149470

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

பேபால் ஊடாக உதவ விரும்புவோர் – nesakkaram@gmail.com

வங்கியூடாக உதவ விரும்புவோர் –
NESAKKARAM e.V
Account Number : 0404446706,
Bank code 60010070,
Postbank, Stuttgart, Germany.
IBAN : DE31 6001 0070 0404 4467 06.
SWIFT CODE : PBNKDEFF.

நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.


அன்பான உறவுகளே

06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம்.

ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர்.

நமது இடைநிறுத்தம் பயனாளிகள் பலரைச் சங்கடப்படுத்தியது. எனினும் எமது நடைமுறைச் சிக்கல்கள் நாம் எதிர்கொள்ளும் அரசியல் தலையீடுகளை விளங்கப்படுத்தியதன் பின்னர் மெனளமானாலும் அது அவர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாயிருந்ததை உணர்ந்தோம்.

தொடர் மனப்போராட்டம் எம்மை நசுக்கும் சவால்களைத் தாண்டி இயங்குவதில் உள்ள தடைகள் யாவற்றையும் விட்டு ஒதுங்குவதே சரியென ஒதுங்கிக் கொண்டோம்.

ஆனால் நேசக்கரத்தினை நிறுத்த முடிவெடுத்தபின்னர் இயற்கையின் சீற்றம் கிழக்கு மாகாணத்தினை மிக மோசமாக பாதித்துள்ளது. நேசக்கரம் ஊடாக சுயதொழில் உதவிகளிற்கான பயன்களை பெற்று மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் சிறிது சிறிதாய் உழைத்து முன்னேறியவர்களின் சிறு தொழிற்கூடங்கள் சிறு பண்ணைகள் என்பனவும் தற்போதைய கடும் வெள்ளத்தில் அள்ளுண்டு போயும் அழிந்து போயும் உள்ள நிலையில் "ஜயோ கடவுளிற்கே நாங்கள் நல்லாய் வாழ்வது பிடிக்கவில்லையா" என அழுகைக்குரல்களாய் தமக்கான உதவிகளையும் வேண்டி நிற்கும் தொடர் தொலைபேசியழைப்புக்கள் அவர்களது அவசர வேண்டுதல்கலை ஒதுக்கி நம்மால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

அதே நேரம் புலம்பெயர் உறவுகளும் தங்களது ஆதரவினையும் உதவிகளையும் தொடர்ந்து தருவோம் எத்தனை பெரிய பிரச்சனைகள் வந்தாலும் நேசக்கரத்திற்கு தங்கள் ஆதரவுக்கரம் நிச்சயம் இருக்கும் தங்கள் உதவிகளைப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு சென்று சேருங்கள் என தொடரும் நம்பிக்கை வார்த்தைகளும் எம்மை எத்தனை அரசியல் சிக்கல்கள் வந்தாலும் அதனையும் தாண்டி எமது மக்களிற்கான சேவையை தொடரும் மனஉறுதியை தந்துள்ளது.

எனவே இயற்கை கொடுத்திருக்கும் அழிவால் தண்ணீரில் மிதக்கும் எமது உறவுகளுக்கு முன்னாலும் உதவ உதவிக்கரம் நீட்டும் எமது உறவுகளிற்கு முன்னாலும் நாம் மீண்டும் தோற்றுப்போனோம். அவர்களுக்காக மீண்டும் எங்கள் உதவிகளை கொண்டு சேர்க்க எமது செயற்பாட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு எம்மால் இயன்ற வெள்ள நிவாரணத்தை எமது மக்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

வெள்ள அனர்த்தத்தில் தத்தளிக்கும் ஒங்கள் உறவுகளை மீட்டெடுக்க எங்கள் முயற்சிக்கு ஆதரவும் பலமும் தந்த புலம்பெயர் உறவுகளே உங்கள் உதவிகளை அவசரமாக வேண்டுகிறோம். விரைந்து உதவிகளை வேண்டுகிறோம்.

நன்றிகள்

- நேசக்கரம் செயற்பாட்டாளர்கள் -

Tuesday, January 11, 2011

வெள்ளம் அள்ளுகிறது கிழக்குமாகாணத்தை கண்களையும் கையினையும் இழந்த ஒருவனின் குரல்.

காலம் 09.01.2011 அதிகாலை 3.40மணி.

அக்கா அவசரமாக் கதைக்க வேணும் ஒருக்கா எடுங்கக்கா….! சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான். அக்கா செய்தியள் அறிஞ்சிருப்பியள் தானே…..! எங்கடை ஊரே தண்ணியில மூழ்கீட்டுது…வளவெல்லாம் தண்ணிதான் நிண்டது…வீட்டுக்கை வராதெண்டுதான் நம்பினமக்கா….ராத்திரி நாங்கள் சுத்தி எழுப்பின மண்சுவர் தண்ணீல கரைஞ்சு தகரங்கள் தடியள் எங்களுக்கு மேலை விழுந்து ஒண்டுமில்லையக்கா….. குழந்தைக்குப் பால்மாகூட இல்லை…..
இடுப்பளவு தண்ணீக்கால வெளிய வந்து இப்ப ஊர்ப்பள்ளிக் கூடத்தில வந்திருக்கிறம்….. ஏதாவது உதவிசெய்வியளோண்டு கேப்பமெண்டுதான் எடுத்தனான்….. எங்களோடை 300பேர் இருக்கினம்….குழந்தையளின்டை நிலமை சரியான மோசமாக் கிடக்குது. வெளிக்கிடேக்க இந்த ரெலிபோனைத்தான் எடுத்துக் கொண்டு வந்தனாங்கள். போட உடுப்புக்கூடக் கொண்டு வரேல்லயக்கா….

நேசக்கரத்தால பயனடைஞ்ச குடும்பங்கள் கனபேர் இதில இருக்கினமக்கா அவையளுக்காகவேனும் ஏதாவது செய்யுங்கோக்கா……சண்டையிலயும் நாங்கள் தான் துயரப்பட்டம் இப்ப வெள்ளமும் எங்களைத்தான் அழிக்குது…..நாங்கள் சாவுமில்லாமல் வாழ்வுமில்லாமல் இருக்கிறமக்கா……

எங்களை ஏனக்கா தண்டிக்கிறீங்கள்….? தயவு செய்து திரும்பி இயங்குங்கோக்கா…..அரசியல் செய்யிற எங்கடை அரசியல் கள்ளன்களுக்கு எங்கடை அவலங்கள் விளங்காதக்கா…..அவங்களெல்லாம் எங்கடை கண்ணீரை மாடிவீடுகளிலயிருந்து ரீவியிலயும் கணினியிலயும் பாத்துக் கொண்டிருக்கிறாங்கள்….. எங்கடை குழந்தையள் சாகக்கிடக்குதுகள்….உங்கடை மற்றாக்களோடை கதையுங்கோ எங்கடை நிலமையைச் சொல்லுங்கோ…..எங்களுக்கு உதவச் சொல்லுங்கோக்கா……

அவன் கண்ணிரண்டையும் ஒற்றைக்கையையும் 13வயதில் நாட்டுக்காகக் கொடுத்து கடைசிக்கள முடிவுவரை வன்னிக்குள் வாழ்ந்து 20வருடம் கழித்து தான் பிறந்த மட்டக்களப்புக்குச் சென்று ஓராண்டாகிறது. அவனது துணைவிதான் அவனுக்கு எல்லாம். குடிதண்ணீர் எடுக்கவும் குளிக்கவும் தினமும் 4கிலோமீற்றர் தூரம் சென்றுதான் வருவார்கள். கண்ணில்லாத அவனையும் குழந்தையையும் கையிரண்டிலும் பிடித்துக் கொண்டு அவனது அவள்தான் எல்லாவற்றையும் கவனித்தாள்.
அவர்களுக்கான நேசக்கரம் நீட்டிய உறவுகளால் மீளவும் உயிர்த்ததாய் நம்பிய குடும்பம் செய்த சுயதொழில் விவசாயம் நவம்பர் மாத மழையில் அழிந்து போனது. வளர்த்த கோழிகள் டிசம்பர் மாதம் செத்துப்போக வீதிகளில் தேங்காய்கள் விற்றுக் கொண்டிருந்தவனோடு வீதிவீதியாய் அலைந்தவள். உதவிய புலத்து உறவுகளுக்குத் தயக்கத்தோடு தங்கள் நிலமையைச் சொல்லி சிறு கொடுப்பனவினைப் பெற்றார்கள். ஆனால் இன்று கிடைத்ததும் இல்லாமல் மீண்டும் அகதியாகிப் போய் ஓர் பாடசாலையில் ஒதுங்கியிருக்கிற பலநூறுக்குள் இவர்களும்…..

அக்கா யோசியுங்கோ….சிலவேளை இந்தத்தண்ணி பெருத்து நாங்க செத்துப்போறமோ தெரியாதக்கா…. அடுத்தொருத்தி புலம்பினாள். அவள் கணவன் 2007 மாவீராகிவிட்டான். 3 குழந்தைகளுடன் ஒரு சிறுகடையை ஆரம்பித்திருந்தவள். அதுவும் மழையடித்து மண்ணோடு மண்ணாய் கரைந்து போய்விட்டதாம்.
அக்கா என்ரை கொட்டிலெல்லாம் வெள்ளத்தில போயிச்சு….நீங்கள் உதவினதெல்லாத்தையும் வெள்ளம் கொண்டு போட்டுதக்கா சொல்லியழுதாள் 32வயதான அவள்.சில நல்லிதயங்களின் ஆதரவில் அவள் ஆட்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உழைக்க வாங்கிக்கொடுத்த பொருட்கள் யாவும் அவளது குடிசையோடு அடிபட்டுப்போயிற்றாம். அவளுக்கும் 3பெண் குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் அவளது கணவனும் மாவீரர்.
5குடும்பங்களின் துயரக்கதையள் அடுத்தடுத்து எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கினாலும் ஒதுங்க முடியாது துரத்துகிறது துயரங்கள். எம்மை முடக்கியவனுக்கும் தடைவிழுத்திய அவனது தொண்டர்களுக்கும் இது 3ம் சாமமாயிருக்கும். அவர்கள் மூக்குமுட்ட எல்லாவகைகளையும் தின்றுவிட்டுச் சுகமாய் அடுத்த தேர்தல் கனவில் மிதப்பார்கள்.

காலம் 09.01.2011 காலை6.12மணி. அக்கா என்ன முடிவு…?
காலம் 09.01.2011 காலை 6.19மணி.
காலம் 09.01.2011 காலை 15.27 மணி வரை 15தடவைகள் ஒரே குரல் ஒரே விடயம்.

காலம் 10.01.2011 காலை 6.05மணி. கடைசியாக வந்த அழைப்பு. அக்கா ரெலிபோனில சாச் இல்லை. எலெக்றிக் கம்பங்களெல்லாம் இங்காலை அறுந்து விழுகுது. இனிக்கதைக்கிறது கஸ்ரமக்கா. திரும்பியும் சொல்லறமக்கா உங்கடை முடிவுகளை மாத்துங்கோ நாங்க தண்ணீல சாகப்போறம்…..எங்கடை குழந்தையளையும் எங்களையும் தண்ணி இழுத்துக் கொண்டு போப்போகுது. நான் போட்டுத்திரிஞ்ச ஒரு செருப்பும் தண்ணீல போட்டுது…..அவனது தொடர்பு அறுபடுகிறது.

காலம் 11.01.2011 மாலை 15.30 முதல் 11.01.2011 காலை 8.52 மணிவரையும் இரவிரவாகப் பலதரம் அவனை அழைக்க முயற்சித்தாயிற்று தொலைபேசியழைப்பு தற்போது இயலாதென எயாரெல் குரல் சொல்கிறது. அவனோடிருந்த 5குடும்பத் தொலைபேசிகளும் ஒரேமாதிரித்தான் சொல்கிறது.

எழுதப்பட்ட காலம் 11.01.2011 காலை 08.55.

Saturday, January 8, 2011

நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.


06.01.2010

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நேசக்கரம் அமைப்பின் ஊடாக உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் வணக்கம்.
நேசக்கரம் அமைப்பானது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக யாழ் இணையத்தில் இணைந்திருந்த சில உறுப்பினர்களால் நட்பு அடிப்படையில் சில வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பனூடாக புலம்பெயர் மக்களின் உதவிகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி பாதிக்கப்பட்ட மக்களிற்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ததுடன் உதவிகள் அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றன என்பதும் உறுதிப்படுத்தபட்டும் வருகின்றது.

கடந்த 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் நேசக்கரம் அமைப்பினை தொடங்கிய பலரும் மனச்சோர்வு வேலைப்பழு என விலகிச்சென்ற போதும், மனம் தளராது சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரே நேசக்கரம் அமைப்பின் இயக்கம் நின்று போகாமல் அதனூடன சேவையை தொடர்ந்தனர். நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் பின்னர் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், கணவர்களை இழந்த பெண்கள், கல்வியை இழந்த மாணவர்கள் காயமடைந்தவர்கள் என எங்கள் உறவுகளின் தேவைகள் பெரும் பூதாகாரமாய் வடிவெடுத்து நின்றது. அதன்காரணமாக நேசக்கரத்தின் வேலைத்திட்டங்களையும் விரிவாக்க வேண்டிய தேவை எமக்கிருந்தது.தங்கள் பெயர் சொல்ல விரும்பாத சில நல்ல உள்ளம் படைத்த உறவுகளின் உதவிகளுடன் நாமும் காலத்தின் தேவைகளையறிந்து இன்றைய உலகின் அனைத்து நவீன வசதிகளையும் பயன்படுத்தி வானொலி .பத்திரிகைகள் இணையத்தளங்கள் மின்னஞ்சல் என சகல வழிகளிலும் எமது மக்களின் தேவைகளை வெளிக்கொணர்ந்து கடந்த இரண்டு வருடத்தில் பெருமளவான உதவிகளை புலம்பெயர் மக்களின் உதவிகளுடன் செய்து முடித்தோம்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் இனி புலம்பெயர் மக்களிடம் உதவியென்றே போகமுடியாது போனாலும் எதுவும் தரமாட்டார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்து நிலவிய காலத்திலும் அதனையே ஆலோசனைகளாகப் பலர் எம்மிடம் சொல்லிய போதும் இல்லை மக்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் சரியான கணக்கு ஆதாரங்களுடன் சென்றால் நிச்சயமாக உதவுவார்கள் என்று அதனையே ஒரு சவாலாக நினைத்து எங்கள் வேலைத்திட்டங்களை வடிவமைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே உடனுக்குடன் உதவிகளும் வந்து சேர்ந்தது. உதவியவர்களும் நேசக்கரத்தினை பாராட்டி திருப்திபட்டுக் கொண்டார்கள். ஆனால் நேசக்கரத்தின் வேகமான செயற்பாடுகளும் அதன் சேவையின் பிரபலமும் இலங்கையில் பல அரசியல் வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியது. சிலர் தங்களுடன் இணைந்து இயங்குமாறு அழைப்பு விடுத்தனர். சிலர் எங்கள் உதவிகளை பெற்று மக்களிடம் வினியோகித்து தங்கள் அரசியல் இலாபம் பெற நினைத்தனர். சிலர் மிரட்டினார்கள்.


ஆனால் நேசக்கரம் அமைப்பானது எவ்வித அரசியல் சாயமும் பூசிக்கொள்வதில்லையென்பதில் உறுதியாக நின்றது. இவை அனைத்தையும் சமாளித்தும் எதிர்த்தும் எங்கள் வேலைத்திட்டங்களை முடிந்தவரை முன்னெடுப்பது முடியாத நிலை வரும்பொழுது நிறுத்தி விடுவது என முடிவெடுத்திருந்தோம். எனவே அந்த முடிவினை எடுக்கும் நேரம் வந்து விட்டது. காரணம் எமது அமைப்பினை முடக்குவதற்கான அல்லது அதனை பறித்தெடுப்பதற்கான தொடர்ச்சியான அழுத்தங்கள்.தொடர்ச்சியான தொலைபேசி மிரட்டல்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
நேசக்கரம் அமைப்பினை இயக்குகின்ற சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரிற்கு எவ்வித அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள். வெறும் மனோபலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் முட்டி மோதி பல உதவித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தொடர்ந்தும் நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்வையும் கவனித்தபடி மிகப்பெரிய அரசியல் பலங்கள் பிரபலங்களுடனும் மோதிக்கொண்டு எமது சேவைகளை தொடர முடியாத நிலையில் நேசக்கரத்தின் செயற்பாடுகளை நிறுத்துவது என்கிற மனவருத்தத்திற்குரிய முடிவினை எடுத்துள்ளோம்.

நேசக்கரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிற்கு தொடர்ந்தும் உறவுகள் உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடனும். வேறு ஏதோ ஒரு வடிவத்தில் அந்த உதவிகள் போய்சேரவேண்டும் என்கிற ஆதங்கங்களோடும் இதுவரை காலமும் நேசக்கரத்துடன் கைகோர்த்து நின்ற அனைத்து உறவுகளிற்கும் எங்கள் நன்றிகளையும் வணக்கங்களை கூறிக்கொண்டு நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.
நன்றி வணக்கம்.
இங்ஙனம் நேசக்கரம் நிருவாகம்.

Wednesday, January 5, 2011

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்
ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்
செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.
பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த
24.12.10 அதிகாலை 5மணியோடு
அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது
அவனது கனவுகளை அழித்துக் கொண்டு
காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்
தலைசிதறிக் கதை முடிந்து
30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.
உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது
கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்
தன்னையழித்தானாம்….!
விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..
கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்
பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய
நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை
செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?
கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்
காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு
அவனது விதிபற்றிய இரங்கல்களும்
நினைவு மீட்டல்களும்
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்
குடிகாரனென்கின்றனர் சிலர்,
நல்ல வேலையில்லையென்றும் சிலர்
காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்
அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி
அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்
நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..
‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்
எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது
கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட
இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.
நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்
கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்
எங்கே போயினர்…..?
வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்
தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க
கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்
அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..
ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி
அவனது அக்காக்களின் கண்ணீரில்
கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்
வெளிறிக் கொண்டிருக்க – அவன்
என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு
படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்
அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்
ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு
மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்
நினைவுகளாய் மறக்க முடியாது
மனசோடு அவன் ஞாபகங்கள்
மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்
வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……
இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்
எழுத முடியவில்லையடா……!
இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்
நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த
சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….
சண்டையிடாமல் கோவம் போடாமல்
அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்
ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)